RSS

எனது புலன்விசாரணையில் கவிஞர் பீரொலி ஐயா அவர்களின் சாட்சியம்.


 அனைவருக்கும் வணக்ககம். திரு பீரொலி ஐயா அவர்கள் எனது நண்பர் மட்டுமல்ல. ஒரு சிறந்த இலட்சிய வாதியும்கூட. தனது வேலைப்பளுவின் மத்தியிலும், மின்சார வெட்டின் காரணமாகக் கணனிப் பாவனை குறைந்துள்ள  வேளையிலும் எனது நூலுக்கான சிறந்த விமர்சனத்தைத் தந்திருப்பது மேலும் பல புதிய  பதிவுகளுக்கு என்னை அழைத்துச் செல்கிறது. நன்றி ஐயா!

 
 கங்கை மகனின் புலன்(களின்) விசாரனை
-ஓர் அதிசய நிகழ்வு
கவிஞர் கங்கை மகன் அய்யாவின் புலன் விசாரணை  நடைபெறும் நீதி மன்ற வளாகத்திற்குள் எதேச்சையாக ஒரு பார்வையாளனாய் நுழைகிறேன். அங்கு முதன்மை மற்றும் குறுக்கு விசாரனை முடிந்து மறு விசாரனை நடந்து கொண்டிருக்கிறது. நான் நுழைந்தது நீதி மன்றமா அல்லது வானுலகின் சொர்க்கப்புரி நந்தவனமா என்று அதிசயித்து வியந்து மலைத்து நிற்கிறேன்.
" மாடத்துப் புறாக்களுக்கு
மதனரசம் விஞ்சி நிற்கும்"
" பூவிதழ் இதுதான் என்று
பலரிதழ் பட்டுச் சிவந்த
பரத்தையர் அதரம் தன்னை
எந்நீத்துக் களிப்பாயோ ?"
இளமுகிழ் மார்பதனில்
தொய்யிற்படம் பார்த்தவன் நீ"
"வேர்ப்பலாச் சுளை நிகர்த்த
செம்பருத்திச் சிற்பம்- இங்கு
மரித்து மடிக்கின்றாள்"
மெய்மறந்து இலைத்துப் போயிருந்தவன் ஸ்பரிசம் பட்டுத் திரும்ப அருகிலிருந்தவர் இருக்கையில் அமரப் பணித்தார். சன்னமாய் விசாரனையின் பொருள் பற்றி வினவ அவர் கூறினார் 'அகத்திணைப் பாத்திரங்களின் ஐவகை ஒழுக்கங்களையும் சுமந்த உணர்ச்சி தழும்பும் நாடகத்தின் நாட்டிய நர்த்தனங்கள்'
விசாரனைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

"சங்குவளை தோள் அரிவை
விரல்பட்டு உடல் உறையும்
நிறைக் கட்டுக் கரும்பாக
படுக்கையிற் பிறந்திருப்பாள்
தினம் தினம்"
"காதல் சிற்பங்களின்
கடைசி முத்தம்."
'விழி எழுதும்
முடங்கல் கண்டு
ஊனமுற்ற மொழிகள்"
"வாழை மடல் துடையை
மனதிற்குள் செருகிவிடும்
பருத்த வாளை மீன்கள்"
அவன் கேட்கிறான் அந்த நீதி தேவதையைப் பார்த்து

"பூமிநங்கை நாணத்தில்
இருளாடை கட்டும் வேளை
எனக்குள்ளே நடக்கிறது
உன் நினைவு தோய்ந்த
புலன் விசாரனைகள்."

"கலவியல் இலக்கணங்கள்
அன்றாடம் படிக்கும்
அரிச்சுவடி மாணவ்ன் நான்"
" பார்வைக் குண்டூசிகளைப்
படைத்தவன் எவனோ?"
"உன் படைக்கல வலையத்துள்
நான் அடைக்கலம் ஆன்பின்னும்
எனக்கு ஏன் ஆயுள் தண்டனை ?"
தீர்ப்பு ஒத்திவைக்க நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளிவருகிறேன். என் செவிகளுக்குள் 'சாமத்துப் போர்க்களத்தில்
காமத்துத் தீவிரத்தில்
அல் வந்து இல் ஏகும்
கன்னம் கொண்ட கனிகள்
கிண்ணம் தந்த மதுவும்"
ஆடை பூண்ட மாலைபூத்த மல்லிகை மின்னல் கண்டு இன்பம் சுற்ற
அந்த விசாரனை ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது.

"மண்ணில் படைத்துவிட்ட
புதுக்கவிதைப் பூங்காவின்
புலன் விசாரணைக்குள்
புதுக்குடி வந்தவளே"

"பாரம் சுமக்கும் இடையில் நீ
பாடம் நடத்தும் முறையில்
ஓரப் பார்வை விழியில் உன்
மனதின் ஓசை மொழியில்
விழுந்து விட்டேன் மடியில்"
முதன்மை மற்றும் குறுக்கு விசாரனையைத் தவறவிட்ட வருத்தத்தில் முதன்மை மற்றும் குறுக்கு விசாரனையை நடத்திய மேதைகளான உயர்திரு நயினை குலம் வீரவாகு,கிருஷ்ணன் பாலா, துளசி தாசன் மற்றும் நாணற்காடன் அனைவரையும் தேடிச் சென்று அறிந்து கொண்டேன்.

"குழை நக்கும் தோளழகி
வளை நக்கும் கையழலி
துகில் நக்கும் இடையழகி"
"காதலின் எல்லை காணக்
கலவியின் ஆழம் சென்றார்"
'ஆழ் கடலில் மூச்சு அடக்கி கங்கை மகன் எடுத்து வந்த முத்துக்கள்.....தேன்கூடு புலன் விசாரனை" (உயர்திரு. நயினை குலம் வீரவாகு)
"புதிய சொல்லடுக்கும் சுவை மிகும் மிடுக்கும் கூட்டி இங்கே சொற் சிலம்பம்............இந்தக் கவிதைப் பூக்களுக்கு யாரும் வாசம் தெளிக்க வேண்டியதில்லை........கருத்தோடும் இந்தப் புலன் விசாரணையைத் தகிதா வெளியீட்டாளர் முடுக்கிவிட்டனர்" (உயர்திரு. கிருஷ்ணன் பாலா)

விதைக்கப்படாத கவி எனும் விதை; முளைக்காது. கவியைக் கொண்டு அதை வாசிப்பவர்களின் மனத்தில் கருப்பொருளை விதைப்பதே கவிதையாகும். விதையில்லா கவி கவியா?..விதைத்த விதை கவிதையா?.....தன் கவியால் விதையை விதைத்துவிட்டு செல்பவன்தான் கவிஞன்"( உயர்திரு. துளசி தாசன்)
விசாரனைக்குள் நுழைந்தேன்.
."விரல் கொண்டு கதை எழுதி
என் மேனி சுட்டவனே
இதழ்மீது படங்கீறி
உயிருருகச் சாணைப் பிடித்தாயே
உறிஞ்சிவிட்ட தேனெல்லாம்
ஒரு நொடியில் தீர்த்ததுபோல்
புலருமுன்னே சென்றாயோ
புது மலரை நாடி."
குறுக்கு விசாரனையில்

" ஓடுகின்ற நாடிக்குள்
தேடுகின்ற இடம் எல்லாம்
அவள் நாமம் சிந்திக் கிடக்கிற
சேதியையாரரிவார்
என்னவள் பெயர் சொல்லி
இன்னும் துடிக்கிறது என் இதயம்”

"நிலவைத் தொலைத்த வானம்
பூமியில் உன் முகம் கண்டு மகிழ்ந்து
விதைத்த வளையல்கள் வழிபார்த்து
கருக்கலுக்குள் வந்திடுவேன்"
புலன் விசாரனை தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
"இரவைக் குழைத்து அப்பிவைத்த உன் கூந்தல் வெளிச்ச இருட்டில் நட்சத்திரங்களைத் தேடுகிறேன்....உலகத்தில் ஒரு புள்ளியில் நீ...நதியாய் நான்....என் உயிரைத் துளியாக்கி உன் மீது சொரிவதற்காய்...அனல் இடை மெழுகாகிப் புதுப் புனலாகப் பொழிகிறது அவள் மீது என் அடைமழை
புலன் விசாரனைக்குள் கருக்கொண்ட அகத்திணை ஐவகை ஒழுக்கம் சுமந்த உணர்ச்சி பொங்கும் காவியத் துடிப்புக்களில் கறைந்து போய்.....கனவுகளுடன்...அந்த பாத்திரங்களுடன் உரையாடியவண்ணம் தொடர்கிறேன்
வாழ்த்துக்கள் கங்கை மகன் அய்யா

அன்புடன்
மு. ஆ. பீர்ஒலி.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: