RSS

8.மனைவிக்கு முத்தம் !


எறும்பு ஊரும் கோட்டிலும், பாம்பு ஊரும் தடயத்திலும் பல சொற்கள் என்னால் இன்னும் வாசிக்கப்படாமல் இருக்கின்றன

வாழக்கை விதி என்ற கோட்டில்தான் பயணம் செய்கின்றது. கோடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டுகின்றபோது மனித சந்திப்புகள் இடம்பெறுகின்றன. வாழ்த்துக்கள்.

இந்தத் தியறியின்படி நானும் திருமணம் செய்துவிட்டேன். வேலைக்களைப்பு, நாய்களின் சிறுநீர்கள் சுவிஸ் தெருக்களில் குச்சுக்குச்சாகக் கிடந்தன. அவளவுக்கு உறைபனி வெப்பநிலை. மூச்சில் வரும் நீராவியை மீசைகள் snow வாக கருக்கட்டியிருந்தன. இரவுவேலை முடித்து அதிகாலையில் வீடு சென்று படுத்துவிட்டேன். ஒரு கிலோ பாண்வாங்க 25 கிலோ உடுப்பு அணியும் வின்ரர் காலம்.

வீட்டில் ஒரு முழு ரிக்கட்டும், இரண்டு Hகாவ் ரிக்கட்டுகளும் சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து ஆரவாரம்.  பெரியவனும் சின்னவனும் ஏதோ கதைக்கிறார்கள்; அது எனக்கு கேட்கிறது. உன்னிடம் இருக்கும் துப்பாக்கியில் 6 மருந்து இருக்கிறது என்று பெரியவன் சொல்கிறான். முதலில் அப்பாவை சுடு என்றான். சின்னவன் டிசூம் என்று சுட்டான், பின்னர் அம்மாவை சுடு என்றான் சின்னவன் டிசூம் என்று சுட்டான். பின்னர் பெரியவன் தன்னை சுடு என்றான்; சின்னவன் டிசூஉம்.பெரிதாகச் சத்தம் போட்டு சுட்டான். ஏன் என்னைச் சுடுமபோது பெரிதாகச் சத்தம் போட்டாய் என்றான் தம்பியை  ''நான் உன்னை சுடும்போது ''சைலன்சர்'' போடாமல் இழுத்தேன்'' என்றான் தம்பி.
பெரியவன் அப்பாவையும், அம்மாவையும், என்னையும் சுட்டு 3 மருந்து போய்விட்டது. இப்போ உன்னிடம் எத்தனை மருந்து இருக்கிறது என்று கேட்டான். தம்பி 3 என்றான். பெரியவன் அப்போ ஆறிலிருந்து மூன்று போனால் 3 என்று பெரியவன் தம்பிக்கு கழித்தல் கணக்கு சொல்லிக் கொடுப்பது புரிந்தது. இதற்கிடையில் மனைவி தொலைபேசியில் ஒரு உரையாடல். இடையிடையே ''நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன'' கற்பூரவாசனை தெரியாததுகளுக்குச் சொல்லியும் திருத்த இயலாது என்பதும் காதில் கேட்டது. இடையிடையெ சிரிப்பு. யாருடன் ஊரையாடல் நடைபெறுகின்றது என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் முயற்சிக்கவும் இல்லை. கடைசியில் ''நித்திரை கொள்பவனை எழுப்பலாம், நித்திரைபோல் கிடப்பவனை எழுப்பமுடியாது என்று கதை முடிக்கப்பட்டது.

மீண்டும் கணக்குப்பாடம். இப்பவும் கழித்தல் கணக்குத்தான். பெரியவன் ''உன்னிடம் இப்போ 3 மருந்து இருக்கிறது. நீ இனி உன்சைச்சுடு என்றான். சின்னவன் முடியாது, என்னை நான் சுடமாட்டன் என்றான். பெரியவன் என்னை சுட்டனீதானே உன்னையும் சுடு  என்றான்.  இல்லை, மாட்டன் மாட்டன் என்றான் தம்பி. கணக்குபாட்ம் நின்றது. இருவருக்கும் உள்வீட்டுக்குள் சண்டை. மனைவி வந்தார். பிள்ளையள் அப்பா நித்திரையாகக் கிடக்கிறார் அங்காலே போய்விளையாடுங்கள் என்று புருசன் மேலுள்ள கருணையைக் காட்டிகார். நானும் அப்படித்தான் நினைத்தன். மறுகணம் என் அறையில் கிடந்த தையல்மெசினில் மனிசி சட்டை தைக்கத் தொடங்கினார். மீண்டும் தொலைபேசி என் அறைக்குள்தான். மனைவி எடுத்தார்.'' ஓம் ஓம் அவர் இப்பதான் வேலையால்வந்து நல்ல நித்திரை, எழுப்பினால் ஏசுவார், பிறகு எடுங்கள் என்று வைத்துவிட்டு தையல் தொடர்கிறது. கற்புள்ள தையல்மெசின். ஆண்களின் கைகள் இன்னும் படவில்லை. பட்டிருந்தால் எப்பவோ செத்திருக்கும்.


தூக்கத்திலும் சிலரது கதைகள் என்னை விட்டபாடில்லை. ''நான் நினைத்தன் மச்சான் வைரமுத்து ''எலிசபத்து ரைலர் மகளா? என்று பாடல் எழுதியது எலிசபத் ராணியின் ரெய்லர் அதாவது தையல்காரனின் மகளாக்கும் என்று, இப்பதான் விளங்கியது எலிசபெத்ரைலர் என்ற நடிகையின் மகளா? என்று எழுதியது. மற்றவன் ''உனக்கு என்ன தெரியும் தெருவில் விளம்பரத்திற்கு இலவசமாகக் கொடுத்த allways ஐயே என்ன சாமான் என்று தெரியாமல் வாங்கிவந்தனீதானே'' நான் கன்ரீனில் நுளையும்போது இவை என் காதில் கேட்டவை.

என்னைக்கண்டு ஒருவர் ஓடிவந்தார் ''அண்ணேண நீங்கதானே இந்த முகநூலில் நிலைக்கண்ணாடி எழுதி பெயர்வாங்கிறனீங்க, இந்த பாரிசில் நடக்கும் தமிழர் அடாவடித்தனங்களையும் எழுததலாம் தானே'' என்றார். சரி நீங்கள் என்னத்தைக் கருதுகிறீர்கள் என்று அமைதியாகக் கேட்டேன். ''இல்லை அண்ணே! பாரிசில் லாச்சப்பல் என்ற தமிழர் வியாபார ஏரியாவில்; தமிழர்களைத் தமிழர்கள் வெட்டுகிறார்கள், கொலை செய்கிறார்கள், தமிழர் கடைகளுக்குள் தமிழர்கள் சென்று கொள்ளை அடிக்கிறார்கள், வீடுகளுக்குள் சென்று பெண்களைக் கற்பழிக்கிறார்கள், கடைகளை இழுத்துப் பூட்டிவிட்டு முதலாளிமார் பயத்தில் ஓடுகின்றார்கள், 14 வயதுப் பெண்ணைப் பலவந்தப்படுத்தி வல்லுறவு கொண்டபின் கொல்கிறார்கள், லாச்சப்பலில் பெண்கள் கடைத்தெருவிற்கு வரமுடியாமல் இருக்கின்றது, நாகரிகத்திற்குப் பெயர்போன பாரிஸ் தெருக்களில் தமிழர் அநாகரிகமான நடந்து கொள்கின்றார்கள், இதைத் தெரியாமல் தமிழர்கள் உலகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றார்கள் என்று சிலர் சொல்கிறார்கள், இவற்றை எழுதலாம் தானே அண்ணே'' என்றார். தம்பி நான் உயிருடன் இருந்து இரண்டு நிலைக்கண்ணாடி எழுதுவது உமக்கு விருப்பம் இல்லையோ  ஆளை விடுங்க சாமி என்றுவிட்டு  நகர்ந்துவிட்டன்.


வீட்டின் அமைதி என்னைத் தூங்கவிடவில்லை எழுந்துவிட்டேன். வீடு நிசப்தமாக இருந்தது. ஒருவரையும் காணவில்லை. எங்கள் அறிவிப்புப் பலகையில் அதுதான் சாப்பாட்டு மேசை. அதில் ஒரு துண்டு இருந்தது. வாசித்துப் பார்த்தேன். ''நாங்கள் கடைகளுக்குச் செல்கின்றோம், மதியம் வெளியில்தான் சாப்பிடுவோம், நீங்கள் எங்களைத் தேடினாலும் என்பதற்காக உங்கள் தொலைபேசியையும் கொண்டு செல்கின்றோம், சின்னவனுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்காக உங்கள் கிறடிற்காட்டையும் கொண்டு செல்கின்றோம், மதியம் ஏதாவது பார்த்து சாப்பிடவும். இப்படிக்கு உங்கள் மனைவி பிள்ளைகள் என்று போட்டிருக்கும் என்று நீங்கள் நினைப்பதுபோல் நானும் நினைத்தேன். ஒன்றும் போடவில்லை
.
குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தேன், ஒருமுட்டை, 2 கரட், பாதி பூசனிக்காய், கொஞ்ச லீக்ஸ். யாராவது எனக்குத் தெரியாமல் முயல்வளர்க்கிறார்களோ என்று யோசித்தன். வெளியில் பார்த்தேன் காரையும் காணவில்லை. இப்போதுதான் நான்உண்மையில் அகதித்தமிழன் என்பதை மறுபடியும் உணர்கிறன். மீண்டும் வெளியில் சின்னவனின் ஆரவாரம் கேட்கிறது. விளையாட்டுப்பொருள் அவனுக்குக் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் வருகிறான். மீண்டும் வெளியில் எட்டிப் பார்க்கின்றேன். மனைவிக்கு ஒருவன் முத்தம் கொடுத்துக்கொண்டு நின்றான். என் மனைவிக்கு அல்ல தன் மனைவிக்கு.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 Comments:

அப்பாதுரை said...

யதார்த்தமும் நகைச்சுவையும் கலந்து எழுதுகிறீர்கள். எலிசபெத் மகாராணியின் தையல்காரரை மறக்க நாளாகும் :) தொடர்கிறேன்.

எஸ் சக்திவேல் said...

வடிவான நடை. தொடருங்கள் வாழ்த்துக்கள்.

எஸ் சக்திவேல் said...
This comment has been removed by the author.
எஸ் சக்திவேல் said...

>குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தேன், ஒருமுட்டை, 2 கரட், பாதி பூசனிக்காய், கொஞ்ச லீக்ஸ். யாராவது எனக்குத் தெரியாமல் முயல்வளர்க்கிறார்களோ என்று யோசித்தன்.

அந்த முயல் நீங்கள்தான். முட்டை தின்னும் முயல்.