வணக்கம். நண்பர் Rajagi Rajagopalan அவர்களது ஏதோ ஒரு கவிதைக்கு "பெண்களின் இதயங்களைப் பாடமாட்டீர்களா" என்று ஒரு தோழி கேட்டிருந்த நினைப்பு எனக்கு இருந்தது. அவ்வாறான தோழமைகளுக்கு இக்கவியைச் சமர்ப்பிக்கிறேன்.
காற்றுப் புரவியில்
கங்கைப் புனலாய்
காவிரி கடந்து
மருதம் வந்த
குறிஞ்சிக் குமரா;
குணகடல் உதித்துக்
குடகடல் விழுந்த
அடிபட்ட ஆதவனின்
காயத்தின் சிவப்பாய்
வானத்து முகில்கள்;
போதாகிய குவழைக்குத்
தூதாகவந்து என்னைத்
தோதாக்கித் தொழுதவனே!
கோதாகி நானும்
மோப்பத்திற் குழைந்து
தூக்கி நிறுத்துகையில்
தோளிலே ஒடிந்தவள் நான்.
புவிச் சூட்டின் வெப்பம்
உன் மடிச்சூட்டிற் கண்டு
என் கணச்சூட்டின் தட்பம்
கன நாளாய் மறந்தேன்.
கன்னத்துக் குழி தந்த
கிண்ணத்து மதுச்சுவையில்
குத்துகின்ற அரும்பாய் மீசை
கொட்டுகின்ற கரும்பாய் ஆசை.
வித்தைபேசும் அத்தை மகனே
மெத்தைக்குக் ஏனோ கண்ணி!
கள்ளத்தில் தானோ புள்ளி.
கோதை என் உடலுக்குள்
கொழுந்து விட்ட மாயவனே
போதி மர வேதத்தைக்
கிழித்தெறிந்த காமன் நீ.
திடந்தோளில் தடமாகி
வடந்தேடும் தேராய் நான்
வழிதேடி வந்து உந்தன்
வலக்கரம் பற்றிவிட்டேன்.
மார்போடு எனை அணைத்தாய்
மலை நொறுங்க வலிசுமந்தேன்.
சிலைபோல நான் உறைந்து
உலையாகிக் கொதித்து
வலைபட்ட மீனாகக்
கடலேறத் துடிக்கின்றேன்.
வரைபாய்ந்து வந்திங்கே
தாழம்பூ தழைப்பதற்காய்த்
தாம்பூலம் மாற்றிவிட
இமைப்பொழுதில் வாடா - என்
சேலையில் சிக்கிய சிங்கமே!
(புரவி - குதிரை, குணகடல் - கிழக்குக்கடல், குடகடல் - மேற்குக் கடல், போதாகி - விரிந்த, கண்ணி - கணை, வரைபாய்ந்து - மலை பாய்ந்து, சேலையில்- கண்ஜாடையில)
0 Comments:
Post a Comment