RSS

5.பாரதியார் ஆசுப்பத்திரியில் பிறந்தார் !


எனக்கு ஒக்ஸ்வெர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்று அதனை ஆங்கிலத்தில் எழுதத் தெரியாத காலத்தில் இருந்தே ஒரு ஆசை. சக மாணவர்கள் என்னைப்பார்த்துச் சிரிப்பார்கள். எங்கள் கிராமத்திற்கு ஒருகாலத்தில் மதம் பரப்பும் பாதிரியார்தான் எனக்கு இந்த ஆசையை தூண்டி விட்டவர். அவருடைய போதனைகளையும் விரும்பிச் சென்று கேட்பன். அவர்தான் எனக்கு யேசுநாதர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்றும் சொல்லித்தந்தவர். இதைக் கருத்தில்கொண்டு; பாடசாலையில் பாரதியார் எங்குபிறந்தார் என்று ரீச்சர் கேள்வி கேட்க, நான் ஆசுப்பத்திரியில் என்று சொல்லிப்போட்டன். இதுதான் அந்த சக மாணவர்களின் சிரிப்பிற்கு காரணம். ஆங்கிலச் ரீச்சர் what is your name என்று ஒருவரைப்பார்த்துக் கேட்க that is a தவராஜா என்று பதில் சொன்னவரும் என்னைப்பார்த்துச் சிரிக்கின்றார். அப்போது நாங்கள் 5ம் தரம் படிக்கிறம்.

 கடைசியில் எனக்கு oxford பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் அங்குபடித்தவர்களிடம் படிக்கும்வாய்ப்பு எனக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. இங்குதான் இலங்கையின் பிரதமராக இருந்து தன் மனைவி சிறிமாவோ வால் புத்தபிக்குவை விட்டுப் போட்டுத்தள்ளப்பட்ட பண்டாரநாயக்காவும் படித்தார். அங்குதான் அடங்காத்தமிழன் சுந்தரலிங்கமும் படித்தார். சுந்தரலிங்கம் ஒரு கணிதமேதை. எலிசபெத் மகாராணியாருக்கு கணிதபாடம் சொல்லிக்கொடுத்த பெருமை அவரையேசாரும். மகாராணியாரின் 60வது பிறந்ததின விழாவிற்கு சுந்தரலிங்கம் தனிப்பட்ட அழைப்பின்பெயரில் சென்றிருந்தார். மகாராணியாரை வாழ்த்துவுதற்காக மேடைக்குச் சென்றபோது எல்லோருக்கும் கையுறையுடன் கைகுலுக்கி நன்றி தெரிவித்த மகாராணியார் சுந்தரலிங்கத்தைக் கண்டதும் கையுறையைக் கழட்டிவிட்டு சுந்தரலிங்கத்திற்குக் கைகுலுக்கினார். சபையோர்கள் அதிர்ந்துவிட்டனர். மகாராணியார் ''இவர்தான் என் குரு, கணிதமேதை'' என்று கூறி கலாச்சார முத்தமும் கொடுத்து ஒரு தமிழனை அன்று ஆங்கிலதேசம் வரவேற்றது.

பண்டாரநாயக்கா பல்கலைக்கழகத்தில் நடந்து சென்றபோது இலங்கையின் பிரதமருக்கான நடை என்று ஆங்கிலேயர் சொன்னதுபோல் அவரும் பிரதமமந்திரி ஆகிவிட்டார். பண்டா- செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து 24 மணிநேரத்தில் தனிச்சிங்களமே இலங்கையின் தேசியமொழி என்று சட்டம் இயற்றினார். தமிழர்கள் இதை எதிர்த்துக் காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்தபோது தென்னிலங்கை முழுக்கத் தமிழர்களை வெட்டிக் குவித்தார்கள். இராணுவம் கைகட்டி வேடிக்கை பார்த்தது. இரண்டு காதுகளும் குத்தியிருப்பவர்கள் தமிழர்கள் என்று இனம்கண்டு அடித்தார்கள். 1958ம் ஆண்டு தமிழர் சிங்களவருக்கிடையில் பாரிய அளவிலான விரிசல்கள் உண்டாகின்.

