அன்று அடை மழைகாலம். அலாsகாவைவிட அதிகமழை. உலகில் மிகவும் மழைவீழ்ச்சி கூடிய இடம் வருடத்தில் 500 அங்குல மழைவீழ்ச்சி அங்குதான். எனது துவிச்சக்கரவண்டியில் வேகமாகச் சென்று கொண்டிருந்தேன். வேகத்திற்கு காரணம் குடை இல்லாததுதான். வேல்ட் றைக்கோட்டுக்காக அல்ல. கிராமத்து மக்கள் மழைநீரை கடலினுள் செலுத்துவதற்காக வீதிகளை வெட்டி வாய்க்கால் செய்து கொண்டிருந்தார்கள். வீதியைப் போடும்படி அரசிடம் கேட்பார்கள். வெட்டும்போது யாரிடமும் கேட்கமாட்டார்கள் சைக்கிளில் வேகமாக வந்தவர்கள் வெட்டிய குழிகளுக்குள் விழுந்து எழுந்து சிரித்துவிட்டு மீசையில் மண்படவில்லை என்பதை ஞாபகம் ஊட்டிச் சென்றார்கள். முருங்கை மாதிரி வளர்ந்து இருக்கிறாயே தவிர உன்னால் ஒன்றும் இயலாது என்று தெருவில் நின்ற தன் புருசனைப்பார்த்து மனைவி திட்டுகிறாள்.திட்டுதலுக்கு இங்கு காரணம் எதுவும் இல்லை. புருசன் என்ற சுய மரியாதைதான். முருங்கை; முள்முருங்கை என்று இரண்டு உண்டு. அதில் எந்த முருங்கையைத் திட்டினாள் என்று எனக்குச் சந்தேகம். இந்தியாவில் முருங்கைக்காய் இப்போது கொடியில் காய்க்கிறது. புடலங்கயைப்போல. முருக்குப் பெருத்துத் தூணுக்கு உதவாது என்று சொன்ன வாத்தியாரும் துலாவடி முருங்கில் முதுகு தேய்த்ததை நான் பார்த்து இருக்கிறேன். திடீரென்று பக்கத்துவீட்டு அக்கா என்னை அழைக்கும் சத்தம் கேட்டது. அந்தக்காலத்து வாய்த் தொலைபேசி. 50 மீட்டருக்குள் கதைக்கலாம்.
ஓடிச்சென்று பார்த்தேன் மழை காலத்தில் எங்கள் கிராமத்தில் பனாட்டு சாப்பிடுவார்கள். எனக்கும் சாப்பிட பனாட்டுக் கிடைத்தது. அது மண்கும்பான் பானாட்டு என்று நினைக்கிறன். இடை இடையே மண் கடிபட்டது. அது யோசப்பின் பாபா கொடுத்த அல்வாவைவிட ருசியாக இருக்கும். "அத்தானுக்கு 2 சிகரட் வாங்கிவாடா. பிறகு துள்ளு பிராண்டி கிள்ளுபிராண் விளையாடுவம் என்றார் அக்கா. அவர் திருமணம் ஆனாலும் முந்தானை முடிச்சில் வரும் ஊர்வசிபோல் எங்களுடனேயே காலத்தைக் கழிப்பார். சிகரட்டை வாங்கி வரும்வழியில் நெருப்பு மூட்டாமலே 2 இழுவை இழுத்துப்பார்ப்பது என் வழக்கம். அத்தான் என்னடா நனைந்து இருக்கிறது என்றுகூட கேட்டிருக்கிறார்.
விளையாடத் தொடங்கியாச்சு. ஆறு ஏழு பேர் வட்டமாக உட்கார்ந்து கையை கவிட்டுவைத்து ஆரம்பமாகியது. அக்காதான் தலைவர். அவர் எங்கள் பிறங்கையில் நுள்ளி நுள்ளி "நுள்ளு பிராண்டி கிள்ளுப்பிராண்டி உங்கக்கா தலையில் என்னபூ என்று கேட்பார். நாங்கள் முருக்கம்பூ என்று சொல்லவேண்டும். பிறகும் முருங்கை மரம் காட்சிக்கு வருகிறது. அதே நேரம் "மறுபடியும் வேதாளம் முருங்கைமரம் ஏறியது என்று சிறிய வயதில் அம்புலிமாமா புத்தகத்தில் படித்த நினைவும் வருகிறது. வீட்டு முற்றத்தில் நிற்கும் முருங்கையில் இருந்து காகங்கள் கரைந்து கத்தும்போது என்னை அகத்திய முனிவர் பற்றிச் சிந்திக்க வைத்தது. அவரது கமண்டலத்தில் இருந்து காகத்தால் தட்டி விடப்பட்ட நீரே கங்கையாக ஓடிற்று என்று புராணம் கூறுகிறது. அகத்தியரைக் குறு முனிவர் என்று படித்தபோது யாரோ ஒருவர் அவரை உயரத்தில் நின்று பார்த்து இப்படிக் கூறினார்களோ என்றும் யோசித்து இருக்கிறன். எங்கள் கிராமத்திலும் ஒரு கட்டை மனிதர் அகத்தியர் உருவத்தில் இருந்தார். மிகவும் புத்திசாலி. அவரை நாங்கள் பெரியவர் என்று அழைப்போம். எனக்கு மரங்களில் ஏறியிருந்து கதைபடிக்க ஆசை. அதனால் மு.வரதசாசரின் "நெஞ்சில் ஒரு முள்" கதையை முருங்கை மரத்திரத்தில் ஏறியிருந்து படித்துக்கொண்டு இருந்தன். திடீரெனக் கொப்பு முறிந்து நான் கிளுவை வேலியில் விழுந்து தொடை எல்லாம் முள்ளுக் குத்தி வேலிக்குப் பக்கதில் இருந்த கிணற்றுக்குள் விழுந்துவிட்டேன். நெஞ்சில் ஒரு முள் தொடையில் ஒரு முள்ளாக மாறியதை நான் இப்பவும் இரைமீட்கின்றேன். கால் கை தொடை எல்லாம் காயங்கள். காயப்பட்டுத் தண்ணீருக்குள் விழுந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
மறுவாரம் எங்கள் கிராமத்தில் ஒரு கலைவிழா நடக்க இருக்கிறது. அதில் "காமன் தோட்டம்" என்ற நாடகத்தில் நான் இந்திரனது மகனாக நடிக்க இருக்கிறேன். அந்தக் கதையில்கூட எனக்கு முள்முருங்கை பற்றிய விளக்கத்திற்கான சிறிய பாத்திரம் தரப்பட்டீருந்தது. அதில் எங்கள் ஊர் பெரியவர் அகத்தியர் வேசம் போடுகிறார். கதை இதுதான்.
தென் பொதிகை மலையில் தவம் செய்துகொண்டிருக்கும் அகத்தியர் மிகவும் கட்டுப்பாடானவர். தமிழை வளர்ப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். சித்தர் வரிசையில்அவருக்குத் தனிமரியாதை உண்டு. பல மூலிகைகள் மூலம் ஆயுள்வேத மருத்துவத்திற்கு உதவி பண்ணியவர். இப்படிப்பட்ட அவரைக் கௌரவிக்க வேண்டும் என இந்திரன் பலநாட்களாகத் திட்டம் ஒன்று போட்டான். இந்திரனின் அழைப்பை ஏற்று அகத்தியமுனிவரும் இந்திரனது சபைக்குப்போகின்றார். அகத்தியரை வரவேற்பதற்காக இந்திரன் தனது நடன மங்கைகளான அப்சரா குழுவின் நடனத்தை ஏற்பாடு செய்திருந்தான். அதில் ரம்பை ஊர்வசி மேனகை என்பவர்கள் மிகவும் அழகானவர்களாக இருந்தார்கள்.
