RSS

அகநானூறு கூறும் தீபாவளித் திருநாள்.
சங்ககாலத்து அகத்திணைகூறும் நூல்களில் ஒன்றுதான் "அகநானூறு"  இலக்கியம் என்பது சமூகத்தைச் சித்தரித்துக் காட்டும் கண்ணாடி போன்றது. அதை மையப்படுத்தியே நான் இந்தக் கட்டுரையை இங்கு பதிவாக்குகின்றேன்.தமிழாகரர் தெ.முருகசாமி
தீப ஆவளி - தீபாவளி. தீபம் - விளக்கு; ஆவளி - வரிசை.

தீபங்களை வரிசையாக வைத்து வழிபடும் விழாதான் தீபாவளி.  ஐப்பசி அமாவாசையையொட்டி கொண்டாடப்படும் இவ்விழா, வடவரின் நாகரிகக் கலப்பால் தமிழர்கள் மேற்கொண்டுவிட்ட விழாவாகும். இதன் அமைப்பைக் கார்த்திகை மாத முழுநிலாவில் கொண்டாடும் கார்த்திகை விளக்கு விழாவாக அகநானூற்றில் நக்கீரர் 141ம் பாடலில் கூறுகிறார். இதனால் கார்த்திகை தீபத் திருநாள்தான் தமிழர் தீபாவளியானாலும் அதை தீபாவளி எனக் கூறுவதில்லை. நாகரிகக் கலப்பான ஒரு காரணமன்றி வேறு சரியான காரணம் தமிழர் மேற்கொண்டுவிட்ட ஐப்பசி தீபாவளிக்குக் கூறமுடியவில்லை.

பொதுவாகத் தீபாவளி என்றாலே இனிப்புப் பலகாரங்களும், புத்தாடையும், புதுமணத் தம்பதியரைத் தலைதீபாவளி என அழைத்துவந்து மகிழ்வதும்தான் இன்றியமையாததாகக் கருதப்படும். இத்தகு நிலைக்கு மேலாக விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்துக் கொண்டாடும் வழக்கம் தமிழ் மக்களிடம் இல்லை. ஆனால், தமிழ் நாட்டை வாழும் இடமாகக் கொண்டுள்ள வடநாட்டு மக்கள் தங்கள் வீடுகள் தோறும் வரிசையாக விளக்குகளை ஏற்றிவைத்துக் கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற வழக்கம் கார்த்திகைத் திங்களில்தான் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்ற உண்மையை அகநானூறு பதிவு செய்துள்ளது.

உலகு தொழில்உலந்து நாஞ்சில் துஞ்சி
மழை கால்நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகதில்! அம்ம,
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இறீஇ
கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து
பாசவல் இடிக்கும்.
வேங்கட வைப்பின் சுரன்இறந் தோரே!

பொருள்தேட வெளியூர் சென்ற கணவன் ஊர் மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடும் கார்த்திகை விளக்கு விழாவின்போது வந்துவிடுவான் என மனைவி மகிழ்ந்து தோழியிடத்துக் கூறுவதாக 141ம் பாடலில் விளக்கேற்றி வழிபடுதற்கான காலச்சூழல் முதலில் நக்கீரரால் கூறப்படுகிறது.
                                                                                                                                                                         உழவுத் தொழில் முடிந்துவிட்டதால் உழும் கருவியான கலப்பை வேலையின்றிக் கிடக்கிறது. உழவுக்கு உதவியாக மேகமும் தக்கவாறு மழைபொழிந்து ஓய்ந்து விட்டதால் ஆகாயம், கருமேகம் சூழாத நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது.  ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் காயும் முழு நிலாவானது இருளை நீக்கி வானில் காணப்படுகிறது.   இந்நாளில் வீடுகள்தோறும் மக்கள் பூமாலைகளைத் தொங்கவிட்டு விளக்குகளை ஏற்றி வைத்துக் கூட்டமாகக் கூடி விழா கொண்டாடுவார்கள்.
                                                                                                                        இக்கார்த்திகை விளக்கு நாளில் புது மணமகன் உண்பதற்காக பசிய அவலாலான இனிப்புப் பொருள் செய்வதற்காக வீட்டிலுள்ள பெண்கள் நெல்லின் கதிர்களைப் பறித்து அவற்றை உரலில் இட்டு உலக்கையால் குத்திப் பக்குவப்படுத்துகிறார்கள்.   அங்ஙனம் குத்தும் உலக்கையின் ஒலியைக் கேட்டுப் பயந்தப் பறவை தானிருந்த வாழை மரத்தை விட்டு வேறொரு பெரிய மரத்தில் தங்கி தன் குஞ்சுப் பறவைகளைக் கூவுகின்றன. இத்தகு மரங்கள் அடர்ந்த இடையாறு என்னும் வளம்மிக்க நகரத்தைப் போன்று பெரிய செல்வ வளத்தைத் தேடி வருவதற்காகத் திருவேங்கட மலையைக் கடந்து சென்ற கணவன், கார்த்திகை விழாவின் போது வந்துவிடுவான் என மனைவி எண்ணிக் கூறுவதாக நக்கீரர் இப்பாடலை அமைத்துள்ளார்.
                                                                                                                                                                                     அப்பாடலில் "மதிநிறைந்து அறுமீன் சோரும் அகல் இருள் நடுநாள்" என்றது, கார்த்திகை மாத முழுநிலா நாளைக் (பெளர்ணமி) குறிப்பதாகும். முருகனைக் கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்ததால் அவர்கள் வரம் வேண்டியபடி வானில் ஆறு விண்மீன்களாயினர் என்பது புராணச் செய்தி.  முருகனோடு தொடர்புடைய கார்த்திகை நாள் ஒவ்வொரு மாதத்தில் வந்தாலும் அது கார்த்திகை மாத முழு நிலவோடு கூடி நிற்கும்போது சிறப்புக்குரியது என்பதால் மேற்படித் தொடர் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும். மேலும் இப்பாடலில் "புதுமணமகனை" என்றது, புது மணமகனை மட்டும் குறித்தாலும் தலைதீபாவளியை மணமகள் வீட்டில்தான் கொண்டாடும் வழக்கம் இன்றும் உள்ளதால் புது மணமக்களைத் தலைதீபாவளிக்கு அழைத்துவரும் செய்தியைக் குறிப்பதாகக் கருதலாம். இதனால் புது மணமக்களுக்குப் புத்தாடை வழங்கப்பட்டதாகவும் கருதலாம்.

இன்னும் இப்பாடலில் புதுமண மகனை "அயினிய" என்றதால் மணமக்கள் உண்ண வேண்டி பால் உலையில் பசுமையான அவலையிட்டு இனிப்புப் பொருள் செய்ய முயற்சித்தக் குறிப்பு கூறப்பட்டுள்ளதால் பொதுவாகத் தீபாவளிக்கு இனிப்பு செய்யும் வழக்கம் அன்றுமுதல் இருந்ததாக அகநானூற்றால் அறிய முடிகிறது. 
                                                                                                                                        எனவே, பழந்தமிழ்க் கார்த்திகை விளக்கு வழக்கம் இக்காலத்தில் ஐப்பசி மாதத்தில் விளக்கை வரிசையாக ஏற்றி வைப்பதைத் தவிர்த்ததாக அமைந்துவிட்டதற்கு வேற்றுப்புல நாகரிகக் கலப்பே காரணமன்றி வேறு காரணம் இல்லை எனலாம்.Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 Comments:

J.P Josephine Baba said...

அறிய தகவல் அடங்கிய பதிவு! மகிழ்ச்சிகள்.

சத்ரியன் said...

நல்லதொரு கட்டுரை.