பாணந்துறை என்னுமிடத்தில் சிவன்கோவிலில் பூஜை செய்துகொண்டிருந்த குருக்களைப் போலீசார் பலவந்தமாகப்பிடித்து சாக்கில் கட்டி பெற்ரோல் ஊற்றி எரித்து ஜீப்பில் கட்டி காலிவீதியால் இழுத்துக்கொண்டு போனார்கள். போத்துக்கீசர் காலத்திற்குப்பின் இரண்டாம் முறையாக இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டது. இந்தக் குருக்களின் தம்பியார்தான் சுந்தரக் குருக்கள். குடும்பத்துடன் யாழ்ப்பாணம் வந்துவிட்டார்கள். சுந்தரக் குருக்களை அறிமுகமான அனைவரும் ஐயர் என்று அழைத்துவந்தனர். ஐயர் ஒரு ஆங்கில அறிஞன். மாணவர்களுக்கான ஆங்கில தனியார் வகுப்புகளை நடாத்தி வந்தார். அவரிடம் நானும் தவராஜாவும் வயது வந்தபின்னர் ஆங்கிலம் படித்தோம். அந்த ஐயர் எவரிடமும் காசுவாங்கமாட்டார். ஒவ்வொரு வகுப்பிற்கும் மாணவர்கள் செல்லும்போது அவர்களால் இயன்ற சில்லறைக் காசுகளை தட்சணையாக அதற்கென இருக்கும் உண்டியலில் போடுவது வழக்கம். ஐயர் அடிக்கடி சொல்லும் வசனம். தமழீழம் கிடைத்தபின்னர் எல்லோருக்குமே இலவசவகுப்புகள் நடாத்துவதாகச் சொல்லிக்கொண்டிருப்பார். அவரிடம் ஆங்கிலலம் படித்தவர்கள் ஏராளம் பேர் இன்று வெளிநாடுகளில் இருக்கின்றார்கள்.

that is a தவராஜா என்று சொன்னவர்தான் பின்நாளில் ஒரு பெரிய வக்கீலானார். ஐயர் தட்சனை வாங்கி படிப்பித்ததுபோல் தவராஜா ஏழை எளியவர்களுக்கு பணம்வாங்காமலே வாதிட்டு வெற்றி பெற்றுக்கொடுத்தார். லண்டனில் இருந்து தவராஜாவைச் சந்திப்பதற்காகவே நான் oxford செல்லும் பஸ்சில் இப்போது பிரயாணித்துக்கொண்டு இருக்கின்றேன். தவராஜா அந்தப் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். தவராஜா பெரும்பான்மைத்தமிழர்கள் செய்ததுபோல் தனது குடும்பத்தையும் லண்டனுக்கு அழைத்து நின்மதி இழக்கவில்லை. அவரது குடும்பம் சொந்தக் கிராமத்திலேயே தவராசாவைத் தெய்வமாக மதித்து வாழ்ந்து வருகின்றனர். தவராஜா இப்போது அடங்காத்தழிழன் சுந்தரலிங்கம் இருந்த விடுதியில் அவர் இருந்த அறையிலேயே தங்குகிறார்.

அடிக்கடி நான் தவராஜாவைக் காண்பதால் நாங்கள் சந்திப்பதில் ஒரு த்றில் இல்லை அதனால் தவராஜா ஏதோ புதிய திட்டம் போட்டிருக்கிறாராம் என்றுதான் இன்று செல்கின்றன். அதுதான் அவருடைய அயர்லாந்து செல்லும் திட்டம். சிவமயம் போட்டுத் தொடங்காமல் டப்ளின் தெருவில் நாங்கள் இப்போது நிற்பதில் இருந்து தொடர்கின்றேன். தவராஜாவின் oxford நண்பன் ரவி குடும்பமாக டப்ளினில் வாழ்கின்றான். முகவரியைக் கையில் கொண்டு ஒரு பஸ் எடுத்து அங்கு சென்றோம். குறிப்பிட்ட இலக்கில் நாங்கள் இறங்குவுதற்குப் பதிலாக இந்த அழகிய நகரத்தின் மையப்பகுதியில் இறங்கிவிட்டோம். இலங்கைத் தமிழர்களைக் காண்பது பாயாசத்தில் முந்திரியவத்தல் தேடுவதுபோல் கடியமாக இருக்கிறது. நடந்தே செல்ல ஆரம்பித்தோம். உயர்ந்த கட்டிடங்களும், ஒரேமாதிரியான தெருக்களும் இலக்கைப் பிடிப்பதற்கு சிக்கலாக இருக்கின்றன. தவராஜாவின் முகத்தில் ஒரு சந்தோஷம். என்ன மச்சான் என்றேன். வீட்டைக் கண்டுவிட்டேன் என்றார். எப்படி என்று கேட்டேன். அதோ தெரிகிறதே ஒரு வீடு. அதன் பல்கனியைப்பார். இலங்கைத் தமிழர்கள் எங்கு சென்றாலும் கொடிகட்டித்தான் உடுப்புகள் காயப்போடுவார்கள். அந்தப் பல்கனியில் கொடிகட்டி உடுப்புக் காயப்போட்டிருந்தது எனக்கும் தெளிவாகத் தெரிந்தது.  இருவரும் ரவி வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். உலகத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்று யாரோ சொன்னதாகக் கேள்விப்பட்டேன், கொடிகட்டி மானத்தைப் பறக்கவிடுகிறார்கள் போல் எனக்கு விளங்கிவிட்ட்து. உங்களுக்கு என்ன விளங்குகிறது.



Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 Comments:

J.P Josephine Baba said...

தமிழர்கள் எங்கு இருந்தாலும் கொடியை கட்டி மானத்தை பறக்க விடுகின்றார்கள் என்று தான். தமிழகத்தில் நுழை வாசலின் ஒரு கம்பியை கூட விடமாட்டார்கள் உள்ளாடைகள் கூட வாசலிலும் வரவேற்பறையிலும் காயும்!