அகத்தியருக்குப் பக்கத்தில் இந்திரனது மகன் உட்கார்ந்து நடனத்தைக் களித்தான். இந்திரனின் மகன் என்றால்சொல்லவா வேண்டும். அழகில் சிறந்தவன். (அதனால்தான் என்னை இந்த நாடகத்திற்கு எடுத்தார்கள்) நடனமாடிக் கொண்டிருந்த ஊர்வசியைக் காமக்கண்கொண்டு பார்க்கத் தொடங்கினான். ஊர்வசியும் அவனது கணையில் விழுந்தவளாக அவனையே பார்த்துப் பார்த்துக் கண்களால் கதைபேசினாள். இதை அகத்தியர் பார்த்துவிட்டார். அகத்தியர் தனக்கு இழைக்கப்பட்ட மரியாதைக் குறைவாக இந்த நிகழ்வை எண்ணினார். இந்திரனுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இந்திரன் அகத்தியரைப் பார்த்து இவர்களுக்கு நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்.இந்திர லோகத்தைக் காப்பற்றுங்கள் என்றும் கட்டளை இட்டான். உடனே அகத்தியர் இந்திரனது மகனைப் பார்த்து "நீ பெண்களைக் காமக்கண்கொண்டு பார்ப்பதால் பூமியில் முள்முருங்கை மரமாகப் பிறக்கக் கடவாய் என்று சாபமிட்டார். ஊர்வசியைப் பார்த்து நீ பூமியில் ஒரு ஆடலரசியாகச் சென்று பிறந்து சாபவிமோசனத்தைத் தீர்த்துக்கொள் என்றார்.
அந்த ஊர்வசிதான் காவிரிப்பூம் பட்டினத்தில் மாதவியாகப் பிறந்து நாட்டியப் பேரொளியாகத் திகழ்ந்தாள் என்று ஐதீகக் கதைகள் கூறுகிறன. சைவத் திருமணங்களில் அக்கினி எரித்து அருந்ததி காட்டித் திருமணம் நடைபெறும் பகுதியில் ஒரு முள் முருங்கை மரமும் நடுவார்கள். அதுதான் இந்திரனது மகனது பிறப்பு. அந்த முருங்கை மணமகனுக்கு "நீயும் அடுத்தவன் பொண்டாட்டியையோ பிற மாதர்களையோ பல யோனிபேதங்களையோ பார்த்தால் உனக்கும் மறுபிறப்பு முருங்கை மரம்தான்" என்பதை நினைவு கூரவும் ஆண்களை ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாகவுமே முள்முருங்கை நடப்படுகின்றது. அதனால்தான் முருங்கை மரத்தில் இருக்கும் முட்கள் பெண்களின் குறிகள் போல் அமைந்திருக்கின்றன. அதைப் பொத்திப் பிடிக்கும்போது கைகளில் சேதம் உண்டாகி இரத்தமும் வழிந்துவிடும். பல பெண்கள் தொடர்பு மணமகனுக்கு இப்படி அழிவைக்கொடுக்கும் என்ற தத்துவமே முருங்கைமரம்.
அந்த அடைமழைக் காலத்தில் தெருவில் நின்ற அக்கா முருக்கு பெருத்துத் தூணுக்கு உதவாது என்று திட்டியது என்னைத்தானோ என்று இப்ப யோசிக்கிறன். ஏனெனில் நான் நாடகத்தில் இந்திரனின் மகனாக நடத்தேன். அவரும் நாடகம் பார்த்தவர். மகனுக்கே இந்தத் தண்டனை என்றால் பூமியில் வந்து அகலிகையைக் கெடுத்துவிட்டுப்போன இந்திரனுக்கு என்ன தண்டனை என்று யாரிடம் நாம் கேட்பது.
3 Comments:
அதானே..
இந்திரனுக்கு என்ன தண்டனை என்று யாரிடம் நாம் கேட்பது ?
அவரது கமண்டலத்தில் இருந்து காகத்தால் தட்டி விடப்பட்ட நீரே கங்கையாக ஓடிற்று என்று புராணம் கூறுகிறது.
காகத்தால் விரிந்தது காவிரி ஆறு..
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Post a Comment