RSS

ஒரு நண்பரின் சித்தாந்தம் - "யாருக்கு என்ன பயன்"



இவர் டாக்டர் ஜெயபாலன்(மலேசியா) அவர்கள். எனது மதிப்பிற்குரிய நட்பின் மூலம் அறிமுகமாகியவர். அதுமட்டுமல்ல அவரது ஒரு சகோதரனுமாவார். சர்வதேச ரீதியில் "Anpalayaas International Complementary Therapy" என்ற சொந்த அமைப்பினூடாக மக்களுக்குச் சேவை செய்வதை மகேசன் சேவையாகக் கருதுபவர். அழகிய, உயரமான தோற்றமும், இலட்சுமிகடாட்சத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள இவர் உலக மனிதாபிமானத்தை நேசிக்கும் உயர்ந்த மனிதப் பண்புகளைக் கொண்டவர் .

அமைதியான காலை, ஆரவாரமற்ற சூழ்நிலை, ஆழ்ந்த தூக்கம் அதனால் சலனங்கள் அற்ற மனம். காலைப் போக்குவரத்து நெரிசலைக் கடந்து அமைதியாகிய மலேசியத் தெருக்களின் ஏதோ ஒரு மூலையில் நின்று ஒரு நண்பரைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கான வீச்சு எல்லைக்கு வெளியில் நான் நிற்பதாக அவரை அழைக்கும்போது எனக்கு என் தொலைபேசி கட்டளை இடுகின்றது. முன்பின் அறிமுகமில்லாதவர் ஆனால் முற்பிறப்பில் பழகியவர்போல் ஒரு பிரமை. சந்திப்புக்களும் கடவுளின் நியதிதான். சந்தர்ப்பங்களும் கடவுளின் நியதிதான். சாத்தான்கள் சன்நிதிகளில் வாழ ஆசைப்படுகின்றன. ஆனால் கடவுள்களோ சிலையைவிட்டு இறங்கி மனித மனங்களுக்கு வலுச் சேர்ப்பதற்காய் ஆன்மீகம், தியானம் என்ற வழிகளுக்கு அவனை அழைத்துச் செல்லத் தயாராக இருக்கின்றன. நாத்திகம் வலுப்பெறும்போது ஆஸ்திகம் மறைந்து நின்று நாத்திகனை வேடிக்கை பார்க்கிறது. படைத்தலையும், காத்தலையும் செய்யும் பரமனே ஆக்கல், அழித்தல் போன்றவற்றிற்கும் அதிபதியாக இருக்கின்றார் என்றால் அது எப்படி என்பது அனேகரின் கேள்வியாக இருக்கின்றது. அதனால்தான் இறைவன் உலகமக்களுக்கு அருளல் என்ற நிலையில் வெளிப்பட்டுத் தன் இருப்பை உணர்த்துகின்றார். மீண்டும் ஒரு அழைப்புமணி அடிக்கிறது. அதனைத் தொடர்ந்து இலகுவாக அவரது இல்லத்தை அடைந்துவிட்டேன். புத்தர் செல்லும் கிராமங்களில் அவர் போவதற்கு முன்பே பூமரங்கள் பூப்பதுபோல் இந்த நண்பரைச் சந்திப்பதற்கு முன்பே சில சிந்தனைகள் எழுந்துவிட்டன. அது ஆழ்மனத்தின் வெளிப்பாடா? அல்லது அந்த நண்பரது என்னை நோக்கிய அதிர்வு அலைகளா என்று புரியவில்லை.

அரை மணித்தியாலச் சம்பாசனையில் 500 புத்தகங்கள் படித்த உணர்வு அவருடன் கதைத்தபோது எனக்கு ஏற்பட்டது. திறந்த பல்கலைக் கழகத்தில் பரந்த புத்தகமாக விரிந்திருக்கும் இவர் ஆன்மிகத்திலும், தியானத்திலும் தனக்கென்ற ஒரு நிலைக்கு அவரது உழைப்பின் நிமித்தம்  வெற்றியடைந்திருக்கின்றார் என்பதனை அறிந்து கொள்வதற்கு எனக்கு மணிக்கணக்கில் நேரம் பிடிக்கவில்லை.  எனது வருகையால் அவரது பிரயாணத்திற் சிலமணி நேரங்கள் தடைப்பட்டாலும் அதனைப் பெரிதுபடுத்தாமல் இன்முகம் காட்டி மனிதர்களை மதிக்கும் பண்பு எனக்குப் பிடித்திருந்தது. ஆணவத்தை ஒருவன் எப்பொழுது விட்டுவிட்டு மனம் திரும்புகிறானோ அப்பொழுதே அவனுக்குப் பலவழிகளிலும் விடுதலை கிடைத்து விடுகின்றது என்ற அவரது கருத்துக்களைப் பின்பற்றும் ஒரு சீடனாக நான் மாறிவிட்டேன்.

ஐம்புலன்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்துடன் ஆறாவது புலனாக மனிதர்களுக்கு மட்டும் கொடையாகக் கிடைத்த மனம் என்பது ஆறாம் புலனாகவும், அறிவு என்பது ஏழாம் புலனாகவும், இத்தனையையும் தன்னகத்தே கொண்டுள்ள ஆன்மா எட்டாம் புலன் என்றும், இந்தப் புலன்களை உயிர்களுக்குக் கொடுத்து ஆழும் பரம்பொருள் ஒன்பதாம் புலம் என்றும் அதுவே இறுதியில் ஜீவாத்மா, பரமாத்மாவாக நிலைபெற்று இந்த உலகை ஆட்சிசெய்கின்றது என்றும், மிக இலகுவாக விளக்கினார். இந்த ஒன்பது புலன்களையும் பின்னோக்கி எண்ணிக்கொண்டு வரும்போது இறுதியில் பூச்சியம் (கோசம்) வருகிறது. அதுதான் பூரணத்துவமானது அதற்கு அப்பால் ஒன்றும் இல்லை என்பதை தெளிவுபடுத்திய விதம் மிக அருமையாக இருந்தது. கட்டை விரலையும், ஆட்காட்டி விரலையும், ஒனறு சேர்க்கும்போது வரும் வட்டவடிவமே கடவுளுக்கும் மனிதருக்குமிடையில் ஏற்படும் தொடர்பிற்கான முத்திரை வடிவம் என்பதை அவரது மாணவனாக இருந்து கற்றுக்கொண்டேன். ஐந்து விரல்களில் ஐம்பூதங்களுக்கு விளக்கமளித்தது நான் முதன்முதலாக அவரிடம் கண்டுகொண்ட ஒரு விடையமாகும்.

நான் எழுதிய ஆத்மலயம் என்ற நூலுக்கு இரண்டாம் பாகம் எழுதுவதற்கு எனக்கு ஒரு குருவிற்கான தேடல் இருந்தது. அந்தத் தேடலைப் பூர்த்தி செய்யும் நிலையில் ஒருவர் எனக்குக் கிடைத்த மகிழ்ச்சியில் நான் இப்போது இருக்கின்றேன் என்றால் இறைவனது நியதிப்படி இவரைச் சந்தித்ததையும் பெருமையாக நினைக்கிறேன். அரிசிக்குள் கிடக்கும் கல், பல இடங்களில் தப்பிவந்து இறுதியில் சோற்றுக்குள் கடிபடுவதுபோல எல்லாப் பொருட்களும் எங்கோ ஓரிடத்தில் வெளிப்பட்டே ஆகும் என்ற சித்தாந்தம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. நிலையற்ற மாயை உலகத்தில் மனிதர்கள் தேடிய தேட்டங்கள் "யாருக்கு என்ன பயன்" என்ற தத்துவத்தில் இருந்து தவறுவதில்லை. உலகில் மனிதர்கள் வாழ்வதற்கும் ஒரு வழிமுறை இருக்கின்றது. பட்டினத்தாரது "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்பதைத் தனது வாழ்வின் இரகசியமாகவும் குறிக்கோளாகவும் வாழ்ந்துவரும் இவர் தனது தியானங்களினாலும் இறைசக்தியாலும் மக்களைத் துன்புறுத்தும் புற்றுநோய், நீரழிவு, இரத்த அழுத்தம், ஆஸ்த்மா போன்ற நோய்களுக்கு மருத்துவம் அளித்துக் குணப்படுத்துவதிலும், ஆலோசனைகள் சொல்வதிலும் சிறந்தும், நிறைந்தும் காணப்படுகின்றார் .

இவருடன் பேசியது வெறும் 23 நிமிடங்கள்தான். அந்த விரிந்த புத்தகத்தில் நான் படித்தது முகவுரை மட்டுமே. "நீங்கள் நூல்கள் எழுதலாமே" என்று எனது ஆர்வத்தில் ஒரு கேள்வியைக் கேட்டேன். அதற்கான சூழ்நிலை இன்னும் கிடைக்கவில்லை என்பதைப் புன்முறுவலுடன் கூறி விடைபெற்றார். அவரது வீட்டில் அளித்த அறுசுவை உணவைவிட, அவரிடம் இருந்து கிடைத்த அறிவுச்சுயையே மீண்டும் அவரைச் சந்ததிக்கத் தூண்டுகிறது. அவரை அறிமுகப்படுத்தியவர்களுக்கும், இதனை வாசிக்கும் எனது வாசக நண்பர்களுக்கும், அவரது சார்பிலும், என் சார்பிலும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறான மனிதர்களை எனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதை நான் பெருமையாகக் கருதுகின்றேன். "என் கடன் பணிசெய்து கிடப்பதே"

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: