RSS

ரா...ரா....


சிவபூமி இது சித்தர்களில் ஒருவரான திருமூலரின் இலங்கையைப் பற்றியகூற்றாகும்.  இதற்குக் காரணம் இலங்கையில் சிவனை வழிபடும் மக்கள் ஆதிகாலம் தொட்டு வாழ்ந்தார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். "இராவணன் மேலது நீறு! எண்ணத்தகுவது நீறு" இது திருநீற்றின் பெருமைக்கு இராவணனும்  ஒரு காரணம் என்பதைத் திருஞானசம்பந்தர் வாயிலாக நாம் அறிந்த உண்மையாகும். கம்பரின் காமன் என்ற சொல்லை மாற்றிக் கருணைஉளம் கொண்ட கலைஞனாக இராவணனைப்  பார்த்தவர் சம்பந்தராவார். ஒருவன் கதாநாயகனாக வரவேண்டுமானால் அதே கதையில் ஒருவனை வில்லனாக நடிக்கவைக்கவேண்டும் என்பது காப்பியங்களின் பண்பு.  இராவணன் நடித்தாரா நடிக்க வைக்கப்பட்டாரா என்பதில்தான் குழப்பங்கள்.
.
இராவணனுக்கு எப்பவும் தொடாமல் தூக்கும் பழக்கம் இருந்தது. தாய் சிவபக்தை தன்  வயதான காலத்தில் சிவன்கோவிலுக்குச் சென்று வணங்கமுடியாது என்பதால் இராவணன் சிவனை மலையுடன் சேர்த்துத் தாய்க்காகத் தூக்கியவர். அதேபோல் சீதையைத் தொடாமல் தூக்குவதற்கும் பல காரணங்கள்  இருந்ததன. அவை என்னவென்று காண்பதில்தான் குழப்பம். இராவணனுக்கு இரண்டு தங்கைகள் இருந்தார்கள். இது தணிக்கை செய்யப்பட்ட ஒரு கதை. ஒருவர் பெயர் யாவா; மற்றவர் பெயர் சுமத்திரா. இந்த இரு தங்கையருக்கும் அவர்கள் பெயரில் சீதனம் கொடுக்கப்பட்ட இடம்தான் இந்தோனேசியாவில் இருக்கும் யாவா; சுமத்திரா. இராவணனது ராச்சியம் தென்னிழக்காசியாவில் பரந்து இலங்கையைத் தலைநகராகக் கொண்டு திகழ்ந்தது என்பதற்கு இதுவே போதுமானதாகும். இடையில் ஒரு காமடி.
.
இராமாயணத்தில் இராமரினதும் சீதையினதும்  வயது குறிப்பிடப்படுகிறது. ஆரண்ய காண்டத்தில் சீதையை இராவணன் தூக்கிச் செல்லும்போது அவளுக்கு வயது 18 என்று சொல்கிறார்கள். சீதை அசோகவனத்தில் அனுமானைப் பார்க்கும்போது   இராமரோடு அயோத்தியைவிட்டுக் காட்டிற்கு வந்து 12 வருடங்கள் வாழ்ந்ததாகச் சொல்கிறாள். அப்படி என்றால் உப்பரிக்கையில் இருந்து சீதை இராமரை விசுவாமித்திரரோடு பார்த்தபோது அவளுக்கு வயது 6. இந்த 6 வயதுக் குழந்தை பார்த்ததையா கம்பர் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்றும்; தோள் கண்டார் தோளே கண்டார் என்றும் சொல்லுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது.


அழைப்பின் பெயரில் சிவனிடம் கைலைமலைக்குச் சென்ற இராவணன் சகல வல்லமைகளும் பெற்றுத்திரும்பும் வழியில் வானத்தில் உமாதேவியார் இராவணன்முன் தோன்றகிறார். என்னிடமும் சில வரங்களை வாங்கிச் செல் மகனே என்று உமாதேவியார் சொல்கிறார். சிரித்துவிட்ட இராவணன் கடலுக்கே உப்பா என்ற பாணியில் சிவனைவிட இந்த உலகத்தில் ஒருவரும் எனக்குப் பெரிதில்லை. உனது வரத்தை நீயே வைத்துக்கொள் என்று சொல்லிப் பயணத்தைத் தொடர்கிறான். ஆத்திரம் அடைந்த தேவியார் இராவணனுக்கு "உன்னை ஒரு பெண்ணாலே அழித்துக் காட்டுகிறேன்" என்று சபதம் இடுகிறார். இராவணன் போடி என்று மகத்திற்குள் சொல்லி நாடு திரும்புகிறான்.
.
இராவணனுக்கு முதலாவதாகப் பெண்குழந்தை பிறக்கிறது. உமாதேவியாரின் சாபத்தை நினைத்துத் தன்னுள் பயந்த இராவணன் அந்தக் குழந்தையை யனகரின் வயலில் கொண்டு சென்று விடுகிறான். யனகர் அந்தக் குழந்தையை எடுத்துச் சீதை என்று பெயரிட்டு வளர்க்கிறார்.

இராமருடன் காட்டுக்குச் சென்ற சீதை அங்கு துன்பப்படுவதை ஒரு தகப்பனால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாமல் சீதையைத் தூக்கிச் சென்று அசோகவனத்தில் பாதுகாப்பாக வைக்கிறான் இராவணன். வால்மீகிககு இது தெரிந்திருந்தும் வித்தியாசமான போக்கில் கதையை வணக்கம் வரை கொண்டு செல்கிறார்.
.
இராவணனுக்கு ஒரு மகனும் இருந்தான் அவன் பெயர் இந்திரசித்து.  சீதை சகோதரி என்ற விடையம் இந்திரசித்துக்குத் தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடி உல்லாசமாக வாழும் இந்திரசித்து சீதையின் அழகைக்கண்டு கவர்ந்து பாலியல் வன்முறை செய்து விட்டால் குலத்திற்கே நாசம் என்பதை எண்ணிய இராவணன் சீதையைத் தூக்கி அவளுக்குப் பாதுகாப்புக் கொடுத்திருக்கலாம் என்பதற்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன.
.
இராவணன் ஒரு பெண்ணை விருப்பம் இல்லாமல் தொடுவானாக இருந்தால் தலைவெடித்து இறப்பான் என்பது கடவுள் வரங்களில் ஒன்று. அதனால்தான் சீதையைத் தொடாமல் தூக்கினான் என்பதையும் உணரலாம்.  இராவணன் இராமர் வேடம் பூண்டு சீதையைத் தொடாமல் இருந்ததற்கும் இதுவே காரணமாகும். ஆனால் கம்பர் ஒரு ஏகபத்தினி விரதனின் உருவத்தை எடுக்க இராவணனுக்கு விருப்பம் இல்லை என்று கதாநாயகன் புகழ் பாடுகிறார். தலை வெடிக்கும் விடையத்தைச் சீதையும் பணிப்பெண்கள் மூலமாக அறிந்து பயம் தெளிந்து இருந்தாள் என்று வால்மீகி கூறுகிறார். .
.
இராமாயணத்தில் போர்முறைகளுக்கு எதிராக வாலியை இராமர் ஒளித்திருந்து தான் கொன்றார் என்று சொன்னவர்கள் அதுதான் அவரது விதி என்று கணக்கை மூடி இராமரை மீட்கின்றார்கள். எது எப்படி இருப்பினும் இராவணனைக் கொன்றவுடன் இராமர் தனது ஆன்மாவைத் தானே கொன்றேன் என்ற குற்ற உணர்வுக்குள் வந்தார் என்று ஒரு ஞானி கருதுவது சரியாக இருக்கிறது. ஆன்மாக்கள் ஒன்று அவை பலவடிவங்களில் பூமியில் தோன்றுகின்றன என்பது நியதி. உலக வரலாற்றில் ஒரு பெண்ணுக்காக நடந்த பெரிய சண்டையும் பெரிய கொல வெறியும் இதுவாகும். பெரியார் சொன்னதுபோல் இந்தப் புத்தகத்தை ஒழித்திருந்தால் அதற்குப் பிற்பட்டவர்களுக்கு எந்தச் சிக்கலும் வந்திருக்காது. விடிய விடிய இராமர் கதை. விடிந்தால் சீதை இராமருக்கு என்னமுறை. எனக்குச் சொல்லத் தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: