RSS

கங்கையில் மலர்ந்த கலையன்னை


கங்கையில் மலர்ந்த கலையன்னை  என உலகத்தவர்களால் பாராட்டப்பெறும் ஸ்ரீசாரதா தேவி துதியாக - கலைமகள் வணக்கமாக - சகலகலாவல்லி மாலைஎன்ற பெயரில் பத்துப் பாடல்களை அமைத்துப் பாடியவர் சுவாமி குமரகுருபரர் ஆவார். குமர குருபர முனிவரர் காசியில் கங்கைக் கரையில் நின்று பாடிய சகலகலாவல்லி மாலை என்றும் பதிகமே கங்கையில் மலர்ந்த கலையன்னையாக அம்மன் தரிசன பக்கதர்களுக்கு திருவருளையும் குருவருளையும் வழங்குகிறது. 

காசியில் இறப்பவருக்கு விசுவநாதர் பிரணவ உபதேசம் செய்து சாரூபப் பதவியை வழங்கி அருளுவர் என்பது காசித்தலப் புராணம் கூறும் வரலாறாகும். காசித்தலத்தின் பெருமைகள் பற்றி குமரகுருபரர் கூறும் செய்திகள் வியப்பிற்குரியவை. காசியில் பாவம் செய்தவர்கள் இறந்தாலும் அவர்களுக்கு யமலோகத்தின் தண்டனை இல்லை என்பது ஒரு ஐதீகம்.

தமிழை மட்டும் தாய்மொழியாகக் கொண்டு காசியில் பணிபுரிதல் கடினம் என்பதை உணர்ந்தவராக குமரகுருபர முனிவர் அப்போது வழக்கத்தில் இருந்த ஹிந்துஸ்தானி மொழிப் பயிற்சியும் பெற்றார். பின்னர் டில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரியும் பாதுஷாவின் உதவியும் வேண்டும் என எண்ணினார். பாதுஷாவின் உதவியைக் கொண்டு சைவத்தை வளர்க்க வேண்டும் எனவும் தமிழ் நாட்டிலிருந்து பலரும் காசிக்கு வந்து போக வழிவகை செய்ய வேண்டும் எனவும் தம் உள்ளத்தில் உறுதியான கொள்கை ஒன்றை வைத்திருந்தார். உடனே குமரகுருபரர் உள்ளத்தில் கலைமகளின் தெய்வத்தன்மையும் தனித்தன்மையும் தோற்றம் பெற்றன. குருவருருளாலும் கல்வியறிவாலும் தம்முடைய தவப் பண்பினாலும் கலைமகளை வேண்டி நின்றார். அப்போது அவர் கலைமகளின் மீது பாடிய துதிநூலே சகல கலா வல்லிமாலை ஆகும். 


வெண் தாமரைக்கு அன்றி நின்பதம்
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாதுகொலோ
சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலா வல்லியே.
என்பது முதற்பாடல். சகல கலாவல்லி மாலையின் பத்தாவது பாடலாக.


மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவிற் பணியச்
செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பலகோடி
உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ
சகல கலா வல்லியே.
என்பதை அமைத்துப் பாடினார். சகல கலா வல்லி மாலை நிறைவு பெற்றதும் கலைமகள், கங்கைக்கரையில் நின்ற குமரகுருபரருக்கு மலர்ந்த அன்னையாக நேர்க்காட்சி வழங்கி ஆசி அருளியதுடன் சிங்கம் ஒன்றை அனுப்பினாள். கலைமகளே சிங்க வடிவில் வந்தாள் என்று கூறுபவர்களும் உண்டு.

குமரகுருபர முனிவரை நோக்கி வந்த சிங்கம், அவரை மூன்று முறை வலமாகச் சுற்றி வந்து நின்றது. குமரகுருபர முனிவரர் அச்சிங்கத்தின் மேல் தம் கையிலிருந்த திருநீற்றை (விபூதி)த் திருவைந்தெழுத்தை ஓதிப் பூசியபின், அதன்மேல் ஏறி அமர்ந்தார்.உலகில் நாம் காணும் அரசர் முதலியவர்கள் சிங்க வடிவில் செய்யப் பெற்ற ஆசனத்தில்-சிம்மாசனத்தின் மேல் அமர்ந்திருப்பார்கள். உண்மையான சிங்கத்தின் மேல் ஏறி, டில்லி பாதுஷாவின் அரண்மனைக்குச் சென்றவர் குமரகுருபர முனிவரர் ஒருவரே.உண்மையான சிங்கத்தின் மேல் சைவ சமய முனிவரர் ஒருவர் வருவதைக் கண்ட அரசன் பாதுஷா முதலில் திடுக்கிட்டாலும், வருபவர் தெய்வத்தன்மை வாய்ந்தவர் என்பதை உணர்ந்து, தானமர்ந்திருந்த சிம்மாசனத்திலிருந்து எழுந்து, மரியாதையுடன் குமரகுருபரரை வணங்கி வரவேற்றான். இது அரசர்கள் எல்லா மதங்களையும் அனுசரித்து வளர்த்தார்கள் என்பதற்கு ஒரு உதாரணமாகும். 

தெளிவான ஹிந்துஸ்தானி மொழியில் பேசிய குமரகுருபர முனிவரரின் ஆற்றலைக் கண்டு வியந்தும் மகிழ்ந்தும் நின்ற மன்னன், குமரகுருபர முனிவரரின் விருப்பத்தின்படியே, காசியில் குமரகுருபர முனிவரர் தங்குவதற்கு ஆச்சிரமம் அமைப்பதற்கும் ஏனைய சமூகத் தொண்டுகள் செய்வதற்கும் ஏற்றவகையில் நிலத்தை வழங்கி உதவினான்.

கேதாரகட்டத்தில் மிக நீண்ட காலமாக மறைக்கப்பெற்றிருந்த ஸ்ரீவிசுவலிங்கப் பெருமானை வெளிப்படுத்தி அங்கே கோவில் முதலியவற்றை உண்டாக்கி நித்திய நைமித்திய வழிபாடுகளும் விழாக்களும் குறைவற நடந்தருளுவதற்குரிய ஏற்பாடுகளையும் பிறவற்றையும் ஒழுங்கு பெறத் தம் தவ வலிமையாலும் தக்க சான்றோர்களின் பொருளுதவியாலும் செய்து அமைத்துப் பெருமைப்படுத்தினார். குமரகுருபர முனிவரர் காசியில் தங்கியிருந்த ஆச்சிரமம் குமாரசாமி மடம் என்று பெயர் பெற்றது. 

குமரகுருபர முனிவரர் தாம் தங்கியிருந்த காசி மடத்தில் புராண சாலை என்ற ஒரு பகுதியை உண்டாக்கி, அதில் நாள் தோறும் ஹிந்துஸ்தானி மொழியிலும் தமிழிலும் புராணப் பிரசங்கம் நிகழ்த்தி வந்தார். தென்னகத்திலிருந்து காசிமாநகருக்குச் செல்பவர்களுக்கு உறுதுணையாகும் வகையில் பற்பல வகையான சமுதாய தொண்டுகளையும் செய்துவந்தார்.


குமரகுருபர முனிவரர் கங்கையில் மலர்ந்த கலையன்னையின் திருவருளால் மீண்டும் ஒருமுறை தருமபுரம் வந்து தன்னுடைய ஞானாசிரியரைத் தரிசித்து மீண்டு காசிமாநகருக்கே திரும்பிச் சென்று தவப்பெருஞ் சீலராகத் தம்முடைய துறவற வாழ்க்கையைச் செழுமைப் படுத்தி நின்றதோடு தமிழும் சைவமும் வடக்கேயும் வளர்ந்து செழிக்கும் வகையில் வாழ்வை நடத்தி, ஒரு வைகாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத் திதியையில் சிவபெருமான் திருவடி நிழலிற் கலந்தருளினார்.
காசியில் குமரகுருபர முனிவரர் வாழ்ந்திருந்த காலத்தில் காசித் துண்டி விநாயகர் பதிகமும், காசிக் கலம்பகமும் இயற்றியருளினார். வாழ்க அவர் தொண்டு. வளர்க நம் சைவம். 


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 Comments:

சந்திரகௌரி said...

குமரகுருபரரை அறிந்துள்ளோம். ஆனால் இக்கதை பற்றி இப்போதுதான் அறிந்திருக்கின்றேன். மிக்க நன்றி. திருவடி நிழலில் காலத்தால் என்பது பற்றி கொஞ்சம் அறியத்தருவீர்களா. ஏனென்றால் சமணர்கள் நெருப்பில் சுந்தரமூர்த்தி நாயநாரை எரித்தார்கள் என்றும் அதனை எமது நாயன்மார்கள் திருவடி நிழலில் கலந்ததாக அக்காலத்தில் மறைத்ததாகவும் அறிந்திருக்கின்றேன்.