RSS

முல்லையூரான் - (க)விதை - 17


சாளரம்  திறந்த
சோலை மலர்களைக்
காற்றுக் குழந்தைகள்
பிய்த்து விளையாடின.
மகேசன் முடி தவளும்
தண்மதி பார்ப்பதற்காய்
ஓடிவந்த முகில்கள்
பழந்தமிழர் வரலாறாய்
இனத்துக்குள் அடிபட்டு
வெளிச்சங்கள் போட்டுத்
தூரநின்று அழுதுதழுது
தொலைந்தே போயின.
பந்துகளாய் உருளும்
வெள்ளை முயல்களில்
பட்டாம்பூச்சிச் சவாரிகள்
வானுலக மாளிகையில்
கனவில் பூத்தவளைக் 
காந்தள் மலராளை
நினைவில் சுமந்தவன்.
நிரை காக்கும் நிலத்தில்
மாதுளம்பூ நிறத்தாளின்
வளியிடை நுழையா
முயங்கிய இன்பத்தில்
கனியிடைச் சுவையை
நசித்துப் புசித்தவன்.
முந்தானைக் கடனைக்
கழிக்க நினைத்துக் - குடி
சேறும் இளவேனில்.
மானொத்த நீள்விழியாள்
வசமான இதயத்தில்
இசைவாழும் உள்ளத்தில்
மூச்சு காற்றுக்குள் அவள்
உமிழ்ந்த  செல்ல மொழிகள்
என்றும் எழுதா வேதங்கள்.
துயில் அழகு பார்த்தவன்
துகில் விலகும் எண்ணத்தில்
மயில் கொண்ட அச்சத்தைக்
கார்குழற் பாய்மீது
உறங்கிக் களித்தவன்.
இதழோடு இதழ்வைக்க
இமைமூடும் இல்லத்தாள்
சங்கத்து முல்லைக்கு
இருத்தலே ஒழுக்கம் என்று
இருந்திட்ட இளவரசி
முடங்கல் மடல்கண்டு
உடைந்த தரளத்துப்
பொடி எறிந்த மேனியளாய்
முல்லையூரான் முன்வந்து
இருமரம் தாங்கி நின்றாள். 
........................................
சாளரம் - யன்னல்; மகேசன் - சிவன்; சவாரி - ஓட்டுதல்; நிரை - மந்தைக்கூட்டம்;
வளியிடை நுழையா - காற்றுப் போமுடியாத; முயங்கிய - இறுக்கி அணைத்தல்;
குடி - வீடு; சேறும் - திரும்புதல்; துயில் - தூக்கம்; துகில் - உடை; கார்குழல் - கரியகூந்தல்;
இருத்தல் - ஐவகை ஒழுக்கங்களில் ஒன்று; முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்;
முடங்கல் - கடிதம்; தரளம் - முத்து; பொடி - தூள்; எறிந்த - அப்புதல்;
இருமரம் - ஆல் + அத்தி (ஆலாத்தி)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஐயுறுநிலை


இருள் உமிழ்ந்த இரவில்
அவிழ்ந்த  அல்லிக்குள்
கமழ்ந்தெழும் வாசமாகிப்
பொங்கி எழு  பாலாய்
மாடத்துப் புறாக்களுக்கு
மதனரசம் விஞ்சி நிற்கும்.
போகத்தால் தேகத்தில்
பொருதல் சமர் நடத்திக்
கூடலுக்குத் தீமூட்டி
மெய் எரிக்கும் காமத்தீ!
நீள்வழி சென்ற காளை
மீள்வழி சுணங்கும் காலை;
பூவிதழ்  இதுதான் என்று
பலரிதழ் பட்டுச்சிவந்த
பரத்தையர் அதரம் தன்னை
என்நீத்துக் களிப்பாயோ?
இளமுகிழ் மார்பதனில்
தொய்யிற்படம் பார்த்தவன் நீ;
என்றாங்கு மனமுடைந்து
தென்றலுக்குத் தேள்கொட்டித்
தோளெல்லாம் வலித்திருக்கும்.
சூடிழந்த  கொதிநீராய்
ஆடிப்போய் ஆறி இங்கு
கோதைக்கு ஊடல் ஏறி
பூக்குலைத்துப் பொட்டழித்து
மைதீட்டும் கண்ணுடைந்து
வாடிப்போய்ச் சாய்ந்திருக்கும்.
அத்தாணி மண்டபத்தில்
அத்தானின் மஞ்சத்தில்
கோடிவரம்  நாடியவள்
துணைவரவு காணாமல்
வேர்ப்பலாச் சுழை நிகர்த்த
செம்பருத்திச் சிற்பம் - இங்கு
மரித்து மடிகின்றாள்.
தரை இடை பாய்ந்து
தத்தளிக்கும் மீனாக
இசை இறந்த யாழாய்
நரம்பறுந்து பாழாகித்
தணலிடை குளிப்பதைத்
தடுக்காதே செவிலி என்று
ஈமம் வளர்த்த கிளி;
ஓங்குவரை சென்று
குதிக்கின்ற மனத்தாளாய்க்
குமிறி அழுதிட்டாள்.
.......................................................................................
மதனரசம் - காம உணர்வு; பொருதல் - உறவு; சமர் - போர்;
நீள்வழி - நெடுந்தூரம்; மீள்வழி - திரும்பி வருதல்;
என்நீத்து - என்னைவிட்டுவிட்டு; இளமுகிழ் - அரும்பு
தொய்யில் - மார்பகத்தில் கீறிய படங்கள்;
துணைவரவு - கணவனின் வருகை
செவிலி - வளர்ப்புத்தாய்; ஈமம் - சுடலை நெருப்பு; ஓங்குவரை - மலைஉச்சி

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆண்மைத்தவறு



நியங்களைப் பகற்பொழுதில்
நிழற்படம் பிடித்தவன்
நீழ்துயில் கொள்ளுகின்ற
அயரும் மாலைப்பொழுது.
கானகத்து மஞ்ஞைகள்
கழிநடம் புரிந்தகாலை
கார்பொழில் கனத்த நெய்தல்.
நெறிபடு கூந்தல் கட்டி
எறிவளி கமழும் வேளை
பொன்வண்டு முகம் மோதும்
பகன்றைப்பூப் பரத்தையர்கள்.
கத்தாளைத் தொடைகொண்டு
கருவிளைப்பூ இடை மிளிர
ஆடிப்பாவையில் அழகுபார்த்து
மருள்விழிச் சேலை காட்டி
நடிப்பினில் நாணம் தாங்கி
நாணத்தில் நளினம் ஊற்றி
நளினத்தில் உயிரை வாங்கும்
மெத்தைக்கு வித்தைக்காரர்.
அப்பிய அங்கமெல்லாம்
அந்தரத்தில் தொங்குகின்ற
உப்பிய அழகு பார்த்துக்
குறும்பறை ஆடும்வேளை
சொற்பனத்தில் சுற்றினின்று
தணிகின்ற தணலாகி
நீறாகிப் போகின்றார்.
சாமத்துப் போர்க்களத்தில்
காமத்துத் தீவிரத்தில்
அடிபட்ட தேகங்கள்
நெரிபட்டுச் சுகம் கண்டு
சந்துகளில் சரசம் ஆடி
உயிருக்குள் சிந்துபாடி
விழலுக்கு நீரிறைத்து
விடியும்கரை கமம் செய்வார்.
ஊமைக் காயம் தாங்கி
தேய்புரி பழங்கயிறாய்
அல் வந்து இல் ஏகும்
உழவுநில  மாந்தருக்கு
நித்தம் ஒரு தேன் நிலவு.
.....................................
கார்பொழில் - மழை; மஞ்ஞை - மயில்; நெறிபடு - கறுப்பு; எறிவளி - வீசும் காற்று
ஆடிப்பாவை - முகம் பார்க்கும் கண்ணாடி; சேலை - கண்ணால் ஜாடை காட்டுதல்
உப்பிய - பெரிய; குறும்பறை - ஒருவகைப் பறவை; விழல் - களை; கமம் - தோட்டம்
தேய்புரி பழங்களிறு - திறப்பணக் கயிறு; அல் - இரவு; இல் - வீடு
நெரிதல் - இறுகுதல்; ஏகும் - திரும்பிப் போகுதல்...

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மலை அரசன்


அவிழ்ந்த குறிஞ்சிப் பூக்களை
உமிழ்ந்த விளைநிலம்
பூவியரசி முலை பார்க்க
அதிகாலையில் எழுந்த
சூரிய தாகங்களை விரட்ட
மலை முகடுகளை
மறைத்துச் சிலிர்க்கும்
முகில் சேலைகள்.
கொம்புத் தேன் சுமந்த
புலிப்பலணிந்த வரைமகளிர்.
கொற்றவன் மாடத்தில்
குவிந்திருந்த பூவனத்தை
இதழ்பிடுங்கிச் சுவைபருக
இசைந்திட்ட கள்வர் கூட்டம்.
அரண் சுமந்து அடைத்த செய்தி
கொஞ்சத்தில் தெரிந்து
அவன் நெஞ்சத்திலே
நெரிஞ்சி முள்ளாகி
மறவன் புலத்து மாவீரன்
நாராய அம்புருக்கிச்
செறுவரை நோக்கிச்
சிவந்த கண்ணாளன்.
எயில் உடைத்து ஆங்கு
தன் அக்கினிப் பழத்தைக்
கொண்டவர் தலை கொய்து
களம் நடாத்திக் கைபிடித்த
தேக்குநிலச் சந்தனக் கட்டை.
புருசப் பசிபோக்க
எந்நாளும் பூத்திருக்கும்
இவள் பரிசமேனி.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS