சாளரம் திறந்த
சோலை மலர்களைக்
காற்றுக் குழந்தைகள்
பிய்த்து விளையாடின.
மகேசன் முடி தவளும்
தண்மதி பார்ப்பதற்காய்
ஓடிவந்த முகில்கள்
பழந்தமிழர் வரலாறாய்
இனத்துக்குள் அடிபட்டு
வெளிச்சங்கள் போட்டுத்
தூரநின்று அழுதுதழுது
தொலைந்தே போயின.
பந்துகளாய் உருளும்
வெள்ளை முயல்களில்
பட்டாம்பூச்சிச் சவாரிகள்
வானுலக மாளிகையில்
கனவில் பூத்தவளைக்
காந்தள் மலராளை
நினைவில் சுமந்தவன்.
நிரை காக்கும் நிலத்தில்
மாதுளம்பூ நிறத்தாளின்
வளியிடை நுழையா
முயங்கிய இன்பத்தில்
கனியிடைச் சுவையை
நசித்துப் புசித்தவன்.
முந்தானைக் கடனைக்
கழிக்க நினைத்துக் - குடி
சேறும் இளவேனில்.
மானொத்த நீள்விழியாள்
வசமான இதயத்தில்
இசைவாழும் உள்ளத்தில்
மூச்சு காற்றுக்குள் அவள்
உமிழ்ந்த செல்ல மொழிகள்
என்றும் எழுதா வேதங்கள்.
துயில் அழகு பார்த்தவன்
துகில் விலகும் எண்ணத்தில்
மயில் கொண்ட அச்சத்தைக்
கார்குழற் பாய்மீது
உறங்கிக் களித்தவன்.
இதழோடு இதழ்வைக்க
இமைமூடும் இல்லத்தாள்
சங்கத்து முல்லைக்கு
இருத்தலே ஒழுக்கம் என்று
இருந்திட்ட இளவரசி
முடங்கல் மடல்கண்டு
உடைந்த தரளத்துப்
பொடி எறிந்த மேனியளாய்
முல்லையூரான் முன்வந்து
இருமரம் தாங்கி நின்றாள்.
........................................
சாளரம் - யன்னல்; மகேசன் - சிவன்; சவாரி - ஓட்டுதல்; நிரை - மந்தைக்கூட்டம்;
வளியிடை நுழையா - காற்றுப் போமுடியாத; முயங்கிய - இறுக்கி அணைத்தல்;
குடி - வீடு; சேறும் - திரும்புதல்; துயில் - தூக்கம்; துகில் - உடை; கார்குழல் - கரியகூந்தல்;
இருத்தல் - ஐவகை ஒழுக்கங்களில் ஒன்று; முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்;
முடங்கல் - கடிதம்; தரளம் - முத்து; பொடி - தூள்; எறிந்த - அப்புதல்;
இருமரம் - ஆல் + அத்தி (ஆலாத்தி)
1 Comments:
Supper
Post a Comment