RSS

கொடை-நிலைக்கண்ணாடி - 38லண்டன் Heathrow விமான நிலைய வெளிப்பக்கத்தில் அடை மழைக்காக ஒதுங்கிநின்றவர்களில் நானும் ஒருவன். எனக்கு இன்னும் விமானம் புறப்ட 3 மணித்தியாலங்கள் இருக்கின்றன. ஆண்களும் பெண்களுமாக நனைந்துகொண்டு ஓடுகின்றார்கள். சிலரது குடை காற்றின் வேகத்தால் வெளிப்பக்கமாக மடிந்துவிட்டது. சிலரது குடை அவசரத்தில் விரிக்கமுடியாமல் இருக்கின்றன. மழையில் நனைந்துகொண்டு ஓடுபவர்கள் ஏன் தலையைமட்டும் பொத்திக்கொண்டு ஓடுகிறார்கள் என்று ஒருகுழந்தை தாயிடம் கேட்டது. எனக்கு முன்வரிசையில் ஒரு கறுப்புக்குடை வேகமாக நடந்து மறைந்தது. அதைப்பார்த்ததும் நான் பல வருடங்கள் பின்வாங்கி பாதுகாப்பான ஒரு இடம் தேடி அமர்ந்துவிட்டேன்.

எங்கட ஊரில ஒருகாலத்தில ரீச்சர்மார்தான் மழையோ வெயிலோ குடைபிடித்துக்கொண்டு போவார்கள். ஆசிரியர்கள் வீட்டில் குடை இருந்தாலும் மழைகாலத்தில் நேரம் செல்லத்தான் வகுப்பிற்கு வருவார்கள். மழைகாலத்தில் கணக்கு வாத்தியார் அப்படி வருவது எனக்கு மிகவும் சந்தோசம். கணக்கு வகுப்பு முழுக்க எங்களுக்கு விளையாட்டுத்தான். சாதாரண காலங்களிலும்கூட கணக்கு வாத்தியார் இன்று வரப்படாது என்று பிள்ளையாருக்கு நேர்த்தி வைத்துக்கொண்டு போகிறனான். என்ன நேர்த்தி தெரியுமா? பெரியவனாக வந்ததும் ஒரு ரூபா உண்டியலில் போடுவேன் என்பதுதான். அப்போது எனக்கு 9 வயது. பிள்ளையாருக்கு ஒருரூபா சின்னக்காசுபோல் தெரிந்ததோ அல்லது அவசர தேவையாக இருந்ததோ என்னவோ எனது வேண்டுதல் நிறைவேறவில்லை. சிறியவயதில் எனக்கு கணக்கு ஓடாது. பெரியவனாக வந்ததும் ஊரில் மற்s புலி(கணிதப்புலி) என்று பெயர் எடுத்தவன்.
கணிதப்புலியின் தாயார் மிகவும் கண்டிப்பானவர். ஆத்திசூடி; கொன்றைவேந்தன்; மூதுரை; நல்வழி எல்லாவற்றையும் எனக்கு 10 வயதிற்குள் சொல்லித்தந்தவர். "தானுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்" என்று தென்னைமரம் நாம் ஊற்றியநீரை நன்றிக்கடனாக இளநீராகத்தருகிறது என்று கற்பித்தவர். எனக்கு காட்டி காட்டி படிப்பித்த தென்னைமரம் எங்கள் வீட்டு முற்றத்தில்தான் நிற்கிறது. அதன் அடியில் எங்கள்வீட்டு நாய் மட்டுமல்ல நானும் போயிருக்கிறேன். இருந்தாலும் அதன் இளநீர் எப்பவும் இனிமைதான். அந்தத் தென்னைமரம் இருக்கும் முற்றத்தைத்தான் (பேச்சுவழக்கில் முத்தம்) நான் அதிகாலை எழுந்து கூட்டிக்கொண்டு இருக்கிறன். எனக்கு 10ம் வகுப்பு முடிந்தவிட்டது. A/L படிக்கும் தராதரத்தில் பாசாகிவிட்டன். குடைக்குள்  சென்ற மாணவியர் முதல்முதலாகக் குடையை உயர்த்தி என்னைப் பார்த்தார்கள். எனக்கு அந்த அளவிற்கு அறிவு இல்லை. அதனால் அம்மா நான் அங்கு இங்கு சுத்தி வந்தாலும் ஏசமாட்டா. அதிலிருந்து கல்விக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டேன். எங்க ஊரில ஆங்கில ரீச்சர்தான் நான் அறியக்கூடியதாகக் கலர் குடை பிடித்தவோ. அந்தநேரம் குடை பிடிக்கும் பெண்புரசுகளை கெட்டுப்போய் விட்டுதுகள்; கலிகாலம் பிறந்துவிட்டது என்று சொல்லும் பெரிசுகளும் இருந்தார்கள். குடையை கண்டுபிடித்தவன் சீனன் என்கிறார்கள்; எகிப்தியன் என்கிறார்கள்; கிரேக்கர் என்கிறார்கள். ஒருநாள் நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. ஆங்கில ரீச்சர் என்னை தனது குடைக்குள் கூட்டிவந்து விட்டுவிட்டு போனா. அப்போ'தும் எனக்கு umbrella என்று எழுதத்தெரியாதது அவவுக்கும் தெரியும். ஆங்கில ரீச்சருடன் போவது ஒரு வெள்ளைக்காரனுடன் போவதுபோன்ற பிரமை எனக்கு.
காலைத் தேனீர் அருந்துவதற்குமுன் அம்மா எங்களுக்கு சில வீட்டுவேலைகள் வைத்திருப்பா. அதில் நான் தேர்ந்தெடுத்த வேலைதான் முத்தம் கூட்டுதலும் தெரு வேலியின் வெளிப்புறம் கூட்டுதலும். முததத்தில் விளக்குமாத்துடன் நிற்கிறேன் வேலிக்கு அருகாமையால் ஒரு கறுப்புக்குடை மளமளவென்று செல்கிறது. விரைவாக வந்து பார்த்தும் அதைப் பார்க்க முடியவில்லை. சிறு வருத்தும். இதற்கெல்லாம் பனடோலா போடமுடியும் நாளைக்குப் பார்க்கலபம் என்று இருந்துவிட்டென்.

இன்று முதலாவதாகத் தெருப்பக்கம் கூட்டுவதற்கு விளக்குமாற்றுடன் வந்துவிட்டேன் சொல்லிவைத்ததுபோல் கறுப்புக்குடை தூரத்தில் தெரிகிறது. எனக்கு யாரென்று பார்ப்பதற்கு இடையில் அம்மா கூப்பிட்டுவிடவார் என்ற டென்சன் வேறு. கிட்டவந்தது குடை. தெரிந்துவர்தான். என்ன வெயி'லும் இல்லை மழையும் இல்லை குடை எதற்கு என்று கேட்டேன். நீங்கள் எல்லாம் விடிய விடிய முழிவளத்திற்கும் உதவாத விளக்குமாத்துடன் நிற்கலாம். நாங்கள் குடை பிடிக்கப்படாதோ?  எல்லாம் ஒரு அடக்கமான பெண்ணுக்கு அடையாளங்கள். என்று சொல்லி நடந்துகொண்டே இருந்தாள். கூட்டுவதை யாருக்காவது கொடுங்கள் ஆளை விடுங்கள் என்று சிரித்துவிட்டு வேறு வென்றாள். விளக்குமாத்தை யாருக்குக் கொடுப்பது என்றுவிட்டு பேசாமல் இருந்துவிட்டன்.

தூரத்தில் ஒரு குரல். "என்ன தம்பி ..அடக்கமான பொண்ணு பார்க்கிறயளோ? அப்படி என்றால் சுடுகாட்டில்தான் போய்ப் பார்க்கணும். என்ன கதைத்தன் என்ன நடந்தது ஒன்றுமே அவருக்குத் தெரியாது. இந்தக்காலத்து சில ஐரோப்பியத் தமிழ் வானொலிகள்போல் தான் நினைத்ததைச் சொல்கிறார். கூட்டுவதை யாருக்காவது கொடுங்கள் என்றாளே அதுகூட உனக்கு விளங்கவில்லையா. அதுதாண்டா முத்தம். ஒரு சிரிப்புடன் கலைந்தார்.
சாயந்தரம் 7 மணி மழையும் விட்டது. விமானமும் கிளம்பிவிட்டது. நான் நினைப்பது ஒன்றும் நடப்பதில்லை. நினைக்காதது நடந்து விடுகிறது. அதனால் இந்த விமானம் விழவேண்டும் என்று நினைப்போமா என்றுகூட எனக்குத் தோன்றும். விமானத்தில் பயணம் செய்யப்பயந்த ஒரு கணிதமேதை ஒரு கணக்குப்போட்டார். 10 ஆயிரம் விமானப் பறப்பில் ஒரு விமானத்தில்  வெடிகுண்டு இருக்கச் சாத்தியம். 10 லட்சம் விமானப் பறப்பில் ஒரு விமானத்தில் 2 வெடிகுண்டு இருக்கச் சாத்தியம். ஆகவே நான் ஒரு வெடிகுண்டைக் கொண்டு செல்வதன்மூலம் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறேன் என்றாராம். வெளியில் பார்க்கிறேன். திருமணவீடுகளில் ஐயர் பகலில் காட்டும் அருந்ததி நட்சத்திரம் தெரிகிறது. பூலோகத்தில் அவளது கற்பைச் சோதித்துத் தோல்வி கண்டவர்கள் பலர். அதனால்தான் யாருக்கும் எட்டாத தூரத்தில் நட்சத்திரமாகக் காட்சி தருகிறாள். அருந்ததி என்றதும் எனக்கு நினைவு வருபவர் ஒட்டகக்கூத்தர்தான்.

ஒட்டகக்கூத்தர் ஒரு சோளர்கால அரசவைப் புலவர். அரசன் பரிவாரங்களுடன் புலவர் உட்பட இரவு நேரத்தில் நகர்வலம் வருகிறான். அவனது அழகைப் பார்ப்பதற்கு நகரத்து ஆண்களும் பெண்களும் அணிதிரண்டு நிற்கின்றனர். அரசனுக்கு காவலாளிகள் குடையைப் பிடித்துக்கோண்டு வருகின்றார்கள். இடையில் ஒரு பெண்கள் கூட்டத்தினரின் பரிகாசமான சிரிப்பு.; சிரிப்பின் முடிவில் "பாரடி நம்ம அரசரை; அற்பனுக்குப் பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்டீ" . இது அரசனின் காதுகளில் மிகவும் அவமானமாகப் பட்டது. உடனே அரசன் ஒட்டகக்கூத்தரை அழைத்தான்.
"நம்மநாட்டுப் பெண்கள் நான் இரவில் குடைபிடித்துச் செல்வதைப் பரிகசிக்கிறார்கள்; அவர்கள் வாயடைப்பதுபோல் ஒரு விளக்கம் கொடுங்கள் புலவரே" என்றான். ஒட்டகக்கூத்தர் சிரித்திவிட்டு அந்தப் பெண்களுக்குக் கேட்கும்படி சொன்னார்.

"தேவர்களிடம் இருந்து தனது கற்பைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் அருந்ததி; எங்கள் அரசரின் அழகைக் கண்டு கற்பிழந்து களங்கத்தைத் தேடிக்கொள்ளக் கூடாது என்ற பெருந்தன்மையிலேயே அரசர் இரவில் குடைபிடிக்கிறார்" என்றார். பெண்களின் சிரிப்பொலிகள் மீண்டும் வந்தவழி திருப்பிச் சென்றன. அரசன் புலவரின் புலமைக்குப் பரிசளித்தான்
வானத்து அருந்ததி பார்த்தேன் இவ் வையகத்து அருந்ததி பார்ப்பதற்காய் எனது விமானம் இந்துசமுத்திரத்தைக் கடந்து பறக்கிறது

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: