கோல்ட்ஸ்மித் என்ற பெரும் எழுத்தாளரைப் பார்த்து டாக்டர் ஜான்ஸன் என்பவர் "அவர் தொட்டதை அழகுபடுத்தாமல் விட்டதில்லை" என்று கூறியிருக்கின்றார். மனதிற்குப் பிடித்த ஒருவரைப்பற்றி என்ன கூறுகிறார் என்பதைவிட ஏன் கூறுகிறார் என்பதை வாசிப்பவர்கள் தெரிந்து கொள்வதே ஒரு சரியான அணுகு முறையாகும். ஏதோ ஒரு வகையில் தாய் நிலத்தைவிட்டுக் கடல் கடந்த தமிழர்கள் அவர்களது கலாச்சாரங்களை மட்டுமல்ல, கடவுள்களையும் தம் அகத்தே கொண்டு சென்றார்கள் என்பது வரலாற்று உண்மையாகும். "கடல்கடந்தான் தமிழன், கற்பூரதீபம் கண்டான் இறைவன்" என்று கண்ணதாசன் குறிப்பிடுவதுபோல அதை நடைமுறை வாழ்க்கையிலும் கொண்டுள்ளவர்கள் மலேசியாவில் வாழும் தமிழ் மக்களாவார். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் ஒருவராக வாழும் தொழில் அதிபர் டாக்டர் திரு ஆதிசீசன் அவர்களைச் சந்திப்பதற்காக நான் ஆயத்தமானேன்.
.
வந்தியத்தேவனுக்கு இலட்சனை மோதிரம் கிடைத்ததுபோல் மலேசியாவில் பிரயாணிப்பதற்கு எனக்கும் ஒரு வாகனம் கிடைத்தது. கோலாலம்பூரிலிருந்து செல்லவேண்டிய தூரம் 360 கிலோமீட்டர்கள். சுவிற்சர்லாந்தில் இடப்பக்கம் ஓட்டிப் பழகிய எனக்கு அங்கு வலப்பக்கம் ஓட்டுவது சிறிது கடினமாகவே இருந்தது. 125 கிலோமீட்டர்கள் ஓட்டிய மகிழ்ச்சியுடன் செல்வி புனிதா அம்மை அவர்களிடம் காரை ஒப்படைத்து விட்டென். அவருக்கு அங்குள்ள பழக்கப்பட்ட சாலைகளும், தனது காரும் சாதகமாக இருந்ததால் சிரமமில்லாத ஒரு பயணத்தை எங்களுக்கு வழங்கினார். 240 கிலோ மீட்டர்களை ஒரே மூச்சில் ஓட்டிமுடித்துக் குறிப்பிட்ட இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.
.
மாலை நேரம் மழைச் சிணுங்கல்களுடன் தெருவிளக்குகள் "ஐயனே ஒல்லைவா" என்று கம்பரின் வார்த்தையில் என்னை அழைத்தது போல் இயற்கையின் வரவேற்புகளோடு அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அழகு படுத்தப்பட்ட அந்த இரண்டடுக்குமாடி வீட்டை மனை என்று சொல்வதைவிட அரண்மனை என்று சொல்லுவதே பொருத்தமானதாக இருக்கும். பண்டைத் தமிழர் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும், தங்கள் வாழ்க்கையோடு கடைப்பிடித்துவரும் இவர்கள் விருந்தினரை வரவேற்கும் விதம் அருமையாக இருந்தது. வீட்டுக்குச் செல்வதற்கு முதல் கால்களைக் கழுவிச் செல்வதற்கான பழந்தமிழர் பண்பை நடைமுறையில் கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டினுள் மனைவி, மக்கள், மருமக்கள், பேரக் குழந்தைகள், பெறாமக்கள் உறவினர்கள் என்று இருந்தவர்கள் யாவரும் இன்முகம் காட்டி என்னை வரவேற்றார்கள். கூட்டுக் குடும்பம் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அந்த அமைப்பையும், அன்புகலந்த வாழ்க்கை நெறியையும், கட்டுப்பாடான ஒழுக்கமும், பெரியவர்களுக்கான மரியாதையும் அவர்கள் இல்லத்தில் ஆட்சி செய்வதை உள்வாங்கிக் கொண்டேன்.
.
தங்கள் வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் அன்னியப் படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் எல்லோரும் அக்கறையோடு என்னைக் கவனித்தார்கள். அகத்தியருக்கு இந்திரலோகத்தில் கிடைத்த வரவேற்பைவிட எனக்கு அவர்கள் குடும்பத்தில் பெரும் வரவேற்புப் கிடைத்தது. சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை வந்தோரை வரவேற்பதில் மிகவும் ஆர்வம் காட்டி என்னுடன் உரையாடினார்கள். மழலைச் செல்வங்கள் கூட அடிக்கடி வந்து என் மடியமர்ந்து தங்கள் அன்பைத் தெரிவித்துச் சென்றார்கள். திரு ஆதிசீசன் அவர்களும் அவரது மனைவியும் பெருமைகளின்றி வாழும் மனம் படைத்தவர்கள். அவர்கள் காட்டிய இன்முகத்தில் அவர்களது அகத்தின் அழகைக் கண்டு மகிழ்ந்தேன். இல்வாழ்வான் என்பவன் இயல்புடையவர்களுக்கு மட்டுமல்ல, செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருப்பதிலும் உயர்ந்தவர்கள் என்பதை இவர்களது விருந்தோம்பல் பண்பிலிருந்து அறிந்து கொண்டேன். இராப்போசன மேசையில் மலேசிய நாட்டுப் பிரதமர் கூறியதுபோல "சத்து மலேசியா" (ஒரே மலேசியா ) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மூன்று முக்கிய இனத்தவர்களின் (மலாய்காரர், சீனர்,தமிழர்) உணவுகளும் பல நிறங்களில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றிற்கு எனக்குப் பெயர்கள் தெரியவில்லை, இருந்தும் புதிய புதிய உணவுகளை அன்போடு பரிமாறியதால் அவற்றை அமுதமாக எண்ணி ருசித்தேன்.
.
25.12.2012 ஆம் திகதி. திரு ஆதிசீசன் அவர்களின் பெறாமகன் சரவணன் அவர்களுக்கு பிறந்ததினம். அதற்கான ஏற்பாடுகளை அவரது பிள்ளைகள் அவருக்குத் தெரியாமலே ஏற்பாடு செய்து 24.12.2012 அன்று இரவு 12 மணிக்கு அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்ந்தனர். எனக்கும் அவரது பிறந்தநாளுக்கு அவருடன் இருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.
.
(டாக்டர் ஆதிசீசனுடைய ஒரு தொழிற்பேட்டையின் அமைவு)
.
இரண்டு நாட்களும் திரு ஆதிசீசன் அவர்களுடன் உரையாடியதில் அவரது தொழிற் பேட்டைகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலிட்டது. இதனை அறிந்து கொண்ட அவர் மறுநாள் தனது தொழிற் பேட்டைகளைக் காட்டுவதாகக் கூறியிருந்தார். விருந்தினர்களைத் தங்கவைப்பதற்காகப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இல்லத்தில் எனது இராப் பொழுதுகள் இன்பமாகக் களிந்து கொண்டிருந்தன.
.
கப்பலோட்டிய தமிழர்களையும், திரைகடல் ஓடித் திரவியம் சேர்த்த தமிழர்களையும் படித்திருக்கிறேன். மலேசியாவில் இருந்து கடல்கடந்து வாணிபம் செய்து தன் வர்த்தகத்தில் வெற்றி கண்ட ஒரு தமிழனை இன்று சந்தித்ததில் பெருமை அடைகிறேன். படத்தில் இருக்கும் தொழிற்காலைகள் போல் 4 பெரிய நிறுவனங்களைத் தன்னகத்தே கொண்டு நிர்வகித்துவரும் இவர் தனது முயற்சியாலும், தெய்வ நம்பிக்கையாலும், தான் கொண்டுள்ள தன்நம்பிக்கையாலும் வெற்றியடைந்தவர். ஏற்றுமதி, இறக்கமதி வர்த்தகத்திற்காகவும், பொருட்களைக் கொண்டு செல்கின்ற போக்கு வரத்துச் செலவுகளை மட்டுப் படுத்துவதற்காகவும், சிங்கப்பூருக்கு அண்மையில், கப்பல் துறைமுகத்திற்குப் பக்கத்தில் தொழிற் பேட்டைகளை அமைத்திருப்பது அவரது புத்திசாலித் தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இளமைப் பருவத்திலிருந்தே வர்த்தகம் சமபந்தமான கற்கை நெறிகளையும் ஏற்றுமதி இறக்குமதி வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான நுட்பங்களையும் தான் வேலை செய்த நிறுவனங்களின் ஊடாகப் பெற்ற அனுபவங்களையும் தனது தொழிலுக்குச் சாதகமாகப் பயன்படுத்திய இவருக்கு தனியான ஒரு வர்த்தகத்தை அமைப்பது பெரும் சிக்கலாகத் தோன்றவில்லை. இவற்றிற்கெல்லாம் மேலாக இவர் தனது மனைவியை இறைவனுக்குச் சமமாக இடப்பாகத்தே சுமந்துவாழும் வாழ்க்கை; இவருக்கு இலட்சுமி கடாட்சம் பொருந்திய ஒரு கொடையாகும். ஒருவனது உயர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் புகழுக்கும் காரணமாக ஒரு பெண் பக்கத்துணையாக இருப்பார் என்பதை உண்மைப்படுத்தி வாழும் இந்தப் பெரியவர் இன்னும் பல படிகளைத் தனது தொழிற் திறமையால் தாண்ட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இடப்பக்கம் என்று நான் கூறினாலும் தனது வலக்கரமே தன் மனைவிதான் என்று என்னிடம் கூறிப் பெருமைப்பட்டார் அருமை நண்பர்.
.
"பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட் பேறு அல்ல பிற" என்ற குறளுக்கு அமைய அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவும் இல்லை என்பதனைக் கடவுள் அளித்த வரமாகக் கருதும் இவருக்கு அவரது பிள்ளைகளும் மருமக்களும் உறுதுணையாக இருப்பது வாழ்வில் கிடைத்த பெரும் பேறாகும். அதனால்தான் ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாயும், தந்தை மகற்காற்றும் நன்றியும், மகன் தந்தைக்காற்றும் உதவியும் "எந்னோற்றான் கொல் எனும் சொல்" ஆக இருக்கும் அவரது வாழ்வியல் தேடல்; முயற்சியுள்ள பலருக்கு இந்த உலகத்தில் ஓர் உதாரணமாக அமைந்திருக்கிறது.
.
(தொழிலதிபர் டாக்டர் ஆதிசீசனுடன் அவரது ஒரு தொழிற்சாலையில் நான்)
.
சொந்த வியாபாரத்தை வைத்துக்கொள்ள வேண்டுமென்ற தீராத ஆசை தொழில் ஆரம்பிப்பவருக்கு இருக்கும் ஒரு இயல்பான தைரியமாகும். ஒருவர் தனது இலட்சியத்தை அடைய வேண்டுமாக இருந்தால் தைரியமும், அர்ப்பணிப்பும் முழுமையாக இருக்க வேண்டும். தொடங்கிய வியாபாரத்தின் மீது நேர்மை இருந்தால், அவர்களது இலட்சியத்தின் மீதான முயற்சி இன்னும் கூடுதலாக இருக்கும். இந்த உண்மையை நண்பரும் தொழிலதிபருமான திரு ஆதிசீசன் அவர்களிடம் கண்டேன். இவரது வர்த்தகத்தில் முக்கிய பொருட்களாக இருப்பது மலேசியாவில் தயாரிக்கப்படும் செம்பனை எண்ணை (Palm Oil) ஆகும். சிறிலங்கா, மடகாஸ்கர் போன்ற நாடுகளுக்கு இவரது எண்ணை கணிசமான அளவிற்கு ஏற்றுமதியாகிறது. தவிர உள்ளுரிலும் கொக்கா கோலா (Coca-Cola) குளிர்பானத்தின் ஏக விநியோகத்தராக உரிமை பெற்றுள்ளார். இவ்வாறான ஒரு பெரும் வர்த்தகத்தைக் கட்டி எழுப்பித் தான் மட்டும் வாழாது தன்னுடன் சேர்ந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும், ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவி செய்வதில் மனம் மகிழ்கின்றார் இம்மாமனிதர். பெருமை அணியுமாம் சிறுமை என்ற வள்ளுவர் வாக்கிற்கு இணங்க கொஞ்சம் கூடப் பெருமை இல்லாத உயர்ந்த மனிதரையும் அவர்தம் குடும்பத்தாரையும் நான் சந்தித்ததில் பெருமை அடைகிறேன்.
.
எல்லோர்க்கும் பெய்யும் மழை என்று ஓளவையார் கூறுவது; மழை கிடைத்து நன்மை பெறும் மக்களுக்கு மட்டுமல்ல, மழைபோல் நன்மை அளிக்கும் எல்லாப் பெரியவர்களுக்கும் பொருந்தும் என்பதே என் கருத்து. என் இதயத்திலும் மழையாக இருக்கும் இந்தப் பெரியவரைப்பற்றி எழுதியதில் நான் மனம் மகிழ்கிறேன். ஆதி பகவான் முதற்றே உலகு என்பதுபோல, இவரையும் கடவுள் ஆசீர்வதித்திருக்கின்றார் என்று கூறுவதையே நான் இவருக்குச் செய்யும் கைமாறாகக் கருதுகிறேன். வாழ்க! வளர்க!!
"தோன்றிற் புகழொடு தோன்றுக - அகிதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்றே"