RSS

ஆண்டவன் கட்டளை"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28).

வணக்கம் வாசகர்களே. இன்றைய நத்தார் பண்டிகையை முன்னிட்டு இக்கட்டுரையை மகிழ்வுடன் சமர்ப்பிக்கின்றேன். பிறக்கப்போகும் புதிய ஆண்டு எல்லோருக்கும் இனிதாக அமைய வேண்டுகிறேன். (அன்புடன் கங்கைமகன்)

இயேசுநாதர் இப்பூவுலகில் மண்ணின் மைந்தனாக அவதரித்தது வரலாறு என்பதை யாவரும் அறிந்ததே. சரித்திரச் சான்றுகளின்படி அவர் பிறப்பு கி.மு. 4-5 என்று ஆய்வுகளில் கணக்கிடப்பட்டுள்ளது. 

இயேசு நாதர் ஏறக்குறைய (33 1/2) ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார். அவர் பிறந்த நோக்கத்தின்படி மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத எல்லாவித தீய சக்திகளையும், மூட மத கோட்பாடுகளையும், ஆதிக்க போக்கையும் எதிர்த்தார். மக்களிடையே பல அதிசயங்களை செய்தார். இவ் உலக வாழ்வை விட தேவனுடைய ராஜ்ய தேடுதலையே மக்களிடம் போதித்தார். இவரும் ஒரு அவதாரமாகவே இந்துநாகரிகத் தத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இவரை விவேகானந்தரும் அவரது குருதேவரும் ஆன்மீகக் கண்ணால் கண்டு மகிழ்ந்துள்ளார்கள். 
 
இந்த இறைதூதரின் வருகையை அன்றிருந்த அரசும், யூத மதவாதிகளும் ஏற்க மறுத்தனர். மாறாக இவர் மேல் பழி சுமத்தி சிலுவையில் அறைய திட்டமிட்டனர் என்பது வரலாறு. அந்த நாட்களில் இருந்த அரசு கொடூர செயல் புரிந்த குற்றவாளிகளையும், (அல்லது) ஒருவரை சமூகத்தில் மிகக் கேவலமாக நடத்த வேண்டுமானாலும் சிலுவையில் அறைவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதுவே அக்காலக் கடும் தண்டனையாகக் கொள்ளப்பட்டது. புதிய ஏற்பாடடில் இயேசு நாதரைச் சிலுவையில் அறையும்போது அவர் 7 கட்டளைகளைப் பிறப்பித்ததாக மத்தேயூ சுவிசேசத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

1) "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" (லூக்கா 23 : 34) 

2) "இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரலோக‌‌த்திலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (லூக்கா 23 : 43) 

3) தம்முடைய தாயை நோக்கி : "அ‌ம்மா, இதோ, உன் மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ உன் தாய் என்றார்" (யோவான் 19 : 26-27) 

4) "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்" (மத்தேயு 27 : 46) 

5) எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக : "தாகமாயிருக்கிறேன் என்றார்" (யோவான் 19 : 28) 

6) இயேசு காடியை வாங்கின பின்பு, "முடிந்தது" என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 19 : 30) 

7) பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார். இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார். (லூக்கா 23 : 46)

இது இவ்வாறிருக்க இயேசுவின் விசுவாசத்திற்குரிய சீடனே அவரைக் காட்டிக்கொடுத்தான் என்றும் ஒரு வரலாறு யூதாசின்மேல் பழியாக விழுந்திருக்கின்றது. இதைப்பற்றிக் கண்டெடுக்கப்பட்ட (நூல்)கல்வெட்டின் தகவல் வருமாறு. 
இது காப்டிக் மொழியினால் (Coptic Language) எழுதப்பட்டுள்ளது. காலம் ஏறக்குறைய கி.பி. 300. (காப்டிக் மொழி, எகிப்திலுள்ள பழங்கால காப்டிக் கிறிஸ்துவ திருச்சபையால் (Coptic Church) பயன்படுத்தப்பட்ட மொழியாகும். எகிப்து மற்றும் எத்தியோப்பியர்களை உறுப்பினர்களைக் கொண்டது.) இந்நூல் முற்கால கிரேக்க மொழியில் எழுதப்பட்ட நூலின் பிரதியாகும் (copy). யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி பற்றி, கி.பி.180 வாக்கில், லியனின் (தற்போதைய ப்ரான்ஸ் ) ஆயர் இரேனியஸ் (Bishop Iraneous) முதன் முதல் குறிப்படிகிறார். அவர் அது திருச்சபைக்கு முக்கிய கொள்கைக்கு விரோதமானது ஆகையால் விலக்கப்பட்ட நூல் ( heresy), என அறிவித்தார். புதிதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நற்செய்தி நூல் இவ்வாறு ஆரம்பிக்கின்றது: இயேசு யூதாஸிடம் பேசிய உரையாடலின் ரகசியத்தின் வெளிப்பாடு. நூலின் முக்கிய பகுதியில் இயேசு யூதாஸிடம் , "என்னை மூடியிருக்கும் மனிதனை நீ பலியிடுவதால், நீ அவர்கள் அனைவரிலும் மேலோங்கி நிற்பாய்', என கூறுகிறார். இயேசு தனது மாமிசத்தை வெற்றி கொண்டு, ஆன்மீக உயர்நிலையை அடைவதை, இதுகுறிப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர். இதன்பிரகாரம் இயேசு காட்டிக் கொடுக்கப்படவில்லை என்பதும் இயேசுவாகிய ஆண்டவன் கட்டளையையே யுதாs செய்ததும் புலனாகிறது. 

"மற்ற அனைவரிடமிருந்து ஒதுங்கியிரு, நான் அரசாட்சியின் (kingdom) புதிர்களை உனக்கு அறிவிப்பேன்",எனவும் இயேசு யூதாஸிடம் கூறுகிறார். யூதாஸை தனியே தெரிவு செய்து சிறப்பான அங்கிகாரம் அளிக்கிறார். "பார், உனக்கு அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது, உன் கண்களை ஏறெடுத்து அந்த மேகத்தை உற்றுப் பார், மேலும் அதனுள் உள்ள ஒளியையும், அதனைச் சுற்றியுள்ள விண்மீன்களையும் பார். வழி நடத்தும் அந்த விண்மீன் நீயே", இயேசு யூதாஸிடம் கூறுவதாக, யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி மேலும் குறிப்பிடுகிறது.
யூதாஸ் இஸ்காரியோத், இயேசுவை யூத குருமார்களிடன் காட்டிக் கொடுப்பதுடன் நற்செய்தி நிறைவு பெறுகிறது. கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவது பற்றியோ, அவரது உயிர்தெழுதல் பற்றியோ ஏதும் இதுகூறவில்லை.
இந்நூலின் ஆசிரியர் யாரெனெ குறிப்பிடப்படவில்லை, ஆனால் அவர், யூதாஸ் மட்டுமே கிறிஸ்துவின் போதனைகளின் முக்கியத்துவதை புரிந்திருந்ததாக நம்பியவர், என தேசிய புவியியல் சங்கம் தெரிவிக்கிறது. 1970-ல் கண்டு பிடிக்கப்பட்ட பைப்பிரஸ் (papyrus) சுருள்கள், பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டதாக அது கூறுகிறது. 1000 துண்டுகள் மீண்டும் ஒருங்கிணக்கப்பட்டதாகவும் கூறுகிறது. ரேடியோ கார்பன் டேட்டிங் முதலான பல அறிவியல் ஆய்வுமுறைகளும், பிற பாதுகாப்பு முறைகளும் பின்பற்றப்பட்டதாக, அது மேலும் கூறுகிறது.
யூதாs இயேசுவைக் காட்டிக் கொடுத்ததற்கு இன்னுமொரு விளக்கமும் உண்டு. "தான் காட்டிக்கொடுத்தால் இயேசு; கர்த்தர் வல்லமையால் எதிரிகளை இனம்கண்டு அவர்களைச் சபிப்பதனூடாக மேலும் புகழ்பெறுவார்"  என்பதை தன் எண்ணமாகக் கொண்டிருந்தான் என்று கருதுவும் இடமுண்டு. 

கடவுள் அனுமதி இல்லாமல் கடவுளைக் காட்டிக்கொடுக்க முடியாது என்பதே மானிடர்களுக்கு இந்தக் கட்டுரை ஊடாக நான் கூறும் கருத்தாகும். கிறித்துவ நட்புக்களிடம் இருந்து அவர்களது கருத்துக்களைப் பின்னூட்டமாக எதிர்பார்க்கிறேன். அனைவருக்கும் மீண்டும் எனது நத்தார் புதுவருட வாழ்த்துகள். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 Comments:

kowsy said...

ஆண்டவன் கட்டளையுடன் எதுவும் செய்யலாம். காட்டிக் கொடுத்தல் உட்பட. புதிய தகவல் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி. ஆனால். மனிதர்களுக்காக தன்னை மாய்த்தார் ஆண்டவன். ஆனால் இறைவன் அனுப்பிய தூதர் அவதரித்ததும் மாண்டும் மனிதர்கள் மாறியதும் இல்லை துன்பங்கள் தீர்ந்ததும் இல்லை.