RSS

மெய்ப்பொருள்



“ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்” (குறள்)

ஒருவரைப் பழிவாங்கிவிடுவதில் அவருக்கு இருக்கும் ஆணவம் தற்காலிகமாகத் திருப்தி அடைகிறது. அது அந்தச் சந்தர்ப்பத்தில் கிடைக்கும் இன்பம்தான். ஆனால் ஒருவரை மன்னிப்பதில் பேரின்பம் இருக்கிறது. மன்னிப்பவர்களை மரணம் வரையிலும் அவரது புகழ் தொடர்கிறது. தண்டிப்பதில் ஒருவருக்கு இருக்கும் ஆணவம் திருப்தி அடைகிறது. மன்னிப்பதில் ஆன்மா இன்பமடைகிறது. இதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகிறது. பலர் இதைப் புரிந்து கொள்வதில்லை. 

சேக்கிழார் சுவாமிகளால் இயற்றப்பட்ட பெரியபுராணம் சமயக்குரவராகிய சுந்தரமூர்த்தி நாயனாரைக் காப்பியத்தலைவனாகக்கொண்டது. இருந்தாலும் தமிழர்களாக இருந்து சைவநெறியை வளரத்த 63 நாயன்மார்களின் உண்மைக் கதைகளைக் கூறுகின்றது. அதில் ஒருவர்தான் மெய்ப்பொருள் நாயனார். பிற உயிர்கள்மேல் அன்பு செலுத்துவதில் மிகவும் சிறந்தவர். 

அவருடைய அன்பும், அறிவும், வாழ்க்கை நெறியில் நடக்கும் பண்பும், அவரைப் புகழுக்கு உரியவராக்கின. குடிமக்களால் பெரிதும் விரும்பப்படும் புகழ்பெற்ற அரசராக அவர் விளங்கினார்.
ஆனாலும், அவரை விரும்பாத ஒருவனும் அந்தநாட்டில் ஒரு சிற்றரசனாக இருந்தான். அவனது பெயர் முத்தநாதன். அவர் தான்கொண்ட மண்ணாசையால் பலமுறை
மெய்ப்பொருள் நாயனார் மீது படையெடுத்துப் பார்த்தான். முத்தநாதனுக்கு தோல்விதான் ஒவ்வொருமுறையும் கிடைத்ததன. இருந்தாலும் எவளவு இழப்புகள் ஏற்பட்டாலும் மெய்ப்பொருள் நாயனாரைப் பழிதீர்ப்பதிலேயே அவன் ஈடுபட்டிருந்தான். 

மக்களுக்காகவே செங்போல் நடாத்தும் மெய்ப்பொருள் நாயனாரைப் போரில் வெல்ல முடியாது என்பதை அறிந்த அவன், வஞ்சனையாலும் சூழ்ச்சியாலும் வெல்ல நினைத்தான். அதற்காக அவன் ஒரு திட்டம் தீட்டினான். மெய்ப்பொருள் நாயனார் சிவனடியாரைப் போற்றும் பண்பு உடையவர் என்பதையும், அவருடைய அரண்மனையில் சிவனடியார்கள் எந்த நேரத்தில் நுழைந்தாலும் அதற்குத் தடையிராது என்பதையும் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட முத்தநாதன் சிவனடியார் வேடம் தாங்கி சேது நாட்டின் அரண்மைக்குள் நுழைந்தான்.

அவன் அவ்வாறு நுழைந்த நேரம், மெய்ப்பொருள் நாயனார் மஞ்சத்தில் தன் மனைவியுடன் துயில் கொண்டிருந்தார். “மன்னன் துயிலும் நேரம் இது. ஆகவே இப்போது அவரைப் பார்ப்பதும் தக்கதல்ல” என்று அரண்மனைக் காவலர்கள் தடுத்தார்கள், போலியாகத் துறவு வேடமிட்ட முத்தநாதன் தன் வஞ்சகத் திட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை.“அப்பா! நான் மன்னருக்கு மிகமுக்கியமான ஆகமம் ஒன்றைப் போதிக்கவே வந்திருக்கிறேன். இது மிகவும் கிடைத்தற்கரிய ஆகமம். ஆதலால் மன்னரிடம் நான் வந்திருக்கும் செய்தியைச் சொல். அவர் பிறகு சந்திக்கலாம் என்று சொன்னால் நான் திரும்பிவிடுகிறேன்” என்றான் அவன்.

மன்னவரின் துயில் கலைக்கப்பட்டது. துறவி ஒருவர் மிக முக்கியமான ஆகமத்தோடு சந்திக்கக் காத்திருக்கும் செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மெய்ப்பொருள் நாயனார் தாமே வாசல்வரை வந்து துறவி வேடத்திலிருந்த முத்தநாதனை வரவேற்றார். சிறந்த ஆசனத்தில் துறவியை அமரவைத்து, தான் கீழே பணிவுடன் அமர்ந்து கொண்டார். “சுவாமி! அந்த ஆகமத்தை நீங்கள் உபதேசிக்கலாம்.” என்றார் மெய்ப்பொருள் நாயனார். “இது ரகசியமான ஆகமம். இதைப் பெண்கள் கேட்கக் கூடாது என்பது விதி. ஆதலால் அரசியார் இங்கிருக்கக்கூடாது” என்றான் முத்தநாதன்.
மெய்ப்பொருள் நாயனார் அரசியாரின் முகத்தைப் பார்க்க, அரசியோ அந்தப்புரத்திற்குச் சென்றுவிட்டார்.

முத்தநாதன் காவித்துணியில் மறைத்து வைத்திருந்த ஓலைச்சுவடியைப் பிரித்தான். உள்ளே மறைத்து வைத்திருந்த கொடுவாளை எடுத்து மெய்ப்பொருள் நாயனார் மீது பாய்ச்சினான். அவனது வஞ்சகத்திட்டம் நிறைவேறிவிட்டது. அந்தநேரம் மெய்ப்பொருள் நாயனாரின் மெய்க்காப்பாளர்கள் உள்ளே நுழைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருக்கும் மன்னரைப் பார்த்தார்கள். விஷயம் விளங்கிவிட்டது.
அதில் ஒருவன் தன் உடைவாளை உருவினான். போலித்துறவியாக வந்திருந்த முத்தநாதனின் தலையைத் துண்டிக்க வாளை ஓங்கினான். அந்த நேரத்தில் மன்னர் மெய்ப்பொருள் நாயனார் “காவலா பொறு. அவர் நம்மவர். ஆதலால் அவரைப் பத்திரமாக நம் நாட்டு எல்லைக்கு அப்பால் கொண்டு சேர்த்துவிடு. அவருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது.” எனக் கூறியதைக் கேட்டு காவலன் மன்னரின் மரணகாலத்துக் கட்டளையை நிறைவேற்றினான். சிவனடியார்களை நம்மவர் என்றார் மெய்ப்பொருள் நாயனார். அவரது கதையை இங்கே சொல்வதற்கு காரணம் ஒன்று உண்டு.
சிவனடியார்களைச் சிவனாக மதிக்கும் பண்பு இன்னொரு சிவனடியாருக்கே உரியது. 

“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே-வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து”
என்கிறது திருக்குறள்.
இத்திருக்குறளுக்கு மெய்ப்பொருள் நாயனார் நல்ல உதாரணபுருஷராகத் திகழ்கிறார்.
ஒருவரின் தவறான செயலுக்குப் பழிக்குப் பழிவாங்குவது சுலபம். ஆனால், மிகவும் பொறுமையுடன் தவறுகளை மன்னிப்பது அரிதானதாகும். 

மன்னிப்பவர்களை உலகம் மதிக்கிறது. தண்டிப்பவர்களை உலகம் பழிக்கிறது.  மன்னிக்கும் 
சுபாவம் உடையவர்களையும் அவர்களது பெருமைகளையும் பொன்னைப்போல் போற்றி தன் மனத்துக்குள் பத்திரப்படுத்துகிறது சமுதாயம் என்கிறார் வள்ளுவர். மெய்ப்பொருள் நாயனார் கதையை உலகம் இன்றளவும் பேசுவதற்குக் காரணம் மன்னித்தருளிய அவரது குணம்தான்.
சிவனடியாரைப் போல் வேடமிட்டிருந்தாலும் அந்த வேடத்தை மதித்து இவர் நம்மவர் என்றார் மெய்ப்பொருள் நாயனார். காணும் உயிர்களையும், மனிதர்களையும் சிவ சொரூபமாகவே நாம் பார்த்துப் பழகிவிட்டால் மன்னிக்கும் குணம் தன்னால் வந்துவிடும்.
ஆக, பொறுமையுடன் நடந்து கொள்ள அளவுகடந்த அன்பு, அல்லது பக்தி நம் மனத்தில் வேண்டியிருக்கிறது. ஒரு தாய் தன் குழந்தைகளின் குறும்புகளையும், தவறுகளையும் மன்னித்து விடுவதுபோல், பிறரை மன்னிப்பதற்கு மிகவும் பக்குவம் தேவை.
ஆனால், என்னவோ தெரியவில்லை, உடனே தண்டிப்பதில்தான் பலருக்கும் திருப்தி கிட்டுகிறது.
“என்னைப் பார்த்து அவர் இப்படிச் சொல்லிவிட்டார். நானும் பதிலுக்கு ஒரு வார்த்தை நாக்கைப் பிடுங்கிச் சாவதைப் போல் கேட்டுவிட்டேன்” என்கிறார்கள் அறிவிலிகள். 
பதிலுக்குப் பதில் திட்டுவது, பதிலுக்குப் பதில் தாக்குவது, என்பதில் கிடைக்கும் திருப்தி வெறும் ஆணவத்திற்குக் கிடைக்கும் திருப்திதான். ஆணவம் உடையவருக்கு ஏற்படும் திருப்தி அது. 

தவறுகளை மன்னித்து ஒருவருக்கு நல்வழி காட்டுவதே சிறந்த ஒரு ஆன்மாவின் சிந்தனையாகும். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: