RSS

ஐயுறுநிலை


இருள் உமிழ்ந்த இரவில்
அவிழ்ந்த  அல்லிக்குள்
கமழ்ந்தெழும் வாசமாகிப்
பொங்கி எழு  பாலாய்
மாடத்துப் புறாக்களுக்கு
மதனரசம் விஞ்சி நிற்கும்.
போகத்தால் தேகத்தில்
பொருதல் சமர் நடத்திக்
கூடலுக்குத் தீமூட்டி
மெய் எரிக்கும் காமத்தீ!
நீள்வழி சென்ற காளை
மீள்வழி சுணங்கும் காலை;
பூவிதழ்  இதுதான் என்று
பலரிதழ் பட்டுச்சிவந்த
பரத்தையர் அதரம் தன்னை
என்நீத்துக் களிப்பாயோ?
இளமுகிழ் மார்பதனில்
தொய்யிற்படம் பார்த்தவன் நீ;
என்றாங்கு மனமுடைந்து
தென்றலுக்குத் தேள்கொட்டித்
தோளெல்லாம் வலித்திருக்கும்.
சூடிழந்த  கொதிநீராய்
ஆடிப்போய் ஆறி இங்கு
கோதைக்கு ஊடல் ஏறி
பூக்குலைத்துப் பொட்டழித்து
மைதீட்டும் கண்ணுடைந்து
வாடிப்போய்ச் சாய்ந்திருக்கும்.
அத்தாணி மண்டபத்தில்
அத்தானின் மஞ்சத்தில்
கோடிவரம்  நாடியவள்
துணைவரவு காணாமல்
வேர்ப்பலாச் சுழை நிகர்த்த
செம்பருத்திச் சிற்பம் - இங்கு
மரித்து மடிகின்றாள்.
தரை இடை பாய்ந்து
தத்தளிக்கும் மீனாக
இசை இறந்த யாழாய்
நரம்பறுந்து பாழாகித்
தணலிடை குளிப்பதைத்
தடுக்காதே செவிலி என்று
ஈமம் வளர்த்த கிளி;
ஓங்குவரை சென்று
குதிக்கின்ற மனத்தாளாய்க்
குமிறி அழுதிட்டாள்.
.......................................................................................
மதனரசம் - காம உணர்வு; பொருதல் - உறவு; சமர் - போர்;
நீள்வழி - நெடுந்தூரம்; மீள்வழி - திரும்பி வருதல்;
என்நீத்து - என்னைவிட்டுவிட்டு; இளமுகிழ் - அரும்பு
தொய்யில் - மார்பகத்தில் கீறிய படங்கள்;
துணைவரவு - கணவனின் வருகை
செவிலி - வளர்ப்புத்தாய்; ஈமம் - சுடலை நெருப்பு; ஓங்குவரை - மலைஉச்சி

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: