RSS

அதுஇன்று மதியம் சுவிற்சர்லாந்தின் தலைநகரம் BERN  சுறுசுறுப்பாக இயங்கும் நேரம். நகரத்தை இணைக்கும் Tram வண்டிகள் இங்கு சிவப்பு நிறம். தூரத்தில் பார்த்தால் இராட்சத அட்டைகள் ஊர்ந்து வருவதுபோன்ற ஒரு தோற்றம். ஒரு நிமிடத்திற்கு ஒரு Tram இருந்தாலும் மக்கள் ஓடிவந்தே ஏறுகிறார்கள் அவளவு பிசி. இந்தப் போக்குவரத்து மதிய நெரிசலிலும் Police வாகனம் சத்தம்போட்டு நீல வெளிச்சத்துடன்  மற்றைய வாகனங்களை ஓரங்கட்டி முந்திச் செல்கிறது. கூட்டத்தில் நின்ற ஒருவர் இவர்கள் ஏதோ கடமையில் ஓடுகிறார்கள் என்று நினைக்காதையுங்கோ; அவர்களும் மதியச் சாப்பாட்டிற்குத்தான் ஓடுகிறார்கள் என்றார். நானும் யோசித்துப் பார்த்தன். சரிபோலவே இருக்கிறது. ஏனென்றால் மதியவேளையில்தான் நாலாபக்கத்தாலும் அவர்கள் அதிகமாக ஓடுவதைக் கண்டிருக்கிறேன். இந்தப் பிரகண்டமான நேரத்தில்தான் நானும் மதிய உணவுக்காகப் புறப்பட்டேன்.

சாப்பாடுகள் தெருத்தெருவாக இருந்தும் எதைச்சாப்பிடுவது என்ற பிரச்சனை. அதனால்தான் வெள்ளைக்காரன் இன்று என்ன சாப்பிடவேண்டும் என்பதைச் சென்ற வருடமே எழுதிவைத்துவிடுவான். இன்று என்ன செய்யவேண்டும் என்பதை பாத்றூமுக்குள் இருக்கும்போதுதான் பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள் என்று எங்களுக்கு மொழி படிப்பித்த வாத்தியார் 30 வருடங்களுக்கு முதல் சொல்லித்துந்தவர். வெள்ளைக்காரன் சமைக்கும் நேரம் குறைவு. ஆனால் அதே சாப்பாட்டைச் சாப்பிடும் நேரம் அதிகம். நாம் சமைக்கும் நேரம்  அதிகம். அதைச் சாப்பிடும் நேரம் குறைவு. சிலர் சோற்றுக் கவளங்களை வாய்க்குள் எறிந்து எறிந்து சாப்பிடுவதைப் பார்த்து இருக்கிறன். அவளவு பிசி.  

ஒரு உணவு விடுதியில் ஒரு பிற்சாவுடனும் ஒரு காப்பியுடனும் நான் உட்கார்ந்தேன். தூரத்தில் தமிழர் இருவர் சாப்பாட்டிற்காக ஆடர் கொடுத்துவிட்டு அமர்ந்து இருந்தனர். அவர்கள் மெதுவாகக் கதைப்பதாக எண்ணுகிறார்கள் ஆனால் சத்தம் வீதிவரை கேட்கிறது. பல கதைகளையும் கதைத்தார்கள். காதுகொடுத்துக் கேட்டேன். இறுதியில் கர்ணனைப்பற்றித் தொடங்கினார்கள். ஒருவர் உனக்கு கர்ணனைத் தெரியுமா என்று கேட்டார். மற்றவர் அவரைத் தெரியும் அவர் இப்போ கனடாவுக்குப் போய்விட்டார் என்று கூறினார். மற்றவர் கடுப்பானார். நான் கேட்பது பாரதத்தில்வரும் கர்ணனைப்பற்றி என்றார். அவர்கள் கதையில் நான் பொறுக்கி எடுத்தவற்றைக் கீழே தருகிறேன்.

கர்ணனும் அருச்சுனனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒரு மாலை நேரம் கண்ணனுக்குத் தெரியாமல் ஆற்றங்கரைக்குச்  சென்றார்களாம். செல்லும் வழியில் ஒரு குடிசை. குடிசைக்குள் ஒரு தகப்பனும் மகனும் இருந்தார்கள். கர்ணனுக்கு தண்ணீர்த்தாகம் எடுத்ததாம். உடனே இருவரும் அந்தக் குடிசைவீட்டுக்குச் சென்று தாகத்தைப் போக்கிக் கொண்டார்கள். அந்த வீட்டு மகனைக் கர்ணனுக்குப் பிடித்திருந்ததாம். கர்ணன் தகப்பனிடம் மகனைத் தரும்படி கேட்டாராம். தகப்பனும் கொடுத்துவிட்டார். கர்ணன் சொன்னாராம். இவனை உச்சியில் இருந்து பாதியாக வெட்டி இன்று ஒரு பாதியையும் மறுவாரம் ஒரு பாதியையும் எடுத்துக் கொள்வதாக அந்தத் தகப்பனிடம் கூற தகப்பனும் சம்மதித்தாராம். கர்ணன் ஒரு உத்துரவு போட்டார். வெட்டும்போது பிள்ளை அழக்கூடாது என்று. வெட்டத் தொடங்கியாகிவிட்டது. வலப்பாகத்தை இன்று கொண்டு செல்வது என்றும் முடிவாகியது. வெட்டிக்கொண்டு இருக்கும்போது இடப்பாகத்துக் கைவிரல்களால் கண்ணீர் பொலு பொலு வென்று ஓடியதாம். அருச்சுனன் ஏன் இவன் அழுகிறான் என்று தகப்பனைப் பார்த்துக் கேட்டான். அதற்கு தகப்பன் தன்னையும் (அதாவது இடப்பக்க பாதி) இன்றைக்கே அழைத்துப் போகச் சொல்லி அழுகிறது என்றாராம். கதை சொல்லியவர் கடைசியில் மற்றவரைப் பார்த்து எப்படி என் கதை என்றார். மற்றவர் "நீ சின்ன வயதில் படித்த கம்பராமாயணக் கதைகளை எப்படி நினைப்பு வைத்திருக்கிறாய் என்று கேட்டார். எனக்குப் புரக்கடித்தது. வெளியில் வந்துவிட்டேன். நன்றி. காசு கொடுத்துவிட்டுத்தான் வந்தேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS