RSS

மனக்கணக்கு



அவன் ஒரு பாவப்பட்ட யென்மம். அவன் மட்டுமல்ல அவனைப்போன்ற ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அந்நிய தேசத்தில் மனைவி பிள்ளைகளை வசதியாக வாழவைப்பதற்காக இரும்புத் தொழிற்சாலைகளிலும்; கட்டிட வேலை நிறுவனத்திலும்; பாரிய கைத்தோழில் பேட்டைகளிலும் இரத்தத்தைப் பிழிந்து உழைக்கின்றார்கள். -20 பாகை குளிரிலும் ஒரு நிமிடம் கூடப் பிந்தாமல் வேலைக்குச் செல்ல வேண்டும். வேலை தொடங்கும் நேரம் காலை 7 மணி என்றால் 7 மணிக்கு முதலே நமது வரவுக் card  ஐ அடித்துவிடவேண்டும். 7 மணி ஒரு நிமிடத்திற்கு அடித்தால் card இல் 7.15 க்கு வேலை தொடங்கியதாகவே பதிவாகும். அந்தப் பிந்திய 15 நிமிடங்களுக்கும் சம்பளம் வழங்கப்படமாட்டாது. இப்படி 4 தொழிலாளர்கள் பிந்திவந்தால் ஒருமணித்தியாலத்திற்கான உழைப்பு கம்புனிக்கு வருமானம் ஆகிறது.சுருக்கமாகச் சொன்னால் ஒருகாலத்தில் வெள்ளைக்காரன் நமது நாட்டுக்கு வந்து எங்களைச் சுரண்டி வாழ்ந்தான். இப்போ நாங்கள் அவர்கள் நாட்டுக்குவந்து நாமாக அவர்களைச் சுரண்டவிட்டு வாழ்ந்து காலத்தை ஓட்டுகிறோம். ஐரோப்பிய நாடுகளில் சிரிப்பைப் பலவழிகளிலும் தொலைத்த தமிழர்களின் வேதனைகள் சொல்லில் அடங்காது. வெளியில்தான் வேதனை என்றால் சிலருக்கு வீட்டிலும் நரகவேதனைகளும் உண்டு.

அவனுக்கு காலை 7 மணியில் இருந்து மாலை 4 மணிவரை வேலை. எழும்பும்போது அலார்ம் அடிக்கும் கடிகாரத்தில் எரிச்சல். தானாகக் காப்பிவைத்துக் குடிக்கும்போது மனைவியில் எரிச்சல். வேகமாகக் கிளம்பும்போது முதலாளியில் எரிச்சல். மொத்தத்தில் இது ஒரு நரகம். சொர்க்கமும் பூமியில்தான் இருக்கிறது என்பதை இறக்கும் வரை உணரமுடியாத நிலை. அவனுக்கு 4 மணிக்கு வேலை முடிகிறது. வேலை நேரத்தில் கைத்தொலைபேசிகளை ஓவ் பண்ணிவைக்கவேண்டும் என்பது அவனது கம்பனியின் கட்டுப்பாடு. வேலை முடிந்து ஒரு காப்பியைக் குடித்துவிட்டு கைத்தொலைபேசியை ஓண் பண்ணினான் அவன். வீட்டில் இருந்து அவனது மனைவி 10 நிமிடத்திற்கிடையில் 23 தரம் கால்பண்ணியிருந்தாள். அவசரமாகத் தனது காரை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.
திருப்பி எடுப்பதற்கிடையில் மறுபடியும் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. "நான்தான் கதைக்கிறன். எப்ப வேலை முடிந்தது. ஏன் உடனே தெலைபேசியைப் போடவில்லை. 108 தரம் எடுத்து களைத்து சீ என்று போய்விட்டது. நான் தம்பியின் கலியாணத்திற்கு ஒரு சட்டை தைப்பிக்க தையல்காரவீட்டுக்குப் போகவேண்டும். (தையல் காரர் ஒரு ஆண். நன்றாக உடைகள் தைப்பார். அமத்தி அமத்தி அளவு எடுப்பதால் சிலருக்கு பிளவுசுகள் இறுக்கமாகவும் வந்துவிடும்.அதனால் அதிகமான பெண்கள் அளவு சட்டைகளைக் கொண்டு செல்வார்கள்) 5 மணிக்கு தையல்காரர் வேலைக்குப் போய்விடுவாராம். வாற வழியில இரவு மேசையில் எழுதிவைத்த சாமான்களையும் வாங்கி வாருங்க. இரவுக்குச் சமையலுக்கு ஒன்றும் இல்லை. மத்தியானம் ஒன்றும் சமைக்கவில்லை. நான் சூப்பு சூடாக்கிக் குடித்தனான். எனக்கு கொஞ்சம் உடமபு சரியில்லை. இரவு சாப்பாட்டிற்கு தம்பி வீட்ட வாறன் என்றவன்.(தம்பியையும் தனது மனைவியையும் ஒன்றாக அவன்தான் கூப்பிட்டவன்) அவனுக்கு எங்கேயாவது இறால் இருந்தால் பார்த்து வாங்குங்க. நாளைக்கு அம்மாவுடன் கதைக்கவேண்டும். ஒரு மலிவான தொலைபேசி அட்டையும் வேணும். காசு 1000 ரூபா கைமாத்துக் கேட்டவன் அதையும் வங்கியில் எடுத்து வாருங்க. பியரை கியரை; போத்தில கீத்தில வேண்டீராதேங்க. சொல்வதெல்லாம் விளங்குதா?" என்று தொலைபேசியை வைத்தாள். அவனுக்கு தலை சுற்றியது. வேலை முடிந்து நடைப்பிணமாக வெளியேறியவனுக்கு ஒருசிகரட் பத்தவேண்டும்போல் இருந்தது. காருக்க கீருக்க சிகரட் மணத்தால் நான் ரைக்சியிலதான் போகவேண்டிவரும் என்று அன்றொருநாள் தன் மனைவி சொன்னது நினைவு வந்தவனாக வெளியில் நின்று பத்தினான்.

மறுபடியும் தொலைபேசி. "எங்க நிக்கிறீங்க; இன்னும் 45 நிமிடங்கள்தான் இருக்கிறது. நான் ஆயத்தமாகிறன். இடையில தொலைபேசியை எடுக்காதீங்க" குளித்து றெடி ஆகவேணும் என்றாள். இவளவு சாமான்களையும் பார்ப்பதற்கே பலமணிநேரம் தேவை; அதிலும்  பல கடைகள் ஏறி இறங்கவேண்டும். கடைகளுக்குப் பக்கத்தில் கார் பாக் பண்ணுவதே கடினம். எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டு காரில் ஏறியவன் குளிர் தாங்கமுடியாமல் காரினுள் சூட்டைப்போட்டுவிட்டுப் பொறுத்திருந்தான்.

மறுபடியும் அவனுக்கு ஒரு தொலைபேசி; அமைதியான குரலில் சாந்தமே அதன் சொந்தமான பாணியில் தொலைபேசியில் முத்தமழைபொழிந்து டார்லிங் வேலை முடிஞ்சுதாஅ.. களைப்பாக இருக்கிறதாஅ.. அமைதியாக இருந்து முதலில் ஒரு காப்பி குடியுங்க.. காலையில் போடடுத்தந்த காப்பி முடிந்தால் கடையில் ஏதாவது நல்ல சூடாக குடியுங்கஅ; மதிய சாப்பாடு சாப்பிட்ட நீங்களா?..முதுகெல்லாம் நோகிறதாஅ... ஆறுதலாக வாருங்க ஒன்றும் அவசரம் இல்லை. ஒரு சிகரட் ஒன்றை பத்தி றிலாக்சாகுங்க குஞ்சு. தம்பியும் வீட்ட வாறன் என்று சொன்னவன். எனக்கும் உங்களுடன் கடைத்தெருவில் கைகோர்த்து நடக்கவேண்டும்போல் உள்ளது. நீங்கள் வந்தபின் இருவருமாகக் கடைக்குப்போவோம். உங்களுக்குப் பிடித்த கறிவகைகளையும் எனக்குப் பிடித்த காய்கறிகளையும் வாங்குவோம். நீண்ட நாட்காக நீங்கள் பியர் ஒன்றும் வாங்கவில்லை. உங்களுக்கு நான் இன்று வாங்கித் தருகிறேன். நீங்கள் வீட்டக்கு வந்ததும் சாப்பாட்டைப் போட்டுத் தந்துவிட்டு அந்த நேரத்தில் நான் குளித்து றெடியாகிவிடுவன். புருசன் வெளியில் நிற்கும்போது மனைவி தலை முழுகக்கூடாது என்று பாட்டி சொல்லித்தந்தவோ. கதவில் வந்து மணி அடிக்கத்தேவையில்லை. வழமைபோல் நான் வாசலிலேயே காத்திருப்பேன் என்று தொலைபேசியை வைத்தாள். உலகத்தில் இவ்வாறான மனைவிமார் இருப்பதால்தான் முழத்திற்கு முழம் பூக்கடைகள் இருப்பதை அவன் உணர்ந்தவனாகச் சிந்தனையில்இருந்து விடுபட்டான். சொர்க்கம் என்றால் இதுவல்லவோ என்று அங்கலாய்த்தான். இது தனது மனக்கணக்கிற்குள் வந்த வெறும் பிரமை என்பதை நினைத்துக் கவலைப்பட்டான். எதிர்பார்த்தது கிடைக்காததால் கிடைத்ததுடன் மாரடிக்கிறான்.

கார் சூடாகியது. அதைவிட அவன் சூடாக இருந்தான். எந்தக் கடைக்கு முதல் போவது என்ற யோசனை. ஏதோ ஒரு கடைக்குச் சென்றான் சாமான்களை வாங்கி காசு கொடுக்கும் தருவாயில் முன்னுக்கு நின்றவர் இழுத்த கிறடிற்காட்டில் ஏதோ கோளாறு. அதனால் 15 நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. ஒரு தமிழ் கடைக்குச் சென்றான். அங்கு அப்பதான் மரக்கறிவந்தது என்று வரும்வரை உண்ணாவிரதம்இருந்ததுபோல் சனக்கூட்டம். ஒருமாதிரி வெளியேறி வங்கிக்கு காசு எடுக்கச் சென்றான். நமது நாட்டு பாணுக்கு நிற்கும் கியூவைவிட பெரிதாக இருந்தது. காசு எடுக்காமல் சென்றால் மனைவியிடம் திட்டுவிழும் என்பதை உணர்ந்து வரிசையில் நின்றான். மணி 4.40 ஆகிவிட்டது. காசை எடுத்துத் திரும்பி காரை விட்ட இடத்தில் எடுக்கச் சென்றபோது காரின் ஒரு சில்லு கோட்டுக்கு வெளியில் நின்றுவிட்டது என்று சொல்லி அதற்கு 100 டொலர் தண்டப்பணத்துண்டு வைக்கப்பட்டிருந்தது. இவற்றை மனைவியிடம் காட்ட முடியாது. காட்டினால் "அது என் கவனக்குறைவு என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு வீடு செல்வோம் என்றால் மனைவியின் நச்சரிப்பாலும் 9 மணிநேர வேலை செய்ததாலும் உடம்பில் ஒரு பதட்டம் ஏற்பட்டது.

மனைவியிடம் இருந்து மீண்டும் தொலைபேசி. எரிச்சலான குரலில் என்ன செய்கிறயள் இவளவு நேரமும். உங்களைப் பார்த்துப் பார்த்து இருந்துவிட்டு நான் வாடகைக் கார் பிடித்துச் சென்றுகொண்டு இருக்கிறன். வீட்டக்குச் சென்று இறாலை தண்ணிருக்குள்போட்டுவிட்டு சமையலுக்கு ஆயத்தப்படுத்துங்க" என்று தொ.பேசியை வைத்தாள். அன்பிலாப் பெண்டிரை ஒரு இடத்தில் ஓளவையார் யமன் என்று சொல்லியிருப்பதை அவன் மீட்டுப் பார்த்தான்.
மறுபடியும் ஒரு தொலைபேசி. இவோ தான். "ஐயோ அப்பா அவசரத்தில் அளவுசட்டையை விட்டுவிட்டு வந்துவிட்டன். இவன் அளவெடுத்தால் இறுக்கமாகத் தைத்துவிடுவான். சாமான்கள் வாங்காவிட்டாலும் பரவாயில்லை. வீட்டுக்குப்போய் அளவுசட்டையை உடனே கொண்டு வாருங்க.

அவனால் இயலவில்லை. காரை வேகமாகச் செலுத்தினான். 60 இல் போகவேண்டிய இடத்தில் 90 இல் போனதால் பொலிசார் அவனை மறித்துவிட்டார்கள். 20 நிமிடம் சுணங்கிவிட்டது. நிலமையைச் சொல்லுவதற்கு தையல்காரர் வீட்டுக்குத் தொலைபேசி எடுத்தான். "உங்களைக் காணாததால் அவோவை நான் அளவு எடுத்தவுடன் கிளம்பிவிட்டா" என்று பதில் வந்தது.

"பத்தாவிற்கு ஏற்ற பதிவிரதை உண்டாகில் ..........................சற்றேனும் கூடி வாழலாம்; ஏறு மாறாக நடப்பாளேயாமாகில் கூறாமல் சந்நியாசம் கொள்.
அவன் நமக்கு ஒரு பாடமா அல்லது மனைவி அவனுக்கு ஒரு பாடமா?.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: