RSS

என்றும் இனியவராய்....நண்பர் கிருஷ்ணன் பாலா அவர்கள்.



கோவையில் எனது "புலன்விசாரணை" கவிதை நூல் வெளியீட்டை அடுத்துத் திருநெல்வேலிக்குச் செல்லும் வழியில் நண்பர் திரு கிருஷ்ணன் பாலா அவர்களை மதுரையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அன்று விநாயகர் சதுர்த்திக்காக இராஜபாளையம் செல்லும் பணியில் இருந்த அவர் ஆர்வமிகுதியில் தெருமுனைக்கேவந்து எங்களுக்காகக் காத்திருந்தது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. அவரது சந்திப்பை எனது பயணத்தின் மறக்கமுடியாத நிகழ்வாகவே நான் கருதுகின்றேன்.

எனது புலன்விசாரணையில் வெளிவந்த 28 கவிதைகளுக்கும் அன்பின் நிமித்தம் தனது பார்வையில் பதவுரைகளை எழுதித்தந்தவர். எதிர்பாராத விதமாக அவரது பதவுரைகள் எனது நூலில் இடம்பெறவிலை. அதனால் அவரது பதவுரைகளில்  ஒன்றை எனது கவிதையோடு இணைத்து இங்கு பதிவு செய்வதில் நான் பெருமை அடைகிறேன்.தொடர்ந்தும் அவரது பதவுரைகளை எனது பதிவில் வாசித்து மகிழலாம் .நன்றி நண்பர்களே.
  கவிதைத் தலைப்பு - பாலைக்குமரி.

.
மழை இழந்த நில விதவைகள்,
தழை முழையாத் தரிசுத்ததரை,
வேல்கொண்ட விழிமான்கள்
சூல் கொண்ட கானல் நீரை
ஓடிக் கலைத்த மாலை.
விசும்பு வியர்க்கும் வெய்யில்.
குறிஞ்சி ஒடு முல்லை
திரிந்து விட்ட பாலையில்
அரி மடப் பியையொடு
பூ நாறும் இடை ஒதுங்கும்.
சங்குவளை தோள் அரிவை
கண்பனி சிந்தி எங்கும்
தனங்களை நனைத்தவள்
மன்னவனை நினைத்து
மனதிலே பதியம் வைத்தாள்.
அருந்தாத மதுக்குடம்
அணைக்காத  புதுச் சரசம்
விரல்பட்டு உடல் உறையும்
நிரைக் கட்டுக் கரும்பாக
படுக்கையிற் பிறந்திருந்தாள்.
தினம் தினம்.
.........................................
(அரி மடப் பிணை - ஆண் மானும் பெண் மானும்;
பூ நாறும் இடை - பூக்கள் மணக்கும் ஒதுக்குப்புறம்;
சங்குவளை - சங்குகளால் செய்த வளையல்; அரிவை - பெண்;
கண்பனி - கண்ணீர்;
.
பதவுரை.
பாலைக் குமரி எனும் 
பருவ மங்கையிடம்
சாலப் பதிந்த மனம்
சாற்றும் கவிதை இது:

காதலுக்குக் கண் இல்லை;
கவிஞனுக்குத் தடையில்லை;
காதலியின் மேனியினைக்
கண்டு திளைந்துருக!

ஆதலினால் அவள் அழகில்
அடிமை கொண்ட மனம்
சாதனையாய் அதை மாற்றி
சங்கீதம் இசைக்கின்றது!

படித்து ரசிக்கின்ற 
பருவம் உடையோரும்;
பார்த்து ரசிக்கின்ற
பண்பு உடையோரும்

வேர்த்து ருசிக்கின்ற 
வார்த்தைப் பிரயோகம்;
நீர்த்துப் போகாமல்
நிலைக்கும் விதமாக

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புலன்விசாரணை - வாசித்தவர் யாசித்தது


.

வணக்கம். எனது முகநூல் பக்கத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த நண்பர்களில் ஒருவர் சகோதரி திருமதி சுபி நரேந்திரன் அவர்கள். நான் கவிதை எழுதத் தொடங்கும் போதே தனக்கு ஒரு நூல் தரவேண்டும் என்பதை அன்பாகச்  சொல்லி வைத்து என்னைப் பெருமைப் படுத்தி ஊக்கமும்  கொடுத்தவர். அதுபோல் எனது நூலின் வெளியீடு முடிந்து முதலாவதாகவும் முழுமையாகவும் வாசித்தவர்களில் அவரும் ஒருவர். அவர் எனது நூலுக்கு எழுதியிருக்கும் விமர்சனத்தை எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அவரது கணவருக்கும் எனது நன்றிகள்.
'புலன் விசாரணை' நூலை உங்கள் கை ஒப்பத்தொடு எனக்குக் கிடைக்கச் செய்தமைக்கு முதற் கண் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் 'ஆத்மலயம்' நூலை வாசித்துவிட்டு புலன் விசாரணைக் கவிதைகளைப் படிக்கும் போது மிகவும் ஆச்சரியப்பட்டேன். வாழ்வின் இரு முக்கிய பரிமாணங்களை கையாண்டவிதம் பிரமாதம். Hats off for you.
.
'புலன் விசாரணை' நூலில் உள்ள பல கவிதைகள் முக நூலில், உங்கள் சொல் விளக்கத்தோடு முன்பே நான் படித்தவைதான். ஆனால் நூலாகப் பார்க்கும் போது வித வித நறுமண மலர் கொத்தைக் கையில் எடுத்தது போல் இருக்கிறது.
அத்தனை கவிதைகளும் பிரமாதம். புதுப் புது உவமைகளோடும், வர்ணனைகளோடும் மனசை லேசாக்கிப் பறக்கச் செய்கின்றன. சங்கத்தமிழை இலகு தமிழில் குழைத்து என் போன்றவர்களுக்குப் புரியும் விதத்தில் கவிதை வரிகள் அமைந்திருப்பது சிறப்பு. இத்தனை கவிதைகளிலும் என்னைக் கொஞ்சம் கூடவாகக் கவர்ந்த கவிதை 'நீயே நீயே' என்ற கடைசிக் கவிதயே. ஆழமான உணர்வோடு யாவும் நீயே என்று சரணடையும் அழகான கவிதை.
ரசனையோடு தேர்ந்தெடுக்கப்பட்ட, கவிதைகளுக்கான வண்ண ஓவியங்கள் கவிதை வரிகள் சொல்லாததையும் சேர்த்துச் சொல்கின்றன. மொத்தத்தில் 'புலன் விசாரணை' புலன்களுக்கெல்லாம் அறுசுவை விருந்து. உங்களைக் கவிஞராக்கி எமக்கு இந்தப் படைப்பைத் தர உதவிய கவிக் குயிலுக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும்.
உங்கள் தேடல்களும், தமிழ் சேவைகளும் மேலும் மேலும் வளர எனது ஆசிகளும் வாழ்த்துகளும் ஸ்ரீ.
.
அவர் விரும்பிப் படித்த நீயே நீயே என்ற கவிதையையும் இங்கு பதிவு செய்கிறேன்.
மழையான கோடை நீயே
சிலையான கோவில் நீயே
பொய்பேசும் கண்ணாள் நீயே
மெய்பேசும் தெய்வம் நீயே
துள்ளிய சங்குகள் நீயே
தடைபோடும் நாணம் நீயே
தேரினில் கலசம் நீயே
மொட்டவிழ்ந்த தாமரை நீயே
கன்னம் கொண்ட கனிகள் நீயே
கிண்ணம் தந்த மதுவும் நீயே
வசந்தத்தின் கோலம் நீயே
குமரி கொண்ட மடமும் நீயே
ஆடை பூண்ட தேவதை நீயே
ஆசை வைத்த பூமரம் நீயே
மாலைபூத்த மல்லிகை நீயே
மின்னல் கண்ட வண்ணம் நீயே
என்னைச் சுற்றிய இன்பம் நீயே
தரிசனம் தந்த முகங்கள் நீயே
சரசம் ஆடிய சுகங்கள் நீயே
உறவுகள் தந்த உயிரும் நீயே
Like ·  ·  · Share

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அம்புலிமாமா



அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பது தமிழர் கலாச்சாரத்திற்  பெண்களுக்கு இருக்கவேண்டிய பண்புகள் என்று கூறுகின்றார்கள். ஆனால் பாரதியார் பெண்களுக்கு அன்பு, அறிவு, பண்பு, கௌரவம் போன்ற நான்குமே அணிகலன் என்கிறார்.  பயிர்ப்பு என்பது கணவன், சசோதரர்கள் அல்லது தகப்பன் தவிர்ந்த ஏனைய ஆண்களின் அங்கம் ஒருவரில் முட்டும்போது அந்தப் பெண் அடையும் ஒரு வெருட்சி நிலையாகும்.  இதனால்தான் பிற ஆடவர்களைத் தன் குழந்தைக்கு அறிமுகம்  செய்யும்போது மாமா என்று கூறித் தன்னை அந்த ஆடவனுக்குச் சகோதரி ஆக்கிக் கொள்கின்றாள் ஒரு தமிழ்ப்பெண்.
.
அம்புலிக்குச் சந்திரன் என்ற பெயர் உண்டு. அதனால்தான் தன் குழந்தைக்கு அம்புலியைக் காட்டும்போது அம்புலி மாமா என்று தன் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கின்றாள்.
.
இசையமைப்பாளர் திரு M.S.V கண்ணதாசனது ஒரு பாடலுக்கு இசை அமைத்தார். கண்ணதாசனும் கூட இருந்தார். இசையமைத்து முடிந்ததும் கண்ணதாசனைப் பார்த்து M.S.V  "சந்திரன் ஆண்பாலா பெண்பாலா என்று கண்ணதாசனைப் பார்த்துக் கேட்டார். கண்ணதாசன் அவர்கள் அதற்குப் பெண்பால் என்று பதிலளித்தார். உடனே M.S.V இப்போ ஏன் "பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன், அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள் என்று இயற்றினாய் என்று கண்ணதாசனைப் பார்த்துக் கேட்டார் . அதற்குக் கண்ணதாசன் " இந்தப் பாடலில் கதாநாயகனுக்குப் பெயர் சந்திரன்; அதனால்தான் அப்படி எழுதினேனே தவிர அந்தப் பொண்ணை(அம்புலி) வம்பிற்கு இழுக்கவில்லை என்று பதிலளித்துவிட்டு விவநாதனைப் பார்த்துச் சிரித்தார். விவநாதன் இராவணன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே, இந்த..............என்று பாடிச் சிரிப்புடன் நிறுததினார்

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எல்லோர்க்கும் பெய்யும் மழை...


கோல்ட்ஸ்மித் என்ற பெரும் எழுத்தாளரைப் பார்த்து டாக்டர் ஜான்ஸன் என்பவர் "அவர் தொட்டதை அழகுபடுத்தாமல் விட்டதில்லை" என்று  கூறியிருக்கின்றார். மனதிற்குப் பிடித்த ஒருவரைப்பற்றி என்ன கூறுகிறார் என்பதைவிட ஏன் கூறுகிறார் என்பதை வாசிப்பவர்கள் தெரிந்து  கொள்வதே ஒரு சரியான அணுகு முறையாகும். ஏதோ ஒரு வகையில் தாய் நிலத்தைவிட்டுக் கடல் கடந்த தமிழர்கள் அவர்களது கலாச்சாரங்களை மட்டுமல்ல, கடவுள்களையும் தம் அகத்தே கொண்டு சென்றார்கள் என்பது வரலாற்று உண்மையாகும். "கடல்கடந்தான் தமிழன், கற்பூரதீபம் கண்டான் இறைவன்" என்று கண்ணதாசன் குறிப்பிடுவதுபோல அதை நடைமுறை வாழ்க்கையிலும் கொண்டுள்ளவர்கள் மலேசியாவில் வாழும் தமிழ் மக்களாவார். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் ஒருவராக வாழும்  தொழில் அதிபர் டாக்டர் திரு ஆதிசீசன் அவர்களைச் சந்திப்பதற்காக நான் ஆயத்தமானேன்.
.
வந்தியத்தேவனுக்கு இலட்சனை மோதிரம் கிடைத்ததுபோல் மலேசியாவில் பிரயாணிப்பதற்கு எனக்கும் ஒரு வாகனம் கிடைத்தது.  கோலாலம்பூரிலிருந்து செல்லவேண்டிய தூரம் 360 கிலோமீட்டர்கள். சுவிற்சர்லாந்தில் இடப்பக்கம் ஓட்டிப் பழகிய எனக்கு அங்கு வலப்பக்கம் ஓட்டுவது சிறிது கடினமாகவே இருந்தது.   125 கிலோமீட்டர்கள் ஓட்டிய மகிழ்ச்சியுடன் செல்வி புனிதா அம்மை அவர்களிடம் காரை ஒப்படைத்து விட்டென்.  அவருக்கு அங்குள்ள பழக்கப்பட்ட சாலைகளும்,  தனது காரும் சாதகமாக இருந்ததால் சிரமமில்லாத ஒரு பயணத்தை எங்களுக்கு வழங்கினார். 240 கிலோ மீட்டர்களை ஒரே மூச்சில் ஓட்டிமுடித்துக் குறிப்பிட்ட இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.
.
மாலை நேரம் மழைச் சிணுங்கல்களுடன் தெருவிளக்குகள் "ஐயனே ஒல்லைவா" என்று கம்பரின் வார்த்தையில்  என்னை அழைத்தது போல் இயற்கையின் வரவேற்புகளோடு அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அழகு படுத்தப்பட்ட அந்த இரண்டடுக்குமாடி வீட்டை மனை என்று சொல்வதைவிட அரண்மனை என்று சொல்லுவதே பொருத்தமானதாக இருக்கும். பண்டைத் தமிழர் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும், தங்கள் வாழ்க்கையோடு கடைப்பிடித்துவரும் இவர்கள் விருந்தினரை வரவேற்கும் விதம் அருமையாக இருந்தது. வீட்டுக்குச் செல்வதற்கு முதல் கால்களைக் கழுவிச் செல்வதற்கான பழந்தமிழர் பண்பை நடைமுறையில்  கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டினுள் மனைவி, மக்கள், மருமக்கள், பேரக் குழந்தைகள், பெறாமக்கள் உறவினர்கள் என்று இருந்தவர்கள் யாவரும் இன்முகம் காட்டி என்னை வரவேற்றார்கள். கூட்டுக் குடும்பம் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அந்த அமைப்பையும், அன்புகலந்த வாழ்க்கை நெறியையும், கட்டுப்பாடான ஒழுக்கமும், பெரியவர்களுக்கான மரியாதையும் அவர்கள் இல்லத்தில் ஆட்சி செய்வதை உள்வாங்கிக் கொண்டேன்.
.
தங்கள் வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் அன்னியப் படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் எல்லோரும் அக்கறையோடு என்னைக் கவனித்தார்கள். அகத்தியருக்கு இந்திரலோகத்தில் கிடைத்த வரவேற்பைவிட எனக்கு அவர்கள் குடும்பத்தில் பெரும் வரவேற்புப் கிடைத்தது. சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை வந்தோரை வரவேற்பதில் மிகவும் ஆர்வம் காட்டி என்னுடன் உரையாடினார்கள். மழலைச் செல்வங்கள் கூட அடிக்கடி வந்து என் மடியமர்ந்து தங்கள் அன்பைத் தெரிவித்துச் சென்றார்கள். திரு ஆதிசீசன் அவர்களும் அவரது மனைவியும் பெருமைகளின்றி வாழும் மனம் படைத்தவர்கள். அவர்கள் காட்டிய இன்முகத்தில் அவர்களது அகத்தின் அழகைக் கண்டு மகிழ்ந்தேன். இல்வாழ்வான் என்பவன் இயல்புடையவர்களுக்கு மட்டுமல்ல, செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருப்பதிலும் உயர்ந்தவர்கள் என்பதை இவர்களது விருந்தோம்பல் பண்பிலிருந்து அறிந்து கொண்டேன். இராப்போசன மேசையில் மலேசிய நாட்டுப் பிரதமர் கூறியதுபோல "சத்து மலேசியா"  (ஒரே மலேசியா ) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மூன்று முக்கிய இனத்தவர்களின் (மலாய்காரர், சீனர்,தமிழர்) உணவுகளும் பல நிறங்களில் வைக்கப்பட்டிருந்தன.  அவற்றிற்கு எனக்குப் பெயர்கள் தெரியவில்லை, இருந்தும் புதிய புதிய உணவுகளை அன்போடு பரிமாறியதால் அவற்றை அமுதமாக எண்ணி ருசித்தேன்.
.
25.12.2012 ஆம் திகதி. திரு ஆதிசீசன் அவர்களின் பெறாமகன் சரவணன் அவர்களுக்கு பிறந்ததினம்.  அதற்கான ஏற்பாடுகளை அவரது பிள்ளைகள் அவருக்குத் தெரியாமலே ஏற்பாடு செய்து 24.12.2012 அன்று இரவு 12 மணிக்கு அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்ந்தனர். எனக்கும் அவரது பிறந்தநாளுக்கு அவருடன் இருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.
.
(டாக்டர் ஆதிசீசனுடைய ஒரு தொழிற்பேட்டையின் அமைவு)
.
இரண்டு நாட்களும் திரு ஆதிசீசன் அவர்களுடன் உரையாடியதில் அவரது தொழிற் பேட்டைகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலிட்டது. இதனை அறிந்து கொண்ட அவர் மறுநாள் தனது தொழிற் பேட்டைகளைக் காட்டுவதாகக் கூறியிருந்தார். விருந்தினர்களைத் தங்கவைப்பதற்காகப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இல்லத்தில் எனது இராப் பொழுதுகள் இன்பமாகக் களிந்து கொண்டிருந்தன.  
.
கப்பலோட்டிய தமிழர்களையும், திரைகடல் ஓடித் திரவியம் சேர்த்த தமிழர்களையும் படித்திருக்கிறேன். மலேசியாவில் இருந்து கடல்கடந்து வாணிபம் செய்து தன் வர்த்தகத்தில் வெற்றி கண்ட ஒரு தமிழனை இன்று சந்தித்ததில் பெருமை அடைகிறேன். படத்தில் இருக்கும் தொழிற்காலைகள் போல் 4 பெரிய நிறுவனங்களைத் தன்னகத்தே கொண்டு நிர்வகித்துவரும் இவர் தனது முயற்சியாலும், தெய்வ நம்பிக்கையாலும், தான் கொண்டுள்ள தன்நம்பிக்கையாலும் வெற்றியடைந்தவர். ஏற்றுமதி, இறக்கமதி வர்த்தகத்திற்காகவும், பொருட்களைக் கொண்டு செல்கின்ற போக்கு வரத்துச் செலவுகளை மட்டுப் படுத்துவதற்காகவும், சிங்கப்பூருக்கு அண்மையில், கப்பல் துறைமுகத்திற்குப் பக்கத்தில் தொழிற் பேட்டைகளை அமைத்திருப்பது அவரது புத்திசாலித் தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இளமைப் பருவத்திலிருந்தே வர்த்தகம் சமபந்தமான கற்கை நெறிகளையும் ஏற்றுமதி இறக்குமதி வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான  நுட்பங்களையும் தான் வேலை செய்த நிறுவனங்களின் ஊடாகப் பெற்ற அனுபவங்களையும்  தனது தொழிலுக்குச் சாதகமாகப் பயன்படுத்திய இவருக்கு தனியான ஒரு வர்த்தகத்தை அமைப்பது பெரும்  சிக்கலாகத் தோன்றவில்லை. இவற்றிற்கெல்லாம் மேலாக இவர் தனது மனைவியை இறைவனுக்குச் சமமாக இடப்பாகத்தே சுமந்துவாழும் வாழ்க்கை; இவருக்கு இலட்சுமி கடாட்சம் பொருந்திய ஒரு கொடையாகும். ஒருவனது உயர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் புகழுக்கும் காரணமாக ஒரு பெண் பக்கத்துணையாக இருப்பார் என்பதை உண்மைப்படுத்தி வாழும் இந்தப் பெரியவர் இன்னும் பல படிகளைத் தனது தொழிற் திறமையால் தாண்ட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இடப்பக்கம் என்று நான் கூறினாலும் தனது வலக்கரமே தன் மனைவிதான் என்று என்னிடம் கூறிப் பெருமைப்பட்டார் அருமை நண்பர்.
.
"பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட் பேறு அல்ல பிற"  என்ற குறளுக்கு அமைய அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவும் இல்லை என்பதனைக் கடவுள் அளித்த வரமாகக் கருதும் இவருக்கு அவரது பிள்ளைகளும் மருமக்களும் உறுதுணையாக இருப்பது வாழ்வில் கிடைத்த பெரும் பேறாகும்.  அதனால்தான் ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாயும், தந்தை மகற்காற்றும் நன்றியும், மகன் தந்தைக்காற்றும் உதவியும் "எந்னோற்றான் கொல் எனும் சொல்" ஆக இருக்கும்  அவரது வாழ்வியல் தேடல்; முயற்சியுள்ள பலருக்கு இந்த உலகத்தில் ஓர் உதாரணமாக அமைந்திருக்கிறது.
.
(தொழிலதிபர் டாக்டர் ஆதிசீசனுடன் அவரது ஒரு தொழிற்சாலையில் நான்)
.
சொந்த  வியாபாரத்தை வைத்துக்கொள்ள வேண்டுமென்ற தீராத ஆசை தொழில் ஆரம்பிப்பவருக்கு இருக்கும் ஒரு இயல்பான தைரியமாகும்.  ஒருவர் தனது இலட்சியத்தை அடைய வேண்டுமாக இருந்தால்  தைரியமும், அர்ப்பணிப்பும் முழுமையாக இருக்க வேண்டும். தொடங்கிய வியாபாரத்தின் மீது நேர்மை  இருந்தால், அவர்களது இலட்சியத்தின் மீதான முயற்சி  இன்னும் கூடுதலாக இருக்கும். இந்த உண்மையை நண்பரும் தொழிலதிபருமான திரு ஆதிசீசன் அவர்களிடம் கண்டேன். இவரது வர்த்தகத்தில் முக்கிய பொருட்களாக இருப்பது மலேசியாவில் தயாரிக்கப்படும் செம்பனை  எண்ணை (Palm Oil) ஆகும். சிறிலங்கா, மடகாஸ்கர் போன்ற நாடுகளுக்கு இவரது எண்ணை கணிசமான அளவிற்கு ஏற்றுமதியாகிறது. தவிர உள்ளுரிலும் கொக்கா கோலா (Coca-Cola) குளிர்பானத்தின் ஏக விநியோகத்தராக உரிமை பெற்றுள்ளார். இவ்வாறான ஒரு பெரும் வர்த்தகத்தைக் கட்டி எழுப்பித் தான் மட்டும் வாழாது தன்னுடன் சேர்ந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும், ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும்  உதவி செய்வதில் மனம் மகிழ்கின்றார் இம்மாமனிதர். பெருமை அணியுமாம் சிறுமை என்ற வள்ளுவர் வாக்கிற்கு இணங்க கொஞ்சம் கூடப் பெருமை இல்லாத உயர்ந்த மனிதரையும் அவர்தம் குடும்பத்தாரையும் நான் சந்தித்ததில் பெருமை  அடைகிறேன்.  
.
எல்லோர்க்கும் பெய்யும் மழை என்று ஓளவையார் கூறுவது;  மழை கிடைத்து நன்மை பெறும் மக்களுக்கு மட்டுமல்ல, மழைபோல் நன்மை அளிக்கும் எல்லாப் பெரியவர்களுக்கும் பொருந்தும் என்பதே என் கருத்து. என் இதயத்திலும் மழையாக இருக்கும் இந்தப் பெரியவரைப்பற்றி எழுதியதில் நான் மனம் மகிழ்கிறேன். ஆதி பகவான் முதற்றே உலகு என்பதுபோல, இவரையும் கடவுள் ஆசீர்வதித்திருக்கின்றார் என்று கூறுவதையே நான் இவருக்குச் செய்யும் கைமாறாகக் கருதுகிறேன். வாழ்க! வளர்க!!
"தோன்றிற் புகழொடு தோன்றுக  - அகிதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்றே"

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மீழாத் துயில் கண்டு ஆறாத் துயர் கொண்டேன்! என் சித்தப்பாவே.



நயினாதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் .
கொக்குவில் பிரம்படிலேனை வதிவிடமாகவும்
கொண்ட ஆறுமுகம் முத்துக்குமாரு [ஓய...்வு பெற்ற தபால் ஊழியர் ]
அவர்கள் 04,01,2013,இன்று மாலை யாழ் கொக்குவில்லில் காலமானார் .
அன்னார் காலம்சென்ற ஆறுமுகம் +சின்னப்பிள்ளை தம்பதியினரின் .
அன்பு மகனும் .காலம்சென்ற ,சின்னையா +விசாலாட்சி தம்பதியினரின் .
அருமை மருமகனும் ,திலகவதியின் பாசமிகு கணவரும் ,
புனிதநாதன் [தபாலகம் நயினாதீவு ]சிவநாதன் [ஜேர்மனி ]ஜெகநாதன் [ஜேர்மனி ]
மகேந்திரநாதன் [ஜேர்மனி ]சந்திரகலா .ஆகியோரின் அன்புத்தந்தையும் ,
சோதிராசா(டென்மார்க்) சிறிகந்தராஜா(சுவிஸ்) மணிவாசகர்(சுவிஸ்) சிவகலை(டென்மார்க்)
ஆகியோரின் சிறிய தந்தையும்,
இந்திராணி ,வசந்தமாலினி [ஜேர்மனி ]சிவதர்சினி .[ஜேர்மனி ]ஜெயந்தி [ஜேர்மனி ]
சுகேந்திரன் [ஆசிரியர் யா /இந்து மகளிர் கல்லூரி ]ஆகியோரின் .பாசமுள்ள மாமனாரும் ,
காலம்சென்றவர்களான .நாகமுத்து ,பொன்னம்பலம் ,சின்னம்மா ,முருகேசு ,விசாலாட்சி ,மாணிக்கம் ,
மற்றும் பொன்னம்மா ,நாகரெத்தினம் ஆகியோரின் .அன்பு சகோதரரும் ,
காலம்சென்றவர்களான ,திருநாவுக்கரசு ,சிவகங்கை ,மற்றும் .மகாலிங்கம் ,குற்றாலம், இராசரெத்தினம் ,
ஆகியோரின் அருமை மைத்துனருமாவார் .அன்னாரின் இறுதிக்கிரிகைகள் ,06,01,2013,ஞாயிற்றுக்கிழமை ,
காலை 10;30 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் ,
இவ் அறிவித்தலை .உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
செல்லத்துரை சிறிகந்தராஜா (கங்கைமகன்)
04.01.2013

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புல்லானாலும்......



சகுனம் பிழைத்த
அதிகாலை
வயிற்றில்
உண்டாகும்
பனிச் சிசுக்களைச்
சூரியக்கதிர்
தினமும் கலைக்கிறது.
இருந்தும்
மறுபடியும்
கர்ப்பமாகிறேன்
சூரியனே
குந்திக்கு மட்டும்
வரமா?
பூமித்தாயின்
பட்டுச் சேலை.
மலைமுகடுகளின்
முந்தானை நான்
கட்டிப்புரளும்
காதலர்களின்
பஞ்சுமெத்தை.
உலகக் கோப்பைகள்
என்னோடு
உருள்கிறது.
மரடோனாவின்
விசிறி நான்.
எனக்கும் காற்பந்தில்
ரசனை உண்டு.
உன் நடைபாதை
முட்கள்
என்மீதே விழுகிறது
நீ பாக்கியசாலி
நான் உன்
மகிழ்ச்சிக்காய்ச்
சிதைந்தவள்.

புத்தர் மிதித்தும்
புனிதமானேன்
இயேசுபாதம்
தொட்டும் மகிழ்ந்தேன்.
நீ தொட்ட இடங்கள்
பசலை பூத்தன.
ஒவ்வொரு
நாட்டிலும்
பாப்பரசரிடம்
பத்தினிப் பட்டம்
கிடைக்கிறது.
தாவர பட்சணிகளுக்குக்
காராம்பசு.
உழவர்களுக்குக்
கற்பகதரு.
நாங்கள்
பல சாதி
இருந்தும்
கலவரம் இல்லை.
சிவபுராணம்
சொன்ன
முதல் பிறப்பு.
ஓரறிவு தான்
அனுபவம்
யுகக்கணக்கில்.
காட்சிக்குப்
பச்சை
கண்ணிற்குக் குளிர்ச்சி
முதுமொழி
ஒன்றிற்கும்
நான் முன்னோடி.
என்னுள் வாழும்
உயிரினங்கள்
உன் பாவத்தைப்போல்
தெரிவதில்லை
சந்தோசப்படு.
விஞ்ஞான
இயந்திரங்கள்
மேனி விழுந்து
வல்லுறவு தொடர்கிறது.
இருந்தும் வாழ்கிறேன்.
மனித
அவலங்களைக்
கீழிருந்து பார்த்து
மகிழ்வதற்காக.
ஒருவரை
மிதித்து வாழ்வதே
மனிதனின்
பிழைப்பாய் ஆச்சு.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒரு நண்பரின் சித்தாந்தம் - "யாருக்கு என்ன பயன்"



இவர் டாக்டர் ஜெயபாலன்(மலேசியா) அவர்கள். எனது மதிப்பிற்குரிய நட்பின் மூலம் அறிமுகமாகியவர். அதுமட்டுமல்ல அவரது ஒரு சகோதரனுமாவார். சர்வதேச ரீதியில் "Anpalayaas International Complementary Therapy" என்ற சொந்த அமைப்பினூடாக மக்களுக்குச் சேவை செய்வதை மகேசன் சேவையாகக் கருதுபவர். அழகிய, உயரமான தோற்றமும், இலட்சுமிகடாட்சத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள இவர் உலக மனிதாபிமானத்தை நேசிக்கும் உயர்ந்த மனிதப் பண்புகளைக் கொண்டவர் .

அமைதியான காலை, ஆரவாரமற்ற சூழ்நிலை, ஆழ்ந்த தூக்கம் அதனால் சலனங்கள் அற்ற மனம். காலைப் போக்குவரத்து நெரிசலைக் கடந்து அமைதியாகிய மலேசியத் தெருக்களின் ஏதோ ஒரு மூலையில் நின்று ஒரு நண்பரைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கான வீச்சு எல்லைக்கு வெளியில் நான் நிற்பதாக அவரை அழைக்கும்போது எனக்கு என் தொலைபேசி கட்டளை இடுகின்றது. முன்பின் அறிமுகமில்லாதவர் ஆனால் முற்பிறப்பில் பழகியவர்போல் ஒரு பிரமை. சந்திப்புக்களும் கடவுளின் நியதிதான். சந்தர்ப்பங்களும் கடவுளின் நியதிதான். சாத்தான்கள் சன்நிதிகளில் வாழ ஆசைப்படுகின்றன. ஆனால் கடவுள்களோ சிலையைவிட்டு இறங்கி மனித மனங்களுக்கு வலுச் சேர்ப்பதற்காய் ஆன்மீகம், தியானம் என்ற வழிகளுக்கு அவனை அழைத்துச் செல்லத் தயாராக இருக்கின்றன. நாத்திகம் வலுப்பெறும்போது ஆஸ்திகம் மறைந்து நின்று நாத்திகனை வேடிக்கை பார்க்கிறது. படைத்தலையும், காத்தலையும் செய்யும் பரமனே ஆக்கல், அழித்தல் போன்றவற்றிற்கும் அதிபதியாக இருக்கின்றார் என்றால் அது எப்படி என்பது அனேகரின் கேள்வியாக இருக்கின்றது. அதனால்தான் இறைவன் உலகமக்களுக்கு அருளல் என்ற நிலையில் வெளிப்பட்டுத் தன் இருப்பை உணர்த்துகின்றார். மீண்டும் ஒரு அழைப்புமணி அடிக்கிறது. அதனைத் தொடர்ந்து இலகுவாக அவரது இல்லத்தை அடைந்துவிட்டேன். புத்தர் செல்லும் கிராமங்களில் அவர் போவதற்கு முன்பே பூமரங்கள் பூப்பதுபோல் இந்த நண்பரைச் சந்திப்பதற்கு முன்பே சில சிந்தனைகள் எழுந்துவிட்டன. அது ஆழ்மனத்தின் வெளிப்பாடா? அல்லது அந்த நண்பரது என்னை நோக்கிய அதிர்வு அலைகளா என்று புரியவில்லை.

அரை மணித்தியாலச் சம்பாசனையில் 500 புத்தகங்கள் படித்த உணர்வு அவருடன் கதைத்தபோது எனக்கு ஏற்பட்டது. திறந்த பல்கலைக் கழகத்தில் பரந்த புத்தகமாக விரிந்திருக்கும் இவர் ஆன்மிகத்திலும், தியானத்திலும் தனக்கென்ற ஒரு நிலைக்கு அவரது உழைப்பின் நிமித்தம்  வெற்றியடைந்திருக்கின்றார் என்பதனை அறிந்து கொள்வதற்கு எனக்கு மணிக்கணக்கில் நேரம் பிடிக்கவில்லை.  எனது வருகையால் அவரது பிரயாணத்திற் சிலமணி நேரங்கள் தடைப்பட்டாலும் அதனைப் பெரிதுபடுத்தாமல் இன்முகம் காட்டி மனிதர்களை மதிக்கும் பண்பு எனக்குப் பிடித்திருந்தது. ஆணவத்தை ஒருவன் எப்பொழுது விட்டுவிட்டு மனம் திரும்புகிறானோ அப்பொழுதே அவனுக்குப் பலவழிகளிலும் விடுதலை கிடைத்து விடுகின்றது என்ற அவரது கருத்துக்களைப் பின்பற்றும் ஒரு சீடனாக நான் மாறிவிட்டேன்.

ஐம்புலன்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்துடன் ஆறாவது புலனாக மனிதர்களுக்கு மட்டும் கொடையாகக் கிடைத்த மனம் என்பது ஆறாம் புலனாகவும், அறிவு என்பது ஏழாம் புலனாகவும், இத்தனையையும் தன்னகத்தே கொண்டுள்ள ஆன்மா எட்டாம் புலன் என்றும், இந்தப் புலன்களை உயிர்களுக்குக் கொடுத்து ஆழும் பரம்பொருள் ஒன்பதாம் புலம் என்றும் அதுவே இறுதியில் ஜீவாத்மா, பரமாத்மாவாக நிலைபெற்று இந்த உலகை ஆட்சிசெய்கின்றது என்றும், மிக இலகுவாக விளக்கினார். இந்த ஒன்பது புலன்களையும் பின்னோக்கி எண்ணிக்கொண்டு வரும்போது இறுதியில் பூச்சியம் (கோசம்) வருகிறது. அதுதான் பூரணத்துவமானது அதற்கு அப்பால் ஒன்றும் இல்லை என்பதை தெளிவுபடுத்திய விதம் மிக அருமையாக இருந்தது. கட்டை விரலையும், ஆட்காட்டி விரலையும், ஒனறு சேர்க்கும்போது வரும் வட்டவடிவமே கடவுளுக்கும் மனிதருக்குமிடையில் ஏற்படும் தொடர்பிற்கான முத்திரை வடிவம் என்பதை அவரது மாணவனாக இருந்து கற்றுக்கொண்டேன். ஐந்து விரல்களில் ஐம்பூதங்களுக்கு விளக்கமளித்தது நான் முதன்முதலாக அவரிடம் கண்டுகொண்ட ஒரு விடையமாகும்.

நான் எழுதிய ஆத்மலயம் என்ற நூலுக்கு இரண்டாம் பாகம் எழுதுவதற்கு எனக்கு ஒரு குருவிற்கான தேடல் இருந்தது. அந்தத் தேடலைப் பூர்த்தி செய்யும் நிலையில் ஒருவர் எனக்குக் கிடைத்த மகிழ்ச்சியில் நான் இப்போது இருக்கின்றேன் என்றால் இறைவனது நியதிப்படி இவரைச் சந்தித்ததையும் பெருமையாக நினைக்கிறேன். அரிசிக்குள் கிடக்கும் கல், பல இடங்களில் தப்பிவந்து இறுதியில் சோற்றுக்குள் கடிபடுவதுபோல எல்லாப் பொருட்களும் எங்கோ ஓரிடத்தில் வெளிப்பட்டே ஆகும் என்ற சித்தாந்தம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. நிலையற்ற மாயை உலகத்தில் மனிதர்கள் தேடிய தேட்டங்கள் "யாருக்கு என்ன பயன்" என்ற தத்துவத்தில் இருந்து தவறுவதில்லை. உலகில் மனிதர்கள் வாழ்வதற்கும் ஒரு வழிமுறை இருக்கின்றது. பட்டினத்தாரது "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்பதைத் தனது வாழ்வின் இரகசியமாகவும் குறிக்கோளாகவும் வாழ்ந்துவரும் இவர் தனது தியானங்களினாலும் இறைசக்தியாலும் மக்களைத் துன்புறுத்தும் புற்றுநோய், நீரழிவு, இரத்த அழுத்தம், ஆஸ்த்மா போன்ற நோய்களுக்கு மருத்துவம் அளித்துக் குணப்படுத்துவதிலும், ஆலோசனைகள் சொல்வதிலும் சிறந்தும், நிறைந்தும் காணப்படுகின்றார் .

இவருடன் பேசியது வெறும் 23 நிமிடங்கள்தான். அந்த விரிந்த புத்தகத்தில் நான் படித்தது முகவுரை மட்டுமே. "நீங்கள் நூல்கள் எழுதலாமே" என்று எனது ஆர்வத்தில் ஒரு கேள்வியைக் கேட்டேன். அதற்கான சூழ்நிலை இன்னும் கிடைக்கவில்லை என்பதைப் புன்முறுவலுடன் கூறி விடைபெற்றார். அவரது வீட்டில் அளித்த அறுசுவை உணவைவிட, அவரிடம் இருந்து கிடைத்த அறிவுச்சுயையே மீண்டும் அவரைச் சந்ததிக்கத் தூண்டுகிறது. அவரை அறிமுகப்படுத்தியவர்களுக்கும், இதனை வாசிக்கும் எனது வாசக நண்பர்களுக்கும், அவரது சார்பிலும், என் சார்பிலும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறான மனிதர்களை எனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதை நான் பெருமையாகக் கருதுகின்றேன். "என் கடன் பணிசெய்து கிடப்பதே"

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கடவுள் தீர்ப்பு - 21.12.2012 (கங்கைமகன்)




ஒரு கிராமத்தில் ஒரு ஆசீர்வதிக்கப்பட்டவர் இருந்தால் அந்த நாட்டை நான் காப்பாற்றுவேன்(வேதாகமம்).கடவுள் அமைத்துவைத்த மேடையில் அவனது பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஓர் அற்புத ஆன்மாவே மனிதன். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே என்றார் திருநாவுக்கரசர். உன்வீட்டு முற்றத்தில் இருக்கும் பாதச்சுவட்டின்மீது கால்வைத்து நடந்துவா. என்பின்னால் நீ வருவதை அறிந்து கொள்வாய் என்கிறது வேதாகமம். .திருக்குர்ஆனில் நான் ஒளியாக இருக்கும்போது உன்னை இருளில்  தள்ளமாட்டென் என்று ஒரு வசனம் இருக்கின்றது. எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும் இதுவே உலக நியதி என்று கீதையில் கூறப்படுகின்றது. கடவுள் கொள்கை என்பது மனிதன் ஆக்கி வைத்தானே தவிர கடவுள் தன்னை மனிதன் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஆக்கி வைக்கவில்லை..  கடவுள் மனிதனைப் படைத்தார் என்பதனை எல்லா மதங்களும் ஒத்துக் கொள்கின்றன. ஆனால் மனிதன் கடவுளைப் படைத்து  வித்தைகள் காட்டுவதே இறைவனுக்குச் சிரிப்பை உண்டுண்ணுகின்றது.

விடைகாண முடியாத புராணக்கதைகளை மூடநம்பிக்கைகள் என்று ஒதுக்கியது மெய்ஞானம். அந்த மெய்ஞானத்தைக் குடைந்து அதில்வரும் சூட்டில் விஞ்ஞானம் தற்காலத்தில் குளிர்காய்கிறது. விஞ்ஞானம் என்பது மக்களின் பாதுகாப்பு, முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சி, என்பதைவிட; உலகமக்களைப் பயங்காட்டும் ஒரு சாத்தானாகவே கடந்த காலங்களில் செயற்பட்டு வருகின்றது. மெய்ஞானத்தை விளங்கிக்கொள்ளச் சமயநூல்களைக் கையில் தூக்கியவர்களை விட அதற்குப் பயந்து சமயநூல்களைக் கையில் தூக்கியவர்களே அமரிக்காவில் நிறைந்து வாழ்கின்றார்கள். உலகம் தொடங்கிய காலம் தொட்டு இந்த உலகத்தில் மதச் சண்டைகளும், ஆக்கிரமிப்புச் சண்டைகளும் இடம்பெறாவிட்டால் தற்போது இருக்கும் மக்கள் தொகையின் இரட்டிப்புத் தொகையினர் இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பர். எந்தப் பொருளையும் பாதுகாப்பாக வைத்திருப்பது மனிதனுக்குத் தெரியவில்லை. இதனால்தான் மனிதன் தன்னைக் கடவுளிடம் பாதுபாப்புக் கோரும் நிலமைக்குத் தள்ளப்பட்டான்.

சுமேரியர் குறிப்புக்களையும், மாயன் கலண்டர்களையும், நகைப்புக்குள்ளாக்கிய விஞ்ஞானம் நாசா வடியில் வடிவேலுவின் காமடிக்கு நிகராக வித்தைகாட்டித் தன் வாயைத் தானே இன்று அடைத்துக் கொண்டதோ என்று மக்கள் நினைத்துவிடாதபடி தன் எண்ணத்தில் வெற்றியடைந்துள்ளது.  உலகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும்  கடவுள் நியதி உண்டு. அதுபோல் இந்த உலகத்திற்கும் ஒரு நியதி உண்டு. கடவுள்  மனிதனை வாழ வைப்பதற்காகவே அவதாரம் எடுத்திருக்கின்றார் என்பதுவே இங்கு உண்மை ஆகின்றது. கடவுள் இல்லை என்று சொல்லுபவர்கள் கூட ஒரு சக்தியை நம்பித்தான் ஆகவேண்டும் என்பதுவும் கடவுளின் தீர்ப்புத்தான். இறைவன் தன்னை மறைத்து வைத்திருப்பதுபோல் மனிதனுக்கு அவனது இறப்பின் ரகசியத்தையும் மறைத்தே வைத்திருக்கிறார். ஏன் என்று கேட்டால்  சிலருக்கு என்று சில கடமைகள் உண்டு. கடவுளுக்கு என்றிருக்கும் கடமைகளில் நாம் ஏன் தலையைப்போடுவான். அவரவர் கடமைகளை அவரவர் பார்த்துக் கொள்வதும் கடவுளின் தீர்ப்புத்தான்.

கிழ் வரும் இந்த வரிகள் 30 நவம்பர் 2012 அன்று அழிவின் நுனியில் உலகம் என்ற எனது கதையில் வந்த வரிகள். (எது எப்படி இருப்பினும் நான் "கடவுள் தீர்ப்பு"  என்று 22.12.2012 இல் எழுதும் கதையை நீங்கள் 23.12.2012 இல் வாசிப்பீர்கள் என்று நம்புகிறேன்)

எல்லோரும் நலம்வாழ  நாம் பாடுவோம். நாம் வாழ அவன் பாடுவான். நன்றி)
அன்புடன் கங்கைமகன்.

இன்று மலேசியாவில் நான். 21.12.2012.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது புலன்விசாரணையில் கவிஞர் பீரொலி ஐயா அவர்களின் சாட்சியம்.


 அனைவருக்கும் வணக்ககம். திரு பீரொலி ஐயா அவர்கள் எனது நண்பர் மட்டுமல்ல. ஒரு சிறந்த இலட்சிய வாதியும்கூட. தனது வேலைப்பளுவின் மத்தியிலும், மின்சார வெட்டின் காரணமாகக் கணனிப் பாவனை குறைந்துள்ள  வேளையிலும் எனது நூலுக்கான சிறந்த விமர்சனத்தைத் தந்திருப்பது மேலும் பல புதிய  பதிவுகளுக்கு என்னை அழைத்துச் செல்கிறது. நன்றி ஐயா!

 
 கங்கை மகனின் புலன்(களின்) விசாரனை
-ஓர் அதிசய நிகழ்வு
கவிஞர் கங்கை மகன் அய்யாவின் புலன் விசாரணை  நடைபெறும் நீதி மன்ற வளாகத்திற்குள் எதேச்சையாக ஒரு பார்வையாளனாய் நுழைகிறேன். அங்கு முதன்மை மற்றும் குறுக்கு விசாரனை முடிந்து மறு விசாரனை நடந்து கொண்டிருக்கிறது. நான் நுழைந்தது நீதி மன்றமா அல்லது வானுலகின் சொர்க்கப்புரி நந்தவனமா என்று அதிசயித்து வியந்து மலைத்து நிற்கிறேன்.
" மாடத்துப் புறாக்களுக்கு
மதனரசம் விஞ்சி நிற்கும்"
" பூவிதழ் இதுதான் என்று
பலரிதழ் பட்டுச் சிவந்த
பரத்தையர் அதரம் தன்னை
எந்நீத்துக் களிப்பாயோ ?"
இளமுகிழ் மார்பதனில்
தொய்யிற்படம் பார்த்தவன் நீ"
"வேர்ப்பலாச் சுளை நிகர்த்த
செம்பருத்திச் சிற்பம்- இங்கு
மரித்து மடிக்கின்றாள்"
மெய்மறந்து இலைத்துப் போயிருந்தவன் ஸ்பரிசம் பட்டுத் திரும்ப அருகிலிருந்தவர் இருக்கையில் அமரப் பணித்தார். சன்னமாய் விசாரனையின் பொருள் பற்றி வினவ அவர் கூறினார் 'அகத்திணைப் பாத்திரங்களின் ஐவகை ஒழுக்கங்களையும் சுமந்த உணர்ச்சி தழும்பும் நாடகத்தின் நாட்டிய நர்த்தனங்கள்'
விசாரனைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

"சங்குவளை தோள் அரிவை
விரல்பட்டு உடல் உறையும்
நிறைக் கட்டுக் கரும்பாக
படுக்கையிற் பிறந்திருப்பாள்
தினம் தினம்"
"காதல் சிற்பங்களின்
கடைசி முத்தம்."
'விழி எழுதும்
முடங்கல் கண்டு
ஊனமுற்ற மொழிகள்"
"வாழை மடல் துடையை
மனதிற்குள் செருகிவிடும்
பருத்த வாளை மீன்கள்"
அவன் கேட்கிறான் அந்த நீதி தேவதையைப் பார்த்து

"பூமிநங்கை நாணத்தில்
இருளாடை கட்டும் வேளை
எனக்குள்ளே நடக்கிறது
உன் நினைவு தோய்ந்த
புலன் விசாரனைகள்."

"கலவியல் இலக்கணங்கள்
அன்றாடம் படிக்கும்
அரிச்சுவடி மாணவ்ன் நான்"
" பார்வைக் குண்டூசிகளைப்
படைத்தவன் எவனோ?"
"உன் படைக்கல வலையத்துள்
நான் அடைக்கலம் ஆன்பின்னும்
எனக்கு ஏன் ஆயுள் தண்டனை ?"
தீர்ப்பு ஒத்திவைக்க நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளிவருகிறேன். என் செவிகளுக்குள் 'சாமத்துப் போர்க்களத்தில்
காமத்துத் தீவிரத்தில்
அல் வந்து இல் ஏகும்
கன்னம் கொண்ட கனிகள்
கிண்ணம் தந்த மதுவும்"
ஆடை பூண்ட மாலைபூத்த மல்லிகை மின்னல் கண்டு இன்பம் சுற்ற
அந்த விசாரனை ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது.

"மண்ணில் படைத்துவிட்ட
புதுக்கவிதைப் பூங்காவின்
புலன் விசாரணைக்குள்
புதுக்குடி வந்தவளே"

"பாரம் சுமக்கும் இடையில் நீ
பாடம் நடத்தும் முறையில்
ஓரப் பார்வை விழியில் உன்
மனதின் ஓசை மொழியில்
விழுந்து விட்டேன் மடியில்"
முதன்மை மற்றும் குறுக்கு விசாரனையைத் தவறவிட்ட வருத்தத்தில் முதன்மை மற்றும் குறுக்கு விசாரனையை நடத்திய மேதைகளான உயர்திரு நயினை குலம் வீரவாகு,கிருஷ்ணன் பாலா, துளசி தாசன் மற்றும் நாணற்காடன் அனைவரையும் தேடிச் சென்று அறிந்து கொண்டேன்.

"குழை நக்கும் தோளழகி
வளை நக்கும் கையழலி
துகில் நக்கும் இடையழகி"
"காதலின் எல்லை காணக்
கலவியின் ஆழம் சென்றார்"
'ஆழ் கடலில் மூச்சு அடக்கி கங்கை மகன் எடுத்து வந்த முத்துக்கள்.....தேன்கூடு புலன் விசாரனை" (உயர்திரு. நயினை குலம் வீரவாகு)
"புதிய சொல்லடுக்கும் சுவை மிகும் மிடுக்கும் கூட்டி இங்கே சொற் சிலம்பம்............இந்தக் கவிதைப் பூக்களுக்கு யாரும் வாசம் தெளிக்க வேண்டியதில்லை........கருத்தோடும் இந்தப் புலன் விசாரணையைத் தகிதா வெளியீட்டாளர் முடுக்கிவிட்டனர்" (உயர்திரு. கிருஷ்ணன் பாலா)

விதைக்கப்படாத கவி எனும் விதை; முளைக்காது. கவியைக் கொண்டு அதை வாசிப்பவர்களின் மனத்தில் கருப்பொருளை விதைப்பதே கவிதையாகும். விதையில்லா கவி கவியா?..விதைத்த விதை கவிதையா?.....தன் கவியால் விதையை விதைத்துவிட்டு செல்பவன்தான் கவிஞன்"( உயர்திரு. துளசி தாசன்)
விசாரனைக்குள் நுழைந்தேன்.
."விரல் கொண்டு கதை எழுதி
என் மேனி சுட்டவனே
இதழ்மீது படங்கீறி
உயிருருகச் சாணைப் பிடித்தாயே
உறிஞ்சிவிட்ட தேனெல்லாம்
ஒரு நொடியில் தீர்த்ததுபோல்
புலருமுன்னே சென்றாயோ
புது மலரை நாடி."
குறுக்கு விசாரனையில்

" ஓடுகின்ற நாடிக்குள்
தேடுகின்ற இடம் எல்லாம்
அவள் நாமம் சிந்திக் கிடக்கிற
சேதியையாரரிவார்
என்னவள் பெயர் சொல்லி
இன்னும் துடிக்கிறது என் இதயம்”

"நிலவைத் தொலைத்த வானம்
பூமியில் உன் முகம் கண்டு மகிழ்ந்து
விதைத்த வளையல்கள் வழிபார்த்து
கருக்கலுக்குள் வந்திடுவேன்"
புலன் விசாரனை தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
"இரவைக் குழைத்து அப்பிவைத்த உன் கூந்தல் வெளிச்ச இருட்டில் நட்சத்திரங்களைத் தேடுகிறேன்....உலகத்தில் ஒரு புள்ளியில் நீ...நதியாய் நான்....என் உயிரைத் துளியாக்கி உன் மீது சொரிவதற்காய்...அனல் இடை மெழுகாகிப் புதுப் புனலாகப் பொழிகிறது அவள் மீது என் அடைமழை
புலன் விசாரனைக்குள் கருக்கொண்ட அகத்திணை ஐவகை ஒழுக்கம் சுமந்த உணர்ச்சி பொங்கும் காவியத் துடிப்புக்களில் கறைந்து போய்.....கனவுகளுடன்...அந்த பாத்திரங்களுடன் உரையாடியவண்ணம் தொடர்கிறேன்
வாழ்த்துக்கள் கங்கை மகன் அய்யா

அன்புடன்
மு. ஆ. பீர்ஒலி.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நான் நீயாகியபோதில்.......



வணக்கம். நண்பர் Rajagi Rajagopalan அவர்களது ஏதோ ஒரு கவிதைக்கு "பெண்களின் இதயங்களைப் பாடமாட்டீர்களா" என்று ஒரு தோழி கேட்டிருந்த நினைப்பு எனக்கு இருந்தது. அவ்வாறான தோழமைகளுக்கு இக்கவியைச் சமர்ப்பிக்கிறேன்.
காற்றுப் புரவியில்
கங்கைப் புனலாய்
காவிரி கடந்து
மருதம் வந்த
குறிஞ்சிக் குமரா;
குணகடல் உதித்துக்
குடகடல் விழுந்த
அடிபட்ட ஆதவனின்
காயத்தின் சிவப்பாய்
வானத்து முகில்கள்;
போதாகிய குவழைக்குத்
தூதாகவந்து என்னைத்
தோதாக்கித் தொழுதவனே!
கோதாகி நானும்
மோப்பத்திற் குழைந்து
தூக்கி நிறுத்துகையில்
தோளிலே ஒடிந்தவள்  நான்.
புவிச் சூட்டின் வெப்பம்
உன் மடிச்சூட்டிற் கண்டு
என் கணச்சூட்டின் தட்பம்
கன நாளாய் மறந்தேன்.
கன்னத்துக் குழி தந்த
கிண்ணத்து மதுச்சுவையில்
குத்துகின்ற அரும்பாய் மீசை
கொட்டுகின்ற கரும்பாய் ஆசை.
வித்தைபேசும் அத்தை மகனே
மெத்தைக்குக் ஏனோ கண்ணி!
கள்ளத்தில் தானோ புள்ளி.
கோதை என் உடலுக்குள்
கொழுந்து விட்ட மாயவனே
போதி மர வேதத்தைக்
கிழித்தெறிந்த காமன் நீ.
திடந்தோளில் தடமாகி
வடந்தேடும் தேராய் நான்
வழிதேடி வந்து உந்தன்
வலக்கரம் பற்றிவிட்டேன்.
மார்போடு எனை அணைத்தாய்
மலை நொறுங்க வலிசுமந்தேன்.
சிலைபோல நான் உறைந்து
உலையாகிக் கொதித்து
வலைபட்ட மீனாகக்
கடலேறத்  துடிக்கின்றேன்.
வரைபாய்ந்து வந்திங்கே
தாழம்பூ தழைப்பதற்காய்த்
தாம்பூலம் மாற்றிவிட
இமைப்பொழுதில் வாடா - என்
சேலையில் சிக்கிய சிங்கமே!
(புரவி - குதிரை, குணகடல் - கிழக்குக்கடல், குடகடல் - மேற்குக் கடல், போதாகி - விரிந்த, கண்ணி - கணை, வரைபாய்ந்து - மலை பாய்ந்து, சேலையில்- கண்ஜாடையில)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS