RSS

நெய்தல் தலைவன்!


சிறு மணல் வீடுகளை
அழித்துச் சிரித்த
அலைகளைத் தின்ற
கடலின் நிசப்தம்.
முகில் வேட்டிக்கு
நிறம் தீட்டிக்களைத்துக்
குணதிசை மேவி
வெள்ளாடை அணிந்து
தீவெட்டி கொழுத்தி
புவியழகு பார்க்கும்
உதயத்துச் சூரியன்.
பன்னீர்க் குடம்
உடைந்த புற்கள்.
பூக்கள் மலரும்
மத்தாப்புச் சத்தம்
காதல் சிற்பங்களின்
கடைசி முத்தம்.

இரவுக்குறி வென்ற
சாமச் குஞ்சுகளில்
கரவுக் கண் எறியும்
வெள்ளைத் தலைகள்.
பறவைகளின் இசைக்குள்
மௌனித்த விலங்குள்.
விழி எழுதும்
முடங்கள் கண்டு
ஊனமுற்ற மொழிகள்.

மெய் சுகத்தில் மொய் எழுதி
ஊடலில் தோற்றவர்
வெல்லுகின்ற வேளையிலே
பொழுது விடிந்ததனால்
கட்டுமேனிக் கரம் விலக்கி
கட்டுமரக் கலமேறி
புள்விழும் திசைபார்த்துக்
கடல் சென்றான் காளை.
கைக்குட்டைத் திருக்கைகள்
கலைத்துவிட்ட குழலழகில்
கக்கிய கணவாய் மை.

வாழை மடல் துடையை
மனத்திற்குள் செருகிவிடும்
பருத்த வாளை மீன்கள்.
காதல் கடிசுமந்த
கழுத்தின் உருவத்தில்
வங்கத்துச் சங்கினங்கள்.
விரல் அனைய முரல்கள்.
இருளுக்கு இருள்பூசிய
நெய்தல் நிலத்தவனின்
உடல் அழகு பார்க்கதத்
திமில் ஏறிப்பாய்கின்ற
அடிக்கடல் மீன்கள்.

பார்க்கின்ற திசையெங்கும்
பாவையவள் முகம்காட்ட
ஊதக்காற்றுக்குள் ஒழித்திருந்து
கதைகள் சொன்னாள்.
மறுமைப் பிறப்பெடுத்தும்
மன்னுவேன் செல்லம் என்று
மார்தட்டி ஊர் சொல்லி
மகிழ்ந்திட்டான் மச்சக்காளை.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: