சகுனம் பிழைத்த
அதிகாலை
வயிற்றில்
உண்டாகும்
பனிச் சிசுக்களைச்
சூரியக்கதிர்
தினமும் கலைக்கிறது.
இருந்தும்
மறுபடியும்
கர்ப்பமாகிறேன்
சூரியனே
குந்திக்கு மட்டும்
வரமா?
பூமித்தாயின்
பட்டுச் சேலை.
மலைமுகடுகளின்
முந்தானை நான்
கட்டிப்புரளும்
காதலர்களின்
பஞ்சுமெத்தை.
உலகக் கோப்பைகள்
என்னோடு
உருள்கிறது.
மரடோனாவின்
விசிறி நான்.
எனக்கும் காற்பந்தில்
ரசனை உண்டு.
உன் நடைபாதை
முட்கள்
என்மீதே விழுகிறது
நீ பாக்கியசாலி
நான் உன்
மகிழ்ச்சிக்காய்ச்
சிதைந்தவள்.
புத்தர் மிதித்தும்
புனிதமானேன்
இயேசுபாதம்
தொட்டும் மகிழ்ந்தேன்.
நீ தொட்ட இடங்கள்
பசலை பூத்தன.
ஒவ்வொரு
நாட்டிலும்
பாப்பரசரிடம்
பத்தினிப் பட்டம்
கிடைக்கிறது.
தாவர பட்சணிகளுக்குக்
காராம்பசு.
உழவர்களுக்குக்
கற்பகதரு.
நாங்கள்
பல சாதி
இருந்தும்
கலவரம் இல்லை.
சிவபுராணம்
சொன்ன
முதல் பிறப்பு.
ஓரறிவு தான்
அனுபவம்
யுகக்கணக்கில்.
காட்சிக்குப்
பச்சை
கண்ணிற்குக் குளிர்ச்சி
முதுமொழி
ஒன்றிற்கும்
நான் முன்னோடி.
என்னுள் வாழும்
உயிரினங்கள்
உன் பாவத்தைப்போல்
தெரிவதில்லை
சந்தோசப்படு.
விஞ்ஞான
இயந்திரங்கள்
மேனி விழுந்து
வல்லுறவு தொடர்கிறது.
இருந்தும் வாழ்கிறேன்.
மனித
அவலங்களைக்
கீழிருந்து பார்த்து
மகிழ்வதற்காக.
ஒருவரை
மிதித்து வாழ்வதே
மனிதனின்
பிழைப்பாய் ஆச்சு.
0 Comments:
Post a Comment