உச்சி வெயிலை
உண்ணும் கடற்கரை;
பிச்சிப் பூக்களின்
வாசம் சுமந்த காற்று;
முகடுவழி விண்நோக்கித்
துள்ளும் மீன்கள்;
கரையேறிப் படம் கீறி
விளையாடும் சிறுநண்டுகள்;
உறு மீன்களுக்காய்த் தவம் கிடந்து
சிறு முரல்களை வரமாய்ப் பெறும்
ஏமாளிக் கொக்குகள்;
ஆம்பல் மரத்துள்
மறையும் அவசரக் குஞ்சுகள்
கலவிச் சோம்பலிற்
களைத்த ஜோடிப்புறாக்கள்;
ஆங்காங்கே அலரிமர நிழலின் மீது
பொடிவைத்துப் பேசுகின்ற
பெண்டிர் கூட்டம்;
கடல்மீது அலைநுரை
பொங்கும் சிரிப்பழகன்;
உடல்மீது இதழால்
உப்புக் கோலமிடும் கலை அரசன் ;
நாண்டு விட்ட பொழுதுகளில்
வஞ்சி இடை மீது
நண்டு விட்டுக்
கொஞ்சும் நாயகன் - ஆழி
உறவாடும் திசை பார்த்து
நங்கை சென்றாள்.
துருத்தி வழிவந்த
வெப்பம் போல - இங்கு
பருத்தி வெடித்திருக்குப்
பரவைக் காட்டில்;
பனைமரத்து அன்றிலின்
காமக் கூச்சல் - அதை
உள்வாங்கும் உடலுக்குள்
ஏதோ காச்சல்
மட்டில்லா ஆசைகளை
மனதில் தாஙகி
நாணத்தில் சிவந்த
பாவை முகம்;
வலை விரித்தால்
அள்ளிக் கொள்ளும்
சுறாவைப் போல - அவன்
தலை அசைததால்
மையல் கொள்வாள்
இந்த மங்கை.
0 Comments:
Post a Comment