RSS

தாய் - மெய்



என் தாய்க்கு
இன்று ஐந்தாவது
நினைவு தினம்.
சிவகங்கை என்ற
தெய்வத்தை  இழந்து  
நான் பெற்றது
கங்கை என்ற
பெயரைத்தான்..........
.
தென்றலாய்க் கடந்த
உன் அகவைகளில்
காலத்தால் நிலைத்த
நின் நினைவுகள்
மனத்திடை நாற்றாக
முளைத்திடும் என்நாளும்.
சுவாசம் சுமந்த காற்றை
சுவாசிப்பதில் என்றும்
எனக்கொரு சுகமானது  
நீ தந்த வரம்.
தோளில் சுமந்தவளைத்
தொலைத்த இன்று
விழிபூத்த நீரோடு
ஒளி மங்கி நடக்கின்றேன்.
உந்தன் கருவுறையில்
எந்தன் உயிர் ஓசை;
உயிர் போகும் வலி சுமந்து
உயிர் தந்த உத்தமியே;
ஊன்  ஒழுகும் இசை கேட்டு
ஒழி தவழும் உன் முகத்தை
ஒழித்திருந்து பார்த்தவன் நான்.
அன்னை என உனை அழைக்க
முதல் வித்தாய் ஓடிவந்து
கருப்பந்தின் சுவர் உடைத்து
உன் மகவாய் உருப் பெற்றேன்.
பாலினை ஊட்டிப் பாதியாய் உருகித்
தூளியை விடுத்துத் தோளிற் சுமந்து
ஆழியிற் கிடைத்த அசல் முத்தென்று
நாழிகை தூங்காமல் நயந்ததாய்.
பூமிப்பந்தைக் கையிற் தந்து
ஏணிப்படிகள் செய்து வைத்தாய்.
வார்த்தைகள் இல்லாத வடிவ
தூரிகை வரையாத காவியமே;
என் கல்லறையில் உன் பெயரை
எழுதிச் சுமக்க எனக்கு ஆசை.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: