சுவிற்சர்லாந்தின் தலைநகரத்து புகையிரத நிலையத்தில் நான் விமானநிலையம் செல்லும் புகையிரதத்திற்காகக் காத்துநின்றேன். 10 நிமிடத்திற்கு ஒரு புகையிரதம் இருந்தாலும் அதைப்பிடிப்பதற்கு பிரயாணிகள் ஓடிக்கொண்டு தரிப்பிடத்தை வந்தடைந்தனர். கட்டாய ஆமிக்காககப் பயிற்சிக்குப் போகின்றவர்களும் சிலர் அந்தப் புகையிரதத்தில் பிரையாணம் செய்யவந்திருந்தார்கள். சிலருக்கு அவர்கள் காதலிகளும் வழியனுப்ப வந்திருந்தார்கள். கட்டாய ஆமி பயிற்சி என்பது 3 மாதத்தின் பின்னர்தான் வீடு திரும்பலாம் என்பது அரசாங்கச் சட்டம். அதனால் 3 மாததத்திற்கும் தேவையான முத்தங்களை சிலர் கொடுத்துக் கொண்டிருந்தனர். நான் திரும்பி வரும்வரை நீ மாறிவிடாதே என்பதும் முத்தத்தின் ஆழத்தில் அடியில் கிடக்கின்ற உண்மை.
3 மாதம் என்தும் எனக்கு நம்ம சங்ககாலம் நினைப்பு வந்தது. அங்கும் இப்படித்தான். முல்லைநில ஆடவர்கள் தங்கள் காதலிகளைப்பிரிந்து கார்காலத்தில் 3 மாதம் எல்லைக் காவலுக்குச் செல்வார்கள். அதனால்தான் முல்லைநிலத்து அக ஒழுக்கம் இருத்தல் என்று ஆகிற்று. சென்று திரும்பும்போது அந்த ஊர் யானையைக்கொன்ற ஒரு வீரனுக்கு சிலரின் காதலிகள் மனைவியாகியிருப்பார்கள். காவல் காக்கச் சென்றவர்களுக்கு தங்கள் காதலிகளுடன் தொடர்பு கொள்வதற்கு தூது விடுதலைத் தவிர வேறெரு சந்தர்ப்பமும் வழியம் இல்லை. அதனால்தான் கண்ணதாசன் அவர்கள் ''வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு என் கண்ணீரிக் கதைகேட்டுச் செல்லு, சொன்னதை நீ அவரிடத்தில் கொல்லு, இல்லை என்னை ஏனும் அங்குஅழைத்துச் செல்லு என்று படிக்கவேண்டி வந்தது. என் சிந்தனையைக் குழப்புவதற்கென்றே புகையிரதம் வந்து தரிப்பீடத்தில் நின்றது. கொழும்பு, மருதானை ஸ்ரைலில் ஒருவரும் பாய்ந்து ஏறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நான் புகையிரதத்தில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தேன். இன்னும் இரண்டுபேர் அதில் இருப்பதற்கான இடம் இருந்தது. தங்களுக்கு இருக்கை இல்லாவிட்டாலும் வெளிநாட்டவனுக்குப் பக்கத்தில் இருக்கக்கூடாது என்ற அமுலை சிலர் நிறைவேற்றி நின்று கொண்டு பிரயாணம் செய்யத் தலைப்பட்டனர். அப்போதுதான் இடம்தேடிக்கொண்டு வந்த இன்னுமொரு தமிழர் எனக்குப் பகக்கத்தில் வந்து குந்தினார். புகையிரதம் புறப்பட்டது. நீங்கள் தமிழா என்று தமிழிலேயே கேட்டார். இது மழைக்குக்கூட ஒதுங்காதவர்களின் சாதாரண வழக்கம். நான் ஆம் என்றதும். இறாத்தல் கணக்கில் அறுத்துக்கொண்டு இருந்தார்.
சுவிஸ் நாட்டில் புகையிரதத்தில் வண்டில்தள்ளி காப்பி, பொருட்கள் விற்பவர்கள் பெரும்பாலோனோர் வங்காளதேசத்து அன்பர்கள். அப்படிப்பட்ட ஒருவர் காப்பி வண்டி தள்ளிக்கொண்டு வந்தார். முன் இருக்கையில் இருந்தவர்கள் காப்பி ஆடர் செய்தார்கள். நம்ம ஆளும் 2 காப்பி ஆடர் செய்து எனக்கும் தந்தார். காப்பி வியாபாரி வெள்ளைக்காரர்களுக்கு ஒரு சீனி கொடுத்தார். எங்கள் காப்பிக்கு மட்டும் இரண்டு சீனி தந்தார்.
. சுவிசில் கச்சல் காப்பிக்கு தமிழர்கள் இரண்டு சீனி போட்டுக் குடிப்பது வழக்கம். காப்பி தந்த வியாபாரிக்கும் அது தெரியம். நம்ம ஆளுக்கு கோபம் வந்துவிட்து. உடனே அந்த வங்காளியைக் கூப்பிட்டார். ''தமிழனுக்கு இரண்டு சீனி வேண்டும் என்று உனக்கு தெரிகிறது! அவனுக்கு ஒரு நாடு வேண்டும் என்று உனக்கு தெரியுமா'' என்று கேட்டார். இம்சா அல்லா என்று வங்காளி வண்டிலை வெகமாகத் தள்ளிக்கொண்டு அடுத்த பெட்டிக்குள் சென்று விட்டான்.
0 Comments:
Post a Comment