RSS

சித்தம் எல்லாம் எமக்கு சிவமயமே


, 2012 at 6:43am
புலமை பெற்றவன் புலவன் என்பதுபோல் சித்துக்களை உடையவன் சித்தன் எனப்புடுகிறான். வள்ளுவரது கூற்றுப்படி நிறைநிலை மாந்தர்கள் என்பவர்கள் யார் என்ற கேள்விக்கு விடைகாணுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். சொல்லப்போனால், மனிதனாகப் பிறந்து மானிடவாழ்வில் சித்தத்தை அடக்கித் தாங்களும் சிவமாய், இறையாய் மாறும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள். இவர்களையே நாம் சித்தர்கள் என்று அழைக்கின்றோம். 

நமது அறிவிற்கு எட்டிய 18 பேர் மட்டும் சித்தர்கள் என்று கூறிவிடமுடியாது. பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் இறைவனது நிலையில் இருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயல்வது புத்திசாலித்துனம் அல்லஎன்பது என் கருத்து. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.சித்தர்கள் பார்ஐவபட்டால் பல சித்துக்கள் மானிடர்களுக்கு வந்துசேரும் என்பது ஒரு ஐதிகம்.

சித்தர்களை எதற்காகத் தேடுகிறோம் என்பதைப் பொறுத்தே அவர்களது பார்வைகள் ஆத்மாக்களில் வியாபிக்க ஏதுவாகிறது. லௌகீக சுகங்களுக்காகவா, அல்லது ஆன்ம அனுபூதி பெறவா என்பதைப் பொறுத்து அது சுயநலமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். ஆனாலும் சங்கரரது அத்வைதத் தத்துவத்தின் படி அனைத்தும் அகத்துள்ளே அமைந்திருப்பதால், அதை வெளியே தேடுவதில் பயனில்லை என்பது ஒரு கருத்து. அதாவது இறைவனை வெளியே தேடுதல் ஆன்மவிடுதலையைத் தராது என்பது பொருள்.

இதைத் தான் பகவான் ரமணர், “நீ யார் என்பதை உன்னுள் பார். அதை அறிந்தால் மற்றவையெல்லாம் தானாய் விளங்கும்” என்கிறார். சொல்லப் போனால் “நாம் யார்” என்பதை அறிந்தால் அறிய வேண்டிய வேறு விஷயங்களே எதுவும் இல்லை என்பதே ரமணர் கருத்து. அதுவே ஆத்மா அனுபூதி – தன்னை உணர்வதன் மூலம் இறை மெஞ்ஞானத்தை உணர்தல் – “அகம் பிரம்மாஸ்ஸ்மி” தத்துவம். அதை முழுமையாக உணர்ந்தால் அறிய வேண்டியது எதுவும் இல்லை. யாரையும் தேட வேண்டியதும் இல்லை. ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு ஜென்மத்திலும்  நடக்கலாம். அல்லது பல யுகங்களும் ஆகலாம். அது, ஆன்மாவின் பக்குவத்தைப் பொறுத்து வேறுபடும். 

உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் ஆன்ம உயர்வுக்கும், சமுதூய நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான திறமையும் பொடுப்பனையும் , நல்வினையும் நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம். 

சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.

மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம். சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…

 தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; 
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்; 
தன்னை அறியும் அறிவை அறிந்தபின் 
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.
அகத்தியரும்.. மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே!என்கிறார்.

ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்? இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே!

சித்தரின் பெயர் - பிறந்த மாதம் - நட்சத்திரம் - வாழ்நாள் - சமாதியடைந்த இடம்.
 
1- திருமூலர் - புரட்டாதி – அவிட்டம் - 3000 வருடம் 13 நாட்கள் – சிதம்பரம்.
 2- இராமதேவர்– மாசி – பூரம் - 700 வருடம் 06 நாட்கள் – அழகர்மலை.
 3- அகத்தியர் – மார்கழி – ஆயில்யம் - 4யுகம் 48 நாட்கள் - திருவனந்தபுரம்.
 4- கொங்கணர் – சித்திரை – உத்திராடம் - 800 வருடம் 16 நாட்கள் – திருப்பதி.
 5- கமலமுனி – வைகாசி – பூசம் - 4000 வருடம் 48 நாட்கள் திருவாரூர்.
 6- சட்டமுனி – ஆவணி - மிருகசீரிடம் - 800 வருடம் 14 நாட்கள் – திருவரங்கம்.
 7- கருவூரார் – சித்திரை – அஸ்தம் - 300 வருடம் 42 நாட்கள் – கருவூர்(கரூர்).
 8- சுந்தரானந்தர் – ஆவணி – ரேவதி - 800 வருடம் 28 நாட்கள் – மதுரை.
 9- வான்மீகர் – புரட்டாதி – அனுசம் - 700 வருடம் 32 நாட்கள் – எட்டுக்குடி.
 10- நந்திதேவர் –வைகாசி – விசாகம் - 700 வருடம் 03 நாட்கள் – காசி.
 11- பாம்பாட்டி சித்தர் – கார்த்திகை – மிருகசீரிடம் - 123 வருடம் 14 நாட்கள் – சங்கரன்கோவில். 
 12- போகர் – வைகாசி – பரணி - 300 வருடம் 18 நாட்கள் – பழனி.
 13- மச்சமுனி – ஆடி – ரோகிணி - 300 வருடம் 62 நாட்கள் – திருப்பரங்குன்றம்.
 14- பதஞ்சலி – பங்குனி – மூலம் - 5யுகம் 7நாட்கள் - இராமேசுவரம்.
 15- தன்வந்திரி – ஐப்பசி – புனர்பூசம் - 800 வருடம் 32 நாட்கள் – வைத்தீச்வரன்கோவில்.
 16- கோரக்கர் – கார்த்திகை- ஆயில்யம் - 880 வருடம் 11 நாட்கள் – பேரூர்.
 17- குதம்பை சித்தர் – ஆடி – விசாகம் - 1800 வருடம் 16 நாட்கள் – மாயவரம்.
 18- இடைக்காடர் – புரட்டாதி – திருவாதிரை - 600 வருடம் 18 நாட்கள் – திருவண்ணாமலை.

அட்டமா சித்திகள்

1- அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல். 
 2- மகிமா - மலையைப் போல் பெரிதாதல். 
 3- இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல். 
 4- கரிமா - மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல். 
 5- பிராத்தி - மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல்.
 6- பிராகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல். 
 7- வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல். 
 8- ஈசத்துவம்(இறைத்துவம்) - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.


இறந்தவனை எழுப்புதல்
திருநாவுக்கரசர், பாம்பு தீண்டி இறந்தவரை எழுப்பியதாகக் கூறப்படும். ‘நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்மே’ என்ற பாடல் சான்றாக அமையும். அவ்வகைச் சித்தொன்றும் சித்தர்கள் ஆடிய சித்தில் காணப்படுகிறது.
“காரப்பா அரவினுட நஞ்சுப் பித்துங்; கருவாக மத்தித்து ரவியில் வைத்து
தீரப்பா ரெண்டு பத்து நாளைக் குள்ளே; சிவசிவாஎன் சொல்வேன் கருவாய் நிற்கும்
ஆரப்பா அறிவார்கள் ஐங்கோ லத்தில்; அழுத்திமிக மத்திக்க மையாய்ப் போகும்

என்னும் மையைப் பாம்பு கடித்து இறந்தவர் கண்ணில் தீட்டி தலையில் ஒரு தட்டு தட்ட விஷம் இறங்கி எழுந்து நிற்பார் என்பதிலிருந்து, சித்துகளோடு தொடர்புடைய நிகழ்ச்சியே திருநாவுக்கரசர் செய்தது எனத் தெரிகிறது. மேலும் திருநாவுக்கரசரைக் கல்லைக் கட்டி கடலில் வீசியதும் ஒருவகைச் சித்துவினால்தான் தண்ணீரில் மூச்சடக்கியிருந்து வெளியே வந்தார் எனக் கருதலாம்.

திருவிளையாடற் புராணங் கூறும் நரிபரியானதும் பரி நரியானதும் சிவபெருமானின் திருவிளையாடலாகக் காட்டப் பெறும். அதுவும் ஒரு வகைச் சித்து எனக் கூறப்படுவதைக் காணலாம்.

“வாங்காமல் நரிபரியாஞ் சித்து சொல்வேன்; வணக்கமுடன் வாங்கினதோர் தைலந் தன்னை
தீங்கில்லாப் புழுகொடு சவ்வாத சேர்ந்து;சிவசிவா மத்தித்து ரவிக்கண் ணாடி; 
பாங்காக பரி நரியாய்ப் பாரு பாரு; பறக்கிறதோர் குதிரையைப் போல் கண்ணில் காணும்

பாரதத்தில் சூரியனைக் கிருஷ்ணன் மறைத்ததும், இராமாயணத்தில் ஜானகி அக்கினிப் பிரவேசம் செய்ததும், அனுமன் சஞ்சீவி மலையைக் கையில் சுமந்து வருவதும் சித்தர்கள் கூறும் சித்துகளின் வடிவங்களாகும். புராணங்களின் பாத்திரங்களை உயர்த்திக் காட்ட வேண்டுமென்பதற்காகக் காட்டப்பட்ட காட்சிகளாகக் கொள்வதில் தவறில்லை. 

சித்தர்கள் வழி வாழ விரும்புபவர்களுக்கு இது எனது ஒரு சிறு துரும்பே தவிர துடுப்பு அல்ல. நன்றி வாசகர்களே.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: