RSS

நூல்வேலி



எங்கட ஊரில சில பெரிசுகள் ஒரு சொல்லை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாவிப்பார்கள். எங்கள் தாத்தா யாரைப்பார்த்தாலும் மகனே மகனே என்று அழைப்பார்  மகனே என்பது மான என்று மருவி அவரை மான சின்னையா என்று அழைத்தார்கள். இப்படி ஊரில கத்தல்; அசம்பாவிதம்; சைவம்; சின்னவன்; தாலியறுப்பு என்றெல்லாம் சிலருடைய பெயருக்கு முன்னுக்குத் தாங்களாகத் தேடிக்கொண்ட பட்டப்பெயர்கள் உண்டு. ஒருநாள் இப்படித்தான் டென்மார்க்கில் ஒரு திருமணவீட்டில் மணமக்களை வாழ்த்திப் பேசிக்கொண்டிருக்கும்போது வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்திருந்தார்கள். (ஒபாமா: மண்டேலா: ரகுமான்; வைரமுத்து என்று நினைத்து விடாதீர்கள். நம்ம சனம்தான் வந்தது) திடீரென மண்டபத்தில் நின்ற ஒருவர் தனது மனைவிக்கு "சிறி அண்ண பேசுகிறார்" என்றார். எனது பேச்சு முடிந்ததும் எனதருகில் வந்து "நீங்கள்தானே சிறி அண்ணா" என்றார். 30 வருடங்கள் களிந்துவிட்டது எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்றேன். அவர் சொன்னார் "நீங்கள் பேசுகின்றபோது பாவிக்கும் சொல்லில் இருந்து நீங்கள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன் என்றார். அந்தச் சொல் என்னவென்று கேட்டு மகிழ்ந்தேன். வாசகர்களுக்கு அது தணிக்கை செய்யப்பட்டுள்ளது. பிறகு எனக்கும் ஒரு பட்டம் வந்துவிடும் அல்லவா!  ஊரில் தாலியறுப்பு என்று அழைக்கப்படும் அந்த தாத்தா ஒரு தாலியையும் அறுக்கவில்லை ஏனென்றால் அவர் ஒருவருக்கும் தாலிகட்டவில்லை. பிரமச்சரிய விரதம்.
தாலி என்றவுடன் பத்திரிகைகளில் வரும் செய்திகள் மனத்திரையில் பதிவாகிறன. "தாலியை ஒற்றிய வாலிபர் பொலிசில் சரண்"  தாலியைத் திருடிய கணவன்" தாலியைக் கழற்றியெறிந்த தாரம்"  தாலியை விற்றுப் பிள்ளைகளைப் படிப்பித்த தாய். கையில்காசு கழுத்தில் தாலி"  "தாய் மகளுக்குக் கட்டியதாலி(இது ஒரு சினிமாவின் பெயர்). இதைவிட ஈழத்தில் போர்க் காலத்தில் சிங்கள ராணுவம் தமிழ்ப் பெண்களின் தாலிகளைக் களவாடித் தங்கள் கழுத்துக்களில் அணிந்து கொண்டார்கள். 2002 ம் ஆண்டு புலிகள் மண்டதீவு முகாம் அடித்து ஆயிரக்கணக்கில் ஆமிகளைக் கொண்றபோது சிலரது கழுத்துக்களில் தாலிக்கொடிகள் கிடந்ததைக் கண்டார்கள்.
தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை ஆபரணம்  ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது அதன் முக்கிய குறியீடு. குறியீடு இருந்து என்ன பலன். சிலர் குறிதவறியும் விடுகிறார்கள். குறியீடு இல்லாமலும் பல பெண்கள் குறிதவறாமல் வாழ்கிறார்கள். சிறை காக்கும் பாதுகாப்பைவிட நிறைகாக்கும் காப்பே கற்பு என்று வள்ளுவர் சொல்லி 2000 வருடங்கள் சென்றுவிட்டன. அதனால் உலகம் அதை மறந்துவிட்டதுபோலும். களவையும் கற்றுமற என்பது களவியலுக்குத்தான் சொல்லப்பட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.
தாலி – என்ற சொல்லின் பிரயோகம் அதன் வேர்ச்சொல் என்பன இன்றுவரை. இனங்காண முடியவில்லை. நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து அதாவது சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை போன்றவற்றில் அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததிற்கு எந்தவிதமான பதிவுகளும் இல்லை. கோவலன் கண்ணகி திருமணத்திலும் தாலிகட்டியதாக எந்தச் சம்பவமும் இடம்பெறவில்லை.
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன் அவர்கள்தான். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் ம.பொ.சி அவர்கள் மட்டுமே. இருந்தும் அவரால் எந்த வரலாற்றுப் பதிவுகளையும் ஆதாரமாகக் காட்ட முடியவில்லை. கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டிலும் தமிழர் மத்தியிலும் தாலி என்ற சொல் வழக்கத்தில் இருந்தது கிடையாது’ – வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார் அவர்கள் பழந்தமிழர்களிடத்தில் தாலிகட்டும்  வழக்கு இல்லவே இல்லை என்று கூறுகின்றார்.  திருவள்ளுவர் கூட ஒரு இடத்திலும் தாலிபற்றிக் கூறவில்லை. சொற்களுக்குப் பொருள்கூறும் தொல்காப்பியத்திலும் தாலிபற்றி எதுவும் கூறப்படவில்லை. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலிகட்டுதல் என்ற விடையமே பாடப்படவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
கி.பி. 10ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம்.காஞசி கைலாசநாதர் கோவில் தூண் கல்வெட்டு ஒன்றில் குந்தவை கொடையாகக் கொடுத்தது."ஆறு களஞ்சேய் குன்றி தாலிமணிவடம் என்று ஒரு குறிப்பு வருகின்றது.
தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும், எழுதவும் தொடங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின.பின்னர், 1968-ல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லா திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது. 11-ஆம் நூற்றாண்டில் கச்சியப்பரால் இயற்றப்பட்ட கந்தபுராணத்தில் தான் திருமணத்தின்போது தாலி கட்டப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
பழந்தமிழர் யார்? அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதைப் பற்றி நமக்கென்ன கவலை. அது இன்று அறிவுக்குப் பொருந்துமா? என்று கேட்டு, தாலி அடிமையின் சின்னம் என்றார் தந்தை பெரியார்.

பெண்ணிய பார்வையில் ஆண்கள் தாம் திருமணமானவர் என்பதை வெளிப்படுத்த எந்தவொரு குறியீடும் இல்லாமல் பெண்ணிடம் தாலி, குங்குமம், மெட்டி என்று குறியீடுகளைத் திணிப்பது ஒர் ஆணாதிக்கச் செயற்பாடாக தற்போது சில முற்போக்கு எண்ணமுடையவர்களினால் பார்க்கப்படுகிறது. இப்படி பல விடயங்கள் வரலாற்றில் உள்ளபோதும் அவற்றை எல்லாம் ஒரு அறிவுக்காக அறிந்து கொண்டு  நாம் இப்போ  நிகழ்கால நிகழ்வுக்கு வருவோம்.
தற்போது கல்யாணத்திற்கு தாலிக்கொடி செய்வதை ஒரு போராட்டம் என்றே கருதவேண்டும். காரணம் தாலி என்னும் வறட்டுக் கெளரவம்  படியேறிப்  படியேறி  தற்போது 50 பவுனில் வந்து நிற்கின்றது. இதைவிட சிலர் பேரப்பிள்ளையையும் கண்டபின், தமது பழைய தாலியை புதுப்பித்து 50 பவுணில் பெருப்பித்து கட்டுவதும் நடைபெறுகிறது.
சிலர் தமது மகளின் கல்யாணத்திற்குச் சிங்கப்பூர்  சென்று, மகளுக்கு உரிய நகை; தாலி வாங்குவதுடன் கணவன் தன் மனைவிக்கும் புதுத்தாலி வாங்கி வருகின்றார். 
தமிழ் நாட்டில் என்னதான் பணக்காரர்கள் என்றாலும் அவர்கள் மஞ்சள் கயிற்றில் தான் தாலி கட்டுவார்கள். அப்போதுதான் மூன்று முடிச்சு போடமுடியும்! பின்னர் தாலிப்பெருக்கம் என்ற கிரியைசெய்து பவுண் கொடியில் தாலியை மாற்றுவார்கள். ஆனால் ஈழத்தில் மட்டும் எப்படிப் பவுனில் தாலிக்கொடி கட்டும் வழக்கம் வந்ததோ தெரியவில்லை. இந்தத் தாலியக்கட்டின சண்டைப் பிரச்சனையால் எத்தனை தாலியைத்தான் கட்டுதுகள். சாமத்தியவீட்டுக்குப்போக ஒரு தாலி; ஆசுப்பத்திரிக்குப்போக ஒரு தாலி; திருமணவீட்டுக்குப்போக ஒரு தாலி என்று வித்தியாசமான மொத்தங்களில் சிலர் தாலி வைத்திருக்கிறார்கள். அவர்களைக் கேட்டால் "தாலி ஒரு சங்கிலியில் களற்றாமல் கழுத்துடனேயே கிடக்கிறது. கொடிதான் மாத்தி மாத்தி போடுகிறது என்று புருசனது உயிரையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் காப்பாற்றுபவர்கள்போல் ஒரு பில்டப். சிலருக்கு தாலிகட்டு அன்று எந்தக்கூறைச்சேலை உடுத்தது என்றே தெரிவதில்லை. இருப்பதெல்லாம் ஒருமுறை உடுத்த கூறைகள். தாலிகட்டுப் படத்தைப்பார்த்துத்தான் அதைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானம் வீடுகளில் வளர்ந்துவிட்டது.
முடங்கப் பாய் இல்லாவிட்டாலும் சடங்கை நிறுத்தாத சம்பிரதாயம் தமிழர் கலாச்சாரமாகிவிட்டது. பிற்பட்டகால கலாச்சாரத்தில் வியாபாரம் கொரவம் என்ற இருவேறுபட்ட வடிவங்கள் ஒன்றுடன் ஒன்று உறவாடித் தாலிகளுக்குப் பல பெயர்களைக் கொடுத்து வைத்திருக்கிறது. அவற்றின் பெயர்களைப் பாருங்கள். எது பொருந்தும் என்பது உங்கள் பெருந்தன்மையில் தங்கிநிற்கிறது.
1. பெருந்தாலி, 2. சிறுந்தாலி, 3. தொங்கு தாலி, 4. பொட்டுத் தாலி, 5. சங்குத் தாலி, 6. ரசத்தாலி, 7. தொப்புத் தாலி, 8. உருண்டைத் தாலி, 9. கருந்தாலி 10. ஜாகத்தாலி, 11. இருதாலி, 12. தாலிக்கட்டி 13. வைரத்தாலி 15. சங்கிலித்தாலி என புதிய வடிவங்களில் நீண்டு செல்கிறது.
கொம்புத்தாலி அல்லது தொங்கு தாலி (கொம்புத் தாலி நடுவில் இருக்க காசுகள் இருபக்கமும் இருக்கும்) என்பது தமிழ் சைவ கலாச்சாரத்தையும்பின்பற்றி அணிவது வழக்கமாகும்
கொம்புத் தாலிக்குப் பக்கத்தில் இரு பக்கமும் குறைந்தது ஒவ்வொரு பவுணில் காசுகள் போடுகிறார்கள். இதற்கு தடை என்று பெயர். ஏன் எதற்கு என்ற கேள்வி இல்லாமலே ஊரோடு ஒத்தோடுகின்றார்கள். ஒருவராவது ஏன் என்று கேட்டு ஓடவில்லை. அணியப்படும் காசுகுளில் ஒரு பக்கம் ராசாவும் மறுபக்கம் ராணியும் ஒருவரை ஒருவர் பார்த்துபடி இருக்கிறார்கள். அதுவும் ஆங்கில நாட்டு ராசா ராணி. இவர்களுக்கும் தமிழர் தாலிக்கும் என்ன சம்பந்தம். ஒருவேளை ஒருகாலத்தில் ஒன்றும் அறியாத தமிழர் இவர்களை ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என்று கருதினார்களோ தெரியாது. அதுதான் போகட்டும். சாள்சு டயானா கதை தெரிந்த பின்னரும் ஏன் என்ற கேள்வியை எந்த மாப்பிளை மாரும் குருக்களிடமோ தங்கள் பெற்றோர்களிடமோ கேட்டது கிடையாது. சுவிசில் பல வருடங்களுக்கு முன்பு UBS வங்கியில் தமிழ்ச்சனம் ராசா ராணி காசுக்கு கியூவில் நின்றார்கள். அப்போது வங்கியில் வேலைபார்த்த வெள்ளைக்காரன் கேட்டான். "ஏன் இதைப் போடுகிறீர்கள். உங்கள் அப்பாவையும் அம்மாவையும் இந்தக் காசில் போட்டு தாலியில் கொழுவினால் என்ன" என்று. சில தமிழர்கள் அவனைப்பார்த்துச் சிரித்தார்கள். சில தமிழர்களுக்கு மொழி விளங்கவில்லை.
இந்த உத்தியைத் தனக்குச் சாதகமாகப் பாவித்து சிங்கப்பூர் நகைக்கடைக்காரர் ஒருவர் 18 கரட்டில் ராசா ராணி போட்டு காசு செய்து சுவிசுக்கு அவரது தரகர் மூலமாக 22 கரட் என்று கொடியுடன் சேர்த்து  அவித்துவிட்டார். இப்போது சிலரது காசுகள் கறுக்கிறதாம். இலங்கைத் தமிழர் உலகத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்பது இதைத்தானோ?.
ஒரு திருமணத்திற்கு 4 கிராம் பவுணும் ஒரு மஞ்சள் கயிறுமே போதுமானது. தமிழ்நாட்டில் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்படுகிறது. ஈழத் தமிழினமே கொஞ்சம் சிந்தியுங்கள். எங்கள் தொப்புழ் கொடி உறவுகள் என்பீர்கள். ஈழத்தில் யாராவது ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு தாலி கொடுத்திருக்கிறீர்களா? புலம் பெயர்ந்த தமிழ் பெண்ணினமே அடுக்கி வைத்திருக்கும் கூறைச் சேலைகளை பெட்டியுடன் இருந்து இத்துப் போவதற்கு இடையில் உங்கள் உறவுகளுக்கு ஈழத்திற்கு அனுப்பி வையுங்கள்.
தாலி பெண்ணிற்கு ஒரு வேலி என்பது ஆணாதிக்க சமுதாய சுலோகங்கள். வேலி நூலில் இருந்தாலும் தங்கத்தில் இருந்தாலும் அதற்கான புனிதத்துவத்தைப் பாதுகாத்துவாழும் பெண்களே போற்றுதலுக்கு உரியவர்கள்.
ஒரு பாடல் இருக்கிறது. "ஒத்த ரூபா தாறன் நீ ஓடப்பக்கம் வாவேன்........இதில் கடைசியில் பெண்ணுக்கான பாடல் வரிகளில் "மஞ்சள் கயிறு தந்தால் மாமா மடியில நான் வாறன்"  இதுதான் உண்மையான நூல்வேலி. தாலி என்பது கணவன் மனைவிக்கான அங்கீகாரமே தவிர ஒரு பெண்ணிற்கான விலங்கு என்று கருதுவது முட்டாள்தனமானது.
(இந்தக் கதை புலம்பெயர்ந்தத ஈழத்தமிழர்களை மையப்படுத்தியே எழுதப்பட்டது)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 Comments:

Anonymous said...

தாலி என்பது கணவன் மனைவிக்கான அங்கீகாரமே தவிர ஒரு பெண்ணிற்கான விலங்கு என்று கருதுவது முட்டாள்தனமானது...

சரியாக சொன்னீர்கள் நண்பரே...

நல்ல ஆக்கம்...இது என் முதல் விஜயம்...தொடர்கிறேன்...