RSS

ஆயகலைகள்


அனைத்து வாசகர்களுக்கும் என் இனிய தைப்பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்நாளில் இப்பதிவைச் சமர்ப்பிப்பதில் தமிழன் என்ற வகையில் நான் பெருமை கொள்கிறேன்

இலக்கியத்தில் கம்பருக்கும்; காளமேகப் புலவருக்கும் நாவில் தமிழ்வடிவாக நின்று கவிகொடுத்துக் காட்சியளித்தவள் கல்வித்தெய்வமாக விளங்கும் சரசுவதி என்பதை நாம் அறிவோம். அதன்காரணமாகவே கம்பர் அவர்கள் "சரசுவதி அந்தாதி" என்ற நூலை இயற்றி நன்றி செலுத்தினார்.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா திடர். (கம்பர் சரசுவதி அந்தாதி)

இன்று கலியுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் விஞ்ஞான வளர்ச்சியின் இலவச இணைப்பான கணனியுகத்திற்குள் பிரவேசித்துவிட்டோம். தற்காலத்தில் விஞ்ஞானம் எத்தனையோ புதிய புதிய விஷயங்களை தந்து கொண்டிருக்கிறது. அத்தனையும் ஆச்சரியப்படுத்தும் விஷயங்களாக இருக்கின்றன. விஞ்ஞான வளர்ச்சியின் அத்தனை மரிமாணங்களும் உலக சமூகத்தை ஒரு பயந்த சூழ்நிலைக்குள் தள்ளி அது வளர்ச்சியடைந்து வருகின்றது. அவ்வாறு இருந்தும் அதைவிடப் பலவான விடையங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே கண்டு காட்டிய பெருமை தமிழர்களின் வரலாற்று  உண்மைகளாக இன்றும் போற்றப்படுகின்றன என்பது மறைக்கமுடியாத உண்மைகளில் ஒன்று. ஆனால் அந்தக் காலத்தில் ஆயகலைகள் அறுபத்து நான்கும் தெரிந்திருந்தால் அத்தனையும் அறிந்த அறிவாளி இக்காலத்து விஞ்ஞானியைவிட மிகவும் அறிவுடையோன் என்று இந்து மத புராணங்களின் பதிவுகளில் இருந்து நாம் ஊகிக்க முடிகின்றது.

நான்கு வேதம், ஆறு சாத்திரம், பதினெண்புராணம், அறுபத்துநான்கு கலைகள், இவை ஆரியவழி வந்த இலக்கிய மரபெனினும், 'அறுபத்து நான்கு கலை' என்ற பெயர் தமிழாதலாலும், அறுபத்து நான்காக சொல்லப்பட்ட கலைகள் அத்தனையும் தமிழருக்கும் உரித்தானதாலும், தமிழ்க் கலைகள் ஆரிய கலைகட்குக் காலத்தால் முந்தியவையென்பதாலும் தமிழன் பெருமை கொள்கிறான். இக்கலைகள் அனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரியவை என்று குறிப்பிடப்படுவதால் பெண் அடிமைச் சமுதாயத்தை அன்றே பிடிங்கி எறிந்தவர்களாகவும் தமிழ் மரபினர் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.


1. அக்கரவிலக்கணம் எழுத்திலக்கணம்
2. இலிகிதம் எழுத்தாற்றல்
3. கணிதம் கணிதவியல்
4. வேதம் மறை நூல்
5. புராணம் தொன்மம்
6. வியாகரணம் இலக்கணவியல்
7. நீதி சாஸ்திரம் நய நூல்
8. ஜோதிடம் கணியக் கலை
9. தர்ம சாஸ்திரம் அறத்துப் பால்
10. யோக சாஸ்திரம் ஓகக் கலை
11. மந்திர சாஸ்திரம் மந்திரக் கலை
12. சகுன சாஸ்திரம் நிமித்தகக் கலை
13. சிற்ப சாஸ்திரம் கம்மியக் கலை
14.வைத்தியசாஸ்திரம் மருத்துவக் கலை
15. உருவ சாஸ்திரம் உறுப்பமைவு
16. இதிகாசம் மறவனப்பு
17. காவியம் வனப்பு
18. அலங்காரம் அணி இயல்
19. மதுர பாடனம் இனிதுமொழிதல்
20. நாடகம் நாடகக் கலை
21. நிருத்தம் ஆடற் கலை
22. சத்தப்பிரும்மம் ஒலிநுட்ப அறிவு
23. வீணை யாழ் இயல்
24. வேணு (புல்லாங்குழல்)குழலிசை
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம் தாள இயல்
27. அத்திரப் பரிட்சை வில்லாற்றல்
28. கனகப் பரிட்சை (பொன் நோட்டம்)
29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம் )
30. கஜப் பரிட்சை (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை மணி நோட்டம்
33. பூமிப் பரிட்சை மண்ணியல்
34. சங்கிராம விலக்கணம் போர்ப் பயிற்சி
35. மல்யுத்தம் கைகலப்பு
36. ஆகருடனம் (ஆகர்ஷணம்)கவர்ச்சியியல்
37. உச்சாடனம் ஓட்டுகை
38. வித்து வேடனம் (நட்பு பிரிக்கை)
39. மதன சாஸ்திரம் மதன கலை
40. மோகனம் மயக்குக் கலை
41. வசீகரணம் வசியக் கலை
42. இரசவாதம் இதளியக் கலை
43. காந்தருவ வாதம் (இன்னிசைப் பயிற்சி)
44. பைபீலவாதம் (பிறவுயிர்மொழி)
45. கவுத்துவ வாதம் மகிழுறுத்தம்
46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்)
47. காருடம் கலுழம்
48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்--வான் செல்கை)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது--வான்புகுதல்)
53. அதிரிசியம் தன்னுறு கரத்தல்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம் பெருமாயம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்--அழற் கட்டு)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம் வளிக் கட்டு
59. திட்டி ஸ்தம்பம் கண் கட்டு
60. வாக்கு ஸ்தம்பம் நாவுக் கட்டு
61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம் புதையற் கட்டு
63. கட்கத்தம்பம் வாட் கட்டு
64. அவத்தைப் பிரயோகம் சூனியம்

"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" என்ற தொல்காப்பியரது சிந்தனையுடன் தமிழர் வாழ்வைத் தரணியில் வளர்ப்போமாக.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: