RSS

சங்கம் சொன்ன சங்கதிகள்.



தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலத்தில் எழுந்த அகத்திணை புறத்திணை கூறும் நூல்களைவிட ஒரு மனிதனது நோய்க்கான குணப்படுத்தும் மருந்துகளையும் வழிமுறைகளையும் அக்காலத்தில் எழுந்த ஏனைய சில நூல்கள் கூறுகின்றன.

மருந்தின் பெயரால் அமைந்த சங்க நூல்கள்;மருந்தின் பயனை உணர்ந்திருந்த சங்க கால இலக்கியப் புலவர்கள், தாங்கள் இயற்றிய நூல்களுக்கு மருந்தின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர். அவ்வாறு அமைந்த நூல்களாகக் காணப்படுபவை திரிகடுகம்' ஏலாதி, சிறுபஞ்சமூலம் ஆகிய மூன்று நூல்களாகும். இந்நூல்கள் மனத்தில் தோன்றுகின்ற மாசுகளை நீக்கி, மக்களை நல்வழிப் படுத்துவதற்காக இயற்றப்பெற்ற அறநூல்களாகும்.

திரிகடுகம்; திரிகடுகம்' என்பது சுக்கு, மிளகு' திப்பிலி என்னும் மூன்று மருந்துகளின் கூட்டுப் பெயராகும். இம்மருந்து மூன்று மருந்துகளைக் கொண்டிருப்பதைப் போல' இந்நூலின் செய்யுள் ஒவ்வொன்றிலும் மூன்று கருத்துக்களைக் கூறி ஓர் அறநெறியை வலியுறுத்திக் கூறுவது போல் அமைந்திருக்கும்.

 சிறுபஞ்சமூலம்; சிறுபஞ்சமூலம்' என்பது கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி' பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகைகளின் வேர்களைக் கொண்ட கூட்டுப் பெயராகும். இந்நூலின் செய்யுள்கள் ஐந்து கருத்துகளைக் கூறி ஒரு நீதியை உரைப்பதாக அமைந்திருக்கின்றது.

ஏலாதி; ஏலாதி' என்பது ஏலம், இலவங்கம்' சிறுநாகப்பூ, மிளகு' திப்பிலி, சுக்கு ஆகிய ஆறு பொருள்களின் கூட்டுப் பெயராகும். இதன் பாடல்கள் ஆறு கருத்துகளைக் கொண்டு ஒரு நெறியை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.
மேற்கண்ட இம்மூன்று கூட்டு மருந்துகளும் சிறப்புடன் போற்றப்படுகின்ற மருந்துகளாக தமிழ் மருத்துவத்தில் இடம் பெறுவதாகும். இம்மருந்துகள் சித்த மருத்துவம்' ஆயுர் வேதம் என்னும் இரண்டு மருத்துவத்திலும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இம்மருந்தின் தோற்றம்' பழந்தமிழர் மருத்துவ முறையைச் சார்ந்ததாகும்

மருந்தின் பெயரால் சங்ககாலப் புலவர்கள்; மருந்து; மருத்துவம் ஆகியவற்றின் பயனையும் சிறப்பினையும் அறிந்த சங்ககாலப் புலவர்கள் பலர் இருந்திருக்கின்றனர். அவர்களுள் நல்லாதனார் (திரிகடுகம்)' காரியாசான் (சிறுபஞ்சமூலம்), கணிமேதாவியார் (ஏலாதி), கபிலர் (குறிஞ்சிப் பாட்டு) ஆகிய நால்வரும் தங்கள் பெயரை மருந்தின் பெயரால் அமைத்துக் கொள்ள வில்லை என்றாலும்' இவர்களின் பாடல்களில் மருத்துவச் செய்திகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், மருந்துப் பொருளின் பெயரால் புலவர்கள் என்பது, அவர்களின் பெயரைக் கொண்டு அறிய முடிகிறது. அவ்வாறு பெயரமைந்த புலவர்கள், கடுகு பெருந்தேவனார் (கடுகு) போந்தைப் பசலையார் (பனை),வெள்ளெருக்கிலையார் (வெள் ளெருக்கு),காவட்டனார் (காவட்டம் புல்),இந்நான்கு பெயரிலும் பொதிந்துள்ள மருந்தின் பெயர்கள் மருத்துவ நூல்களில் காணக் கூடியதாக இருக்கின்றன.

புலவன் என்றால் கவிபாடுதல் என்பது மட்டும் பொருள் அல்ல. ஒரு துறையில் புலமை பெற்றவனையே புலவன் என்று அழைத்தூர்கள். மருத்துவப் புலவர்கள் மருந்தினை அறிந்த புலவர்களைப் போல மருத்துவத்தைத் தொழிலாக கொண்ட புலவர்களும் இருந்திருக்கின்றனர். திருவள்ளுவ மாலை11ஆம் பாடலைப் பாடிய புலவர் ‘மருத்துவன் தாமோதரனார்' என்பதாகும். இவரும், இவரைத் தொடர்ந்து, ‘மருத்துவன் நல்லச் சுதனார்' என்பவர், பரிபாடலின் 6,8,9,10,15,19 ஆகிய ஆறு பாடல் களுக்கும் இசையமைத்த இசையறி புலவராகக் காணப்படுகின்றார்.இவர்கள் இருவரின் பாடல்கள் சங்கப் பாடல் தொகுப்பில் இடம் பெறவில்லை. என்றாலும் ‘மருத்துவன்' என்னும் தொழிற் பெயரை, பெயர் அடையாகக் கொண்டு வழங்கிவரக் காண்கிறோம்.

சங்ககால மருத்துவப் பாடல்கள்; சங்க காலத்தில் இலக்கியப் புலவர்களாலும் மருத்துவப் புலவர்களாலும் இயற்றப் பெற்ற பாடல்களில், இலக்கியப் புலவர்கள் இயற்றிய பாடல்களில் ஒரு சில மட்டும் சங்க இலக்கியம் என்னும் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. சங்க காலப் புலவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நற்றத்தனார்' மது மலர்த்தண்டார்ப் பகுமனார் ஆகிய புலவர்களின் பாடல்கள் சங்கத் தொகுப்பில் காணப் பெறவில்லை. காரணம், சங்கப் பாடல்கள் அகம், புறம் என்னும் இரண்டு பொருட்பகுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பெற்றதாகும். இப்புலவர்களின் பாடல்கள் இவ்விரண்டு பொருட் பகுப்பில் அடங்காமல் மருத்துவப் பொருளை உள்ளடக்கியதாக இருந்தமையால், சங்க நூல் தொகுத்தோரால் கைவிடப்பட்டிருக்கின்றன.
‘தேரையர் யமக வெண்பா' என்னும் மருத்துவ நூலுக்குள் உரைமேற்கோளாக அமைந்த பாடல்கள் பல. அவற்றுள் சில சங்கப் பாடல்கள் எனவும், சங்கப் புலவர்கள் பெயரும் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அந்நூல் உரையாசிரியர் குறிப்பிட்ட சங்கப் பாடல்கள் சங்க நூல்கள் தொகுப்பினுள் காணப்பெறாதவை.

நளிர்சுரத்திற்கு மருந்து; இரசம்' தாளகம் ஆகிய இரண்டும் சீனம், கிரேக்கம், இத்தாலி போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இருப்பினும் அந்நாடுகள் உள்மருந்தாக அவற்றைப் பயன் படுத்துவதில்லை. ஆனால், அவற்றைத் தமிழ் மருத்துவர்கள் பண்டு தொட்டே பயன்படுத்தியுள்ளனர். சங்ககாலப் புலவரான நற்றத்தனார்' தாளகம் நளிர்சுரத்திற்கு மருந்தென்று குறிப்பிடுகின்றார்.

முந்நீர் சிவணிய செந்நீர் யாக்கை;முப்பிணி யானவை வெப்பமா நளிரே
மாறிய நாள்பகல் வீறிய யாமமும்; மாசுறு காய மூசுபு வெவ்வினை
மருந்தனு பானமும் இருந்தையில் தாளகம்; அடுநறா முத்திறம் இடுமுறை இல்செய
மீச்சுரம் ஆகிய மீசுரப் படலிகை; பெருமூல வைக்கெதிர் பூளைக் குவையே. (நற்றத்தனார்)
காற்றிற்கு எதிர் நிற்கவொண்ணாப் பூளைப் பூவைப் போல, மிக்குயர்ந்த நளிர்சுரமும் தாளகத்தின் முன் மறைந்தோடிப் போகிற தாம். நச்சுத் தன்மை உடைய தாளகம்,

சுத்தியினாலும் (Purification) மூலிகைச் சுருக்கினாலும் (Triturah)மருந்தாகிறதென்பர்.இதனால் தாளகம் என்னும் மருந்தின் பயன் சங்க காலத்திற்கும் முன்னரே அறியப் பட்டிருந்தது என்பது தெளிவு.

முப்பிணிகளைப் போக்கும் மருந்து; சங்கப் புலவர் பாடிய ஆற்றுப்படை ஆசிரியப்பா என்னும் பாடல் உரையாசிரியரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அப்பாடல், சக்தி பீசம் என்று கூறப்படுகின்ற கந்தகம், கந்தக பற்பம் என்னும் மருந்தானதால், அது வாதம், பித்தம், ஐயம் என்னும் மூன்று வகை நாடிகளின் குற்றங்களில் உண்டாகக் கூடிய முப்பிணிகளைப் போக்குகின்ற மருந்தாகும் என்னும் கருத்தை உரைப்பதாக அமைந்துள்ளது.

"" சத்தி பீசத் தாவளப் பொடிநிறை; யுத்த மாதி யோரிரு நாற்பால்
வினைமதி யாகா விதிமற் றுளசில; வாருணத் தினைமுதல் வரைவன மத்திமம்
வாடுறு நூன்மைய வாய்க்கின்மே வளிமுத; லாகிய நோய்க் கணமடைக்கலப் படுமுனம்
வேகிய மருத்துவர் வெருக்கொளச் சென்றது; நோய்ப்பகை யாளரோ நொடிந்தன சிதறிப்
பேய்ப்புல னெனவயிர் பெரும்பிணி யாளுநர்; தேவகுலமே யதுபு தெருமரற் பருவர
லாவகுலா லன்றிரி யாழியிற் பெய்துற்; றியங்குபு மாற்றமு மிலரென முன்னரோ.''43
(மருத்துவ ஆற்றுப்படை)

நஞ்சு நோய்க்கும் பெண்ணினச் சேர்க்கையால் வரும் நோய்க்கும் மருந்து.

உணவினாலும் பிறவற்றாலும் உடலுக்குள் செல்கின்ற நஞ்சினால் உண்டாகின்ற நோய்க்கும்' பெண்ணினச் சேர்க்கையினால் தோன்றக் கூடிய உறுப்பு நோய்க்கும் கந்தகத்தினால் செய்யப்படுகின்ற மருந்தின் குறிப்புகள் சங்கச் செய்யுள் என உரையாசிரியரால் மேற்கோளாகக் காட்டப் பெற்ற பாடலொன்றில் காணப்படுகிறது.

"" பன்னிரு வகைபெறு முன்னிய பருவர; லினமிவை முதலென நனவுறு வளிமுத
லாகிய பருவரண் மியவுயிர் நிலை; யேகிய நாபியி லுறுவிட முறப்
பெறுமொரு நலிவரப் பெற்ற தான் மேன்முறை; செறிவுறு மொன்பது தீவினை வகையொரு
பொரியரவு ருவிடப் போக்கு மேன் மீறிய; பெண்போகப் பிணி நண்பயப் பிணியொரு
பன்னிருவகை யெனப் படருறு மிடரென; வந்தடர் தானை மறவரு மிறுதிச் செய்
காலனிற் காந்துபு கனலெனக் கன்னற்; வேலென பற்பல வினையமா விளைத்துழி;
நால்வகை யாணமு மேலணிக் காப்பும்; பவனனைக் கண்டுழிப் பஞ்சினி லிரியவாங்
கெய்திய மீளியை யொய்தினிற் கண்டுழிக்; கவன்ற நெஞ்சினர் கவன்ற வானனமென்
பங்கயங் குவியப் பொங்கொளி கான்று; நெடுமா லுந்திக் கடி ""மலர் பூத்தெனப்
பின்னருங் கவினுறு முன்னிய கங்குலில்"

மருத்துவக்குலம்
பண்டைய காலத் தமிழர்கள் கலையிலும் கல்வியிலும் சிறந் திருந்ததைப் போல மருத்துவத்திலும் சிறந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாக, ஆய், எயினன் என்னும் இரண்டு இனத்தவர்கள் அரசர்களின் படைத்தலைவர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் ‘வைத்திய சிகாமணி' என்று அரசர்களால் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் முன்னோர்கள் கைக்கொண்டு வந்த ‘மருத்துவக் குலத்தின்' குடிப்பெயரே ஆய் (இடையர்), எயினன்(வேடர்)எனப்படுவது. போர்க் கலைகளில் சிறந்து விளங்குகின்ற படைத்தலைவர்கள், போர் வீரர்களுக்கு ஏற்படுகின்ற புண்களுக்கும் நோய்களுக்கும் செய்யும் மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர்களாய் இருந்திருக்கின்றனர். எயினர் குலத்தில் வைத்தியத் தொழிலைப் பரம்பரையாகக் கொண்டிருந்த மருத்துவக் குடியில் பிறந்தவன், பாண்டியன் படைத்தலைவன் ‘மாறன்காரி' என்பது குறிப்பிடத்தக்கது. என்று மு. இராகவையங்கார் குறிப்பிடுகின்றார். ஒரு குலத்தினரே மருத்துவ இனத்தவராக இருந்தனர் என்பதனால், பண்டைய தமிழகத்தில் மருத்துவம் தழைத் தோங்கியிருந்ததாகக் கருதலாம்.

மருத்துவர் குடியிருப்பு
பூம்புகார் நகரத்தில் அமைந்திருந்த வீதிகளில் மருத்துவத் தொழிலுடையோர் ஒரு தெருவில் குடிவாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அத்தகைய மருத்துவக் குடியினர் ‘ஆயுள் வேதர்' என்று குறிப்பிடப் பட்டனர். அவர்கள், மருத்துவத் தொழிலுடன்' மருத்துவ நூலும் இயற்றுவோர் என்னும் குறிப்பு காணப்படுகிறது. இக்குறிப்பினால், மருத்துவத் தொழிலுடையோர் மருத்துவ நூலாசிரியர்களாகவும் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது.

மருத்துவன்
இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மருத்துவம் சார்ந்த மரம்' செடி, கொடிகள் இடம் பெறுவதைச் சிறப்பாகக் கொள்ள முடியாதெனினும், மருந்து தரும் பயன்களினால் மருந்துப்பொருள் இன்னது என அறிந்து' அவற்றைப் போற்றிப் பாதுக்காக்கும் தன்மையையும் பெற்றிருந்தனர் எனும்போது, மருத்துவம் எந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கையோடு இயைந்து வளர்ந்து கொண் டிருந்தது என்பதை அறிய முடிகிறது. தாவரங்களிலிருந்து பெறப்படுகின்ற எண்ணெய்களில் எள்ளின் பயன்பாடு, சங்க காலத்திலிருந்து இன்றுவரை சிறந்த இடத்தைப் பெறுகிறது. (எள்+நெய்=எண்ணெய்) எள்ளின் பயனைக் கருத்திற் கொண்டு எள்ளிற்கும் மருத்துவம் காணப்பட்டது. எள்ளிற்கு வரும் நோய் ‘மகுளி' என்றும், அவ்வாறு நோயுற்ற எள்ளின் சுவை கைப்புச் சுவை கொண்டதாக இருக்கு மென்றும் உரைக்கப்படுகிறது.

மருத்துவன் தருகின்ற மருந்தானது உடலுக்குள் சென்று நோயைப் போக்கி மகிழ்ச்சியைத் தருவது போல' எனது சொற்கள் அவனுடைய மனத்தில் தோன்றிய மாசுகளைப் போக்கும் நன் மருந்தாயின என்னும் கருத்தமைந்த பாடல், பாலைக் கலியில் இடம் பெற்றிருக்கக் காணலாம். இதனால்' மருத்துவன் தருகின்ற மருந்து, துன்பத்தினை நீக்குவது என்பது உணர்த்தப் படுகிறது.

மருத்துவன் ஒழுக்கம்
தனக்கு உற்ற நோயை நீக்குமாறு, மருத்துவனிடம் நோயாளி வேண்டி கேட்டுக் கொண்ட பின்னும் மருத்துவன் நோயாளிக்கு மருந்து அளிக்காவிட்டால் அது கொடுமை. என்று நெய்தற்கலி உரைக் கின்றது.நோயாளிக்கு வந்த நோயறிந்து நோய்க்கு மருந்தூட்டுவதே மருத்துவனின் கடமையும் அறமுமாகும். நோயாளி விரும்பும் பொருள்களை யெல்லாம் தருவது மருத்துவ முறையுமன்று. நோயாற்று கின்ற மருத்துவனைப் போற்றி, ‘அறவோன்' என்று பாராட்டுகின்ற பண்பு மக்களிடையே மிகுந்திருந்தது.

தமிழ் மருத்துவ நெறி
தமிழ் மறையெனப் போற்றப் பெறும் திருக்குறளில் அமைந்துள்ள மருந்து என்னும் அதிகாரம்' தமிழ் மருத்துவ நெறியை வகுத்துரைப் பதாகக் கருதலாம். இந்த அதிகாரத்தில் மருந்து, மருத்துவன்' மருத்துவம், மருத்துவ நூலோர், நோய், நோயாளி' நோய்க்கான காரணம், நோயில்லா நெறி, உணவு நெறி ஆகியன விளக்கப் படுகின்றன.
மருந்து/மருத்துவம்
உற்ற நோயைப் போக்குவதற்குச் செய்யப்படுவது மருத்துவம். அந்நோயைப் போக்குவது மருந்து. மருந்து, மருத்துவத்தின் பகுதி யாகும். மருந்து மட்டும் நோய் தீர்க்கப் பயன்படுவதில்லை. நோயுற் றார்க்கு உற்ற நோய் என்ன வென்று உய்த்துணரும் மருத்துவன் வேண்டும். மருத்துவன் குறிப்பிட்டுரைக்கும் மருந்தை நோயுற் றானுக்கு ஊட்டுகின்ற மருத்துவத் துணைவன் வேண்டும். ஆக மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவன், மருந்து, மருத்துவத் துணைவன் என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது. இதனை மருந்து என்னும் சொல்லால் திருக்குறள் உரைக்கும்.
"" உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து''
உற்றவன்நோயுற்றவன்; தீர்ப்பான்மருத்துவன்; மருந்து மருத்து வனின் கருவியான நோய்தீர்க்கும் மருந்து; உழைச் செல்வான் மருத்துவனுக்கும் நோயாளிக்கும் துணையாயிருந்து மருந்தூட்டுபவன் (இணிட்ணீணிதணஞீஞுணூ) எனப் பொருள் உரைக்கிறது.
மருத்துவன் நோயாளியை நாடி, நோய் வந்ததன் காரணத்தை நாடி' வந்துற்ற நோய் எது என்பதை நாடி, பின்னர் வந்துற்ற நோயைத் தீர்க்கும் மருந்து எது' எவை என்பனவற்றை நாடி, அதன்பின் எவ்வகையில் மருந்தூட்ட வேண்டும் என்பதை நாடிச் செய்ய வேண்டும்.
நோயுற்ற நோயாளியின் அளவு, அதாவது உடல் பருவம்' வலிமை, மனநிலை ஆகியவற்றையும்' நோயின் அளவு, அதாவது தொடக்கம்' இடை முதிர்வு, வன்மை' மென்மை ஆகியவற்றையும், நோயுற்ற காலம், நோய் தொடருங்காலம்' மருத்துவம் பார்க்க வேண்டிய காலம், மருத்துவம் பார்க்கும் காலம் ஆகியவற்றையும் அறிந்து மருத்துவம் செய்பவனே, மருத்துவம் கற்றவனாகக் கருதப்படுவான்என்று மருத்துவனுக்குரிய செயற்பாட்டினை விவரிக்கிறது.
நூலோர்
மூன்று என்னும் எண்ணால் உரைக்கப்படுகின்றவை வளி, அழல், ஐயம் என்னும் மூன்று கூறுகளாகும். இம்மூன்றும் தத்தமக்குரிய அளவின்படி அமையாமல் குறைந்தாலோ' கூடினாலோ உடம்பில் பலவகை நோய்களை உண்டாக்கும். இம்மூன்றும் உடலுக்குக் கேட்டைத் தரும்.
"" மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
நோய்
நோய் உண்டாவதற்குக் காரணம். உடலுக்கு ஒவ்வாத குற்ற முடைய உணவுகளை உண்பதும்' உணவு உண்பதற் காகக் குறிக்கப் பட்டுள்ள காலத்தைக் கருத்திற் கொள்ளாமல் பெருந்தீனி தின்பதுமே யாகும்.
நோயில்லா நெறி
நோயில்லா நெறி என்பது வாழ்வின் பொது நெறி எனக் கொள்ளலாம். இது எல்லா நிலையினருக்கும் எல்லா வயதினருக்கும் பொருந்துமாதலான் பொது நெறியாகக் கருதலாம்.
மருந்து தேவைப்படுவது, நோய் என ஒரு தீமை தோன்றிய பின்னரேயாம். அதனால் நோய் வந்தபின் போக்குவதை விட, வராமல் தடுப்பதே நல்லநெறி எனப்படும்.
"" நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்''
என்னும் குறள் கருத்திற் கொள்ளத்தக்கது.
நோயென்பது வேண்டாம் என்றால், மருந்தென ஒன்றும் வேண்டாம். மருந்து வேண்டாம் என்றால் தாம் உண்ட உணவு செரிமானமடைந்து வெளியே சென்றபின்' உணவு உட்கொள்ளும் பழக்கத்தினை மேற்கொண்டால்' மருந்தென்பது வேண்டாம் எனப்படும்.
உண்ட உணவு செரித்துக் கழிவாக வெளியே சென்றது என்பதையும்' தாம் உண்ண வேண்டிய உணவின் அளவு எவ்வளவு என்பதையும் அறிந்தவனின் உடம்பு நீண்ட நாள்கள் நோயின்றி வாழுமஎன்பது நோயில்லா நெறிமுறையாகக் கொள்ளத்தக்கவை.
உணவு நெறி
நோயில்லா நெறியை உணர்த்துவது உணவு நெறி. அது தினவொழுக்கம், நடைப்பயிற்சி, உறக்கம் போன்றவையாகும். உணவின் நெறிமுறை தவறினால் நோயில்லா நெறி என்பது பிழையாகிப் போகும். ஆகவே' உணவு நெறியை மேற்கொண்டு வாழும் வாழ்க்கையே நோயில்லா வாழ்க்கையாகக் கருதலாம்.
உண்ணும் உணவில் குற்றமுடைய உணவு, நல்ல உணவிலும் உண்போர் உடலுக்கு ஒவ்வாத உணவு என்னும் வகை உணவை நீக்கிவிட்டு' உடலுக்கும் மனத்துக்கும் ஏற்ற உணவை உட்கொண்டால்– நேர்ந்தால்' (நேருமா என்பது வேறு) உடலுக்கு மட்டுமல்ல உயிருக்கும் குற்றம் உண்டாகாது என்பர்..
குற்றமுடைய உணவு என்பது கெட்டுப்போன உணவு என்றும், ஒருவன் உண்ணும் அளவுக்கு மீறி உண்ணப்படுகின்ற உணவையும் குற்ற உணவு என்றும் கொள்ளலாம். இத்தகைய உணவு நோயை உண்டாக்கி உடலுக்குத் துன்பத்தைத் தரும்.
உயிர்க்கு ஊறுவிளைக்கும் உணவு என்பது ஒவ்வாத உணவு ஆகும். ஒவ்வாத உணவாவது' சேரக் கூடாத காய்கறிகளை ஒன்று சேர்த்துச் சமைப்பதால் ஒவ்வாமை தோன்றும். அதாவது உணவு நஞ்சு. அத்தகைய உணவு உயிர்க்கு ஊறு விளைவிக்கும் என்பதைக் குறிப் பிட்டே, ஊறு பாடில்லை உயிர்க்கு என்று உரைக்கப்பட்டது.
உணவு உண்ணத் தொடங்கும் முன், முன்னர் உண்ட உணவு முற்ற செரித்துப் பின் பசி முற்றிய நிலையை அடைந்த பின்பே உணவுண்ண வேண்டும்58. என்று உணவு நெறி வகுக்கப்பட்டுள்ளது.
பல்லாண்டுகளுக்கு முன்பே வாழ்க்கைக்குரிய பக்குவங்களை வாழ்க்கை நெறியாக' மருத்துவ நெறியாக, உணவு நெறி உரைக்கப் பட்டிருப்பது உணர்தற் குரியது.
மருந்தே உணவு, உணவே மருந்து
பண்டைய தமிழிலக்கியங்கள் தமிழர் தம் உணவு முறைகளை எடுத்து விளக்குவதுடன் உணவை உண்பதிலும் உணவைப் பல வகையாகச் சமைத்து உண்பதிலும் முன்னோடியாக விளங்கி' நாகரித்தினாலும் பண்பாட்டினாலும் சிறந்து விளங்கியமையைத் தெரிவிக்கிறது.
உயிர் வாழ வேண்டுமானால் உணவு வேண்டும். உணவு இல்லாமல் உயிர் வாழ்தல் என்பது இயலாதது என்பதை உணர்ந்து'
"" உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்''59
என்று உரைத்தனர்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தன்னிடமிருக்கும் உணவை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து அவர்களையும் வாழ்விக்கச் செய்யும் பண்பாட்டினைக் கொண்டிருந்தார்கள்.
தமிழர்களின் உணவுமுறைகள் நிலத்தின் அடிப்படையில் வெவ்வேறு வகையினவாக இருந்திருக்கின்றன. தொழில் அடிப் படையிலும், பருவத்துக்கு ஏற்றவாறும்' வயதுக்குத் தக்கவாறும் அமைந்து காணப்படுகிறது.
உணவின் அளவு
உணவு உண்பதில் அளவை மேற்கொண்டிருந்தனர். பெருந்தீனி தின்றால் நோயும்' சிறு தீனி தின்றால் வலுவிழந்து நோயும் வரக்கூடும் என்றறிந்து'
“உண்பது நாழி உடுப்பவை இரண்டே"60 என்னும் கொள்கையை வகுத்திருந்தனர். ஒவ்வொருவரும் நாழி என்னும் அளவு உணவு மட்டுமே உண்ண முடியும் அல்லது உண்ண வேண்டும் என்பதும் ஆடை வகையால் இரண்டு ஆடைகள் மேலாடை இடையாடை என உடுத்த வேண்டும் என்பதும் கற்றனர்.
உணவுநெறி உடலைப் பேணிப் பாதுக்காப்பது;வலிமை கொள்ளச் செய்வது; நோயைத் தவிர்ப்பது என்பதால், வாழ்க்கைக்கு உகந்தது. அந்நெறியின் மேன்மையை உயிராகக் கருதிப் பாதுகாத்தனர் என்பதற்குச் சான்றாக,
பசித்திருப்பது நன்மையைத் தரும். உணவு உண்டபின்பு வாயைக் கழுவ வேண்டும். நோயாளிக்கு உணவளித்தால் அது செரியாமையால் துன்பம் தரும்61 என்றெல்லாம் அறிவுறுத்தக் காண்கின்றோம்.
உடலில் தூய்மை
ஒவ்வொருவரும் உடலைத் தூய்மையாக வைத்துக் கொண் டிருந்தாலேயே பாதி அளவு நோயின் தாக்குதலிலிருந்து மீளலாம். உடலில் தூய்மையில்லாமல் நல்ல உணவை உட்கொண்டாலும் நோய் வரக் கூடும்.உணவுண்ணும் முன் நீராடி உணவுண்ண வேண்டும் என்னும் கருத்துடையவர்களாக இருந்தனர்.
உணவுண்ணும் முறை
வாழ்க்கை நியதிகளை உரைப்பதே ‘ஆசாரம்' எனப்பட்டது. அவ்வாறான நியதிகளைத் தொகுத்துரைக்கும் ஆசாரக் கோவை'
‘உணவு உண்ணும் போது கிழக்கு நோக்கி அமர்ந்து உணவுண்ண வேண்டும். நின்று கொண்டோ படுத்துக் கொண்டோ கட்டிலின் மேல் அமர்ந்து கொண்டோ உணவுண்ணக் கூடாது என்கிறது.
உணவு உண்ட பின் நடை
உணவு உண்ட பின்னர் ஒவ்வொருவரும் சிறிது தூரம் நடக்க வேண்டும். அவ்வாறு நடப்பது உண்ட உணவு செரிமானமாவதற்கு உதவும் எனக் கூறுவர். நோயாளி உணவு உண்டபின் சிறிது தூரம் நடக்க வேண்டுமென்று மருத்துவர் அறிவுறுத்துவர். அத்தகைய மருத்துவச் சிந்தனையும் உடல் நலனைப் பேணுகின்ற சிந்தனையும் பண்டைக் காலத் தமிழர்களிடையே மிகுந்து காணப்பட்டிருக்கிறது.
‘உணவு உண்ட பின்னர் நூறடி தூரம் உலவிவிட்டு வர வேண்டு மென்று மருத்துவ நூல் கூறுவதாகவும், அதற்கு ஏற்றவாறு உணவு மண்டபம் நூறடி நீள நடை மண்டபத்துடன் அமைக்கப் பட்டிருப்பதாகவும் சிந்தாமணி உரையாசிரியர் நச்சினார்க்கினியர் உரைக்கக் காணலாம்' .
உண்கலங்கள்
உணவு உண்பதற்காகப் பயன்படுத்தப்படும் உண்கலங்கள் உணவுக்கும் உணவுண்போர் உடலுக்கும் ஏற்றதாக அமைய வேண்டும் என்பது பொது விதி. அத்தகைய பொதுவிதியைக் கருத்திற் கொண்டு உண்கலங்களைப் பயன்படுத்துவதில் கருத்துடையவர்களாக இருந்தனர்.
உணவுண்ணும் உண்கலமாகப் பொன், வெள்ளி' வாழை இலை, தேக்கிலை' தாமரை இலை முதலியன பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.
"" செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும்''
"" குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்கென''
வாழை இலையில் உணவு உண்டது தெரிகிறது. பொன், வெள்ளி, வாழை இலை' தேக்கிலை, தாமரை முதலியவற்றில் உணவுண்பது உடல் நலத்தைத் தரும் என்பது மருத்துவ நூலாரின் கருத்தாக இருக்கிறது.
உணவே மருந்து
தமிழ் மருத்துவ நூலான பதார்த்த குண சிந்தாமணி, தேரையர் வெண்பா போன்ற நூல்கள், ஒவ்வொரு பொருளிலும் அடங்கியுள்ள மருத்துவக் குணங்களை எடுத்துரைக்கின்றன. மரங்களிலிருந்து கிடைக்கின்ற பூ' காய், கனிகள்; செடி, கொடிகளிலிருந்து கிடைக்கின்ற பூ, காய் கனிகள்; குறுஞ்செடிகள் எனப்படும் மூலிகை வகைக் கீரைகள்; பதப்படுத்தி வைக்கப்படுகின்ற ஊறுகாய்' வற்றல் போன்றவை, விலங்கு இனமான பசு' எருமை, ஆடு' போன்றவைகளிடமிருந்து பெறப்படுகின்ற பாலிலிருந்து தயாரிக்கப்படுகின்ற தயிர், மோர்' வெண்ணெய், நெய் போன்றவை; சேகரிக்கப்படும் பொருள்களான மலைத்தேன்' கொசுத் தேன், கொம்புத் தேன்' குறிஞ்சித் தேன் ஆகியவை; விளைவிக்கப்படுகின்ற பொருள்களான நவதானியங்கள்' பருப்பு வகைகள்;தயாரிக்கும் பொருளான எண்ணெய் வகைகள்;இறைச்சி வகைகளான மாடு' ஆடு, பன்றி' உடும்பு, கோழி' நாரை, உள்ளான்' கொக்கு, காடை' மீன், கருவாடு போன்றவை; நீர் வகையான ஆறு, குளம், கிணறு' ஊற்று, சுனை' அருவிநீர் போன்றவை; நில வகையான குறிஞ்சி, முல்லை, மருதம்' நெய்தல்;ஆடை வகையான பருத்தி' தோல், ஆட்டு மயிர்' எலி மயிர், பட்டு' இலை , தழை ஆகியவை; வண்ண வகைகளான கருப்பு, வெள்ளை, மஞ்சள்' சிவப்பு, ஊதா' நீலம், பச்சை' ஆரஞ்சு, போன்றவை: வீடுகளின் வகை' பாய்வகை, படுக்கை வகை' இருக்கை வகை, பாத்திரங்களின் வகை போன்ற வகையினப் பொருள்கள் மருத்துவக் குணங்கள் கொண்டவை என்றும்' அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோயை நீக்கும் தன்மை கொண்டிருப்பதாகவும் கூறுகின்றன.
மேற்கண்ட பொருள்களின் மருத்துவக் குணங்களை அறிந்தும் அறியாமலும்' உண்ணவும் உடுக்கவும் இருக்கவும் பயன்படுத்தவும் தொடங்கினர்.
மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற வாழ்விடங்களாகத் தேர்ந் தெடுத்த பகுதிகளில் அல்லது நிலங்களிலிருந்து அந்தந்தப் பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு மருந்தாக அமைவது இயற்கை.
நானிலமும் நோய்களும்
நிலங்கள் நான்கு என்பது இலக்கிய மரபு. நிலத்தின் அடிப்படைக் கேற்ப உண்டாகும் நோய்களும் வேறுபடும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன. குறிஞ்சி நிலமான மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உண்டாகும் நோய்களும், நெய்தல் நிலமான கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உண்டாகும் நோய்களும் வேறு வேறாகக் காணப்படுகின்றன. அதுபோலவே பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு உண்டாகும் நோய்களும் வேறு வேறாக இருக்குமென்று குறிப்பிடப் படுகின்றன. அந்தந்த நிலங்களில் வாழும் மக்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு' அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கின்ற மருத்துவத் தாவரங்களே மருந்தாகும் என்பது மருத்துவ நூலோர் கண்ட உண்மையாகும்.
இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை இயற்றத் தெரிந்த தமிழ் மக்கள், வாழும் இயல்பினால் உண்டாகும் நோய்க்கு மருந்தாக, வாழும் பகுதிகளிலுள்ள தாவரங்களிலிருந்தே கண்டறிந்திருந்தனர் என்பதைத் தமிழ் மருத்துவ முறைகளிலிருந்து அறிய முடிகிறது.
எனவே' உணவே மருந்து என்பதற்கும், மருந்தே உணவு என்பதற்கும் பண்டைக் காலத் தமிழர்களின் வாழ்வையும்' தமிழ் மருத்துவத்தின் அடிப்படையையும் சான்றாகக் கூறலாம்.
உயிர் மருந்து
மருந்தாக அமையும் உணவே உடலுக்கு வலிமையைக் கொடுக்கும்; உடலின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும்; உடலின் உறுப்புகளுக்குப் பாதுகாப்பாக அமையும்; உடலை இயக்கும் ஆற்றலைக் கொடுக்கும்; உடல் நோயை நீக்குவதுடன் நோயற்று வாழ வகைப்படுத்தும் என்பவை அறிந்தே'
"" உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்''
என்ற புறநானூற்றுப் புலவன் புலப்படுத்துவதைக் காணலாம்.
மருந்தே உணவு
சங்க காலத்தமிழ் மக்கள் தங்கள் உணவு வகைகளாக மேற் கொண்டிருந்தவற்றை சங்க இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அவர்கள் உண்ட உணவுகள் நிலத்தின் அடிப்படையிலும்' தொழிலின் அடிப்படையிலும், வளத்தின் அடிப்படையிலும் அமைந்திருந்தன. அவ்வாறு அமைந்த உணவுகள் அவர்களின் உடலைப் பேணுகின்ற குணங்களைக் கொண்டிருந்தன.
மிளகு
மிளகு-அது தமிழ் நிலத்தின் மருந்து எனல் பொருந்தும். கடல் கடந்து சென்றும் தமிழ் நிலத்துப் பெருமையைக் கிரேக்க நாட்டிலும் நிலை நிறுத்திய பெருமை மிளகுக்கு உண்டு.
‘பகைவன் வீட்டிற்குச் சென்றாலும் பத்து மிளகொடு போ' என்பது பழமொழி. பகைவன் வீட்டில் நஞ்சு தரப்பட்டாலும் அது' கொண்டு செல்லும் பத்து மிளகினாலேயே குணமாகிவிடும் என்பதை உணர்த்தும். அவ்வாறான மிளகு, மருத்துவத்தின் மூலப்பொருளாக அமைவதோடு உணவாகவும் அமையும்.
"" கருங்கொடி மிளகின் காய்த்துணர் பசுங்கறி''
என்று மிளகின் கொடி கருமையாகவும் பசுங்காயாகவும் கொத்தாகவும் காணப்படுவதை உணவாக்கினர். தண்டிலும் வேரிலும் உணவைச் சேகரிக்கும் கிழங்கு வகையான இஞ்சி' மஞ்சள் உணவாகி மருந்தாகிறது.
"" இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்''
என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.
உப்பு
உப்பு எல்லா வளர்ச்சிக்கும் முதற்காரணமாய் இருக்கும். செந்நீர்' எலும்பு, வலிமை போன்றவற்றைத் தரும். பருத்தல் என்னும் பொருளில் உப்புதல் என்னுஞ் சொல்லில் உப்பு எனப் பெயர் பெற்றது என்பர். நெல்லின் அளவுக்கே உப்பும் விற்கப்பட்டது என்பதனால்' உப்பு எவ்வளவு உயர்ந்த பொருளாக மதிக்கப்பட்டது என்பது விளங்கும்.
"" நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரிவிலை மாறு கூறலின் மனைய''
என்று' பண்டமாற்றாக உப்பு விற்கப் பட்டதை அகநானூறு குறிக்கும்.
உப்பின் அளவு, இரத்தத்தின் வேகத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்கிறது. நோயாளர்கள் உப்பைக் கட்டுப் படுத்தினால் நோயின் வேகம் குறையும் என்கிறது, மருத்துவம்.
இதனை'
"" உப்பு அமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்''71
என்றதனால்' காதலர்களிடையே தோன்றும் பொய்க் கோபமும்' உப்பும் அளவாக இருக்க வேண்டும் என்றும்' இவ்விரண்டும் அதிகரித்தால் காதலும் உணவும் கெடும் என்னும் கருத்தில் எடுத்துக் காட்டாக அமைந்து, உப்பின் பயன் உணர்த்தப்பட்டது.
புளி
புளி' தனக்குரிய சுவையெனும் குணத்தின் பெயரையே கொண்டிருக்கிறது. புளிப்பின் சுவையை மாற்றவல்லது காரமும் கரிப்பும். கரிப்பு என்னும் கார்ப்புச் சுவைக் குறியது உப்பு. புளிப்பும், கார்ப்பும் சமையலுக்குச் சுவையூட்டுவது. புளி' உப்பு ஆகிய இரண்டும் சித்த மருந்தில் சிறப்பாகக் கருதப் பெறும் பாகங்களாகும். வைத்தியம், வாதம்' யோகம் ஆகிய மூன்றும் இவற்றைக் குறிப்பிடும்.
உப்பையும் புளியையும் அறிந்தவனே ஞானி என்றும், சித்த னென்றும், வைத்தியனென்றும் கூறப்படுகிறது. இவற்றின் சிறப்பினை உணர்ந்தே சங்கத் தமிழ்மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.
"" படும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர் போல"
என்னும் குறுந்தொகை, சூல் கொண்ட மகளிர் தங்களுக்கு நேரும் குமட்டல் தீர புளியைச் சுவைத்ததாகத் தெரிவிக்கிறது. புளி' உணவுப் பொருளாகப் பல நிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"" வெண்புடையக் கொண்ட தூய்த்தலைப் பழவின்
இன்புளிக் கலந்து மாமோ ராகப்''
பயன்பட்டுள்ளது.
வேளைக் கீரையை ஏழ்மையின் காரணத்தால், புசிக்க உணவின்றி வறுமையில் வாடியோர் உண்டதாகக் குறிப்பர். வேளைக்கீரை' புளிப்புச் சுவை கொண்டது. வறுமையுற்றவர்க்கு ஏற்படுகின்ற தூக்கக் குறைவு, மலச்சிக்கல்' சோர்வு ஆகியவற்றிலிருந்து மீள வேளைக்கீரை பயன்பட்டது.
"" வேளை வெந்தை வல்சியாக.
என்று புறநானூறு குறிப்பிடும் வேளைக்கீரையால் புளிப்புச் சுவையையும்'
"" எயிற்றியர் அட்ட இன்புளி வெண்சோறு''75
என்னும் சிறுபாணாற்றுப்படை, சோறே புளிப்புச் சுவையாகப் படைத்தளிக்கப் படுவதையும் குறிப்பிடுகிறது. (தொடரும்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 Comments:

kowsy said...

அருமையான பல தகவல்கள் தந்திருக்கின்றீர்கள். அனைத்தும் படித்திர்ந்தும் கையில் குறிப்பு அல்லது நூல்கள் இல்லாவிட்டால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்போல் ஆகிவிடும். நாம் உணராத காலத்தில் பயன்படுத்தப் பட்டன . இப்போது அவற்றின் அருமை புரிகின்றது . எனது அம்மம்மா இவ்வைத்தியத்தில் சிறந்தவர். ஆனால் இவை பற்றிக் கற்க நினைக்கவில்லை . இப்போது தேவைப் படுகின்றது. உங்கள் ப்ளாக் இருக்கட்டும் அதற்குள் பிரவேசிக்க எமக்கு உரிமை இருக்கிறது . சிறப்பான பதிவு. தொடருங்கள்