RSS

காரைக்கால் அம்மையார் - ஒரு ஆன்மீகப்பார்வை

கணவனால் தெய்வமாகத் தொழப்பட்ட ஒரு மானிடப் பெண்ணின் உண்மை வரலாறு. 
புனிதவதி என்ற இயற்பெயர்கொண்ட ஒருவர் இறைவனால் அம்மையே என்று அழைக் கப்பட்டபின்னர் தான் பிறந்து வளர்ந்த ஊரின் பெயரை முதற்பெயராகக் கொண்டு வாழ்ந்தவர்தான்
காரைக்கால் அம்மையார். இவர் கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியில் வாழ்ந்தவர் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர் இவர் ஆவார். இறைவனால் அம்மையே என்று அழைக்கப் பெற்ற பெருமை உடையவர். இவர் இயற்றிய பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (20 பாடல்கள்), இரட்டை மணிமாலை 20 பாடல்கள். தேவார காலத்துக்கு 200 ஆண்டுகள் முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

இறைனே, எனக்கு எது நலம் என்று உனக்கு நன்றாகத் தெரியும். அதை நீ எனக்கு உரிய காலத்தில் கொடுப்பாய் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உண்டு. இந்த மகிழ்வை நீ கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நான் உன்னிடம் கொண்டுள்ள அன்பு மாறாது. நீ எனக்கு எவ்வளவு துன்பம் கொடுத்தாலும் நான் உன்னை உள்ளத்தில இருத்திப் பூசிப்பதை நிறுத்தமாட்டேன் -இவ்வாறு எண்ணுவது தான் உண்மையான இறையன்பின் அடையாளம். இத்தகைய மனநிலை வாய்க்கப் பெற்ற அருளாளர்களுள் காரைக்கால் அம்மையார் முதன்மையானவர். இதுவே உலகப்பற்றை நீக்கியபின் ஒருவருக்கு மனத்தில் எழும் எண்ணங்களாகும். 

இறைவனுக்கு அவர் பல பெயரிட்டு வழங்குகிறார். அடிகள், அழகன், அந்தணன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், எந்தை, எம்மான், ஒப்பினை இல்லவன், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், நம்பன், பரமன், புண்ணியன், மாயன், வானோர் பெருமான், விமலன், வேதியன். ஆனால் சைவ சமயம் என்ற நெறிக்கு ஆதாரமான சிவன் என்ற சொல்லை இவரது பாடல்களில் எங்கும் காணக்கிடைத்திலது என்பது ஒரு ஐயத்தையும் ஏற்படுத்துகின்றது. பிற்பட்டகால சமய குரவர்கள் சிவனைப் பலபெயரிட்டு தமது பாடல்களில் பாடியிருப்பதற்கு கரைக்கால் அம்மையாரே காரணமாயிருந்தார். அதுபோல் ஆடற்பெருமானையே அவர் முழு முதலாகக் கருதி வழிபட்டாலும், தற்போது வழங்கும் நடராஜா என்ற பெயர் அவரால் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.

இப்பொழுது ஆடற்பெருமான் என்றால் நம் அனைவரின் நினைவுக்கு வருவது தில்லை எனப்படும் சிதம்பரம் தான். ஆனால் அம்மையாரது பாடல்களில் எந்த இடத்திலும் தில்லையைப் பற்றிய குறிப்பே காணப் படவில்லை. தேவார திருவாசகங்கள் போல பல தலங்களைப் பற்றியும் அவ்வவற்றில் உறையும் ஈசன் பற்றியும் குறிக்கப்படவில்லை. திருவாலங்காடு என்னும் இடம் மட்டுமே கூறப்படுகிறது. அது கூட, வேலூர் அருகில் தற்போது காணப்படும ஊர் தானா அல்லது காரைக்காலில் சுடுகாட்டை ஒட்டி ஆலமரங்கள் சூழ்ந்த ஒரு இடமா என்பது ஆய்விற்குரியது. தற்போது போல இறைவனைக் கோவிலில் சென்று தான் வழிபட வேண்டும் என்ற வழக்கம் அப்பொழுது இருந்ததாகத் தெரியவில்லை. கணபதி, முருகன் போன்ற பிற தெய்வங்களையும் அவர் குறிப்பிடவில்லை. உமையோடு கூடிய இறைவன் - மாதொரு பாகன் - மட்டுமே அவர் அறிந்தது.அதேபோல் நாயன்மார்கள் பாடிய ஆயிரக்கணக்கான பதிகங்களிலும் பிள்ளையார் முருகன் பற்றி எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. (இவை ஆய்வுக்கு உரியவை)

இன்றைக்கு சைவ சமயத்தின் முதன்மையான மந்திரமாகக் கருதப்படுவது நமசிவாய எனப்படும் திருவைந்தெழுத்து ஆகும் இது யசுர் வேதத்தின் மையப்பகுதியில் அமைந்த ரத்தினமாகவும் வேத சாரமாகவும் இன்று கருதப்படுகிறது. அம்மையாரின் பாடல்களில் சிவன் என்ற சொல் காணப்படாதது போல, அதை ஒட்டிப் பிறந்த நமசிவாய மந்திரமும் காணப்படவில்லை. 

அம்மையார் இறைவனின் பல திருவிளையாடல்களைக் குறிப்பிடுகிறார். முப்புரம் எரித்தது, கங்கையைத் தலையில் தாங்கியது, ராவணன் செருக்கடக்கியது, ஆலகால விடமுண்டு கண்டம் கறுத்தது, அர்ச்சுனனைச் சோதிக்கக் கிராதவேடம் பூண்டது, அடி முடி தேடிய மால் அயனுக்கு அறியமுடியாத சோதியாய் நின்றது, காலனையும் காமனையும் காய்ந்தது, கபாலம் ஏந்திப் பலி ஏற்றது, யானைத் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டது, சந்திரனைத் தலையில் சூடியது, சுடுகாட்டில் அனல் ஏந்திப் பேய்களுடன் அண்டம் அதிர நடனமாடியது என்று பல திருவிளையாடல்களைக் குறிப்பிடும் அவர் ஆலின் கீழிருந்து அறமுரைத்ததையும் தக்கனை மாய்த்ததையும் ஏனோ குறிப்பிடவில்லை. அவரால் அதிகம் பேசப்படுவது இடுகாட்டில் நடனமாடும் கோலம். அடுத்தபடியாக, பிட்சாடனக்கோலமும், உமையொரு பாகனாக விளங்குவதும் ஆகும்.

இறைவனை உள்ளபடி உணர்ந்தவர் யார் சுடுகாட்டுச் சாம்பல் பூசிய மேனியையும் எலும்பு மாலையையும் கொண்ட வெளித் தோற்றத்தைப் பார்த்துவிட்டுச் சிலர் ஆடற்பெருமானைப் பேய் எனக்கருதி இகழ்கின்றனர் என்று அம்மையார் கூறுகிறார். இது அம்மையாருக்கும் பொருந்தும். இவர் இறைவனின் ஆட்டத்தில் மெய்மறந்து தானும் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்த இவரது உற்றார் உறவினர்கள் இவரைப் பேய் பிடித்தவர் எனக் கருதியிருக்கக் கூடும். அதை இவர் ஒரு அவமதிப்பாகக் கருதாமல் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டார். தன்னைச் சஙகரனின் பேய்க்கணங்களில் ஒன்றாகக் கருதிக்கொண்டார். நம் போன்ற சராசரி மனிதர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. சுடுகாடு, பேய்கள் இவற்றின் வரணனை நமக்கே அச்சம் தருகிறது. அப்படி இருக்க அம்மையாருக்கு -மெல்லியளான ஒரு பெண்ணுக்கு- இதில் எப்படி நாட்டம் வந்தது அவர் கூறுகிறார்- பிறந்து மொழி பயின்ற காலத்திலேயே அவருக்குப் பெருமானிடத்தில் காதல் ஏற்பட்டுவிட்டது. கண்ட பின் அவருக்குக் காதல் ஏற்படவில்லை. பிரானின் திருவுருவத்தைக் காணாமலேயே அவருக்கு ஆளாகிவிட்டார். அந்தாதி பாடுகின்ற கால்த்தில் கூட அவர் இறைவனைக் கண்டதில்லை. ஒருவர் மேல் அன்பு ஏற்பட்டுவிட்டால் அவரது தோற்றமோ அவரது சூழ்நிலைகளோ அந்த அன்பைத் தடுக்கஇயலுமா
அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைப்பேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது

அம்மையாருக்கும் அரனுக்கும் இருந்த பிணைப்பு முற்பிறப்பின் தவப்பயனாய் ஏற்பட்டது. இனிவரும் ஏழேழு பிறவிகளுக்கும் தொடர இருப்பது. பிறப்பறுத்து ஈசனோடு இரண்டறக் கலத்தல் தான் அவரது குறிக்கோள். இப்பிறப்பில் அதைச் சாதிக்க முடியவில்லை என்றால் இனிவரும் பிறவிகளிலும் நெற்றிக் கண்ணனை மறவாத நெஞ்சுடையவராய்ப் பிறந்து அவருடைய ஆளாகவே வாழ வேண்டும் என்பதைப் பின்வரும் இரு பாடல்களிலும் விளக்குகிறார்.

யானே தவமுடையேன் என் நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன்- யானேயக்
கைம்மா உரி போர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயினேன்

அவர்ககே எழு பிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கே அன்பாவதல்லால் - பவர்ச் சடைமேல்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்

இக்கருத்தைத்தான் பெரிய புராணத்தில் அம்மையார் வரலாற்றைப் பாடிய சேக்கிழார் பின்வருமாறு கூறுகிறார்

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போதுன் அடியின் கீழிருக்க என்றார்

காரைக்கால் அம்மையாருக்கு முற்பட்ட காலத்தில் ஆலயங்களில் உருவ வழிபாடு இருக்கவில்லை. காரைக்கால் அம்மையார்தான் அன்பு செலுத்துவதற்கு ஒரு உருவம் அவசியம் என்பதைக் கண்டுகாட்டி வாழ்ந்தார். அதன் பயனாகவே ஆலயங்களில் சிறுகச் சிறுக உருவங்கள் வைத்து வணங்கும் வழக்கம் உருவாகிற்று. பரமன் மீது பண்கனிந்த பாடல்களைப்பாடி ஒரு சிறந்த பெண் சைவத் துறவியாக இன்றும் சைவர்கள் மனத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் காரைக்கால் அம்மையாரேயாவார். இவரின் பெருமை கருதியே பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராக வைக்கப்பட்டுள்ளார்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: