அயோத்யா காண்டம் - குகப்படலத்தில் ஓர் செய்தியை முன்வைக்கிறார் கம்பர். குகனுடைய நட்பை-அன்பை ராமபிரான் பெறுவதும், ராமனுடைய தெய்வ தரிசனத்தை முற்பிறப்பின் பயனாக குகன் கண்டு கொள்வதும், ராமனுடைய திருவடிப் பெருமையைக் குறிப்பிடுவதும்தான் இப்படலத்தின் சாரம் தனிச்சிறப்பு ஆகும்.
.
தனக்குத் துன்பம் வந்த காலத்தில் உற்ற நண்பனை அடைந்தவன்தான் இராமர். நல்லதொரு காலத்தே மிகச்சிறந்த நண்பனின் இயல்புகளை அளந்து பார்க்கக்கூடிய அளவுகோலாக ராமனுக்குக் குகன் உதவினான் என்பதைக் கம்பர் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
.
முருகப் பெருமானுக்குக் "குகன்' என்ற ஒரு பெயர் இருப்பதுபோல இராமாயணத்தில் வரும் குகனின் பிறப்புக்கும் ஒரு புராணக் கதையுண்டு.
இராமபிரானைப் பார்க்காமலேயே அவரது குணங்களைக் கேட்டறிந்து, அதன் காரணமாக அவர்மீது பேரன்பு கொண்டு வாழ்ந்த வேடன்தான் குகன். "பில்' எனும் மலைஜாதி இனத்தவரின் தலைவனான குகன். முரட்டு குணமும், மாமிசம் உண்ணும் பழக்கமும், பார்க்கவே அருவருக்கத்தக்க உருவம் கொண்டவனாக ஒரு காட்டுப் பகுதியில் குகன் வாழ்ந்து வந்தான். எனதருமை நண்பனே!'' என்று ராமபிரான் கட்டித் தழுவினார் என்றால் - இராமனின் அன்பும், நட்பும், திருவடிப் பேறும் குகனுக்கு வாய்த்திருக்கிறதென்றால், அவன் முற்பிறப்பில் ஏதேனும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்! அந்தப் புண்ணியத்தையும் குகனின் முற்பிறப்புப் பற்றிய வரலாறுமே இந்தச் சிறிய ஆய்வாகும்.
.
ஆன்மாக்களைப் புனிதமாக்கும் புண்ணிய நதி கங்கை. அந்தக் கங்கைக் கரையில் ஓர் அந்தண குலத்தைச் சேர்ந்த முனிவர் தவம் செய்துவந்தார். அவருக்கு ஏழு வயதில் ஒரு புதல்வன் இருந்தான். வேதங்களைக் ஐயந்திரிபுறக் கற்று அன்பும் பண்பும் அடக்கமும் கொண்டு அந்தச் சிறுவன் வளர்ந்து வந்தான். ஒருநாள் தந்தையைப் பார்த்து தெய்வங்களுக்குள் சிறந்த தெய்வம் எது?'' என்று கேட்டான்.
.
மகனே! நமது உடம்பின் உச்சியில் இருப்பது சிகை. வேதங்களின் முடிந்த முடிவாக உள்ளதும் உபநிடதம் அதர்வ சிகை. அதுபோல் தெய்வங்களின் தனிப்பெருந் தலைவர் முருகவேள். முருகன், மூவர் தேவாதி தேவர்கள் போற்றும் முழுமுதற் கடவுள். மறையாயிரங்களும் போற்றும் மகாதேவன். முருகனை வணங்கினால் எல்லா மூர்த்திகளையும் வணங்கியதற்கு ஒப்பாகும். அவன் கருணைக் கடல்; குணநிதி. முருகனை வழிபாடு செய்தோர், பிறவிப் பெருங்கடலைக் கடப்பர்; முக்தி பெறுவர்'' என்று முருகன் பெருமையை மகனுக்குக் கூறினார்.
ஒரு நாள் முனிவர் கேதாரம் வரை வெளியில் சென்றிருந்தார். அவர் திரும்பிவரும்வரை முனிவரின் மைந்தன் ஆசிரமத்தில் இருந்து, முருகன் திருவடிகளைத் சரிசித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மன்னன் ஒருவன், முனிவர் இல்லாததைக் கண்டு மன வருத்தத்துடன் திரும்பி நாடுசெல்ல நினைத்தான். அவ்வாறு திரும்பிய மன்னனைப் பார்த்து,
.
வேந்தே! நீர் என்ன காரணமாக வந்தீர்? உமக்கு என்ன கவலை? என்னைச் சிறுவன் என்று எண்ண வேண்டாம். ஓர் இருள் சூழ்ந்த வீட்டில் சிறுவன் ஒருவன் விளக்கை எடுத்துச் சென்றால், இருள் விலகத்தானே செய்யும்? சிறுவன்தானே என்று இருள் அலட்சியமாக எண்ணுமா? விளக்குதானே முக்கியம்! அதுபோல, நான் சிறுவனாக இருப்பினும் என்னிடம் "ஞானதீபம்' இருக்கிறது. உமது அறியாமையாகிய இருளை நான் அகற்றுவேன்'' என்றான் முனிவரின் மைந்தன்.
.
மன்னன் மகிழ்ந்து, ""குழந்தாய்! நான் இந்த நாட்டை ஆளும் மன்னன். வேட்டையாடியபோது குறிதவறி, நான் விட்ட அம்பு ஒரு முனிவரைக் கொன்றுவிட்டது. அதனால், பிரமஹத்தி (தோஷம்) தொடர்ந்து என்னை வருத்துகின்றது இதற்கு நிவாரணத்தை நாடி வந்தேன்'' என்றான்.
வேந்தர் பெருமானே! இவ்வளவுதானா! நீங்கள் இந்தப் புனிதமான கங்கையில் மூழ்கி, வடதிசை நோக்கி நின்று, ஒரு மனதுடன், "ஓம் முருகா' என்று மூன்று முறை கூறுங்கள் உங்களைப் பிடித்திருக்கும் பிரமஹத்தி உடனே அகலும்'' என்றான்.
மன்னனும் அவ்வாறே செய்து, பிரமஹத்தி நீங்கப்பெற்று, முனிவர் மைந்தனைப் பணிந்து, வினை நீங்கி மகிழ்ச்சியாக தன் நகரம் திரும்பினான்.
முனிவர், சில நாள்களுக்குப் பின் தமது குடிசைக்கு வந்தார். தன் தந்தையைப் பணிந்தான் மகன். முனிவர் தன் மகனைப் பார்த்து, ""மகனே! இங்கே தேர்ச் சக்கரத்தின் சுவடுகள் காணப்படுகிறதே, வந்தது யார்?'' என்று கேட்டார்.
"தந்தையே! இந்நாட்டு மன்னன் பிரமஹத்தி நீக்கம் பெறுவதற்காகத் தங்களைக் காண வந்தார். அதற்குரிய நிவாரணத்தை நானே கூறினேன். மன்னன் நான் கூறியபடி செய்து, பாவம் நீங்கித் துன்பம் அகன்று மகிழ்ச்சியாகத் திரும்பிச் சென்றான்'' என்றான்.
முனிவர் பெரிதும் மகிழ்ந்து, ""மகனே! வந்தவருக்கு ஆறுதல் கூறி உதவி செய்தாயே, இதுதான் பண்பாடு. அவருக்கு நீ என்ன பரிகாரம் கூறினாய்?'' என்று கேட்டார்.
"தந்தையே! பிரமஹத்தி விலக - கங்கையில் மூழ்கி, ஒருமனத்துடன் "ஓம் முருகா' என்று மும்முறை கூறுங்கள் என்றேன்''.
இதைக்கேட்ட முனிவருக்குக் கடுங்கோபம் பொங்கி எழுந்தது. "மூடனே! நீ என் மகனா? என்ன காரியம் செய்துவிட்டாய்? உனக்கு முருகன் பெருமை தெரியவில்லையே? ஒருமுறை "முருகா' என்று கூறினாலே ஆயிரம் பிரமஹத்திகள் அகலுமே... ஆனால் நீயோ, ஒரு பிரமஹத்தி விலக மூன்று முறை "முருகா' என்று கூறுமாறு கூறியுள்ளாயே! இது முறையோ? நீ முருக மந்திரத்தின் பெருமையை நன்கு உணரவில்லையே! ஆதலால், நீ வேடனாகப் பிறப்பாயாக!'' என்று மகனைச் சபித்தார் முனிவர்.
தந்தையைப் பலமுறை வேண்டிப் பணிந்து, தன் பிழை பொறுக்குமாறு மகன் வேண்டினான்.
முனிவர் சினம் தணிந்து, ""மகனே! புனிதமான இதக் கங்கைக் கரையில் நீ வேடர் குலத்தில் பிறப்பாய்! வேடனாகப் பிறந்தாலும், "முருகன்' நாமமாகிய "குகன்' என்ற பெயருடன் விளங்குவாய். நற்குண சீலனாக இருப்பாய். இக்கங்கைக் கரைக்கு ராமபிரான் அவதாரம் எடுத்து வரும் சமயம், ராமபிரானுக்கு உற்ற-உயிர் நண்பனாகி, அவர் பாதம் பணிந்து, அவரது அருளுக்குப் பாத்திரமாகி பிறவிப்பயன் பெறுவாய்!'' என்று சாப விமோசனமும் கூறினார்.
அந்த முனிவரின் மைந்தன்தான் கங்கைக் கரையில் "சிருங்கிபேரம்' என்ற ஊரில் வேடனாகப் பிறந்து, "குகன்' என்ற பெயருடன் வாழ்ந்து ராமச்சந்திர மூர்த்திக்கு உயிர்த் தோழனாகி சசாபவிமோசனம் பெற்ற குகப்பெருமாள்! இதுதான் குகனின் முற்பிறவி வரலாறு. முருகப் பெருமானைப் போற்றியதால் கிடைத்த பெரும்பேறு!
காரணம் இல்லாமல் காரியம் இல்லை' என்பதை நிரூபிப்பவைதான் நமது இந்து இதிகாசங்களும் புராணங்களும் காப்பியங்களுமாகும்.
கம்பர் கூறிய குகப்படலத்தின் சாரம் இதுதான்:- எத்தனை இழிந்த பிறவியாக இருந்தாலும்கூட, இறைவனிடத்தில் தூயபக்தி இருக்குமானால் - கள்ளங் கபடமற்ற அன்பிருக்குமானால், அவன் இறைவனின் திருவடியை அடைந்து அவரது அருளுக்குப் பாத்திரமாகிப் பேரின்பப் பெருநிலையை அடைய முடியும் என்பதற்குக் குகனும் ஒரு உதாரண புருசனாவார்.
1 Comments:
Thank you sir to let me know about kugans story.
Post a Comment