RSS

பழமை

காரைக்குடிக்குச் சென்று முத்தையா என்று யாராவது இருந்தார்களா என்று கேட்டுப் பாருங்கள். அப்படி இங்கு ஒருவரும் இருக்கவில்லை என்று உடனே பதில் வரும். ஆனால் கவிஞர் கண்ணதாசனைத் தெரியுமா என்று அதே இடத்தில் திரும்பவும் கேட்டுப்பார்த்தால்; ஆம் அவர் எங்கள் காரைக்குடியில் தான் பிறந்தவர் என்று பதில் வரும்.  பிரபலமான கவிஞர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் காப்பி அடிப்பவர்கள் என்று;  எழுத்தாளர் சுஜாதா கண்ணதாசன் அவர்களையும் வாலி அவர்களையும் தாக்கி இருந்ததை நான் படித்திருக்கிறேன். அதை உண்மை என்று வாதிட எனக்கு அறிவு இருக்கிறதா என்று பலமுறை சிந்தித்துப் துப் பார்த்தேன்.  ஒன்றில்லாமல் மற்றென்று உருவாகுமா எனற தத்துவ உண்மையைச் சொன்னவர் கண்ணதாசன்.  தான் அனுபவித்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற முறையிலும் பல பாடல்களை எழுதி மக்கள் மனங்களில் அந்தப் பாடல்களை நிலைபெறச் செய்தவர்.
.
ஒருமுறை மன உலைச்சலுடன் திருப்பதிக்குச் சென்று திரும்பும் வழியில் அவரது கடன் தொல்லைகள் தீருவதற்குற் ஒரு வழிவந்துவிட்டது என்று திரு M.S.V யிடம் இருந்து தகவல் வந்தது. அன்று கண்ணதாசனுக்குப் பிறந்த பாடல்தான் "திருப்பதி சென்று திரும்பிவந்தால் ஓர் திருப்பம் நேருமடா" என்ற பாடலாகும்.
.
ஒரு சந்தர்ப்பத்தில் மது வாங்குவதற்காகத் தன் அண்ணனிடம் காசு கேட்டிருக்கிறார் அப்போது அவருக்கு காசு கிடைக்கவிர்லை.  அறிவுரைகளே வழங்கப்பட்டன. அதனால் மனமுடைந்த கண்ணதாசன் ஒரு பாட்டு எழுதினார். அந்தப் பாடல்தான் "அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே" என்ற பாடலாகும்.
.
திரு MSV அவர்கள் மே மாதம் முழுக்க ஒரு படத்திற்கான பாடலை இசையமைக்கத் திட்டம் இட்டிருந்தார். அதற்காகவே கண்ணதாசன் ஒரு பாட்டில் கடைசிச் சொற்கள் "மே" என்று முடிவதாக ஒரு பாடலை எழுதினார். அந்தப் பாடல்தான் "அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமே" என்ற பாடலாகும்.
.
ஒரு நாள் தொழிலில் அக்கறை இல்லாமல் தூங்கிவிட்டார் MSV என்பதற்காகவே "அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவோ" என்ற பாடலை எழுதினார்.
.
திரு கண்ணமாசன் அவர்கள் அறிஞர் அண்ணாத்துரை அவர்களுடன் ஒரு தூய நட்பைக் கொண்டிருந்தார். ஆனால் அண்ணாவின் அரசியல் கொள்கைகளின் கருத்து வேற்றுமையால் சிறிதுகாலம் அவரைவிட்டுப் பிரிந்திருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் அண்ணா அவர்களுக்குப் புற்றுநோய் கண்டது. மனமுடைந்த கவிஞர் "நலம்தானா நலம்தானா என்று பாடலை அவருக்காக எழுதி அதில் "புண்பட்டதால் உந்தன் மேனியிலே இந்தப் பண்பட்ட பாட்டை யாரறிவார்"  என்ற வரிகளையும் சேர்த்திருந்தார். பாடலைக் கேட்காமலே அண்ணா அவர்கள் இறந்துவிட்டார். பிற்காலத்தில் தில்லானா மோகனாம்பாள் படத்திற்காக அந்தப்பாடலில் "புண்பட்டதால் உந்தன் மேனியிலே இந்தப் பெண்பட்ட பாட்டை யாரறிவார்" என்று மாற்றி அமைத்திருந்தார். இவ்வாறு பல பாடல்களைச் சந்தர்ப்பங்களுக்காக எழுதி பதிவுசெய்த பெருமை திரு கண்ணதாசன் அவர்களையே சாரும். தனது வசந்தகாலம் என்ற சுயசரிதையில் தனக்கு ஒரு காதலி இருந்ததாகவும் அவள் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும் போது ஒரு பாடல் தனக்காக எழுதவேண்டும் என்று கேட்டுக் கொண்டதால்தான் "காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடலை எழுதி இறுதியில் கவிஞன் ஆக்கிளாள் என்னை என்று முடித்திரிந்தார்.
.
இது இவ்வாறிருக்க இலக்கியங்களில் உள்ள கருத்துக்களைத் தோண்டி எடுத்து படித்தவர்களுக்கும் பாமர மக்களுக்கும் விளங்கவைப்பதில் கண்ணதாசன் மிகவும் ஆழுமை பெற்றவராக இருந்தார். ஒரு காலப்பகுதியில் இலக்கியத்துள் எழுந்த கருத்துக்களை மீண்டும் தமிழ் இலக்கியத்தில் கூறுவதைக் "கூறியது கூறுதல்" அல்லது "பழமை பேணும்பண்பு" என்று அழைப்பர். இவ்வாறான நடவடிக்கை சமூகத்தின் தேவைகருதிய ஒரு கவிஞனின் கடமை ஆகிறதே தவிர காப்பி அடித்துல் என்று ஒருவரும் சொல்லுவதில்லை. கவிஞர்கள் இல்லாவிட்டால் காப்பியங்களின் கருப்பொருட்களுக்கு எப்பவோ விலங்கு பூடப்பட்டிருக்கும். இவ்வாறு இலக்கியப் பொருட்களைக் கண்ணதாசன் அவர்கள் பல பாடல்களில் புகுத்தியிருந்தாலும் இரண்டு உதாரணங்களை இங்கு வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கிறேன்.
.
திருக்குறளில் "நான் நோக்க நிலம் நோக்கும் என்ற அடிகளின் பொருளைத்தான் கண்ணதாசன் அவரது பாணியில் "உன்னை  நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே நேரிலே பார்த்தால் என்ன நிலவென்ன தேய்ந்தாபோகும்" என்று பதிவு செய்தார்.  
.
ஒரு காலத்தில் "வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரையாரோ என்ற பாடல் காலத்தால் அளிக்கமுடியாத தத்துவப் பாடலாகும். பாதகாணிக்கை என்ற படத்தில் வந்த இந்தப் பாடலுக்கு மெல்லிசை மன்னரே இசையமைத்திருந்தார். இது பட்டினத்தார் பாடிய ஒரு பாடலின் வரிகள்தான் என்றால் அதைத் தெரியாதவர்கள் நம்பமாட்டார்கள். இதோ அந்தப் பாடல்.
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே (வீடுவரை உறவு)
விழியம்பு ஒழுக மெத்திய மாந்தரும் வீதிமட்டே (வீதிவரை மனைவி)
இரு கைத்தலைமேல் வைத்து அழுமைந்தரும் காடுமட்டே (காடுவரை பிள்ளை)
பற்றித் தொடரும் இருவினை பாவ புண்ணியமே..
.
இதில் கடைசிவரியில் குறிப்பிடப்பட்டிருக்கும் "கடைசிவரை கூட வருவது செய்த பாவமும் புண்ணியமுமே என்ற கருத்தைத் தனது பாடலில் குறிப்பிடவில்லை. அவரது நண்பர் ஒருவர் இதை ஏன் உங்கள் பாடலில் குறிப்பிடவில்லை என்று கேட்டதற்கு கண்ணதாசன் "இப்படியொரு புனிதமான கருத்தைச் சொல்லும் உரிமை பட்டினத்தாருக்கே உண்டு" என்று பதிலளித்திருந்தாராம்.
.
இந்தப் பாடலின் பொருளைக் கண்ணதாசன் அவர்கள் வெளியில் கொண்டுவராமல் இருந்திருந்தால் இவ்வாறான தத்துவ முத்துக்களை நாம் அறியாமலே அழிந்திருக்கும் என்பதுவே உண்மையாகிறது. திரு M.S.V அவர்களை நான் சுவிசில் சந்தித்தபோது ஒரு பத்திரிகை ஆசிரியராக அவரைப் பேட்டி காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவரிடம் கவிஞர் கண்ணதாசனைப் பற்றிக் கேட்டபோது என் தம்பி என்று கண்கலங்கியவர்; இறுதியில் பல விசயங்கள் கூறியதன் பின்னர் "கண்ணதாசன் தனது வாழ்வில் நின்மதி இல்லாமல் இருந்து எழுதிய பாடல்களைத்தான் நீங்கள் நின்மதியாக இருந்து கேட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்" என்று பதிலளித்தார். கண்ணதாசன் காப்பி அடித்தார் என்ற எழுத்தாளர் சுஜாதாவின் கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதற்காகவே இதை எழுதும் முனைப்பு எனக்குக் கிடைத்தது. நன்றி நண்பர்களே.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: