RSS

7.''யானையைக்கட்டித் தீனி போட என்னால் முடியாது !


உலக வரைபடத்தில் நான் பிறந்த இடத்தைப் பார்க்கவேண்டுமாக இருந்தால் உலக வரைபடத்தை உலகளவு பெருப்பித்துப் பார்த்தால்தான் தெரிந்துகொள்ளலாம். அவளவு சிறியது. நாகரிகத்தை எட்டிப்பார்க்கும் நாகரிகம் எட்டாத ஒரு கிராமம். படித்தவர்கள் வாழும்பூமி என்பது எனது கிராமத்திற்கு மற்றவர்களால் இடப்பட்ட ஒரு சிறப்புப் பெயர். முடி வெட்டும் கடையில் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு பழையனவற்றை ''ஆட்டோக்கிராவ'' பாணியில் சிந்தித்துக்கொண்டிருந்தேன். தமிழர்கள் ஒருவரும் வெள்ளைக்காரன் கடைகளில் போய் முடி வெட்டுவதில்லை. வந்த புதிதில் வெள்ளைக்காரன் கடையில் தமிழர் ஒருவர் தலையைக் கொடுக்க தலையில் இருந்த பேனைப்பார்த்த வெள்ளைக்காறிச்சி ''so many animals'' என்று நல்ல பாம்பைத் தலையில் பார்த்தவள்போல் மிரண்டுவிட்டாள். பின்னர் சுவிற்சர்லாந்தின் சமூகசேவைப்பகுதியின் சுகாதாரத்திணைக்களம் தமிழர் எல்லோருக்கும் பேன் பத்தறுவதற்கான ஷம்போ இலவசமாகக் கொடுத்து அதைப் போக்காட்டினார்கள்; இதுநடந்து 30 வருடங்களாகிவிட்டது.  அதற்குப்பின்னர் தமிழர் ஒருவர் கடை திறக்கும்வரை நண்பர்களுக்கு நண்பர்கள் வெட்டத்தொடங்கி இப்பதான் ஓய்வாக இருக்கிறார்கள். கடையினுள் பிரவேசித்தவர்களின்படி நான் இப்போ ஒன்பதாவது ஆளாக இருக்கின்றேன். எனக்கு சிரச்சேதம் செய்ய எப்படியும் இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கிறது. அந்தக் கடையின் பெயர் டயானா சலூன்.

சலூனுக்குள் சரியான கட்டுப்பாடு பாருங்கோ! ''கடையினுள் கைத்தொலைபேசிப் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது'' என்று நான்கு மொழியில் நான்கு இடத்தில் போடப்பட்டுள்ளது. ''அரசியல் பேசாதே'' என்று கொட்டை எழுத்தில் தமிழில் மட்டும் எழுதப்பட்டுள்ளது. இதைப்பார்க்கும் வெளிநாட்டவன் இதுதான் கடையின் பெயராக்கும் என்று நினைக்கும் அளவுக்கு அது இருந்தது. நல்ல பாடல்கள் வீடியோவில் தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருக்கிறது. நான் கைத்தொலைபேசியை நிற்பாட்டிவிட்டு ஏதாவது வாசிக்க இருக்கிறதா என்று பார்த்தேன். முடிவெட்டவந்த சிலர் தங்களுக்கான இலக்கத்தை எடுத்தபின் வெளியிலும் போய் நின்றார்கள். அவர்கள் அரசியல்பேசுவது எனக்குக் கேட்டது. பக்கத்தில் இருந்தவர் கொஞ்சம் கவலையாக வந்திருப்பவராக எனக்குப்பட்டது. என்னண்ணே விசயம் என்று கேட்டேன். இல்லைத்தம்பி எங்களுக்குள் ஒரு செத்தவீடு. இப்பதான் எல்லோருக்கும் தகவல் அனுப்பிப்போட்டு வருகிறன். யார் யார் வருவினம் என்று 5 நாட்கள் பார்த்துவிட்டு, முக்கியமான ஆட்கள் வந்தவுடன் எடுப்பம் என்று இருக்கிறம் என்றார். எனக்கு அவர் சொன்னவை நான் கதையெழுதி FB யில் அனுப்பிவிட்டு முக்கியமான ஆட்களைப் பார்த்துக்கொண்டு இருப்பதை நினைவு படுத்தியது.

முடிவெட்டுவதற்குமுன் கடையினுள் வைக்கப்பட்டுள்ள மாதிரித் தலைகளைப் பார்த்தேன். கிளிங்டனின் தலை முதலில் என் கண்ணில் பட்டது. அவரது தலை வெட்டு நன்றாகத்தான் இருக்கிறது. கரக்டர் சரியில்லையே என்று யோசித்தபோது கிளிங்டனைப்பற்றி அவரது மனைவி பத்திரிகை ஆசிரியரின் கேள்கிக்குப் பதில் சொல்லும்போது ''யானையைக்கட்டித் தீனி போட என்னால் முடியாது என்று சொன்னது நினைப்பு வந்தது. அதே பத்திரிகை அந்தப் பேட்டியின் கீழ் ''கில்லாரி கிளிங்டன் பெண்வாசனைகளுக்காக ஏங்கும்  பெண்களின் கனவுக்கன்னி'' என்று முடித்திருந்தது நினைவுக்கு வந்தது. அமரிக்காவில் நியூயோர்க் நகரத்தில் மன்hகாட்டன் என்ற இடத்தில் பெண்களுக்கு பெண்கள் ஆங்கில முத்தம் கொடுப்பதை நான் பார்த்திருக்கின்றேன். அடுத்து ஜோர்ச் புஸ் இன் தலையும் மொடலுக்காக அவரது மனையியுடன் சேர்த்தமாதிரி இருந்தது. புஸ்சின் மனைவி ஒரு ஸ்பெயின் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்மணி. புஸ்சுடன் கடைத்தெருவிற்குப் போகும்போது தூரத்தில் தனது பழைய காதலனைக் கண்டாராம். புஸ்சிற்கு அவரைக்காட்டி ''இவர் ஒரு சலவைத் தொழிலாளி என்று அறிமுகம் செய்து வைத்தார். புஸ்சிற்கு ஒரு நக்கல் சிரிப்பு. உடனே புஸ் சொன்னாராம்; அவரை நீ கட்டியிருந்தால் இப்போ கட்டாடி பொண்டாட்டியாக இருந்திருப்பாய் என்று. அதற்கு புஸ்சின் மனைவி  ''நான் அவரைக் கட்டியிருந்தால் அவர்தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருப்பார்'' என்று சொன்னார்.  புஷ்க்கு அசடு வழிந்ததையும் நான் நினைக்கின்றேன்.

டயானா சலூனின் ஒரு மூலையில் அழகிய ஒரு அலுமாரி, அதனுள் பிரபலங்களின் கதைப்புத்தகங்கள் வாடிக்கையாளர் பாவனைக்காக என்று வைக்கப்பட்டிருந்தது. நான் எடுத்த புத்தகத்தைத் தட்டிப்பார்த்தேன். ''கடிகள்'' என்ற கேள்விபதில் பக்கம் என் கண்ணுக்குத்தென்பட்டது. ''தமிழன் எப்போது தலைநிமிர்ந்து நிற்கின்றான்'' என்ற கேள்விக்கு ''ஷவரில் குளிக்கும்போது'' என்று விடையிருந்ததைப்பார்த்தேன். உடனே எனக்கு வீட்டுநினைப்புத்தான். இன்று குளிக்கச் செல்லும்போது; நானும் குளிக்கவேண்டும் சுடுதண்ணியை குறைவா பாவியுங்க, கண்ணாடியில் ஒட்டுப்பொட்டுகள் இருக்கிறது கவனம், சூடுபோகக் குளிக்காமல் ஊத்தைபோக மட்டும் குளியுங்க, தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கோயிடுங்க, டவல் அது இது என்று கூப்பிடாதேங்க, தொட்டிக்குள் கிடக்கும் என் உடுப்புளை அலம்பி பிழிந்துவிட்டு குளியுங்க, கெதியா வாங்க என்று ஒரு மின்சாரத்தின் நச்சரிப்பு. இதற்கு நான் குளிக்காமலே இருந்திருக்கலாம் என்று நினைத்துவிட்டு மற்றைய பக்கங்களைத் தட்டிப்பார்த்தேன். அதனுள் 8ம் இடத்தில் இருந்தவர் தொழிலாளியைப் பார்த்து ''ஏன்தம்பி மொடலுக்கு ஆங்கிலேயர்களின் படங்களையும், காந்தி, புறூஷ்லி போன்றவர்களின் படங்களையும் வைத்திருக்கின்றீர்கள், ஒரு எம்ஜிஆர், சிவாஜி, ரசனிகாந், சத்தியராசா போன்றவர்களின் மொடல்களையும் வைக்கலாம்தானே'' என்றார். தொழிலாளி ''நாங்கள் டோப் வைத்தவர்களுக்கு தலைமயிர் வெட்டுவதில்லை'' என்று வேலை பிசியில் சிரிக்காமல் சொன்னார்.

9ம் இடத்தில் இருந்தனான் இப்போ 4ம் இடத்திற்கு வந்துவிட்டேன். குடி போதையில் ஒருவர் உள்நுழைந்தார். தம்பி எனக்கு காந்திமொடல் போடணும் என்றார். தொழிலாளி வசந்தமாளிகை பாவித்தவர்கள் உள்ளே வரக்கூடாது என்று திட்டி அவரை வெளியேற்றினார். ஒரு பக்கத்து மேற்சுவரில் ''நாம் தமிழர், நமதுமொழி தமிழ், நமதுநாடு தமிழீழம்'' என்ற வாசகமும் ஒட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் ஏதோ ஒருவகையில் பொழுது போக்கக்கூடிய விடையங்கள் அங்கே இருந்தன. இலவசக் காப்பிக்காக ஒரு மூலையில் ஒரு காப்பி மெசினும் இருந்தது. நான் அடுத்து கவிஞர் வைரமுத்துவின் புத்தகம் ஒன்றைத் தட்டிப்பார்த்தேன். நான்கண்ட கனவுகள் என்ற தலைப்பில் அவர்கண்ட கனவுகளை எழுதியிருந்தார். காந்தியின் கண்ணாடி, திருவள்ளுவரின் எழுத்தாணி, டயானாவின் தொடை, stop stop   வீடியோவில் ஒரு அருமையான பாடல்வரிகள் ''மடல்வாழைத் தொடை இருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க படைத்தவனின் திறமை எல்லாம் பெருமை பெற்ற அழகி என்பேன்'' என்ற கவிஞர் வாலியின் வர்ணனையைக் கேட்டேன். டயானாவின் ஆடைகள் நியூயோர்க்கில் ஏலம் விடப்பட்டன. கட்டிய ஆடைக்குக் கொட்டிய பணத்தினால் ரொனியின்(இறுதி காதலன்)மனம்கவர்ந்த டயானா, காதலனுடனேயே கல்லறை சென்றுவிட்டார். பாவம் என்று யோசித்தேன்.

எனக்குப் பக்கத்தில இருந்தவர் தம்பி ''நீர் என்னத்தால் பல்லு விளக்கிறனீர்'' என்று கேட்டார். ஏன் பக்கத்தில இருக்கமுடியாமல் இருக்கிறதா என்று கேட்டேன். சீ சீ அப்படி இல்லை என்றார். நான் ஊரில் இருக்கும்போது உமிக்கரி பாவித்தேன். வெளிநாட்டிற்கு வந்தபின் பற்பசை பாவிக்கிறன் என்று சொன்னேன். அதற்கில்லைத்தம்மி, ''ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி்'' என்று சொல்கிறார்களே; நாலும் இரண்டும் என்றால்;  சொல்லு பல்லு இல்லாவிட்டாலும் உறுதியாகுமோ என்பதுதான் என் கேள்வி என்றார். அது அப்படி இல்லை ஐயா, நான்கு என்றால் ''நாலடியார், இரண்டு என்றால் ''திருக்குறள்''  இதைத்தான் நாலும், இரண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள் என்றேன். சின்னவயதில் படித்தது மறந்துவிட்டது என ''மீசையில் மண் முட்டவில்லை'' என்று தாளம் போட்டார். எனது முறை வந்துவிட்டது. பல வருடங்களாக நான் வாடிக்கையாளன் என்பதால் மொடல் சொல்லவில்லை. டயானா சலூன் எனக்கு ஒரு கலைக்கூடமாகத் தென்பட்டது. ஒவ்வொரு சலூன்களிலும் கலையம்சம் இருக்கின்றது அதனால்தான் அறிஞர் அண்ணாத்துரையின் சிலையில் உள்ள கை சென்னையில் ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தைக் காட்டி நிற்கின்றது என்று யாரோ எழுதியவரிகள் எனக்கு ஞாபகம் வந்தது. வந்தவேலை முடிந்தது, வீட்டுக்கு வண்டிலைக் கட்டுகின்றேன். பாத்றூமில் அம்மன் நீராடியிருக்கும் சுடுதண்ணி இருக்காது என்ற நினைப்புடன் நிறுத்தப்பட்டிருந்த கைத்தொலைபேசியை ஓண்பண்ணுகிறன். 48 மிஸ்கால் வந்துகிடந்தது. யாராக இருக்கும் என்று நானா சொல்லவேண்டும். உங்களுக்குத் தெரியாதா என்ன?




Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 Comments:

J.P Josephine Baba said...

முடி திருத்தும் கடையின் நிகழ்வுகளை உங்கலை போன்று யாரும் ரசித்திருக்க மாட்டார்கள் இனி ரசிக்க போவதும் இல்லை. அழகோ கொள்ளை அழகு!!!!

சி.பி.செந்தில்குமார் said...

aahaa ஆஹா.. மணீபிரவாக நடை என சொல்லுவார்களே.. அது போல் உங்கள் எழுத்து நடை கலக்கல் நண்பா..