RSS

என் இதயம் பேசுகிறது.மிக நீண்ட நாட்களுக்குமுன் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியே எதிர்காலக் கனவுகளை மனத்தில் சுமந்தவனாக கட்டிலில் சாய்ந்திருந்தேன். அனுமதியின்றி என் அறைக்குள் வந்தவளாகத் தன் இமயப் பார்வையால் தன்னோடு என்னைத் தழுவிக் கொண்டாள். கம்பன் காளிதாசன் கண்ணதாசன் போன்றவர்களின் கற்பனைகளுக்கு அவள் இன்னும் தென்படாத ஓர் அல்ப்ஸ் மலையின் அப்பிள் அழகு. முகில்களுக்கு வர்ணம் பூசும் ஆதவனைக்கூட அவள் ஏறெடுத்தும் பார்க்காதவள். பல மில்லியன் வருடங்களுக்கு முதல் எனக்காகவே எழுதப்பட்டவள் போல் என்னைக் கவர்ந்து கொண்டாள். கவர்ந்தது மட்டுமன்றி என் காலங்கடந்த தேவைகளுக்கெல்லாம் காலம் பதில் சொல்லும் என்ற கலையையும் கற்றுத்தந்தாள். தோல்விகளை நான் சுமந்த வேளைகளில்எல்லாம் என் முகத்தைப்பார்த்துப் புன்முறுவல் செய்து தன் வலக்கரம் நீட்டி என்னை வாழவைத்தவள். 


மிகநீண்ட பயணங்களில் வளிச் செலவுகள் எதுவும் என்னிடம் அவள் கேட்டது கிடையாது. நாசாவின் முகத்தில் எள்ளிநகையாடி எனக்குச் சூரியனைக்கூடச் சுற்றிக்காட்டியவள். என் பாதம் பட்ட இடங்களையெல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருப்பவள். அவளோடு நான் இருந்ததைவிட என்னோடுதான் அவள் கூட இருந்தாள். பிழைக்கு மன்னிப்பு; வெற்றிக்கு மகிழ்ச்சி; எல்லாம் அவளிடம் நான் கற்ற பாடங்கள். புடம்போட்ட தங்கம்போல் இருந்த வேசதாரிகளைச் சரியான நேரத்தில் முகத்திரை கிளித்துக் காட்டியவள். நோய்வாய்ப் பட்டிருந்த வேளைகளில் என்னைத் தனியே விட்டுச் செல்லாது தன்னுடன் என்னையும் சேர்த்தே சுமந்தவள். எனது புத்தக வெளியீடுகளுக்கு நாட்குறித்துத் தந்தவள் வெளியீடுகளின்போது பல கலைஞர்களை எனக்குக்காட்டி மகிழ்ந்தவள. முகநூலில் தினம் தினம் புதியவர்களைக் கொண்டுவந்து என் முற்றத்தில் உட்காரவைத்து என்னைக் கௌரவப் படுதியவள். நல்ல வாசகர்களை நான் அடைந்ததும் அவள் காலத்தில்தான். 


கோவையில் மணிவண்ணனைப் பார்த்ததும் நெல்லையில் திரு திருமதி பாபாவைச் சந்தித்ததும் மலேசியாவில் குருவைப் பெற்றுத் தந்ததும் விதியின் பயனால் புனிதா வெள்ளைசாமி அவர்களைக் காட்டித்தந்ததும் அவள் என்மீது கொண்ட கருணை என்றே கூறலாம். நான் சந்தித்த சோதனைகளுக்கு அவளே வெற்றிகளை அள்ளித்தந்தாள். அவளது காலத்தில்தான் என் வாழ்க்கை எனக்குப் புரிந்தது. எனது இலட்சியம் எதுவேன்று நாள் நட்சத்திரம் பார்க்காமல் பாடம் நடத்தினாள். அவளைவிட்டு ஒரு நிமிடம் கூட என்னால் பிரிந்திருக்க முடியவில்லை. இதையே அவள் எனது நன்றிக்கடனாகவும் ஏற்றுக் கொண்டாள். பூமியில் பிறக்காமல் அவளது பிறப்பிற்கென்றே பூமி தோன்னியதாக நான் உணர்ந்தேன். 


இன்றும் அதே கட்டிலில் அதே அறையில் அதே நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன். மெதுவாக வந்து புன்னகை பூத்த முகத்துடன் கண்களால் முத்தம் தந்து கருணைபூத்த முகத்தால் கங்கைமகனே என்று என் காதிற்குள் உசசரிக்கும் ஓசை கேட்கிறது.  திரும்பிப் பார்க்கின்றேன். 2012 ஐ வரவேற்கும் வாணவேடிக்கைகளுக்குள் அவள் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றாள். என் 2011 ஏ; உன் காலத்தில் இந்தப் பூமியில் நீ எனக்காககச் சாதித்தவைகள் ஏராளம் என்று அவளை வாழ்த்தி அனுப்புகின்றேன். 2012 ஐ எனக்குப் பரிசாகத்தந்துவிட்டுத் தூரத்தில் சென்றுவிட்டாள். அவள் இருந்த காலத்தில் நான் பதித்த சுவடுகளை எண்ணிப் பார்க்கின்றேன். சுபம். 


அனைத்துத் தோழமைகளுக்கும் எனது புதுவருட வாழ்த்துக்கள். வாழ்க நலம் சூழ. வாழிய பல்லாண்டு.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 Comments:

J.P Josephine Baba said...

மகிழ்ச்சி! மொத்ததில் ஆசிரியருக்கு 2011 இனியவளே. 2012உம் சிறப்பானவளாகவே இருக்கட்டும்!

J.P Josephine Baba said...

நானும் உங்கள் வாழ்வில் ஒரு நிமித்தமாக கடந்து சென்றதில் மகிழ்கின்றேன் பெருமை கொள்கின்றேன். உங்களில் நான் தேடிய என் சகோதரனை, என் தோழனை கண்டு கொண்டேன். உங்கள் அன்பிற்க்கு நன்றி வணக்கங்கள்.