RSS

மெட்டி ஒலி


பக்கத்து வீட்டில் ஒரே அமளிதுமளியாக இருந்தது. எனது அலாரம் அடிப்பதற்கு முதலே எல்லோரும் எழுந்து விட்டார்கள். வெளியில் வைத்த சோடா எல்லாம் சிதறிப்போய் வெடித்துக்கிடக்கிறது. பால் பெட்டிகள் எல்லாம் கல்லாகிப்போய்விட்டது. கார் கதவுகளைத் திறக்கமுடியவில்லை;  இப்படிப் பல சத்தங்கள் எனக்குக் கேட்கிறது. அதற்குள் சிலர் நாசா அலுவலகத்து விஞ்ஞானிகள் போல் இந்தக் குளிரில் பொருட்களை வெளியில் வைத்தால் இப்படித்தானே போய்விடும் என்று சத்தம் போட்டவர்களுக்கு விளக்கம் சொல்கிறார்கள். இடை இடையே மெதுவாக கதையுங்க மெதுவாக கதையுங்க என்றும் சத்தம் போட்டுச் சொல்கிறார்கள். கலியாணத்திற்குக் கிளம்புகிறார்கள் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. இதற்குள் இலங்கையில் இருந்து கலியாணத்திற்காகப் பொன்சரில் வந்த ஒருவரும் சந்திர மண்டலத்து உடுப்புப் போட்டதுபோல நான் யன்னலால் பார்க்கும்போது சமர் சப்பாத்துடன் வழுக்கி வழுக்கி snow க்குள் விழுந்து விழுந்து எழும்புகிறார். மாப்பள்ளை எங்கோ தூரத்து city இல் இருப்பவராம்; அதனால் எங்கள் பக்கத்து வீடுதான் மாப்பிள்ளைவீடாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. 

இது ஒரு காதல் திருமணம். இந்தக் கலியாணத்தில் மாப்பிளை கொஞ்சம் நிறமாம். அதனால் பெண்வீட்டுக்காரர் "புடிச்சாலும் புடிச்சாள் புளியங்கொம்பாக புடிச்சாள் என்று கதைத்தவையள். மற்றைய மரங்களின் கொப்புக்களையிட (கிளைகள்) புளியமரத்தின் கொப்பு உறுதியானது இனால்தான் இந்தப் பழமொழி வந்தது என்று நானும் வலையில் விழுத்தி வாசித்திருக்கிறன். சிறிது நேரத்தில் எங்கள் வீட்டு அழைப்பு மணி அடித்தது. நான் மதம் பரப்பும் ஆட்கள் என்று நினைத்து பேசாமல் கிடந்துவிட்டன். 
சில கலியாணங்கள் பத்துப் பொருத்தம் பொருந்தினாலும் மாப்பிள்ளையின் தாய்மார்கள் அந்தக் காலத்தில் சகுனம் பார்ப்பார்களாம். அதாவது திருமணத்தைப்பற்றி நினைத்தவுடன் பல்லி சொல்லவேண்டும். அல்லது கோவிலில் ஒருமுறை பூக்கட்டிப் பார்த்து முடிவு எடுக்கப்படல் வேண்டும். ஆனால் களவியலில் முடிவெடுக்கப்பட்டு பின்னர் நடாத்தப்படும் கற்பியல் திருமணங்களுக்குச் சம்பிரதாயம் தேவை இல்லை என்றும் சங்ககால நூல்கள் கூறுகின்றன. 

‘பல்லியும்  பாங்கொத்து இசைத்தன
நல்எழில் உண்கண ஆடுமால் இடனே’
என்று திருமணங்களுக்குப் பல்லிசொல் பலன் சங்க இலக்கியத்திலே சகுணம் பற்றிய குறிப்புகள் வருகிறன.

பல ஆண்டுகளுக்குமுன் ஒரு கலியாணத்திற்குச் சென்றிருந்தேன். குறித்த நேரத்திற்கே நான் சென்றுவிட்டேன். மண்டபம் அப்போதுதான் அலங்கரிக்கபப்பட்டுக்கொண்டு இருந்தது. என்னைப்போல் வேறு சிலரும் வந்திருந்தார்கள். இப்படி நேரத்தைப் போட்டால்தான் தாலிகட்டு நேரத்திற்குச் சரியாக சனம் வரும் என்று யாரோ இன்னொருவருக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் ஒரு கார் வந்து நின்றது. அவர்கள் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வருவதாக அறிந்தேன். என்ன நடப்பு என்று விசாரித்தபோது "மாப்பிள்ளை கட்டில் ஏறிவிட்டார் இனி வந்திடுவார்என்று சொன்னார்கள். மணமகனின் தாயார் தனதுமகன் தாலிகட்டச் செல்லும்போது "உனது மனைவியை பத்திரமாக அழைத்துவா" என்று கட்டளை இடுவதும் அதனை மணமகன் ஏற்றுக்கொண்டு விடைபெறுவதையும் "கட்டளை ஏற்றல் என்று அழைத்தார்கள் அதுதான் பின்னைய நாளில் "கட்டில் ஏறுதல்" என்று வந்துவிட்டதை நான் மற்றவர்களுக்குச் சொன்னேன். அடக் கடவுளே! குழந்தைகளுக்கு என்று சில சொற்களைத் தமிழர்கள் திரித்து வைத்திருக்கிறார்கள். சோற்றை(rice) சோச்சி என்றும்; மீனை மீச்சி என்றும் பாலைப் பாச்சி என்றும் இப்ப பாப்பா என்றும் வந்துவிட்டதுபோலத்தான் இதுவும் என்று பக்கத்தில் ஒருத்தர் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்.

மாப்பிள்ளை உட்பட எல்லோரும் வந்துவிட்டார்கள். "ஒன்று வராவிட்டால் ஒன்றுமே நடக்காது" என்பதுபோல அங்கு எதுவும் நடைபெறுவதாக இல்லை. திருமண உறவு காரர் ஆளுக்காள் தொலைபேசியும் கையுமாக நிற்கிறார்கள். என்ன விடையம் என்றால் வீடியோக் காரன் இன்னும் வரவில்லையாம். சரி வீடியோக்காரன்தான் வராவிட்டாலும் விடையத்தை ஆரம்பிக்கலாம் என்றால் வீடியோக்காரனின் காரில்தான் ஐயரும் வாறாராம் என்று சுணக்கத்திற்கான வலுவலான காரணங்களைத் திருமண வீட்டார் சமர்ப்பித்துக்கொண்டு இருந்தார்கள். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சென்றவர்கள்போல் வந்தவர்கள் ஒருவரது முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். கைக்குழந்தைகளுடன் வந்த தாய்மார் தங்கள் புருசன்மாரை "அவசரப்பட்டு இழுத்துக்கொண்டு வந்துவிட்டயள்; இப்ப பிள்ளைக்கு மேலதிகமாகப் பம்பசும் பாலும் கொண்டுவரவில்லை" என்று திட்டிக்கொண்டு இருந்தார்கள். இன்னும் சில அறிவுள்ளதுகள் "நாங்க மட்டும் சீலைகளை உடுத்துக்கொண்டு வரவேண்டும் அவையள் மட்டும் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு யாலியாக வந்திடுவினம்" என்று சொல்வதெல்லாம் எனக்குக் கேட்டது. 

சில கலியாணங்களை வீடியோக் காரர்தான் நடாத்தி வைப்பார்கள். ஐயர் சொல்லும் மந்திரத்தைவிட அவர்கள் சொல்வதுதான் மந்திரத்தைவிட வலிமையானது. ஐயர்தான் ஒரு முறைக்கு பகலில் அருந்ததி காட்டுகிறார் என்றால் வீடியோக் காரரும் அதை எடுத்து சந்திசிரிக்க வைப்பினம். ஆனால் அருந்ததி எதற்குக் காட்டுவது என்றால் அவர்களுக்குத் தெரியாது.  பல கோணங்களில் நின்று படம் பிடிப்பார்கள். கடைசியில் ஒரியினலைப் போட்டுப் பார்க்கும்போது ஒரு கோணமும் சரியாக இருக்காது. 

அருந்ததி சப்தரிஷிகளில் ஒருவராகிய வசிட்டர் மனைவி. மும்மூர்த்திகளும் அவள் கற்புத் தன்மையைச் சோதித்தும் நிலை குலையாது இருந்தவள். தன் கணவன் ஐயப்பட நட்சத்திர வரம்பெற்று சப்தரிஷி மணடலத்தின் இடையில் உள்ள வசிட்ட நட்சத்திரத்தின் அருகிலேயே இருக்கும் பேறு பெற்றாள். அருந்ததி பார்ப்பது என் கணவனைப் பிரியாமல் இருப்பேன் என்று மணமகள் உறுதி ஏற்பதாகும். அருந்ததியை வடமீன் என்பர். எப்பொழுதும் அது வடக்கிலேயே இருக்கும். துருவ நட்சித்திரம் என்னும் வடமீன் கடல்பயண மாலுமிகட்கு வழிகாட்டியாக இருப்பது.

‘வடமீன்போல் தொழுதேத்தும் வயங்கிய கற்பினாள்’
‘வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை’
‘அம்கண் உலகின் அருந்ததி அன்னாளை’ 

எனக் கலித்தொகை, புறநானூறு, சிலப்பதிகாரம் கூறுகிறது.
பெண்களுக்கு தாலி எப்படி அவள் திருமணம் ஆனவள்,என்பதை அடையாளம் காட்ட அமைந்ததோ, அது போல ஆண்களுக்கு திருமணம் ஆனவர் என்பதை அடையாளம் காட்டத்தான்.அவர்கள் காலில் மிஞ்சி அதாவது மெட்டி அனியும் வழக்கத்தை நம் முன்னோர்கள் கடை பிடித்தனர்.பிற்காலத்தில் இந்தப் பழக்கம்மறைந்து. ஆனால் தற்போது பல சடங்குகள் கிரியைகளாகிச் சைவசமயத்திற்குள் காரணம் இல்லாமல் வந்துவிட்டது. இதுவே பெண்களுக்குத் திருமணத்தன்று மெட்டி அணிவதற்கு வழக்கமாகிவிட்டது. பழம்தமிழர் இலக்கியங்களில் மெட்டிபற்றி ஒன்றும் கூறப்படவில்லை. 

பாலும் பழமும் சேலைபோட்டு மறைவில் மணமக்கள் சாப்பிடுவதை வீடியோக்காரன் எடுத்துக் காட்டுவது தனது வீரப் பிரதாபமாக நினைக்கிறான். அது எதற்கென்றால் மணமக்கள் பட்டினிச்சாதம் என்ற ஒரு சாப்பாட்டை ஆரம்பத்தில் சாப்பிட்டுத் தாலி கட்டும்வரை எதுவுமே சாப்பிடாமல் இருப்பார்கள். களைத்திருக்கும் மணமக்களுக்கு விரைவில் சமிபாடடையக்கூடியதும் சக்தியைக் கொடுப்பதற்காகவும் திரைமறைவில் இருவரின் கூச்சங்கள் தெளிவதற்காகக் கொடுக்கப்படுகிறது. மோதிரத்தைத் தண்ணீருக்குள் போட்டு குருக்கள் எடுக்கச் சொல்வது பெண்ணின் விட்டுக் கொடுக்கும் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு என்றும் வழக்கமாகிவிட்டது. மோதிரத்தை மணமகன் எடுத்துவிட்டால் மணமகனின் தாய் தனது முகத்தில் காட்டும் சந்தோசத்தைக் கின்னs (HINES) புத்தகத்திலேயே போடலாம். அப்படி ஒரு சிரிப்பு. 

இதைவிட முருங்கைமரம் நடுவது; ஓமம் வளர்ப்பது என்றபெயரில் குருக்கள் புகையூட்டி சபையோரை மூச்சுத்திணற வைப்பது என்றெல்லாம் வந்தவர்கள் ஆளுக்காள் தங்களுக்குத் தெரிந்ததைக் கதைக்கிறார்கள். என்னைப் பார்த்தவர்கள் நானொரு கிறுக்கன் என்று நினைத்தார்களோ பழைய பஞ்சாங்கம் என்று நினைத்தார்களோ ஒருவரும் ஒன்றும் என்னுடன்வந்து கதைக்கவில்லை. திடீரென ஆரவாரம் ஐயரும் வீடியோவும் வந்துவிட்டதாம். ஒட்டகத்தைக் கட்டிக்கோ என்ற நல்ல பாடல் போய்க்கொண்டிருந்தது அதை நிறுத்தி ஐயரின் மந்திரத்தை மண்டபம் கேட்கும்படி இசைஅமைப்பாளர்கள் செய்தார்கள். காருக்கு 3 மணித்தியாலத்திற்குத்தான் காசு போட்டது இப்ப துண்டு வைச்சிருப்பான் அதையும் மொய்க் கணக்கில்தான் சேர்க்கவேண்டும் என்று காரில் வந்தவர்கள் புறுபுறுத்ததும் எனக்குக் கேட்டது. 

வாழ்க மணமக்கள். நான் அறுகரிசி போடுகிறன். சாப்பிடாமலே செல்கிறன். மணமக்களுக்கு சொல்லிவிடாதீர்கள் பிறகு குறைநினைப்பார்கள். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 Comments:

kowsy said...

இதைத் தான் வீடியோ கலாச்சாரம் என்று சொல்வது. அதற்க்கு இருக்கும் மரியாதைக்கு இந்த நாள் பார்த்து தாலி கட்டும் நேரம் எல்லாம் வெறும் தூசி. இப்போதெல்லாம் கூறிச் சீலை கழுத்தி தொங்க விட்டுத்தானே தாலி கட்டப் படுகின்றது . தாலி மெட்டி பற்றிய எனது பதிவையும் ஒரு தடவை பாருங்கள் . நன்றி.

http://kowsy2010.blogspot.com/2011/10/blog-post_13.html