RSS

ஊமை விழிகள்


எனக்கு சில நேரங்களில் சில கேள்விகள் மனதைப் போட்டு துழைக்கும். தெரியாவிட்டால் போர்த்துக்கோண்டு படுத்துவிடுவன். குளிருக்கு ஐரோப்பாவில் அதுதான் ஒரு சொர்க்கமாக எனக்கு தெரியும். ஆனால் எனது ஒரு நண்பன் இப்படிக் கூறினான். "இவரை நின்மதியாகப் படுக்கவிடக்கூடாது என்பதில் சில சத்திராதிகள் கவனமாக இருக்குமாம்.  பொருட்களை நிலத்தில் போடுவது; தொலைபேசியைச் சத்தமாகக் கதைமப்பது; கதவை அடித்துச் சாத்துவது; கூவர் பிடிப்பது; தையல் மெசினில் தைப்பது; தொலைக் காட்சியை பெரிதாகப் போடுவது; இவற்றை எல்லாம் தாங்கிக்கொண்டு படுத்தாலும் சிலர் புறுபுறுத்துக்கொண்டு இருப்பார்கள் அவற்றைத் தாங்கிக்கொண்டு படுக்க முடியாது" எனறு சொன்னார். பாவம் அந்த நண்பர் மாடாக உழைத்து ஓடாகிப்போய் தனது நித்திரையை வீட்டிலேயே தொலைத்துவிட்டுத் திரிகிறார். இதைவிட செவிடனாகவே பிறந்திருந்தால் மற்றவர்களின் தொல்லைகளை கேட்காமல் சந்தோசமாக இருந்திருக்கலாம் என்றும் சொன்னார். 

சிறியவயதில் எங்கள் தமிழ்வாத்தியார் ஒரு கதை சொன்னார். ஒரு ஊரில் ஒரு குருடன். அவனது பிள்ளைக்கு பால் பருக்கும்போது மூச்சுத்திணறி பிள்ளை இறந்துவிட்டது. குருடன் பால் எப்படி இருக்கும் என்று கேட்டான். பருக்கியவர் கொக்குப்போல் வெள்ளையாக இருக்கும் என்று பதில் அளித்தார். குருடன் கொக்கு எப்படி இருக்கும் என்று கேட்டான். பருக்கியவர் தனது கையை கொக்குப்போல் உருவகித்து இப்படி இருக்கும் என்று சொன்னார். குருடன் கையைத் தடவிப் பார்த்துவிட்டு இதை விழுங்கினால் பிள்ளை சாகும்தானே என்று சொன்னான். யானையின் காதைத் தடவிப் பார்த்து சுழகு போலிருக்கிறது என்று சொன்னவனும் குருடன்தான். எனக்கும் குருடன் என்று சொன்னதும் ஒரு ஞாபகம் வருகிறது. 10ம் வகுப்பு (G.C.E O/L)அரசாங்கப் பரீட்சைக்கு ஆங்கிலக் கட்டுரைக்கு "குருடன்" என்ற தலைப்பைப் பாடமாக்கிக் கொண்டு சென்றேன். பரிட்சை வினாத்தாளில் ஒரு பிச்சைக்காரனைப்பற்றிக் கட்டுரை எழுதும்படி கேட்டிருந்தார்கள். உடனே நான் " எனது பிச்சைக்காரன் ஒரு குருடன் என்று முதல் வரியை எழுதிவிட்டுப் பின்னர் குருடனைப்பற்றி பாடமாக்கிய கட்டுரையை எழுதி ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டன். குருடர்களை ஐரோப்பாவில் மிகவும் கண்ணியமாகப் பார்க்கிறார்கள். தனியாக வெளியில் செல்லும் அளவிற்கு பழக்கப்பட்ட நாய்களை அரசாங்கம் வழங்கியிருக்கிறது. சுவிசில் தாள் காசுகளில் குருடர்கள் தடவிப்பார்த்து கண்டுபிடிப்பதற்கு அடையாளம் வைத்துள்ளார்கள். டென்மார்க்கில் நடை பாதைகளில் குருடர்கள் நடப்பதற்கென்று வித்தியாசமான கற்கள் பதித்துள்ளார்கள். அதில் நடந்துசென்றால் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஒரு குருடனைத் தெருவில் கண்டால் வலியச் சென்று உங்களுக்கு நான் உதவிசெய்வது பிடிக்குமா என்று தயவாகக் கேட்டு உதவி செய்வார்கள். காரோட்டிகள் ஒரு குருடனை கார் ஓடும் பாதையில் கண்டால் ஹாண் அடிக்கக்கூடாது என்ற சட்டம் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். வலது குறைந்தவர்களுக்கு வாழ்வழிக்கும் ஐரோப்பாகவில் வாழ்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கலோ! என்னை வலதுகுறைந்தவன் என்று நினைத்துவிடாதீர்கள். 
ஊமைகளுக்கென்று பாடசாலலை; போக்குவரத்து; இலவச கல்வி; இலவச விளையாட்டுத்திட்டம்; அரச உதவிப்பணம் எல்லாம் கிடைக்கிறது. அவர்களுக்கு என்று ஒரு மொழியையும் உருவாக்கி வைத்துள்ளார்கள். அதாவது கைப் பாசை. நான் ஆரம்பத்தில் சுவிசுக்கு வந்தபோது கைப்பாசை பெரிதும் உதவியது. அது தான் சர்வதேச மொழி என்பதை அன்று உணர்ந்து கொண்டன்.  ஊமைப் பெண்களும் ஆண்களும் ஒரே பாடசாலைகளில் கல்வி பயில்கிறார்கன். காதலிக்கிறார்கள். திருமணம் செய்கிறார்கள். ஆனால் ஊமைகளுக்கு அரசாங்கம் ஒரு அநியாயத்தையும் செய்கிறது. அதாவது அவர்களுக்குக் குழந்தை பிறக்காமல் இருப்பதற்காக ஏதோ ஒருவிதத்தில் தடையையும் செய்து விடுகிறது. காரணம் இன்றி தண்டிக்கப்படுபவர்களில் இவர்களும் அடங்குகிறார்கள். இவர்களுக்கு மூக்கைச் சொறிந்தால் கோபம் வரும் என்று எனக்கு தெரியும். எங்கள் கிராமத்தில் ஊமைக்கு முன் நின்று மூக்கைச் சொறிந்து அவர்கள் துரத்திவர ஓடியும் இருக்கிறேன்.  அதைக் கணக்குப் பண்ணிப் பார்த்தால் எனது வேகத்தில் உலக சாதனை படைத்திருக்கலாம்.  உலகசாதனை 100மீட்டர் 9.8 வினாடியில் ஓடியிருக்கின்றார்கள்.  நான் பாடசாலையில் 15 வயதில் 5அடி.2 அங்குலம் (அப்போது எனது உயரம்) பாய்ந்திருக்கிறேன். இதனால் நான் மதில் பாய்ந்து விடுவேன். மற்றவர்கள் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் ஐரோப்பாவில் ஊமைகளுக்குமுன் நமது மூக்கைச் சொறிந்தால் அவர்களுக்குக் கோபம் வருவதில்லை. பழக்கப்பட்டு விட்டார்களோ அல்லது பயிற்றப்பட்டுவிட்டார்களோ எனக்குத் தெரியாது. 

இன்று ஒரு ஊமையும்; ஒரு செவிடனும்; ஒரு குருடனும்தான் எனது கதையின் கதாநாயகர்கள். இந்த மூன்றுபேரும் உயிருக்குயிரான நண்பர்கள். நண்பர்கள் மாத்திரமல்ல ஒருவருக்கு ஒருவர் இயன்ற உதவிகளைச் செய்து வாழ்பவர்கள். ஒரே வீட்டில் 3 அறைகளில் தனியாக வாழ்ந்தவர்கள். மூன்று பேருக்கும் திருமணமாகிவிட்டது. பின்னரும் அதே வீட்டில் அவரவர் பாட்டில் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். மனைவிமார் வந்த படியால் ஒருவருக்கு ஒருவர் இப்போது உதவிசெய்வதில்லை.  மிகவும் சந்தோசமாக வாழ்க்கை போகிறது. சண்டையும் வரும் சமாதானமும் வரும். "சண்டை சமாதானம் பெண்டில் அவதானம்" என்று ஒரு பழமொழியும் சொல்வார்கள். ஒரு நாள் ஒரு விபரீதம் நடந்துவிட்டது.  திட்டம் போட்டு காரியம் செய்ததுபோல் குருடனது மனைவியைச் செவிடன் கெடுத்துவிட்டான். செவிடன் கெடுத்ததை ஊமை பார்த்துவிட்டான். ஊமை குருடனது மனைவி கெடுக்கப்பட்டதைக் குருடனுக்குச் சொல்லப் போகிறான். அவன் எப்படிச் சொல்லுவான் என்பதே ஆரம்பத்தில் என் மனதைப்போட்டுத் துழைத்ததற்குக் காரணம்.  பின்னூட்டம் எழுதும் நண்பர்களே எனது குழப்பத்தைத் தீர்த்து வையுங்கள். நான் நின்மதியாக நித்திரை கொள்ளவேண்டும். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒரு தபால்காரன்.



பக்கத்து வீட்டில் ஒரே சத்தம். அது ஒரு வெள்ளைக்கார வீடு. அங்கு ஒருதாய்; ஒரு தகப்பன்; 3 பிள்ளைகள்; ஒரு நாய் போன்ற உயிர்கள் வாழும் சிறிய வீடு. இடைக்கிடை இசை வாத்தியங்கள்.  பின்னர் வெளியில் நின்று சிகரட் பிடிப்பவர்களின் புகை வாசம்.  நான் பாடசாலையிக்குப் பக்கத்தில் நிற்பது போல் ஒரு சத்தம்.  உலகத்தில் பல நாட்டுப் பாடசாலைகளுக்குப் பக்கத்தில் நான் நின்று கேட்டிருக்கிறேன் எல்லா இடத்திலும் ஒரே சத்தம் தான். மொழி அதற்கு ஒரு தடை இல்லை.  பின்னர் பல்கலைக்கழக நூல் நிலையத்தில் தோன்றுவதுபோல் ஒரு மயான அமைதி அந்த வீட்டில். மழை நீரில் குமிழி விழுந்து வெடிப்பது போல் பல சத்தங்கள். எனக்கு வெளியில் சென்று வந்த களைப்பு. அதைவிட மீசையில் பனி உறையும் குளிர் வேறு. ஒரு கிலோ சீனிவாங்கப் போவதற்கு 25 கிலோ உடையணியும் கடும் வின்ரர். தொலைக்காட்சியைத் தட்டிப் பார்த்தேன். vijai தொலைகாட்சியில் கள்ளச் சாமிகளைப்பற்றி ஒரு தொடர். கலைஞர் தொலைக்காட்சியைப் பார்த்தேன். அதில் அடுத்த பிரபுதேவா யார் என்ற ஒரு போட்டி நடனம். தீபம் தொலைக்காட்சியை தட்டினேன். அதில் ராசிபலன் பற்றி ஒருவர் எல்லா ராசிகளுக்கும் பலன் சொல்லிக்கொண்டிருந்தார். அது எனக்குக் கொஞ்சம் பிடித்திருந்தது. எனது ராசிபலனைப் பார்ப்பதற்காக உட்காந்தேன்.  பலன் சொல்பவர் இப்போது இடப ராசியில் நிற்கிறார். நான் கடைசி மீனராசி. மீனராசியில் பிறப்பவர்களுக்கு இது கடைசிப் பிறப்பு என்று எங்கேயோ வாசித்திருக்கிறேன்.  அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.  பொறுத்துப் பார்ப்பதாக முடிவு எடுத்துவிட்டேன். 30 நிமிடம் சென்றுவிட்டது. அதற்கிடையில் 9 விளம்பரம் வந்து போய்விட்டது.  2 மாதங்களுக்கு முன் நடைபெற்ற மலிவு விற்பனை விளம்பரமும் அதில் வந்து போனது.  ராசி பலன் சொல்பவர் துலாம் ராசிக்கு பலன் சொன்னதும் மீதி பலன்கள் மறுநாள் இதேநேரம் ஒளிபரப்பப்படும் என்ற அறிவித்தலுடன் காட்சி மாறியது. மாதாமாதம் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்குக் கட்டும் பணத்தின் கணக்கை மட்டும் மனதிற்குள் பார்த்துவிட்டு; பக்கத்துவீட்டு சத்தங்களே பரவாயில்லை என்பதுபோல் இருந்தது.  எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும். தமிழ்த் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்கள் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு வருகிறார்கள். பெண்களை மட்டும் ஏன் 16 முழ சேலை கட்டச்சொல்லி நிர்வாகிகள் பணிக்கிறார்கள்.  இது சம்பந்தமாக ஒரு ஐரோப்பாவில் இயங்கும் தொலைக்காட்சி நிறுவனத்துடன் கதைத்துபோது "வேட்டி சட்டை சால்வையில் வந்தால் நாட்டான்; காட்டான் மாதிரி இருக்கும் என்று பதில் அளித்தார். அப்போ பெண்கள் நாட்டுக் கட்டைகளோ என்று கேட்டேன்.  "உங்களைமாதிரி அரைவேக்காடுகளுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை" என்று விட்டு தொலைபேசியைத் தானாகத் துண்டித்துவிட்டார்.  இவர்தான் ஒருமுறை சிறுவருக்கான தொலைபேசி உரையாடல் நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் "கிளி" க்கு "ளி" என்ற எழுத்தா "ழி" என்ற எழுத்தா வரும் என்று கேட்க; இரண்டில் நீங்கள் எது வேண்டும் என்றாலும் போடலாம் என்று பதில் அளித்துவர். 

இப்போது பக்கத்து வீட்டில் ஒரு சத்தமும் இல்லை. ஒரு புல்லாங்குழல் இசைமட்டும் இதமாக வந்து கொண்டிருந்தது. ஒரு மூங்கில் மரத்தை முழுதாகச் சாப்பிடும் அளவு நேரம் இசை ஒலித்தது. அதில் மக்கல் யக்சனின்; விட்னிகூsடன்; ரினாரேணர்; யெனிபர்றs; லயணல்றிச்; மடோனா; சப்றீனா சமந்தாபொக்s,  போன்றவர்களின் ஆங்கிலப் பாடல்களை ஒருவர் வாசித்துக்கொண்டிருந்தார். நானும் புல்லாங்குழல் பழகினால் என்ன என்ற உத்வேகம் எனக்கு வந்தது. விடிந்ததும் பக்கத்து வீட்டு பெரிய மகன் வெளியில் தகப்பனின் காரில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றிக்கொண்டிருந்தான். நானும் எனது காரில் உறைந்தபனிப் படலங்களை அதற்குறிய கருவிகளால் அகற்றிக்கொண்டு இருந்தேன். தெருவெலலாம பனியால் மூடப்பட்டிருந்தது. அதில்தான் எனது பயணம் தொடங்கப்போகிறது. "பனி படர்ந்த பாதையில் பயணம் ஏது" என்று பாடிய கண்ணதாசனையும் அழைத்துச் செல்லவேண்டும்போல் எனக்கு ஆசையாக இருந்தது.
இருவரும் பக்கத்தில் பக்கத்தில் நிற்கிறோம் .  அவன் ஒன்றும் கதைப்பதாக இல்லை. சூரியனை நல்ல விலைக்கு விற்று விட்டதுபோல் பூமியில் காலை 9 மணியாகியும் வெளிச்சம் வரவில்லை.  டென்மார்க் என்பதை "இருள்சூழ்ந்த பனிநாடு" என்று வெள்ளைக்காரர் பெருமையாகச் சொல்வார்கள். நானே அவனிடம் சென்று இரவு நீ நன்றாகப் குல்லாங்குழல் வாசித்தாய் அதைக் கேட்டுக்கொண்டு இருந்தேன் என்றேன்.  வெள்ளைகள் சிரித்தால் கடைக்கண் கன்னங்கள் சுருங்கும். அப்படி இவனும் சிரித்தான். எனக்கு ஏன் சிரிக்கிறான் என்று விளங்கவில்லை. பாசையைப் பிழையாகக் கதைத்ததாக நான் நினைத்தேன். அவன் கூறினான். அது நான் வாசிக்கவில்லை. ஒரு தமிழ் இந்திய புல்லாங்குழல் வித்துவான் ஆங்கிலப் பாடல்களை புல்லாங்குழலில் அமரிக்காவில் வாசித்த வீடியோவைப் பார்த்தேன் என்று பதில் கூறினான். எனக்கு இடத்தைக் காலிபண்ண வேண்டும் போல் இருந்தது. இருந்தாலும் பனிதட்டி முடியவில்லை. அவனது தாயார் இன்னும் தட்டி முடியவில்லையா? வேலைக்கு நேரமாகிறது என்ற ஒலியுடன் ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக்கொண்டு வெளியில் வந்தார்.   இவன் கிளம்பும்போது தாயார் பத்திக்கொண்டிருந்த அரைவாசிச் சிகரட்டை வாங்கிப் பத்திக்கொண்டு வாகனத்தை start பண்ணினான். உங்கள் மகன் எங்கு வேலை செய்கிறார் என்று கேட்டேன். அவள் "இவர் எனது மகன் இல்லை; எனது புதிய புருசனின் மகன்" என்றாள். நான் விளங்கிக்கொண்டேன்.  தபால் அலுவலகத்தில் வேலை செய்வதாகவும் குறிப்பிட்டாள். 

தபால் அலுவுலகம் என்றதும் எனக்கும் ஒரு அனுபவம் உண்டு . சாதாரண 10ம் தரம் படித்துவிட்டு பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கும் காலத்தில்-. எனக்கு 17 வயது இருக்கும். கிராமத்து தபாலகத்தில் தந்தி கொடுக்கும் வேலை கிடைத்தது.  இப்படியே வேலை செய்து செய்து post master ஆகிவிடலாம் என்று நினைத்தன். நாள் முழுவதும் அலுவலகத்தில் இருந்தேன். ஒரு தந்தியும் வரவில்லை.  post master க்கு கடைக்குப்போய் சாமான் வாங்கி கொடுத்ததும்; இன்னுமொருவருக்கு மதிய சாப்பாடு அவரது வீட்டுக்குச் சென்று எடுத்து வந்து கொடுத்ததும் தான் மாலை 4 மணிவரை பார்த்து வேலை. ஆபீசு முடியும் தரவாயில் ஒரு தந்திவந்தது. எங்கள் கிராமத்தில் ஆதிகாலத்தவர் முத்துக்கள் குளித்தனராம். இப்போ அதே பரம்பரை சங்கு குளிக்கிறது. (கடலில் சங்கு எடுத்துல்) அப்படி சங்கு குளிக்கச் சென்றவர் ஒரு வலமபுரிச்சங்கொன்றை எடுத்துவிட்டார். அது மிகவும் பெறுமதிகூடியது. அநத மகிழ்ச்சியை வீட்டுக்கு தந்தி மூலம் தெரிவிக்கிறார். குறிப்பிட்ட விலாசத்திற்கு கொண்டு செல்கிறன். என்னைக் கண்டதும் தந்தி என்றேன். சங்கு குளிக்கச் செசன்றவர் ஒருவர் கடலோடு போய் விட்டார் என்பதுதான் தந்தி என்று நினைத்து சிலர் அழத் தொடங்கி விட்டார்கள். குறிப்பிட்ட நபரக்கு தந்தியை கொடுத்தேன். உடைதது வாசிக்கச் சொன்னார். அவரது மகன் தங்கராசா வலம்புரிச்சங்கை எடுத்திருப்பதாக வாசித்து காட்டினன். மிகவும் மகிழ்நதார்கள். என்னை கட்டி தழுவினார்கள். "தம்பிக்கு ஒரு 5 ரூபா கொடுத்து விடடி என்று தன் மனைவியையும் அதட்டினார். நான் வேண்டாம் என்றேன். தம்பி அப்பசரி நாளை நல்ல மீன் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுக்கிறேன் என்று சொன்னார்.  மிகவும் பாராட்டி வழியில் அரைவாசி தூரம்வரை வந்து சந்தோசம் அடைந்தார்கள். கடமையைச் செய்த சந்தோசம் எனக்கும் ஏற்பட்டது. 

மறுநாள் நான் வேலைக்குச் சென்றேன். அதிகாலையிலேயே அதே விலாசத்திற்கு ஒரு தநதி ஒட்டப்பட்டு இருந்தது. கொண்டு சென்றேன். மக்கள் அயலவர் குவிந்து விட்டார்கள். யார் வலம்பரிச்சங்கு எடுத்தார்கள் என்று அறிய அவா. தங்கராசாவின் தாயாரும் நின்றார். தந்தியை உடைத்தேன். "தங்கராசா மரணம்; பந்தல் போடவும் மாலைக்குள் கொண்டு வருகிறோம் என்று இருந்தது. 

என்னைச் சுற்றி ஒரு மரண ஓலம். நேற்று என்னை வாழ்த்திய அதே ஆட்கள் "பாழ்பட்டுப் போடுவான் விடிய விடிய வந்தானே; பிள்ளையை கொல்லிப் போட்ட அறிவித்தலோட வந்தானே; நீயும் ஒரு தாய் பெத்து பிள்ளைதானே; நீ உருப்படுவாயா" என்றெல்லாம் திட்டினார்கள்.  எனக்கும் கவலை வந்தது. நான் என் கடமையைச் செய்தேன்.  பலன் ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை என்ற துணிவு எனக்கு ஏற்பட்டது.  ஆனால் நான் சாதாரண ஒரு தபாற்காரனாக என் கடமையைத்தான் செய்தேன். இந்தத் தத்துவத்தையே கீதையில் கண்ணன் அருச்சுனனுக்கும் உபதேசம் செய்கின்றார். கடமையைச் செய்யுங்கள் பலனை எதிர்பார்க்காதீர்கள். நம்மில் சிலர் பலனை எதிர்பாராதே என்பதை அதனால் வரும் இலாபம் என்று பிழையாக விளங்கிவிடுகிறார்கள். பனி தட்டிய என் கார் பிரதான தெருவை அடைந்தது. எனக்கு முதல் வெளிக்கிட்ட பக்கத்து வீட்டு பொடியன் பனியில் சில்லு வழுக்கி ஒரு மரத்துடன் மோதியபடி அவரது கார் நின்றதைக் கண்டேன். எனக்கு அடுத்த மரம் தயாராக இருப்பதுபோல் தெரிந்தது. கவனமாக ஓடுகிறேன். மரம் கழிந்துவிட்டது. இனி நேர் பாதைதான். சென்று வருகிறேன். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வலவன் ஏவா வானூர்தி.



0 R
பறத்தமிழன்; பனங்கொட்டை இது சிங்களவன் தமிழரை இயல்பாகச் சொல்லும் வார்த்தைகள். விடுவானா தமிழன் "மோட்டுச் சிங்களவன்" இது தமிழர் சிங்களவனைப் பார்த்துக் கூறும் வார்த்தை. சிங்களவன் மோடனாக நடித்ததை நம்பி முட்டாள் ஆகியவன் இலங்கைத் தமிழன். பட்டங்கள் சூட்டுவதைத் சிலர் தமது பரம்பரைப் பொக்கிசமாக நினைத்த நினைவுகளுடன் அகதியாக நாட்டைவிட்டு வெளியேறினார்கள். விமானத்தில் ஏறி மானத்தைப் பறக்கவிட்ட பெரும்பான்மைத் தமிழர்கள்தான். இன்று உலக அரங்கில் தாங்கள்தான் பிரபஞ்சத்தின் நடுப்புள்ளியில் இருந்து வந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்து ஆளுக்காள் கருத்து முரண்பட்டு பலதரப்பட்ட முகமூடிகளை அணிந்தவர்களும் தமிழர்கள்தான். முகமூடிகளைக் கழற்ற மனமின்றி முகமூடிகளையே முகமாக்கிக் கொண்டவர்களும் பெரும்பாலான தமிழர்கள்தான்.
இரண்டு பேர் சந்தித்தால் ஆங்கிலத்தில் கதைத்து இருபதுபேர் சந்தித்தால் சங்கம் அமைத்தவர்களும் தமிழர்கள் தான். ஐரோப்பாவில் 10 தமிழ் கோவில் இருந்தால் அங்கு 9 சண்டைகள் நடந்திருக்கும். 11வது கோவில் அமைப்பது 10வது கோவிலில்வரும் சண்டையைப் பொறுத்து இருக்கிறது. 

ஈழத்துமிழரின் எதிர்கால வெளிநாட்டு வாழ்க்சைச் சூழல் இப்படி இருக்கப்போகிறது என்று தெரியாத ஒரு காலகட்டத்தில்தான் இலங்கை மத்தியவங்கியில் வேலைசெய்துவிட்டு நானும் 2 வருடம் வெளிநாட்டில் உழைப்புடன் படிப்பையும் பார்க்கலாம் என்று சுவிசில் வந்து இறங்கி 29வது தமிழர் என்ற சிறப்பப் பெயரைப் பெற்றேன்.  1983ம் ஆண்டு தைமாதம் 14ம் திகதி சுவிசின் தலைநகரத்தில் தமிழர் பொங்கல்விழா ஒன்று வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன். கவிஞர் கண்ணதாசன் கூறியதுபோல "கடல்கடந்தான் தமிழன் கற்பூரதீபம் கண்டான் இறைவன்" என்றதுபோல் கடவுளுக்கு படைத்து கற்பூரதீபம் காட்டி புக்கையும் சாப்பிடத் தந்தார்கள் சாப்பிட்டேன். பிரசாதம் சாப்பிட்டவர்கள் உண்டியலில் காசுபோடவேண்டும் என்று ஒரு அறிவித்தலும் பிரசாதம் பரிமாறியபின் சபைநடுவில் வைக்கப்பட்டது. அப்போதுதான் அந்த அகதிமுகாமில் பலநாட்டு மக்கள் இருப்பதைப் பார்த்தேன். ஒவ்வொரு நாட்டுக்காரருக்கு ஒவ்வொரு பட்டப்பெயர் சூட்டி அழைத்தார்கள்.

சீனா வியட்னாம் தாய்லாந்து போன்ற மக்களை "சப்பட்டை" என்று அழைத்தார்கள். ஆபிரிக்காக் கண்டத்து அனைத்து மக்களையும் "கானா" காரன் என்று அழைத்தார்கள். ஈரான் ஈராக் போன்ற இடத்தில் இருந்து வந்தவர்களை "எண்ணைக்காரன்" என்று அழைத்தார்கள். ஆனால் தமிழர்களைப் பார்த்து சுவிற்சலாந்து மக்கள் "கப்புசீனோ" என்று அழைப்பது அப்போது பலருக்குத் தெரியாமல் இருந்தது. 
நான் லண்டன் செல்லும் விமானத்திற்குள் இருக்கின்றேன். டென்மார்க்கில் இருந்து விமானம் புறப்பட்டது. பிரயாணிகளாக அகதித்தமிழன் கொடுத்த பட்டத்தை உடையவர்களே காணப்பட்டார்கள். செக்கின் முடித்து பிரயாணிகள் தங்கள் விமானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். நானும் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டேன். அந்த அறையே நடுங்குவதுபோல் ஒரு மனிதன் வந்தான். மிகவும் பயந்துவிட்டேன். இவன் எனக்குப் பக்கத்தில் இருக்கக்கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டேன்.கடவுளும் எனக்கு "யாம் இருக்கப் பயம் ஏன்" என்பதுபோல் வேறு இடத்தில் அவனை விமானத்துள் உட்காரவைத்தார்.
ryanair என்ற விமானம் மேலெழுந்து சென்ற சற்று நிமிடத்தில் பக்கத்தில் இருப்பவரைத் திரும்பிப் பார்த்தேன். அவரது பற்கள் மிகவும் அழகாக இருந்தன.  அவர் ஒரு "கானா" காரன். மிகவும் ரசித்து ரசித்து வேப்பம் குச்சியால் பல் துலக்கிக்கொண்டு இருந்தார். நான் அவரை ஒரு புகைப்படம் வேப்பம் குச்சியுடன் எடுத்துவிடவேண்டும் என்பதற்காக அவருடன் கதைத்தேன். அவரது பெயர் முகமட். சோமலியாவில் இருந்துவந்து டென்மார்க்கில் குடியேறி தனது உறவினரைப் பார்க்க லண்டன் செல்கிறார். தரையிறங்கும் அறிவித்துல் தரப்பட்டதும் முகிலுக்குமேல் வெளிச்சத்தில் பறந்து முகிலுக்குக் கிழே வந்ததும் உலகம் இருண்டுவிட்டதுபோல் பனிப்புகார் தென்பட்டது. முகமட் என்னைப்பார்த்து "ஏன் மேலே வெளிச்சமாகவும் கீழே இருளாகவும் இருக்கிறது தெரியுமா என்று கேட்டார். ஒருவிடையத்திற்கு பிழையான பதில் சொல்லும்போது நமக்கு இரண்டுவிடையங்கள் தெரியாது என்பதை நாம் காட்டிக்கொடுக்கிறோம். அதனால் தெரியாது என்று கூறிவிட்டேன். முகமட் "மேலே இறைவனும் கீழே சாத்தானும் இருப்பதால் இந்த நிலை" என்று பதிலளித்தார். முகிலுக்குக் கீழேவந்த விமானம் தரையில் ஓடத்தொடங்கியதும் ஓட்டுனர் இல்லாத விமானமா என்று கேட்கத் தோன்றியது. மிகவும் மெதுவாகத் தரையில் இறக்கினார் விமானி. பயத்தில் இருந்த சில பிரயாணிகள் தங்கள் கைகளைத்தட்டிப் பயத்தைப் போக்கிக்கொண்டனர். 
அப்போதான் எனக்குச் சங்ககாலப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்று (புறநானூறு பாடல் 27. பாடியவர் உறையூர் முதுகண்ணன் சாத்துனார்) ஞாபகம் வந்தது. "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானூர்தி எய்துப என்ப!. எந்தை சேட்சென்னி; நலங்கிள்ளி" இந்த வரிகளின் கருத்து என்னவென்றால் நளங்கிள்ளி என்ற அரசனுக்கு அதாவது வலவன் என்னும் ஓட்டுபவன் இல்லாமலே வானில் பறந்திடும் விமானத்தில் செல்லும் வாய்புகள் கிடைத்தவர்களுக்கு வாழ்வின் உயர்வு அந்த வானத்தின் உயர்வுபோல் வந்துவிடும் என்பதாகும்.
2000 ஆண்டுகளுக்கு முதலே இவ்வாறான விமானி இல்லாத விமானம் பறந்ததா? இல்லாவிட்டால் புலவரின் கற்பனையில் ஓட்டுனர் இல்லாதவிமானம் பிரயாணிகளை ஏற்றிச் சென்றது எப்படி. அப்துல்கலாமின் கனவுகளுக்கு இந்தப் புலவர்தான் முன்னோடியா? இன்னும் பிரயாணிகளை ஏற்றிச்செல்ல ஓட்டுனர் இல்லாத விமானங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. சிந்தனையில் இருந்த என்னைத் தட்டி முகமட் உங்களுக்கும் ஒரு வேப்பம் குச்சி தரவா என்று கேட்டார். நாங்கள் சிறியவயதில் இருந்தே கோபால் பற்பொடியைத்தான் தீட்டியதுபோக திண்டது மிச்சம் என்று சொல்லப் பார்த்தேன். ஆனால் ஒரு சிரிப்புடன் விடைபெற்றுவிட்டேன். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நிலைக்கண்ணாடி 12 இன் தொடர் "கோவையில் ஒரு தமிழர் யாகசாலை"



b
பக்கத்து அறையில் இருந்துவந்து பாடலை ரசித்தக்கொண்டு இருந்தநான் அடுத்து என்ன நூலை மணிவண்ணனன் கூடாக பதிவுசெய்யலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது எனது அறையின் அழைப்பு மணி அடித்தது. அப்போது கவிஞர் வைரசும் என்னுடன் கூட இருந்தார். மணிவண்ணன் வந்தால் அவரை எப்படி வரவேற்பது; காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கலாமா? கட்டித்தழுவி அன்பைப் பகிர்ந்து கொள்ளலாமா என்பதை எல்லாம் நான் சிந்திக்கத் தொடங்கினேன்.
கதவைத் திறந்ததும் ஒரு தமிழ் ஒளி. அவர்தான் மணிவண்ணன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உலகத் தமிழரின் உச்சரிப்புக்களை அவர் முகத்தில் கண்டேன். தமிழுக்கு உலகத்தில் முகவரி எழுதும் ஒரு கலைஞனைக் கண்டேன். மெல்லத் தமிழ் இனி வாழும் என்று சொன்ன தீர்க்கதரிசியைக் கண்டேன். கட்டிப்பிடித்து ஆரத்தழுவி அன்பைப் பகிர்ந்து கொண்டு அவர் காலணிகளை வெளியில்கழற்றிய பாதங்களுடன் என் அறை புகுந்தார். 
வந்ததும் எனக்காக முதலில் வாங்கிவந்த இனிப்பான பண்டங்களைக் கையில் எடுத்து கோவையின் விருந்தோம்பலை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஐயாவுக்கு எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா என்று அடிக்கடி கேட்டு தன் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். எனக்காக அவர் ஒழுங்கு செய்திருந்த நட்சத்திட விடுதியில் அன்று மாலைப் பொழுதைக் கழித்தோம். அவருக்காக நான் வாங்கிச் சென்ற எந்தவிதமான அன்பளிப்புப் பொருட்களையும் ஏற்க மறுத்துவிட்டார்.
மனிதர்களில் ஒரு மாணிக்கம் ஆகவே எனக்குத் தோற்றமளித்தார். மூச்சிலும் பேச்சிலும் தமிழைச் சுவாசிக்கும் ஒரு தமிழனை நான் பார்த்தது இதுவே முதல் தடவை என்று என் மனதிற்குள் நினைத்துப் பெருமிதம் அடைந்தேன். அன்று மாலை எனக்கான இராப்போசனத்தில் அவர் மட்டும் கலந்து கொண்டார். கோவையில் சினிமா நட்டச்திரங்கள் மட்டும் செல்லக்கூடிய ஒரு உல்லாச விடுதிக்கு என்னை அழைத்துச் சென்றார். அவர் ஒரு குருவின் உபதேசத்தால் மாமிசம் சாப்பிடுவதில்லை என்றும் தனது ஆன்மீகத் தேடல்கள் பற்றியும் தெளின விளக்கங்களை எனக்கு அளித்தார். எனது பார்வையில் அவரது செய்கைகனள் ஒரு சிறந்த மனிதனாக அதுவும் தமிழராகக் காட்சி தந்தார். என்னைவிடப் மேலான ஒரு பேராசிரியராக இருப்பவர் எனக்குத் தந்த மரியாதைகளை என் நூலுக்கான காணிக்கைகளாக நான் ஏற்றுக் கொண்டேன்.
மாலை உணவு முடிந்து திரும்பவும் விடுதிக்கு வந்ததும் என்னைத் தனியாக விட்டுச் செல்ல மனமின்றி அன்று இரவை என்னுடனேயே களித்தார். நான் அவரை கடினப்படுத்துகிறேனா என்று யோசிக்கும் அளவிற்கு அவர் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்.
நான் தங்கியிருந்த விடுதிக்கோ மற்றைய செலவுகளுக்கோ எந்தவிதமான உதவிகளையும் எதிர்பார்க்காமல் தனது உழைப்பின் சேமிப்புகளை தமிழுக்காகவே அர்ப்பணிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து முக்கிய எழுத்தூளர்களையும் தனது தொலைபேசிக்குள் தொடர்பு இலக்கங்களை வைத்துள்ளார். திரு சேரன் அவர்கள் என்னுடன் கதைப்பதற்கான ஏற்பாடுகளைத் தொலைபேசியினூடாகவே செய்யும் அளவிற்கு மற்றவர்கள் மத்தியிலும் மணிவண்ணன் அவர்கள் பெயரும் புகழுடனும் விளங்குகிறார் என்பதை உணர்ந்தேன். இரவு இரவாகத் தமிழ் கதைத்து மறுநாள் எனது ஆத்மலயம் நூல் வெளியீட்டிற்காக ஆயத்தமானோம். 
மண்டபம் நிறைந்த அறிஞர் கூட்டம்; அத்துடன் சமூக அவலங்களைத் தங்கள் இதயத்துக்குள் பதுக்கி கவிதை செதுக்கும் கவிஞர்கள் பலரும் சமூகமளித்திருந்தார்கள். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் மிகவும் சிரமத்திற்கு மத்தியிலும் மணிவண்ணன் தனது பெற்றோர்களையும் அழைத்துவந்திருந்தார். அவர்களிடம் நான் பெற்ற ஆசீர்வாதம் இந்த உலகத்தில் கிடைத்தற்கரியது ஒன்றாகவே நான் கருதுகின்றேன். எனது "ஆத்மாலயம்" நூலை சிபி ஐ .எ .எஸ் அகாதமியின் இயக்குஞர் திரு அரங்ககோபால்,தமிழ்நாடு சிற்றிதழ்கள் சங்க பொதுச்செயலர் திரு பூ ஆ ரவீந்திரன்,கவிஞர் நாணர்காடன் மற்றும் தகிதா குழுமத்தார் சிறப்பாக வெளியிட்டு வைத்தனர்.
மணிவண்ணன் எனது நூலைப்பற்றிக் குறிப்பிடுகையில் "உலகத்தில் சமாதானப் புறாக்களைத் தன் ஒவ்வொரு சொல்லிலும் பறக்கவிட்டிருக்கும் ஓர் ஆசிய ஒளி" என்று பாராட்டிதோடு மட்டும் நின்றுவிடாமல் கங்கைமகன் அவர்கள் உலகத்துற்கு ஆத்மலயம் என்ற பொக்கிசத்தை அளித்திருக்கின்றார். உலகம் இவருக்கு எதைப் பரிசளிக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்று தனது உரையை முடித்தார். 
இந்த உலகத்தில் பலர் தோன்றுகின்றார்கள். உலகம் சிலரைத் தோற்றுவிக்கின்றது. உலகம் தோற்றுவித்த ஒருவருக்கு நான் எனது ஆத்மலயம் நூலைப் பரிசளித்தேன். ஆத்மலயத்தை இவ்வாறு எழுதிவிட்டு நீங்கள் இன்னும் உங்கள் மனத்தின் புனிதத்தைப் புரிந்து கொள்ளவில்லை. உங்கள் நூலையே திருப்பி பலமுறை வாசியுங்கள் என்று நான் பரிசளித்த புத்தகத்தையே திருப்பி எனக்குப் பரிசளித்தார். அந்த ஆத்மாவின் வலிமையைப் புரிந்துகொண்ட நான் மகிழ்வுடன் அதனை ஏற்றுக்கொண்டேன்.
அவரையே என் குருவாகவும் முற்பிறவிப்பயனாக அடையப்
பெற்றேன். சிவபெருமானுக்கு முருகன் போதனைகள் செய்ததுபோல் எனது குருவானவர் என்னைவிடப் பலவயதுகள் குறைவாக இருந்தாலும் ஆன்மீக நாட்டத்திலும் ஒவ்வொரு வலிமை குன்றிய ஆன்மாக்களை வழிநடத்துவதிலும் மிகவும் அனுபவம் பெற்றவர். அவரின் வருகையின் பின்னரே நான் என்னை உணர்ந்தேன். எப்படியும் வாழலாம் என்ற எனது போக்கை மாற்றி இப்படித்தான் வாழவேண்டும் என்ற வழிகாட்டியாகவும் ஒரு தூண்டுகோலாகவும் என் உள்ளம் நிறைந்து வாழ்கின்றார். மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள். இவை முற்பிறப்பின் கர்மவிதியின்படி ஒருவருக்குக் கிடைக்கின்றது. அந்த வகையில் நான் பெருமைப்படுகின்றேன். தாரமும் குருவும் தலைவிதிப்படி என்று சொல்வார்கள். அந்த இரண்டும் எனக்கு விதியின்வழி அமைந்திருக்கின்றது. இதுதான் உலகம் தந்த பரிசு என்ற மகிழ்வில் கோவையில் இருந்து சென்னை நோக்கிப் பயணமானேன்."மனதில் உள்ளதையே பேசு, பேசியதையே செயலாய் மாற்று. தவறு செய்திருப்பினும் அதை உண்மையாய் பகிர்ந்து கொண்டால் உங்களுக்கு ஒரு தெளிவும் மன சந்தோசமும் கிடைக்கும். மீண்டும் அத்தவறை செய்ய மனம் அஞ்சும். மனதில் ரகசியம் இல்லை என்றால், எதற்கும் பயம் இல்லை. முயற்சித்து பாருங்கள், மனம் நிம்மதி பெறுவதை உணர்வீர்கள் என்று அன்போடு தட்டிக் கொடுத்த குருவை மீண்டும் மீண்டும் நினைக்கின்றேன்.  உண்மையை உரத்துச் சொல் கடவுள் உன்னைக் காப்பாற்றுவார் என்ற குருவின் போதனையில் எழுதியதுதான் நிலைக்கண்ணாடியில் நான் எழுதிய "மந்திரப்புன்னகை". எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று மணிவண்ணன் இறுதியாகச் சொன்ன வார்த்தைகளோடு என் பயணம் தொடர்கிறது. 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அறம் செய்ய விரும்பு


இந்த நாட்டில் வெளிய போய்விட்டு வீட்டுக்கு வந்தால் உடுப்பு களற்றி வீட்டு உடுப்பு போடவே மனம் இல்லை. அவளவு குளிர். குளிர் உடம்பை பக்கென்று அணைத்துக் கொள்ளும். இதனால்தான் கவிஞர் கண்ணதாசன் காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடலில் "பனிபோல் அணைப்பதில் கன்னி" என்று அனுபவப்பட்டு எழுதினாரோ என எண்ணத்தோன்றுகிறது. எனது கண்ணாடியை களற்றிவைத்த இடத்தில் காணவில்லை. தேடிப்பார்க்கிறேன். தொலைந்த தொலைபேசியைத் தேட இன்னுமொரு தொலைபேசி தேவைப்படுவதுபோல் கண்ணாடியைத் தேட இன்னுமொரு கண்ணூடி தேவைப்படுகிறது. இப்படிப் பொருட்களைத் தொலைத்து நான் தேடுகின்ற போது அம்மா என்னை "கண்ணைப் பிடரிக்குள் வைத்துக்கோண்டு தேடினால் கிடைக்குமா" என்று ஏசிப்போட்டு தானே தேடி எடுத்துத்தருவா. பிடரிக்குள் கண் இருந்தாலும் இந்தக் காலத்தில் நல்லது என்றே நான் கருதுகிறேன். நம் முதுகிற்குப் பின்னால் பலர் செய்யும் சேட்டைகளைக் கண்டுபிடித்து விடலாம். 

கண்ணாடி என்றதும் கண் என்பது எனக்கு ஞாபகம் வருகிறது. கண் என்பது ஞாபகம் வந்தவுடன் கூகுல் தேடல் தளத்தில் "கண்" என்று எழுதினால் எல்லா "கண்" என்ற சொற்களும் வருவதுபோல் எனக்கும் பல கண்கள் ஞாபகத்தில் வருகின்றன. கண்ணதாசன் தனது "கண்" கெட்டது தனது 16 வயதில் தான் பார்த்த ஒரு மேடைக் கூத்தில் வந்த பெண்களைப் பார்த்துத்தான் என்று குறிப்பிடுகிறார். அவர்தான் பின்னாளில் "இருட்டிற்கும் பார்க்கின்ற விழி இருக்கும்" என்று தத்துவமும் சொன்னவர். கவிஞர்கள் எல்லோரும் மான் மீன் என்று கண்ணைப்பற்றி பாடல் பாட வைரமுத்து "sரோபறி கண்" என்று பாடினார். அந்தப் பழத்தை வெட்டிப் பார்த்தால் கண்போல் இருக்கும். மணிமேகலை என்ற காப்பியத்தில் மணிமேகலையின் கண் ஒளி ஒரு தாமரைப்பூவில் பட பக்கத்தில் நின்ற கொக்கு கயல்மீன் பாய்கிறது என்று கொத்தி ஏமாந்ததும் கதைகளில் உண்டு. இந்த நிகழ்வு மணிபல்லவத்தீவில் நடைபெற்றது என்றும் அதுதான் நான் பிறந்து வளர்ந்த நயினாதீவு என்று அழைக்கப்படுகிறது என்பதும் என் பிறப்பிற்கு பெருமை. திருவள்ளுவர் படிக்காதவர்களின் முகத்தில் இருப்பது கண்ணளல்ல இரண்டு புண்கள் என்றுகூறி எல்லோரையும் அறிவுடையோராக்க வேண்டும் என்று தனது கருத்தை முன்வைத்தார். புண்கள் என்று சொன்ன அது கண்களைத்தான் ஆடவர்கள் மார்பில் புண்களை ஏற்புடுத்தும் வேல்விழி என்றும் கூறினார்.   இப்ப நான் சொல்ல வருவது சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் இடையில் ஏற்பட்ட கண் சம்பந்தமான ஒரு திருக்கைலாய காட்சியைப் பற்றியது

ஒரு நாயனார் தனது ஒரு கண்ணை சிவனுக்கு கொடுத்துவிட்டு மறு கண்ணையும் கொடுக்க முனைகையில் இறைவன் "நில்லு கண்ணுப்ப" என்று அழைத்ததால்தான் அவருக்கு கண்ணப்பநாயனார் என்று பெயர்வந்தது. இவை புராணக்கதைகளாக செவிவழிவந்த கதைகள். தாயா? தாரமா? என்ற கேள்விகளுக்கு சிவபெருமான் தாரம்தான் சிறந்தது எனக் கருதி தனது இடப்பக்கத்தை உமாதேவியாருக்கக் கொடுத்தவர். சிவபெருமானுக்கு மொத்தத்தில் நெற்றிக் கண்ணுடன் சேர்த்து 3 கண்கண். அதில் உமாதேவியாருக்கு ஒன்றரைக் கண்ணைக் கொடுத்தால் அவருக்கு இருப்பது ஒன்றரைக் கண்தான். தற்காலத்தில் நாம் கண்ணில் வாக்கு இருப்பவர்களை ஒன்றரைக் கண் என்று அழைப்பது வழக்கம். ஒன்றரைக் கண் என்ற சொல் இதிகாசங்களில் இருந்துதான் தற்போதைய புழக்கத்திற்கு வந்தது. சிவபெருமானுக்கு ஒன்றரைக்கண் என்றால் அதில் ஒரு கண் "கண்ணப்ப நாயனார்" க்குச் சொந்தமானது. எனவே மொத்தத்தில் சிவபெருமானிடம் இருப்பது அரைக்கண்தான். 

கைலாயத்தில் சிவபெருமானுடன் வழமைபோல் உமாதேவியார் ஊடல் கொண்டிருந்தார். இராவணன் தனது மயில்பொறி(தற்கால கெலிகப்டர்) யில் வந்திறங்கி தாயாருக்காக கைலைமலையைப் பிரட்டியவர். பிரட்டும்போது உமாதேவியார் பயத்தில் கோபத்தைவிட்டு விட்டுச் சிவனுடன் சேர்ந்துவிட்டார். அப்போது சிவபெருமான் தனது கால் பெருவிரலால் மலையை சமநிலைக்கு கொண்டுவரும்போது இராவணன் மலைக்குள் சிக்குண்டான். இதைக்கண்ட வாகீச முனிவர் இராவணனைப் பார்த்து இறைவனுக்கு சாமவேதம் என்றால் பிடிக்கும் அதில் பாடல்கள் பாடு என்று பணித்தார். இராவணன் சாமவேதம் பாடி ஆபத்தில் இருந்து தப்பினார். ஆனால் இப்படிச் சொல்லிக் கொடுத்த வாகீசமுனிவர்மீது சிவன் கோபம் கொண்டார். அதற்குத் தண்டனையாகத்தான் வாகீசமுனிவர் பூலோகம் அனுப்பப்பட்டு 81 ஆண்டுகள் இறைவனுக்குத் தொண்டுகள் செய்து வாழ்ந்தார். அவர்தான் நமது திருநாவுக்கரசு நாயனார் ஆவார். 
இது இப்படி இருக்க ஒருநாள் சிவபெருமானுடன் இருந்த உமாதேவியார் விளையாட்டுக்காகச் சிவபெருமானது இரண்டு கண்களையும் பொத்தி வேடிக்கை பார்த்தார். சிவனின் கண்கள் இருண்டதால் உடனே உலகம் இருண்டுவிட்டது. உலகம் இருண்டதால் பூமியில் அறங்களைச் செய்துகொண்டிருந்த சான்றோர்களின் செயல்கள் தடைப்பட்டன. ஆலயவழிபாடுகள் தடைப்பட்டு விட்டன. மக்களுக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டன. உடனே சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து இன்னல்களைப் போக்கினார். உமாதேவியார் பாவம் செய்தவராக சிவபெருமானால் இம்சிக்கப்பட்டார். இந்தப் பாவங்கள் தீர ஒரு பிராயச்சித்தம் செய்யவேண்டும் என சிவன் உமாதேவியாரைப் பணித்தார். அதன் பிரகாரம் உலகமக்கள் உய்ய உமாதேவியார் மானிடப் பெண்ணாக காஞ்சியிலும்; காசியிலும் சென்று 32 வித அறங்களைச் செய்து பாவவிமோசனம் பெற்றார் என்று புராணங்கள் கூறுகிறது. 

இந்த வரலாற்றை சுந்துரமூர்த்தி நாயனார் தனது ஒரு பாடலில் குறிப்பிடுகின்றார். 

"மலைமடந்தை விளையாடி விளையாடு கரத்தான்; மகிழ்ந்து அவள் கண்புதைத்தலுமே வல் இருளாய் எல்லா; உலகுன்றான் முடவிருள் ஓடும்வகை நெற்றி; ஒற்றைக்கண் படைத்துகந்த உத்துமன்" (தி7.ப16.பா4)

ஐயோ ஆண்டவனே தேடு தேடென்று கண்ணாடியைத் தேடிப் பார்த்தேன் காணவில்லை. காருக்குள் கிடக்கிறதா என்று பார்த்துவிட்டு வாறன். கொஞ்சம் பொறுங்கோ!!

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழர் இலக்கியத்தில் ஒழுக்கமும் கற்பும்.


மனித வாழ்வியலை அகவாழ்வு புறவாழ்வு என இருவகைப்படுத்திச் சைவ நூல்கள் கூறுகின்றன. சங்ககாலத்திலேயே இவ்விரு ஒழுக்கங்களும் தமிழர் மத்தியில் தோற்றம்பெற்று ஐவகை நிலங்களுக்கும் தனித்தனி ஒழுக்கங்களாக வகுக்கப்பெற்றுத் தமிழர் வாழ்க்கை நெறியாகக் கொண்டிருந்தமையை அக்காலத்தில் எழுந்த எட்டுத்தொகை; பத்துப்பாட்டு; நூல்களினூடாக அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அக ஒழுக்கத்தினை அகத்திணை என்றும் புற ஒழுக்கத்தினைப் புறத்திணை என்றும் அமைத்தனர்.(வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே (தொல்காப்பி)

உலகியல் நடைமுறையை வழக்கு என்கின்றோம். பண்பாடு இல்லாதவருடைய பழக்கவழக்கங்களை உலகத்தார் வழக்கு என்று கருதுவதில்லை. உயர்ந்தவர்களது நெறிமுறைகளே வழக்கு என்று போற்றப்படுகின்றன. பெரியவர்களது பழக்கமே மக்களிடையே வழக்கமாகி பின்னர் அதுவே மக்களால் நடைமுறைப்படுத்தப் படுகின்றன. எனவே இந்த அகம் புறம் என்னும் இருவகை ஒழுக்கமும் உயிரினும் மேலாக ஓம்பப்படும் என்பதைத் திருவள்ளுவர் 

"ஒழுக்கம் விழுப்பம் தரலான்; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்(குறள்) என்று குறிப்பிடுகின்றார். 

ஒழுக்கம் என்பது வாழ்வின் எல்லாத் துறைகளுக்குள்ளும் இருந்தபோதிலும் சிறப்பாக அகத்துறையில் குடும்ப வாழ்க்கையில் நெறியோடு வாழ்வதையே ஒழுக்கம் எனக்கொள்ளப்படுகின்றது. ஒருவனை ஒழுக்கம் கெட்டவன் என்றால் அது புறத்திணை ஒழுக்கத்தைக் குறிக்காது அகவியல் அதாவது குடும்ப வாழ்வில் கெட்டவன் என்ற பொருளையே உலகில் குறித்து நிற்பதைக் காணலாம்.

ஆண்களின் அகவாழ்வு நெறியை ஒழுக்கம் என்றும் பெண்களின் அகவாழ்வு நெறியைக் கற்பு என்றும் தமிழர் பண்பாடு நமக்கு அறிவிக்கின்றது. கற்பு என்பது கற்றலையும் கற்பித்தவழி நிற்றலையுமே குறிக்கின்றது. பெண்கள்; பெற்றோரும் ஆசிரியர்களும் கற்பித்தவழி நிற்றலையே போற்றி வாழ்ந்துள்ளனர். கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை என்று மேற்குறிப்பிட்ட கருத்தைக் கொன்றைவேந்ததன் 14ம் வரி விளக்ககின்றது. 

கற்பு என்ற சொல் பெண்ணியல் கற்பு என்ற பொருளிலும் கற்றல் என்ற பொருளிலும் சங்க இலக்கியங்களிலும் திருமுறை இலக்கியங்களிலும்  வருவதைக் காணலாம். ஞானசம்பந்தரை வெப்பு நோய் வாதத்திற்கு அழைத்தபோது 

"மண்ணகத்திலும் வானிலும் எங்கும்; திண்ணகத்திரு வாலவாயானருள்; பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்; தெண்ணர் கற்பழிக்கத்திருவுளமே(தி 3. ப 47. பா 3) என்று பாடினார். 

இங்கு கற்பு என்பது சமணர் கற்ற கல்வியின் நேர்மை இல்லாத செயலை அழிக்க இறைவன் திருவுள்ளம் செய்யவேண்டும் என்பதையே விளங்கப்படுத்துகின்றது. இந்த இடத்தில் இது மகளிரது ஒழுக்க நெறி என்று கொள்ளல் ஆகாது. சம்பந்தர் தமது இன்னுமொரு பாடலில் மகளிர் கற்பைப்பற்றியும் போற்றுகிறார். 

"மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து; மாயவர வன்றுரிசெய் மைந்துனிட மென்பர்;
பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லிப் ; பாவையர்கள் கற்பொடுபொலிந்த பழுவூரே"
(தி2.ப34.பா6)

இப்பாடலில் பூவை என்னும் நாகணவாய்ப் பறவைக்கு இறைவனது புகழைக் கற்பிக்கும் பாவையர்கள் கற்புடன் திகழ்ந்த பழுவூர் என; கற்பு என்பது கற்றலுக்கும் கமளிர் கற்புக்கும் பொருந்தி இரண்டு நிலைகளையும் விளங்க வைக்கிறது. 
"சிவபோகசாரம்" என்னும் நூலில் கற்பிலர் என்று வரும் கூற்று கல்லாதவரையும் கற்பொழுக்கம் இல்லாதவரையும் சுட்டி வருதலைக் காணலாம். 

"நீதியிலா மன்னன் ராச்சியமும்;  நெற்றியிலு பூதியிலார் செய் தவமும்; சோதி கழல் அறியா ஆசானும்; கற்பிலரும் சுத்த விழல் எனவே நீத்துவிடு" (சிவபோகசாரம் பா 130)

கற்பு என்பது பெண்களுக்கு உரிய ஒழுக்கம் என்ற தொனிப்பிலும் கற்றல் என்ற தொனிப்பிலும் இலக்கியங்களில் கூறினாலும் திருவள்ளுவர் கற்புஎன்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய ஒழுக்கமாகவே கொள்கிறார். 

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும் திண்மை உண்டாக்கப் பெறின்" (குறள் 54)
என்று பெண்ணிற்கான ஒழுக்கத்தையும் ;

"ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு" (குறள் 974)
என்று ஆண்களுக்கான ஒழுக்கத்தையும் கற்பு என்றே குறிப்பிடுகினறார். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மந்திரப் புன்னகை!


"அவன் நடத்தும் நாடகத்தில் உங்கள் பகுதி முடிந்துவிட்டது" இது என் கணனிக்கு வந்த மின்னஞ்சல்.  இதை வாசிக்கும் போது ஒரு சாத்தான் எனக்கு வேதம் ஓதியதுபோல் இருந்தது. மனத்தில் சபலம் வந்ததும் சாபம் போடத் தோன்றும். சலனம் வந்ததும் சமாளிக்கத் தோன்றும். சந்தேகம் வந்ததும் கொலைசெய்யத் தோன்றும். எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. என்னை; மற்றவர்கள் இவர் என்ன புடம் போட்ட தங்கமா என்று உரசிப் பார்ததவர்களுக்கு அப்படித் தோன்றியது. அது அவர்களது 5ம் அறிவு. எனது அம்மா என்னை டாக்டருக்கு படிப்பிக்க எண்ணியிருந்த காலத்தில் சத்திர கிசிச்சை என்ற சொல் எனக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது. எந்த உயிருக்கும் துன்பம் விளைவிக்காத மனதின் பிரதிபலிப்பு அது. ஆமிக்காரர்களை வீதியில் காணும் போது இவர்கள் தான் மக்களைச் சித்திரவதை செய்பவர்கள் என்ற எண்ணம் என்னைப் பலமுறை சித்திரவதை செய்திருக்கிறது. "டோபி" யைக் கண்டால் கூட அவர் வெளுத்து விடுவார் என்ற பயம் எனக்கு! பூக்கள் பறிக்க கோடாரி எடுப்பவர்களை நான் கொலைகாரர்களாகப் பார்க்கிறேன். எனது பார்வையில் பூக்களில் இரத்தமும் பூமியில் யுத்தமும் இந்த பிரபஞ்சத்தை விட்டு அகல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். அல்லாத பட்சத்தில் நானே பூமியைத் தள்ளிவைத்து வாழப்பழகி விடுவேன்.


மகாபாரதப் போரில் பெருவாரியான போர் வீரர்கள், வித்தியாசம் தெரியாமல் தங்களுக்குத் தாங்களே அடிபட்டுச் செத்தார்கள். இதைத் தடுப்பதற்க்காக ஒரு வழி செய்தார்கள். ஒரு சாரார் மட்டும் நெற்றியில் பட்டை தரித்துக் கொண்டார்கள். ஆனால் மறுசாரார் எதிரியிடம் இருந்து தப்புவதற்காக அவர்களும் பட்டை தரித்துக் கொண்டார்கள். மறுபடியும் போர்க்களத்தில் அதே நிலைமை தான். இறுதியில் பிணக் குவியலின் மேல் ஒரு சாராரின் வெற்றிக் கொடி அழுது அழுது காற்றில் பறக்கும்.  திரௌபதயை பத்தினியாக வர்ணித்த பாண்டவர்களின் கூற்றை எதிரிகளான கௌரவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.   ஒருபெண் எந்த வேடம் போட்டாலும் உடை அலங்காரங்களைப் பார்த்து அவர் போட்டுள்ள வேடத்தைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் மனத்தில் ஒருவர் பத்தினி வேசம் போட்டால் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியாது என்று வேடம் போட்டவர்கள் கருதுவார்கள். கௌரவர்கள் இதையே தங்கள் விவாதத்தின் தலைப்பாக எடுத்துக் கொண்டார்கள். சிரிக்கக் கூடாத இடத்தில் ஒருத்தி சிரித்ததால் தான் பல்லாயிரக் கணணக்கானோர் பாரதப் போரில் மாண்டதாக வரலாறு கூறுகின்றது. வாழ்க்கை என்றால் போராட்டம்(போர்+ஆட்டும்) என்ற சிந்தனை பிற்காலச் சந்ததியினருக்கு இதிகாசங்கள் மூலம் பரிசாக அளிக்கப்பட்டது உண்மை என்றே நான் கருதுகிறேன். ஏனென்றால் கடவுளே போர்க்களங்களில் A.K.47 க்குப் பதிலாக பல ஆயுதங்களைப் பிடிக்க வைத்துள்ளார். சிவபெருமானிடம் சூலாயுதமும் கண்ணனிடம் தடியும்; யேசுவிடம் ஒரு கோலும்; முருகனிடம் வேலும் இருந்ததாக வரலாறு சித்தரிக்கிறது. கர்ணனிடம் இருந்த நாக அஸ்திரம் இக்காலத்து ஏவுகணையை விட சக்தி வாய்ந்ததாக வர்ணிக்கப்படுகின்றது.  சூதுதனை வாது வெல்லும் மறுபடியும் தர்மம் வெல்லும் என்பது எனது கொள்கை.  கண்ணதாசன் அவர்கள் சொல்லுவதுபோல் இந்த உலகத்தில் வெல்லுபவன் சொல்லுவதே வேதமாகிவிட்டது. ஆனால் நான் அவரைவிட்டு ஒரு படி உயர்ந்து சென்று "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" (ஆன்மீக விடுதலை அடைந்த சான்றோர்கள்) என்ற தொல்காப்பியரின் வார்த்தைக்குள் என்னை அற்பணிக்கிறேன்.


போர் என்றதும் எனக்கு முள்ளிவாய்க்காலை விட சிறிய வயதில் நேரே பார்த்த சூரன் போரே நினைவு வருகின்றது. அப்போது சூரனை விழுத்தும் முருகனின் கதாபாத்திரமாக நான் மாறி விடுவேன். மூன்று நான்கு நாட்களுக்கு முருகன் நினைவுதான். சூரன் முருகனை விழுத்த எவளவோ மாறுவேடங்கள் எல்லாம் போட்டு வருவார். இருந்தாலும் தர்மம் முருகன் பக்கம் இருப்பதால் வேசங்களையும் வென்று மீண்டார். சின்னவீட்டு சமாச்சாரம் தெருவுக்கு வந்த போது ஆணுலகம் முருகனைச் சந்திக்கு இழுத்து மனைவிமாருக்கு நம்ம முருகனே சின்னவீடு வைத்திருப்பதாக விரிவுரை நடாத்தினார்கள். அக்காலத்தில் கி.பி 9ம் நூற்றாண்டளவில் இந்துப் பெண்களெல்லாம் போர்க்கொடி தூக்கினார்கள். முருகனை வணங்க வணங்க சின்னவீடுகள் பெருகுவதை உணர்ந்தார்கள். ஆண்வர்க்கம் அதிரடியாக பெண்கள் சமூகத்தைச் சமாளிக்க வீரசைவத்திற்குள் தனியாக பிரமச்சாரியாக இருந்த பிள்ளையாரைக் கொண்டு வந்து "இவர் திருமணமாகவில்லை; இவரை வணங்குங்கள்" என்று இந்து சமயத்திற்குள் கொண்டு வந்தனர்.  இவர் கடவுளா என்பதில் பலருக்கு இப்பவும் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் சமயகுரவர்கள் என்று அழைக்கப்படும் நால்வரும் திட்டத்தட்ட 12 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார்கள். அவற்றில் ஒரு வரிகூட பிள்ளையாரைப்பற்றி வரவில்லை. ஆனால் பிள்ளையார் பெண்களோடு இருந்த அமைப்பிலான விக்கிரகம் யப்பானில் தொல்பொருள் காட்சியகத்தில் இருக்கிறது. அதே உருவும் சிறிய அளவில் நியூயோர்க் நகரத்தில் உள்ள கிறிsதோப்பர் வீதியில் 135ம் இலக்கத்திலுள்ள ஒரு வெள்ளைக் காரனின் நகைக்கடையில் இருக்கிறது. இது கடவுள் சமாச்சாரம் விட்டு விடுவோம். நம்பிக்கையே கடவுள்! தன் நம்பிக்கையே வாழ்க்கை! பிள்ளையார் பிரசித்தி பெற்றார் தனியாக இருக்கும் அவரை உசுப்பி உசுப்பி (poke) அடியார்கள் தங்கள் வேண்டுதல்களைச் செய்தனர்.


அறிஞர் ராகுல் சாங்கிருத்யாயன் (இவர்தான் இந்திய புகையிரதப் போக்குவரத்திற்கான நேர அட்டவணையை அமைத்துவர்) எழுதிய "வொல்காவிலிருந்து கங்கைவரை" என்ற நூலில் அந்தப்புரத்தில் அரசனால் கழிக்கப்பட்டவை அந்தணர்களுச் சின்னவீடாகியது என்றும் அந்தணர்களால் கழிக்கப்பட்ட பெண்கள் தேவதாசிகளாகித் தெருத்தெருவாக அலைந்தனர்" என்று குறிப்பிடுகிறார். என்னை முகநூலில் உசுப்புபவர்களைப்பற்றி கதை எழுத எனக்கும் ஒரு அம்பேத்கார் இப்போது தேவைப்படுகின்றார்.


Kumar Kanagasabai இவர் ஆரம்பத்தில் கமலா கனகசபை; மலேசியா என்று அறிமுகமாகி இருப்பிடம் லண்டன் என்று மாற்றி இருப்பவர். கணனியில் காதல் மொழிபேசி; கடைசியில் காசு அனுப்பமுடியுமா என்று கேட்டவர். இப்போது kumar kanagasabai என்று தன்னை ஆணாக மாற்றியுள்ளார். ஆணாக மாற்றினாலும் எழுதிய எழுத்துக்கள் அப்படியே இருக்கின்றன.  Bairavi Sri இவர் முதலில் செல்வியாக இருந்து கொஞ்சநாள் பேசாமல் விட்டுவிட்டு தன்னைத் தானே Bairavi Sri ஆகமாற்றிக் கொண்டவர்.  இவரின் மாறுவேடம் தெரிந்து நான் நண்பர் பட்டியலில் சேர்க்கவில்லை. SELVY இந்தச் செல்வி களவியலில் காமமொழி பேசி என்னை நிலைகுலையச் செய்தது. நான் யாரென்று கண்டுபிடித்ததும் "கெட்டிக்காரன்" கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று பாராட்டுப் பத்திரமும் வேறு தந்தது. அடுத்தது தமிழ் மீது பிரியம் உள்ளவர் போல் காட்டும் ஒருவருடன் இந்தப்பேய் சேர்ந்து "மாலா கிறிs" என்ற பெயரில் வந்தது. ஆசை வார்த்தைகள் கூறியது. தனது கணவன் யுத்தகாலத்தில் இறந்துவிட்டதாகவும்; தன் கணவர் என்னைப் போல்தான் இருப்பார் என்றும் காமச்சதிர் ஆடியது. என்னைப் பலவீனப்படுத்தியது. திரும்பவும் இப்போ முருங்கைமரம் ஏறிவிட்டதாக நினைக்கிறன். 


ஒருவன் தன் விதிவசத்தால் வாழ்க்கையில் பலவழிகளாலும் துன்பப்பட்டுக்கொண்டு தனிமையிலும் தியானங்களிலும் இருக்கும்போது அன்பும் ஆறுதலும் காட்டுவதற்குப் பதிலாக அவனது தனிமை வாழ்க்கைச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆசைவார்த்தைகளைக்காட்டி அவன் மனத்தைப் பேதலிக்கச் செய்து அதில் சுகம் காண விளைந்தவர்கள் எல்லாம் திருமணமான மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்.  பாவம் தோட்டக்காரன்! 


நடந்தது என்ன! குற்றமும் பின்னணியும்" (இது vijai TV யில் திரு கோபி நாத் அவர்களின் வார்த்தை தான்) kamala, bairavi, bairavi Sri, mala Krish, Selvi என்ற முகநூல் ID களுக்கு ஒரு பெண்தான் முதலாளி. இதைவிட தனக்கென்றும் ஐந்து ID பப்ளிக்காக வைத்திருக்கிறது. பின்னர் அந்தக் கிறுக்கி நான் எழுதிய விடையங்களில் சிலவற்றை எனது உண்மையான கள்ளங்கடபமற்ற நண்பர்களுக்கும் நண்பியர்களுக்கும் அனுப்பி என்னை மட்டம் தட்டத் தொடங்கியது. உலக அரங்கில் என்னை அசிங்கப் படுத்தத் தொடங்கியது. கடவுள் விடுவானா? ஒரு குருவை எனக்காகத் தயார் செய்தான். கடந்த 07.09.2011 அன்று எனக்குத் தரிசனம் கிடைத்தது. எதிரிகள் ஈட்டிகளைத் தயாரித்தார்கள். நான் பாதுகாப்பிற்குக் கேடையங்களை மட்டுமே தயாரித்தேன். இது குருவின் உபதேசம்!


ஓசோ சொல்கின்றார் "இந்த உலகத்தில் மகான்கள் தோன்றும்போது கூடவே சாத்தான்களும் அவரது மகிமையை இழிவுபடுத்துவதற்காகத் தோன்றிவிடுகிறார்கள். சாத்தான்கள் ஆன்மீகவாதிகள் போல் வேடமணிந்து அவரிடம் சென்று சிதைத்து விடுவார்கள். ஆன்மாக்களே விழிப்பாக இருங்கள்" என்று சொல்கிறார். "அவன் நடத்தும் நாடகத்தில் உங்கள் பகுதி முடிந்துவிட்டது" என்று கூறும் சாத்தான்களை உங்கள் பார்வையே பொசுக்கிவிடும் அளவு வல்லமை பெறுங்கள். இக்கருத்தையே சுவாமி விவேகானந்தரும் தனது "ஞானதீபம்" என்ற நூலில் 258வது பக்கத்தில்" ஆன்ம ஞானத்தில் ஒருவர் சிறந்து தோன்றினால் உடனே அவரைப்பற்றிப் பல கட்டுக்கதைகள் கட்டப்பட்டுவிடுகின்றன" என்று. எனது ஆன்மீகக் குருவால் என் உள்ளத்தில் வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆன்மீகத் தீயின்முன் இந்த ஆவிகளின் ஆட்டம் இனிப் பலிக்காது. இப்போது என் மனம் வெறுமையாக இருக்கிறது. தூரத்தில் ஓர் ஒளி தெளிவாகத் தெரிகிறது.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கங்கையில் மலர்ந்த கலையன்னை


கங்கையில் மலர்ந்த கலையன்னை  என உலகத்தவர்களால் பாராட்டப்பெறும் ஸ்ரீசாரதா தேவி துதியாக - கலைமகள் வணக்கமாக - சகலகலாவல்லி மாலைஎன்ற பெயரில் பத்துப் பாடல்களை அமைத்துப் பாடியவர் சுவாமி குமரகுருபரர் ஆவார். குமர குருபர முனிவரர் காசியில் கங்கைக் கரையில் நின்று பாடிய சகலகலாவல்லி மாலை என்றும் பதிகமே கங்கையில் மலர்ந்த கலையன்னையாக அம்மன் தரிசன பக்கதர்களுக்கு திருவருளையும் குருவருளையும் வழங்குகிறது. 

காசியில் இறப்பவருக்கு விசுவநாதர் பிரணவ உபதேசம் செய்து சாரூபப் பதவியை வழங்கி அருளுவர் என்பது காசித்தலப் புராணம் கூறும் வரலாறாகும். காசித்தலத்தின் பெருமைகள் பற்றி குமரகுருபரர் கூறும் செய்திகள் வியப்பிற்குரியவை. காசியில் பாவம் செய்தவர்கள் இறந்தாலும் அவர்களுக்கு யமலோகத்தின் தண்டனை இல்லை என்பது ஒரு ஐதீகம்.

தமிழை மட்டும் தாய்மொழியாகக் கொண்டு காசியில் பணிபுரிதல் கடினம் என்பதை உணர்ந்தவராக குமரகுருபர முனிவர் அப்போது வழக்கத்தில் இருந்த ஹிந்துஸ்தானி மொழிப் பயிற்சியும் பெற்றார். பின்னர் டில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரியும் பாதுஷாவின் உதவியும் வேண்டும் என எண்ணினார். பாதுஷாவின் உதவியைக் கொண்டு சைவத்தை வளர்க்க வேண்டும் எனவும் தமிழ் நாட்டிலிருந்து பலரும் காசிக்கு வந்து போக வழிவகை செய்ய வேண்டும் எனவும் தம் உள்ளத்தில் உறுதியான கொள்கை ஒன்றை வைத்திருந்தார். உடனே குமரகுருபரர் உள்ளத்தில் கலைமகளின் தெய்வத்தன்மையும் தனித்தன்மையும் தோற்றம் பெற்றன. குருவருருளாலும் கல்வியறிவாலும் தம்முடைய தவப் பண்பினாலும் கலைமகளை வேண்டி நின்றார். அப்போது அவர் கலைமகளின் மீது பாடிய துதிநூலே சகல கலா வல்லிமாலை ஆகும். 


வெண் தாமரைக்கு அன்றி நின்பதம்
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாதுகொலோ
சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலா வல்லியே.
என்பது முதற்பாடல். சகல கலாவல்லி மாலையின் பத்தாவது பாடலாக.


மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவிற் பணியச்
செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பலகோடி
உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ
சகல கலா வல்லியே.
என்பதை அமைத்துப் பாடினார். சகல கலா வல்லி மாலை நிறைவு பெற்றதும் கலைமகள், கங்கைக்கரையில் நின்ற குமரகுருபரருக்கு மலர்ந்த அன்னையாக நேர்க்காட்சி வழங்கி ஆசி அருளியதுடன் சிங்கம் ஒன்றை அனுப்பினாள். கலைமகளே சிங்க வடிவில் வந்தாள் என்று கூறுபவர்களும் உண்டு.

குமரகுருபர முனிவரை நோக்கி வந்த சிங்கம், அவரை மூன்று முறை வலமாகச் சுற்றி வந்து நின்றது. குமரகுருபர முனிவரர் அச்சிங்கத்தின் மேல் தம் கையிலிருந்த திருநீற்றை (விபூதி)த் திருவைந்தெழுத்தை ஓதிப் பூசியபின், அதன்மேல் ஏறி அமர்ந்தார்.உலகில் நாம் காணும் அரசர் முதலியவர்கள் சிங்க வடிவில் செய்யப் பெற்ற ஆசனத்தில்-சிம்மாசனத்தின் மேல் அமர்ந்திருப்பார்கள். உண்மையான சிங்கத்தின் மேல் ஏறி, டில்லி பாதுஷாவின் அரண்மனைக்குச் சென்றவர் குமரகுருபர முனிவரர் ஒருவரே.உண்மையான சிங்கத்தின் மேல் சைவ சமய முனிவரர் ஒருவர் வருவதைக் கண்ட அரசன் பாதுஷா முதலில் திடுக்கிட்டாலும், வருபவர் தெய்வத்தன்மை வாய்ந்தவர் என்பதை உணர்ந்து, தானமர்ந்திருந்த சிம்மாசனத்திலிருந்து எழுந்து, மரியாதையுடன் குமரகுருபரரை வணங்கி வரவேற்றான். இது அரசர்கள் எல்லா மதங்களையும் அனுசரித்து வளர்த்தார்கள் என்பதற்கு ஒரு உதாரணமாகும். 

தெளிவான ஹிந்துஸ்தானி மொழியில் பேசிய குமரகுருபர முனிவரரின் ஆற்றலைக் கண்டு வியந்தும் மகிழ்ந்தும் நின்ற மன்னன், குமரகுருபர முனிவரரின் விருப்பத்தின்படியே, காசியில் குமரகுருபர முனிவரர் தங்குவதற்கு ஆச்சிரமம் அமைப்பதற்கும் ஏனைய சமூகத் தொண்டுகள் செய்வதற்கும் ஏற்றவகையில் நிலத்தை வழங்கி உதவினான்.

கேதாரகட்டத்தில் மிக நீண்ட காலமாக மறைக்கப்பெற்றிருந்த ஸ்ரீவிசுவலிங்கப் பெருமானை வெளிப்படுத்தி அங்கே கோவில் முதலியவற்றை உண்டாக்கி நித்திய நைமித்திய வழிபாடுகளும் விழாக்களும் குறைவற நடந்தருளுவதற்குரிய ஏற்பாடுகளையும் பிறவற்றையும் ஒழுங்கு பெறத் தம் தவ வலிமையாலும் தக்க சான்றோர்களின் பொருளுதவியாலும் செய்து அமைத்துப் பெருமைப்படுத்தினார். குமரகுருபர முனிவரர் காசியில் தங்கியிருந்த ஆச்சிரமம் குமாரசாமி மடம் என்று பெயர் பெற்றது. 

குமரகுருபர முனிவரர் தாம் தங்கியிருந்த காசி மடத்தில் புராண சாலை என்ற ஒரு பகுதியை உண்டாக்கி, அதில் நாள் தோறும் ஹிந்துஸ்தானி மொழியிலும் தமிழிலும் புராணப் பிரசங்கம் நிகழ்த்தி வந்தார். தென்னகத்திலிருந்து காசிமாநகருக்குச் செல்பவர்களுக்கு உறுதுணையாகும் வகையில் பற்பல வகையான சமுதாய தொண்டுகளையும் செய்துவந்தார்.


குமரகுருபர முனிவரர் கங்கையில் மலர்ந்த கலையன்னையின் திருவருளால் மீண்டும் ஒருமுறை தருமபுரம் வந்து தன்னுடைய ஞானாசிரியரைத் தரிசித்து மீண்டு காசிமாநகருக்கே திரும்பிச் சென்று தவப்பெருஞ் சீலராகத் தம்முடைய துறவற வாழ்க்கையைச் செழுமைப் படுத்தி நின்றதோடு தமிழும் சைவமும் வடக்கேயும் வளர்ந்து செழிக்கும் வகையில் வாழ்வை நடத்தி, ஒரு வைகாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத் திதியையில் சிவபெருமான் திருவடி நிழலிற் கலந்தருளினார்.
காசியில் குமரகுருபர முனிவரர் வாழ்ந்திருந்த காலத்தில் காசித் துண்டி விநாயகர் பதிகமும், காசிக் கலம்பகமும் இயற்றியருளினார். வாழ்க அவர் தொண்டு. வளர்க நம் சைவம். 


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS