RSS

அகநானூறு கூறும் தீபாவளித் திருநாள்.




சங்ககாலத்து அகத்திணைகூறும் நூல்களில் ஒன்றுதான் "அகநானூறு"  இலக்கியம் என்பது சமூகத்தைச் சித்தரித்துக் காட்டும் கண்ணாடி போன்றது. அதை மையப்படுத்தியே நான் இந்தக் கட்டுரையை இங்கு பதிவாக்குகின்றேன்.



தமிழாகரர் தெ.முருகசாமி
தீப ஆவளி - தீபாவளி. தீபம் - விளக்கு; ஆவளி - வரிசை.

தீபங்களை வரிசையாக வைத்து வழிபடும் விழாதான் தீபாவளி.  ஐப்பசி அமாவாசையையொட்டி கொண்டாடப்படும் இவ்விழா, வடவரின் நாகரிகக் கலப்பால் தமிழர்கள் மேற்கொண்டுவிட்ட விழாவாகும். இதன் அமைப்பைக் கார்த்திகை மாத முழுநிலாவில் கொண்டாடும் கார்த்திகை விளக்கு விழாவாக அகநானூற்றில் நக்கீரர் 141ம் பாடலில் கூறுகிறார். இதனால் கார்த்திகை தீபத் திருநாள்தான் தமிழர் தீபாவளியானாலும் அதை தீபாவளி எனக் கூறுவதில்லை. நாகரிகக் கலப்பான ஒரு காரணமன்றி வேறு சரியான காரணம் தமிழர் மேற்கொண்டுவிட்ட ஐப்பசி தீபாவளிக்குக் கூறமுடியவில்லை.

பொதுவாகத் தீபாவளி என்றாலே இனிப்புப் பலகாரங்களும், புத்தாடையும், புதுமணத் தம்பதியரைத் தலைதீபாவளி என அழைத்துவந்து மகிழ்வதும்தான் இன்றியமையாததாகக் கருதப்படும். இத்தகு நிலைக்கு மேலாக விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்துக் கொண்டாடும் வழக்கம் தமிழ் மக்களிடம் இல்லை. ஆனால், தமிழ் நாட்டை வாழும் இடமாகக் கொண்டுள்ள வடநாட்டு மக்கள் தங்கள் வீடுகள் தோறும் வரிசையாக விளக்குகளை ஏற்றிவைத்துக் கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற வழக்கம் கார்த்திகைத் திங்களில்தான் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்ற உண்மையை அகநானூறு பதிவு செய்துள்ளது.

உலகு தொழில்உலந்து நாஞ்சில் துஞ்சி
மழை கால்நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகதில்! அம்ம,
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இறீஇ
கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து
பாசவல் இடிக்கும்.
வேங்கட வைப்பின் சுரன்இறந் தோரே!

பொருள்தேட வெளியூர் சென்ற கணவன் ஊர் மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடும் கார்த்திகை விளக்கு விழாவின்போது வந்துவிடுவான் என மனைவி மகிழ்ந்து தோழியிடத்துக் கூறுவதாக 141ம் பாடலில் விளக்கேற்றி வழிபடுதற்கான காலச்சூழல் முதலில் நக்கீரரால் கூறப்படுகிறது.
                                                                                                                                                                         உழவுத் தொழில் முடிந்துவிட்டதால் உழும் கருவியான கலப்பை வேலையின்றிக் கிடக்கிறது. உழவுக்கு உதவியாக மேகமும் தக்கவாறு மழைபொழிந்து ஓய்ந்து விட்டதால் ஆகாயம், கருமேகம் சூழாத நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது.  ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் காயும் முழு நிலாவானது இருளை நீக்கி வானில் காணப்படுகிறது.   இந்நாளில் வீடுகள்தோறும் மக்கள் பூமாலைகளைத் தொங்கவிட்டு விளக்குகளை ஏற்றி வைத்துக் கூட்டமாகக் கூடி விழா கொண்டாடுவார்கள்.
                                                                                                                        இக்கார்த்திகை விளக்கு நாளில் புது மணமகன் உண்பதற்காக பசிய அவலாலான இனிப்புப் பொருள் செய்வதற்காக வீட்டிலுள்ள பெண்கள் நெல்லின் கதிர்களைப் பறித்து அவற்றை உரலில் இட்டு உலக்கையால் குத்திப் பக்குவப்படுத்துகிறார்கள்.   அங்ஙனம் குத்தும் உலக்கையின் ஒலியைக் கேட்டுப் பயந்தப் பறவை தானிருந்த வாழை மரத்தை விட்டு வேறொரு பெரிய மரத்தில் தங்கி தன் குஞ்சுப் பறவைகளைக் கூவுகின்றன. இத்தகு மரங்கள் அடர்ந்த இடையாறு என்னும் வளம்மிக்க நகரத்தைப் போன்று பெரிய செல்வ வளத்தைத் தேடி வருவதற்காகத் திருவேங்கட மலையைக் கடந்து சென்ற கணவன், கார்த்திகை விழாவின் போது வந்துவிடுவான் என மனைவி எண்ணிக் கூறுவதாக நக்கீரர் இப்பாடலை அமைத்துள்ளார்.
                                                                                                                                                                                     அப்பாடலில் "மதிநிறைந்து அறுமீன் சோரும் அகல் இருள் நடுநாள்" என்றது, கார்த்திகை மாத முழுநிலா நாளைக் (பெளர்ணமி) குறிப்பதாகும். முருகனைக் கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்ததால் அவர்கள் வரம் வேண்டியபடி வானில் ஆறு விண்மீன்களாயினர் என்பது புராணச் செய்தி.  முருகனோடு தொடர்புடைய கார்த்திகை நாள் ஒவ்வொரு மாதத்தில் வந்தாலும் அது கார்த்திகை மாத முழு நிலவோடு கூடி நிற்கும்போது சிறப்புக்குரியது என்பதால் மேற்படித் தொடர் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும். மேலும் இப்பாடலில் "புதுமணமகனை" என்றது, புது மணமகனை மட்டும் குறித்தாலும் தலைதீபாவளியை மணமகள் வீட்டில்தான் கொண்டாடும் வழக்கம் இன்றும் உள்ளதால் புது மணமக்களைத் தலைதீபாவளிக்கு அழைத்துவரும் செய்தியைக் குறிப்பதாகக் கருதலாம். இதனால் புது மணமக்களுக்குப் புத்தாடை வழங்கப்பட்டதாகவும் கருதலாம்.

இன்னும் இப்பாடலில் புதுமண மகனை "அயினிய" என்றதால் மணமக்கள் உண்ண வேண்டி பால் உலையில் பசுமையான அவலையிட்டு இனிப்புப் பொருள் செய்ய முயற்சித்தக் குறிப்பு கூறப்பட்டுள்ளதால் பொதுவாகத் தீபாவளிக்கு இனிப்பு செய்யும் வழக்கம் அன்றுமுதல் இருந்ததாக அகநானூற்றால் அறிய முடிகிறது. 
                                                                                                                                        எனவே, பழந்தமிழ்க் கார்த்திகை விளக்கு வழக்கம் இக்காலத்தில் ஐப்பசி மாதத்தில் விளக்கை வரிசையாக ஏற்றி வைப்பதைத் தவிர்த்ததாக அமைந்துவிட்டதற்கு வேற்றுப்புல நாகரிகக் கலப்பே காரணமன்றி வேறு காரணம் இல்லை எனலாம்.



Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கோவையில் ஒரு யாகசாலை.


பேராசிரியர் மணிவண்ணன்


கடலளவு ஆனாலும் மயங்க மாட்டேன், அது கையளவு ஆனாலும் கலங்க மாட்டேன். பாராட்டை கண்டு (பெருமையில்) மறக்கவும் வேண்டாம், கேளிக்கை விமர்சனங்களை கேட்டு தங்களை (கோபத்தால்) இழக்கவும் வேண்டாம். கங்கைக்கு பேதமில்லை, தன்னில் மூழ்குவன் பாவி ஆனாலும் பேதமின்றி அவனைத் தன் இருகரத்தால் அணைத்து பாவத்தைப் போக்குவதால்தான் கங்கை ஜீவ நதி, புண்ணிய புனித நதி என்று அழைகப்படுன்கிறது"  இது எனது "ஆத்மலயம்" நூலுக்காக ஒரு வாசகியின் மடல். 


இந்த நூல் வெளியீட்டிற்காகவும்; அதற்குக்கிடைக்கும் மெடலை வாங்குவதற்காகவுமே நான் பயணித்துக்கொண்டு இருக்கின்றேன். பயணத்தின்போதெல்லாம் சச்சீன் அடிக்கும் சதங்கள்போல் தகிதா பதிப்பகம் அடித்த சதங்களில் ஒன்றுதான் உங்கள் "ஆத்மலயம்" என்று மணிவண்ணன் எனக்கு அடிக்கடி கூறுவதுதான் என் நினைவிற்கு வருகின்றது.






தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலியில் திரு. திருமதி பாபா இருவரும் முகநூல் நண்பர்களாகி எனக்கு அலுவா கொடுப்பதற்காகத் தங்கள் இல்லத்திற்கு அழைத்திருந்தார்கள். விருந்தோம்பல் பண்பை அவர்களிடம் நான் பார்த்தேன். திருவள்ளுவர்கூட திருநெல்வேலி மக்களைப் பார்த்துத்தான் விருந்தோம்பல் என்ற அதிகாரத்தை ஆக்கினாரோ என்று எண்ணத் தோன்றியது.                                                                                                             அவர்களுக்கு இரண்டு புதல்வர்கள்.  புதல்வர்கள் இருவரும் எனது அறையிலேயே தூங்கி தங்கள் அன்பைப் பரிமாறிக்கொண்டார்கள். அவர்களது குசினிக்குள்சென்று நானே அலுவா எடுத்துச் சாப்பிடும் அளவிற்கு குடும்ப உறவினராகி விட்டேன்.  திரு பாபா அவர்கள் பார்ப்பதற்கு ஒரு கவர்ச்சி வில்லனின் தோற்றம். ஆனால் விபரம் தெரிந்த, நான் சந்தித்த நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர்.  திருவள்ளுவர் சிலையை அவருடன் சென்று பார்த்ததில் எனக்கு மிக மகிழ்ச்சி.  திருமதி பாபா அவர்கள் தனது பல்கலைக்கழகத்திற்கு என்னை அழைத்துச் சென்று தனது பேராசிரியர்களுடன் உரையாட ஏற்பாடு செய்தது மட்டுமன்றி "ஞானவாணி" என்ற வானொலிக்காகவும் என்னைப் பேட்டிகாண வைத்தார்.  இத்தனைக்கும் நான் அவர்களுக்குச் செய்தது வெறும் "நன்றி" என்ற வார்த்தை மட்டும் தான். எனது பயணத்தின் "கிளைமாக்ச்" க்காக நான் கோவை பயணமாகும் பேரூந்து நிலையம்வரை குடும்பத்துடன் அனைவரும் வந்து குதூகலமாக என்னை அனுப்பிவைத்தனர். இராமர் காட்டிற்குப் போகும்போது அவரை வழியனுப்பி வைத்தவர்களே மிகவும் கலங்கினார்கள் என்ற ஒரு வரியை எங்கேயோ வாசித்த ஞாபகம் அவர்களது முகங்களைப் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்டது. 



வண்டி கோவையை நோக்கிப் புறப்பட்டது. சொந்தக்களைத் தொலைத்த ஒரு அகதிபோல் குளிரூட்டப்பட்ட சொகுசு வண்டிக்குள் இருந்தேன். தொலைதூரத்தில் இருந்து எனக்கு ஓர் தொலைபேசி அழைப்பு வந்தது. "என்னங்க! எங்கு இருக்கிறீர்கள்; எனக்குப்பிடித்த மெட்டிச் சத்தத்திற்கு சொந்தக்காரி அவதான். எல்லாவற்றிற்கும் பதில் கூறினேன். சத்தம்போட்டு எதையும் சொல்ல முடியவில்லை. அப்போது வானத்தைப் பார்த்தேன். முகிலுக்குள் மறைந்திருந்த முழுநிலவு தன் முகத்தை முழுதாகக் காட்டியது. என் மனைவியின் முகம் இந்த நிலவுக்குள் நிழலாக இருந்தது. என் வளர்ச்சிக்காகவே என்றும் என்பின் நிற்பவர்.  பிரிவுத்துயர் ஆற்றமுடியாத முல்லைநிலத்துத் தலைவி போல் தொலைபேசிக்குள் தன் உணர்வுகளைத் தூதாக்கினாள். 

இறுதியாக "என்னங்க! யன்னலுக்குப் பக்கத்தில் இருந்தால் அடிக்கடி திறக்கவேண்டாம்; வைரஸ் பிடித்து விடும்" என்று கூறி தொலைபேசியை முடித்தார்.  நான் புறநாநூற்றில் பதில் சொல்லி என் நெடுநெல்வாடையின் அகநாநூறு ஆகிவிட்டேன்.  வண்டியின் யன்னல் பக்கத்தில் "கரம் சிரம் புரம் நீட்டாதீர்கள்"என்று எழுதப்பட்டிருந்தது. இது டி. ராயேந்தரின் தம்பி அடுக்கு மொழியில் எழுதினாரோ என்று நினைத்துக் கொண்டேன். இதில் புறம் என்பதற்குப் பதிலாக புரம் என்று போட்டிருந்தார்கள். 

ஓட்டுனருக்குப் பின்பக்கத்தில் இரண்டு பெண்கள் இருந்தார்கள். வளைவுகளில் எல்லாம் வண்டியின் அமைதியான ஓட்டத்திற்கு இந்தப் பெண்களைப் பார்த்த சாரதியின் பகுத்தறிவே காரணமாக இருக்கலாம். வண்டிக்குள் ஆடுகளம் என்ற படம் சின்னத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது. வண்டி தரிப்புகளில் நின்று கிளம்பும்போதெல்லாம் படமும் ஒவ்வோருமுறையும் எழுத்தோட்டத்தில்இருந்து ஆரம்பித்தது. பிரயாணிகளில் ஒருவர் பொறுமை இழந்தவராக "என்ன படம் ஓட்டுகிறீர்கள்" என்று கொஞ்சம் கடுப்பாகக் கேட்டார். "அது தொழில் நுட்பக்கோளாறு" என்று ஒரு விமானியின் பாணியில் சாரதி பதில் சொன்னார். பக்கத்தில் இருந்தவருக்கு நான் தொலைபேசி கதைப்பது தொல்லையாக இருந்தது என்பதைத் தன் செய்கைகள் மூலம் எனக்குவிளங்கவைத்தார். மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு. "ஐயா நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள்? உங்களை வரவேற்கக் கோவை காந்திபுர பேரூந்துத் தரிப்பிற்கு காலையில் வருகிறேன். நான் மணிவண்ணன் சாரின் மாணவன்; எனதுபெயர் வைரs" என்று குறிப்பிட்டார். நான் பிரயாணம் செய்த வண்டிக்குள்ளேயே ஒரு நல்ல வைரs தொற்றிக்கொண்டதை உணர்ந்தேன். பேராசிரியர் மணிவண்ணனைச் சந்திக்கப்போகிறேன் என்ற இயமக் கனவுகளுடன் இருந்த என்னை இதமாகவந்து ஒருத்தி அணைத்தாள். வெளிச்சத்தில் தன்னைக் காட்டிக்கொள்ளத் தயங்கிய அந்த நித்திராதேவி காலை 5.30 மணியளவில் என்னைவிட்டுச் சென்றுவிட்டாள். வண்டி காந்திபுரத்தை அடைந்ததும் எல்லோரும் இறங்கினார்கள். எனக்குப் பக்கத்தில் இருந்தவரை ஓட்டுனர் எழுப்பி இறக்கிவிட்டார். சுற்றுமுற்றும் பார்த்தார் சுற்றத்தார் எவரையும் காணவில்லை. tower பிரச்சனையால் தொலைபேசிகதைத்தது விளங்கவில்லை. பலமைல்கள் தள்ளிவந்து இறங்கிவட்டதாக என்னிடம் தெரிவித்தார். எனக்கு சிரிப்பு வந்தது. சிரித்தால் அவர் கடுப்பாகிவிடுவார் என்று அடக்கிவாசித்துவிட்டு நகர்ந்துவிட்டேன். 

என்முன்னால் ஒரு டீ கடை. அதில் ரூபாவுக்கு இரண்டு என்று வாழைப்பழக்குலையில் எழுதியிருந்தார்கள். இங்கு தான் செந்தில் பழம் வாங்கி கவுண்டமணிக்குக் கொடுத்தாரோ என்று நினைத்துவிட்டுத் தேனீர் ஒன்றை அருந்திவிட்டு vairas இன் வருகைக்காகக் காத்திருந்தேன். பல ஆட்டோ ஓட்டுனர்கள் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் செல்வதுபோல் வந்து வந்து பேட்டி எடுத்தார்கள்.

 பல மீட்டர்களுக்கு அப்பால் என்னை வரவேற்க வந்த கவிஞர் vairas என்னைக்கண்டு மகிழ்ச்சிபொங்க புன்முறுவல்பூத்த முகத்தடன் கட்டித்தழுவி வரவேற்றார். கோவையில் முதல் சந்தித்த தமிழர் கவிஞர் vairas அவகள்தான். அமைதியான பேச்சு; ஆழமான கருத்துக்கள்; வட்டமான கண்கள்; கூர்மையான பார்வை. கவிஞர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்களோ என்ற ஒரு கேள்வியுடன் மணிவண்ணன் ஒழுங்கு செய்திருந்த விடுதியை அடைந்தோம். அழகிய உல்லாச விடுதியில் எனக்கென்று ஒரு குளிரூட்டப்பட்ட சொகுசு அறையை ஒழுங்கு செய்திருந்தார்கள். கவிஞர் vairas அவர்கள் மாலைவரை என்னுடன் தங்கியிருந்தார். தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவர்கள் ஆற்றும் தொண்டு என்னை மிகவும் ஆச்சரியப்படவைத்தது. அன்று மாலை மணிவண்ணன்  அவர்கள் என்னைவந்து சந்திப்பதற்கிடையில் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காப்பி; காலை உணவு; மதிய உணவு; உபசரிப்பு; போன்ற விருந்தோம்பல்களில் ஏதாவது குறை இருக்கின்றதா? எல்லாம் தங்கள் மனத்திற்குச் சௌகரியமாக இருக்கின்றதா என்பதைக் கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் வரும்வரை நான் துர்ங்காமலே இருக்கின்றேன். வானொலியில் பக்கத்து அறையில் "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை" என்ற பாடல் பெரிதாகக் கேட்டுக்கொண்டு இருந்தது. (தொடரும்)

கவிஞர் vairas

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS