RSS

3.ஒரு விமானப் பயணம்


அன்று இத்தாலி ரோம் நகர விமான நிலையம் என்றுமில்லாதவாறு களைகட்டி இருந்தது. அதற்குக் காரணம் சிறிலங்கா சென்ற பாப்பரசர் தன் பட்டாளங்கள் புடைசூழ நாடு திரும்புவதுதான். நாடுதிரும்பும்போதும் பாப்பரசர் மண்ணைவணங்கி மக்களைப் பார்ப்பது வழக்கம். இதைப் பார்த்துத்தான் மத்தியகிழக்கில் இருந்து நாடுதிரும்பிய மகிந்தா கட்டுநாயக்கா மண்ணை முத்தமிட்டாரோ என்றும் சிலர் நையாண்டி மேளம் அடிக்கின்றார்கள் அதை விடுவம்.ஒரு கதையை சொல்ல வருவம் என்றால் ஒரே தடங்கலாக இருக்கிறது. சொல்லும் வழியில் வந்த சில சொற்கள் என்னை சிந்திக்க வைக்கின்றன. கட்டுநாயக்கா என்றதும் ஒரு ஞாபகம் வருகிறது. இந்த விமான நிலையம் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்குவந்தால் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் என்றும்,  சுதந்திரக்கட்சி ஆட்சிக்கு வந்தால் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் என்றும் மாறி மாறி பெயர் மாற்றப்படும். இதைப்பார்த்த தமிழ் தெரிந்த ஒரு வெள்ளைக்காரன் கட்டுநாயக்கா, பண்டாரநாயக்காவுக்கு என்ன முறை என்று ஒருவரை கேட்டானாம.  பதில் சொல்லாத இலங்கையரைப்பார்த்து ஒரு சிரிப்புடன் வெள்ளைக்காரன் ''விடிய விடிய இராமர்கதை விடிந்தால் சீதை ராமனுக்கு குஞ்சியாத்தை என்றுவிட்டு சில்லறை விலையில் வாங்கிய சிறிய சவப்பெட்டி (சிகரட்) ஒன்றை பற்றவைத்துக்கொண்டு இடத்தைவிட்டு நகர்ந்தான். இந்த ரோம் நகரத்து விமானநிலையத்தில்தான் ஒரு அழகான பெண் தமிழ் முகத்துக்கு ஆங்கிலச் சாயம்பூசிய உடையுடன் செக்கின் முடிந்து விமானத்திற்காகக்க காத்திருந்தாள். கலங்கிய கண், களைத்துப்போன முகம், சுடுகாட்டில் இருந்து வீடுதிருமபும்போது இருக்கின்ற மனநிலை மாதிரி உணர்வுகள், கிட்டத்தட்ட அவள் உயிருடன் இருக்கின்றாள் என்பதற்குச் சாட்சியாக காதிற்குள் ''இயர்fபோன்'' வைத்து சோகப்பாடல்களைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டிருந்தாள். ஒரு காலத்தில் இப்படி காதிற்குள் வைத்திருந்தால் செவிட்டு மெசின் என்று நினைத்தவர்கள்கூட இந்த உலகத்தில் இன்றும் இருக்கிறார்கள். நான் ஏன் ஆங்கிலச் சொற்களை எல்லாம் தமிழில் எழுதுகிறேன் என்றால் ஒரு சுவாரஷ்யத்திற்காகத்தான். ஆனால் வாசிப்பவர்கள் இவர் ஆங்கிலத்தில் அரைவேக்காடாக்கும் என்று நினைப்பதும் என் செவி அலைவரிசைக்குள்ளும் விழுகிறது.  அந்தப் பெண்ணின் பெயர் வாநதி. நதி என்றதும் கங்கையுடன் சில கற்பனைக் காட்சிகளை உருவாக்கி விடாதீர்கள்.

வானதி தன்னுடன் பிரயாணம் செய்பவர்களை ஒருமுறை நோட்டம் விட்டுப்பார்த்தாள். கூட்டத்திகுள் காவி உடை அணிந்த ஒருதுறவியும், கவுண் அணிந்த ஒரு போதகரும் இருந்தார்கள். மற்றைய பிரயாணிகளைவிட வித்தியாசமான உடையில் இருந்ததால் வானதியின் கண்கள் சற்று நேரம் இவர்களில் நிலைத்தது.மற்றவர்கள் பேசும் பாஷைகள் அவளுக்குப் புரியவேயில்லை. பத்துக்கட்டளைகளை வேண்டுவதற்கு மலைக்குச் சென்ற மோசேஸ் திரும்பி வரும்போது கடவுள் சாபத்தால் ஒருவர் பேசும்மொழி மற்றவருக்கு விளங்கக்கூடாது என்பதைக் கண்ட நினைப்புத்தான் வானதிக்கும் வந்தது. துறவி பிரேமானந்தாவின் கதையைப் பத்திரிகையில் படித்திருந்த வானதி காவித்துறவிக்குப் பக்கத்தில் தனக்கு இருக்கை கிடைக்கக்கூடாது என்பதை இன்னொரு காவித்துறவியான சாயிபாபாவிடம் பிரார்த்திக்குவிட்டு பேசாமல் இருந்துவிட்டாள். போதகரைப் பார்த்ததும் வானதி தான் சிறியவயதாக இருந்தபோது தினகரன் பத்திரிகையின் பின்பக்கத்தில் வந்த ஒரு தலைப்புச் செய்தியை வாசித்தது நினைப்பிற்கு வந்தது. அதாவது ''பாதிரியார் வீட்டில் பாவை பாழ்படுத்தப்பட்டாள், பாதிரியார் தலைமறைவு, போலீசார் வலை'' இதுதான் அந்தச் செய்தி. உள்ளுக்குப் படித்துப் பார்க்கும்போதுதான் விளக்கம் வேறுமாதிரி இருக்கும். ''பாதிரியார், வீட்டில் இல்லாத சமயம்,ஒருபெண்ணைக் கடத்திவந்து அவரது வீட்டை உடைத்து உள்ளே சென்று அவளைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பின்னர் போலிசாரின் விசாரணையில் தெரியவந்தது'' என்று செய்தி இருக்கும். பத்திரிகை என்றால் பத்துவிடையத்தைத் திரித்து எழுதுவதுதான் என்பது பலரது அவிப்பிராயம். சில பத்திரிகைகள் ஒரு விடையத்தைப் பத்தாக்கியும் எழுதுவார்கள். நான் ''சுவிஸ்தமிழர்'' என்ற பத்திரிகை நடாத்தும்போது உள்ளதை உள்ளபடி போட்டன். நள்ளிரவு 12 மணிக்கு ஒரு தொலைபேசி வந்தது. ''இப்படி எல்லாம் நியூஸ போட்டா உன்னை போடவேண்டி இருக்கும்'' என்று. எனக்கு ஆயுள் கெட்டி என்பதால் பத்திரிகை அன்றுடன் வெளிவரவில்லை. அது போகட்டும்!

வானதி அந்த வெள்ளைக்கார போதகருடன்  நம்நாட்டைச் சேர்ந்த ஒருவர் சரளமாக இத்தாலிப் பாஷையில் உரையாடிக்கொண்டிருப்பதைக் ண்டாள்.  அவர் ஒரு தமிழர். பல காலங்களுக்குமுதல் இத்தாலிக்கு அகதியாகவந்து சேர்ந்தவர். அவரதுபெயர் சிவலிங்கம். இவரது கதையைச் சொன்னால் தயாரிப்பாளர் சேரன் போன்றவர்கள் திரைப்படமே எடுத்துவிடுவார்கள். இருந்தாலும் சுருக்கமாகச் சொல்கிறன். சிவலிங்கம் பாடசாலைப் படிப்பு முடித்து கிராமத்தில் தகப்பனுடன் புகையிலைத் தோட்டம் செய்த காலம். அதாவது ''போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று சிறிலங்கா ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜயவர்த்தனா தமிழருக்கு எதிரான துவேஷத்தை அரங்கேற்றியகாலம். சிவலிங்கத்திற்கு முன்வீட்டுப் பெட்டையில் ஒரு கண். அடைந்தால் மகாதேவி எல்லது மரணம் என்ற முனைப்புடன் திரிந்தவர். தன் நண்பனைவிட்டு காதல் கடிதம் எழுதி, அதைக்  கொடுக்கப் பயந்து பயந்து சட்டைப் பைக்குள் கொண்டுதிரிந்தவர். அவரது தாயார் சலவைத் தொழிலாளிக்கு ஊத்தை உடைகளைக் கொடுக்கும்போது இவரது சட்டையும் (ஷேர்ட்) சலவைத்தொழிலாளி வீட்டுக்குச் சென்றுவிட்டது. தனக்குவரும் உடுப்புக்களில் இருக்கும் பைகளுக்குள் காசுகீசு இருக்கும் என்று சலவைத்தொழிலாளி பார்க்கும்போது சிவலிங்கத்தின் காதல் கடிதம் சிக்கியது. வாசிக்கத்தெரியாத தொழிலாளி அந்தக் கடிதத்தைக் கொண்டுவந்து சிவலிங்கத்தின் தகப்பனிடம் கொடுத்து விசுவாசமாக நடந்துகொண்டார்.

இதைப்பார்த்த சிவலிங்கத்தின் தகப்பனார் சிவலிங்கத்தை உடனடியாக ஒரு ஏயென்சியைப்பிடித்து இத்தாலிக்கு அனுப்பி அந்தக் காதலை காவியமாக்கி மகிழ்ந்தார். இத்தாலிக்குவந்த சிவலிங்கம் வேலைதேடிச் சென்றபோதுதான் பக்கத்தில் இருக்கும் போதகரைச் சந்தித்தார். இரக்க குணமுள்ள இந்தப் போதகர் சிவலிங்கத்தைத் தன்வீட்டில் வேலைக்கு அமர்த்தினார். சிவலிங்கத்திற்கு போதகருக்குச் சமைப்பதும் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதும் தொழிலாக இருந்தது. இத்தாலிச் சாப்பாடுகள் எல்லாவற்றையும் யாழ்ப்பாணப் பாணியில் சிவலிங்கம் சமைக்கத்தொடங்கினார். ஒருநாள் சோடா மூடியால் தேங்காய் துருவிப் பிழிந்து ஸ்ப்பக்கற்றிக்கு சோஸ் செய்து போதகருக்கு சமைத்துக்கொடுத்தார். போதகருக்கு மிகவும் பிடித்திருந்ததால் சிவலிங்கத்தைத் தன்னுடன் வைத்திருக்கப்போவதாக முடிவெடுத்து நிரந்தர விசாவும் வாங்கிக் கொடுத்தார். நன்றிக்கடனுக்கு சிவலிங்கம் போதகரின் மதத்திற்கு மாறினார். பின்னர் போதகர் சிவலிங்கத்திற்கு ஒரு தமிழ்ப்பெண்ணை பார்சலில் வரவழைத்து திருமணமும் செய்துவைத்தார்.

அறிஞர் அண்ணாத்துரை சொன்ன வசனம் சிவலிங்கத்திற்கு நினைப்பு வந்தது. ''நீ எந்த நாட்டில் இருக்கின்றாயோ அந்த நாட்டிற்கு விசுவாசமாக இரு'' என்பதுதான். இத்தாலி நாட்டுடன் இரண்டறக்கலந்த சிவலிங்கம் தனக்குப் பிறந்த மகளுக்கு லசான்யா என்று பெயரைவைத்து மகிழ்ந்தார். போதகர் மதசம்பந்தமான கூட்டங்களுக்குப் போகும்போதெல்லாம் சிவலிங்கத்தை அழைத்துச்செல்வது வழக்கம். அந்தவகையில்தான் இன்று சிவலிங்கம் போதகருடன் சுவீடன் நாட்டிற்குப் பயணம் செல்கின்றார். சொல்ல மறந்துவிட்டன் இப்போ சிவலிங்கத்திற்குப் பெயர் ஈசாக். ஈசாக் என்பது ஆபிரகாம் சாராள் தம்பதிகளின் மகன். இறைநம்பிக்கை உள்ளவன். விமானம் புறப்படத்தயாரானது. பிரயாணிகள் விமானத்தில் ஏற ஆயத்தமானார்கள். வரிசையில் நின்ற ஈசாக் வானதியையும் இது தமிழாக இருக்குமோ என்ற ஐயத்துடன் நடந்து நடந்து இடைக்கிடை பார்த்தார். ஈசாக் பார்ப்பதைக் கண்ணுற்ற வானதி யாழ்ப்பாணத்தில் தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றவர்கள் வணக்கம் போடுவதற்குமுதல் எழுந்து நடந்து நடந்து பார்ப்பதை நினைத்துக்கொண்டாள்.

பாபாவின் அருளால் வானதிக்கு கத்தோலிக்கப் போதகரின் அருகில் இடம் கிடைத்தது. விமானத்திற்குள் வானதி, பக்கத்தில் போதகர், அதற்குப் பக்கத்தில் ஈசாக். விமானம் கிளம்பியது. செவிட்டு மெசின்களைப்போட்டு விமானத்தில் பாடல் கேட்க இயலாது என்பதால் வானதி அதை நிறுத்திவிட்டு தன் கடந்தகாலத்தை நினைக்கலானாள். அவன் பெயர்தான் கந்தசாமி (விக்ரம் என்று நினைத்துவிடாதீர்கள்) இருவரும் ஒன்றாகக் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். காதல் வசப்பட்ட வானதி கந்தசாமிக்கு ஒரு கண்டஷன் போட்டாள். அப்போ வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமிழீழமே எங்கள் தாரக மந்திரம் என்று அமிர்தலிங்கம் ஐயா அவர்கள் முழங்கியகாலம். வானதி கந்தசாமி காதல் இதயப் பரிமாற்றத்துடன் நிபந்தனைகளுக்கு மத்தியில் வளர்ந்தது. நிபந்தனை என்னவென்றால் ''தமிழ் ஈழத்தில்தான் நமது திருமணம்'' என்பதே வானதியின் நிர்ப்பந்தம். அதற்கு கந்தசாமியும் ஒத்துக்கொண்டு தள்ளியிருந்து காதலை ரசித்து பட்டமும் வாங்கி வெளியேறினர்.

வானதிக்கு வெளிநாட்டுத் தூதுவராலயங்களில் வேலை செய்வதற்கான தகுதி கிடைத்தது. கந்தாசாமி இராணுவக் கெடுபிடியால் நாட்டைவிட்டு மாறி இத்தாலிக்கு வந்து சேர்ந்தார். காதலில் களவியல் காணாத கந்தசாமி வானதியை முடிவைமாற்றி திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளம்படி பல்லைக் காட்டிக்கொண்டு இருந்தார். வானதியின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. இறுதியாகக் கந்தசாமியிடம் இருந்து வானதிக்கு வந்த தகவல் ''அன்பான வானதி, இயக்கத்தில் உள்ளவர்களே திருமணம் செய்யும்போது நாமும் திருமணம் செய்யலாம் என்று நான் கருதுகின்றேன்'' என்று எழுதியிருந்தார். போராட்டத்தில் பாதிப்புற்ற மக்களுக்காக நான் என்வாழ்வை அர்ப்பணித்து அதில் பணியாற்றுகின்றேன். தொந்தரவு செய்யாதீர்கள் என்று பதில் வந்ததைக்கண்ட கந்தசாமி தன் மாமன் பெண்ணை அழைத்து திருமணம் செய்து கொண்டார். கந்தசாமிக்கு சர்க்கரை வியாதி ஆரம்பித்தது. இரண்டு சிறுநீரகங்களும் பழுதுடைந்துவிட்டது. சுவீடன் நாட்டில் வாழ்ந்துவரும் தன் வானதிக்கு இதை கந்தசாமி தெரியப்படுத்தினார். 30 வருடங்களுக்குமுன் வானதி தன் இதையத்தைக் கொடுத்தவள் இன்று கந்தசாமிக்கு தன் சிறுநீரகத்தையும் கொடுத்துவிட்டுச் சென்றுகொண்டிருக்கிறாள். வானதி தன் உழைப்பில் ஈழத்தில் இருக்கும் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் தனிப்பட்ட முறையில் தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்து தன்னை ஒரு மெழுகுவர்த்தி ஆக்கி வாழ்கின்றாள். ஐரோப்பாவில் வாழும் தமிழ்ப்பெண்கள் கல்லும், கம்பியும், போத்திலோடும் கட்டிய சேலைகளை ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் புதிது புதிதாக வாங்குவதை விடுத்து குறைந்த அளவிலாவது தமிழர்களுக்கு உதவிசெய்ய முன்வரமாட்டார்களா என்று நினைத்துச் சிரிக்கின்றாள். வானதி ஒரு ஆயுதம் ஏந்தாத சமூகநலப் போராளி. தியாகத்தின் தீபம், அன்னை திரேசாவின் அசல் வாரிசு. வானதி- கந்தசாமி கதைகளில் கனக்க சென்டிமன்டுகள் இருக்கு. வாசகர்கள் வணக்கம் போடமுதல் எழுந்துவிடுவார்கள் என்பதால் விடையத்தை வெளிக்காட்டவில்லை. வெளிநாட்டில் இருக்கும் 6 இலட்சம் தமிழரும் முன்வந்து போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நேரடியாக உதவி செய்தலே இன்றைய தேவை என்பது வானதியின் கருத்து.

பக்கத்தில் இருந்த பாதிரியார் ஆங்கில நாவல் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தால். அதைப்பார்த்த ஒரு வியட்னாம் காரன் தனது நண்பர்களுக்கு ''பாதிரியார் விமானம் கிழுந்துவிடும் என்ற பயத்தில் ''பைபிள்'' என்று நினைத்து வேறு ஒரு புத்தகத்தை தூக்கிவைத்துக்கொண்டு இருக்கிறார்'' என்றான். பலகை கிளிந்ததுபோல் சிரிப்பொலி வானதிக்கும் கேட்டது. (பெயர்களும், இடங்களும் கற்பபை. சம்பவம் உண்மை)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 Comments:

Anonymous said...

hi very nice