என் வீட்டுச்சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த பிரபாகரன் போட்ட கலண்டரில் கடைசித்தாளைக் கிழிக்கும்போது கலண்டர் என்னைப்பார்த்துக்கேட்டது ''என்னைத்தவிர நீ வேறு என்னத்தைக் கிளித்தாய்'' என்று. அசந்து உட்காந்து விட்டன். மனிசியும் ஒரே நான் படிச்சு கிளிச்சதைப்பற்றிக் கதைக்கிறது. காலை வேலைக்கும் நேரமாகிவிட்டது. ஐரோப்பாவில் அவரவர் அலாரம் அடிக்க எழுந்து வேலைக்குப் போகவேண்டியதுதான். ஒரு அலாரம் அடியுடன் எழும்பிவிட வேண்டும். அல்லாவிட்டால் மனிசி புறுபுறுக்கும் என்று ஒரு மரியாதை. மற்றவர்களை எழுப்பப்படாது என்பது சட்டம் அல்ல; சம்பிரதாயம். காலைக்கடன் முடிக்க எனக்கு மூலஸ்தானத்தில் 30 நிமிடங்கள் தேவை. காப்பிக்குள் பச்சைப்பாலைவிட்டு கலக்ககி மூச்சுவிடாமல் குடித்துவிட்டு 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் இருந்தாலும் நிற்கும் பஸ்சை பிடிப்பதற்காக ஓடுவது எனக்கு பழகிவிட்டது. வெள்ளைகளும் அப்படித்தான். லிவ்ற் இருந்தாலும் படிகளில் ஏறிச்செல்வவது வெள்ளைகளின் குணம். ஓட்டுனர் இல்லாத புகையிரதத்தில் ஏறி நானும் தொழிலுக்குச் செல்கின்றேன். தனியார் நிறுவனம் ஒன்றில் விமான ரிக்கட்டுகள் புக்பண்ணிக்கொடுப்பது எனது தொழில்.
காலையில் முதலாவது தொலைபேசி. ''அண்ணே நான் செந்திலின் வைப் (wife) மட்ராசில் நின்று கதைக்கிறன். உங்களிடம்தான் நாங்கள் எடுத்தநாங்கள். இப்பதான் மேல்வரவத்துர்ரால் வருகிறம். எங்கபோய் ரிக்கட் றீக்கொண்டிசன் பண்ணுறது என்று இவர் கேட்கச்சொன்னவர்'' என்றார். அது றீக்கொண்டிசன் இல்லை அம்மா; றீகண்Fபோம் என்று நான் சொன்னாலும் அம்மாவின் காலைக்கழுவி குடித்துவிட்டு வருபவர்களுக்கு விளங்கவாபோகிறது என்றுவிட்டு மட்ராஸ் முகவரியைக் கொடுத்து தப்பிவிட்டன். 2வது தொலைபேசி ''அண்ணே நாங்க சிறிலங்காவுக்கு உங்களிட்த்தான் எடுத்து வந்தநாங்கள் எங்கள் லக்கேஜ் ஐ காணவில்லை என்ன செய்கிறது''. இப்படி பல கேள்விகள் வரும். மூட நம்பிக்கைகளுக்கும் விஞ்ஞானத்திற்கும் இடையில் தமிழன் அகப்பட்டுத் தவிக்கும் தவிப்பு சொல்லி அடங்காது. பல வெளிநாட்டுத்தமிழர் வேட்டியைக்களற்றிவிட்டு களிசான் போட்டது கட்டுநாயக்கா எயர்போட்டில்தான். எனக்குத்தெரிந்ததமிழ் ஆசிரியர் ஒருவர் டுபாய் வரைக்கும் Zசிப் இழுக்காமல் வந்ததாகக் கனடாவில் வைத்துக்கூறினார்.
மீண்டும் ஒரு தொலைபேசி. ''கலோ அமரிக்கா போய் கனடா போகவேணும்; தட்டிப் பார்த்து சொல்கிறயளோ? அவர் பிரயாண ரிக்கட்டுக்கு என்னவிலை என்பதையே இப்படிக்கேட்கிறார். இருக்கிறது எத்தனைபேர் போகவேண்டும் என்று கேட்டேன். ''நான் மட்டும்தான் ஐயா போகிறன். இப்ப வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகள் தாய் தகப்பனுக்கு 25ஆவது கல்யாணநாள், 60வது பிறந்தநாள் என்று ''செப்பறேட்'' பாட்டி எல்லோ வைக்கினயாம் அதற்குத்தான் போகிறன்'' என்றார். ''செப்பறேட்'' இல்லை ஐயா, சேBரைஸ் பாட்டி என்று நான் சொல்லிவிட்டு உங்கள் பெயரை கடவுச்சீட்டில் உள்ளதுபோல் சொல்லுங்கள் என்றேன். ''இவளவு ஆங்கிலம் படித்தநீங்கள் சிந்தாமணி முருகலிங்கம் என்று எழுதத் தெரியாதா'' என்று கேட்டார். பல விளக்கங்கள் சொல்லி அவரை சமாளித்து அவர் பெயர் சொல்லத் தொடங்ககினார் ''S I N ......அப்பா இஞ்சவாரும் இவங்கள் பாஸ்போடடில இருக்கிற பெயரை அப்படியே உச்சரிக்கச் சொல்கிறார்கள் கண்தெரியுதில்லை ஒருக்கா சொல்லிவிடு'.... மனைவிக்கு விளங்கினாலும் விட்டுக்கொடுக்காத தன்மை. ''இதற்குத்தான் கண்ணாடியை போடுங்க என்று சொல்கிறது'' என்றுவிட்டு பெயரை உச்சரித்தார். தொலைபேசியை வைக்கும்போது; நீங்க கங்கைமகன்தானே குரல் கணீரென்று விளங்குகிறது என்று எனக்கும் ஒரு தாழிப்பு.
சுவிஸ்விமான நிலையத்தில் அமரிக்கா செல்பவர்களுக்கு செக்கின் போவதற்குமுன் பாதுகாப்பு பரிசீலனை ஒன்று நடைபெறும். அதில் கொண்டுபோகும் பொருட்கள் பொதிகள் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்படும். 2 பெரிய மோப்பம் பிடிக்கும் நாய்களும் பக்கத்தில் நிற்கும். முருகலிங்கத்தின் முறை வந்தது. இந்த உடுப்புப் பெட்டியை அடுக்கியவர்யார்? பதில் நான்தான். ''இரவில் இந்தப்பெட்டி எங்கு இருந்தது'' பதில் என் அறையில். ''உங்களுக்குத் தெரியாமல் யாராவது இந்தப்பெட்டிக்குள் ஏதேனும் பொருட்களை வைத்தார்களா?'' பதில் இல்லை என்று சொல்லியிருக்கலாம்; ஆனால் முருகலிங்கத்திற்கு கோபம் வந்துவிட்டது. எனக்குத்தெரியாமல் பொருட்களை வைத்தால் எனக்கு எப்படித் தெரியும் என்று பதிலளித்தார். அதனால் முருகலிங்கத்தின் பெட்டி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுமதி வழங்கப்பட்டது. முருகலிங்கத்ததிற்குப் பயம் இல்லை ஆனால் ஒரு பதட்டம். Bபோடிங் முடிந்து ஏறுவதற்குக் காத்திருந்தார். மனைவிக்கு தொலைபேசி எடுத்து நான் வந்துசேர்ந்துவிட்டன் என்றார். மனைவி ''அதற்கிடையிலா'', இல்லையப்பா மு.லிங்கத்திற்கு கொதி. சரி நான் ஏறப்பிளேனில் ஏறப்போறன். இறங்கி அடிக்கிறன் என்றுவிட்டு அமைதியடைந்தார்.
கனடாசென்று செப்பறேட் பாட்டி முடிந்து ரொறங்ரோ விமானநிலையத்தில் இருந்து நியூயோர்க் ''லகாரர்டியா'' விமானநிலையத்திற்கு மு.லிங்கம் வந்துகொணண்டு இருக்கின்றார். பின்னர் சுவிஸ் பிளேன் எடுக்கவேண்டும் இது அவரது பிரயாண அட்டவணை. ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே என்பது முருகலிங்கத்தின் அந்த நேரச் சூழல். இறங்குவதற்கு 20 நிமிடங்கள் இருக்கின்றன என்பது விமானியின் அறிவிப்பு. தப்பிவிட்டோம் என்பதுபோல் ஒருவரை ஒருவர் பார்த்து ஒரு சிறிய சிறிய சிரிப்பு. திடீரென ஒரு அறிவித்தல். ''விமானத்தின் இயந்திரத்திற்குள் பறவை அகப்பட்டதால் நாங்கள் ஆபத்தான நிலையில் இருக்கின்றோம். உங்கள் தொலைபேசிகளைப் பாவித்து வேண்டியவர்களுடன்கதையுங்கள் என்று அறிவிக்கப்பட்டது. பதட்டத்துடன் பயமும் மு.லிங்கத்தைப்பிடித்துக்கொண்டது. வீட்டிற்கு தொலைலபேசி எடுத்தார். அது பிசியாக இருந்தது. மகளுக்கு எடுத்தார் பிசி. மகனுக்கு எடுத்தார் பிசி. வியர்வையில் தொலைபேசி ஈரமாகிவிட்டது. மீண்டும் ஒரு அறிவித்தல் ''கடைசியாக ஒரு முயற்சி Hகட்சன் ஆற்றில் விமானத்தை இறக்க முயற்சிக்கின்றோம்'' இவரது தொலைபேசி அடித்தது. மனைவி இலக்கத்தைப்பார்த்து தொடர்பு கொண்டார். ''அம்மா நான் சாகப்போகின்றேன் பிளேனுக்குள் பறவை புகுந்து ஆத்தில இறக்கப்போகிறார்களாம். ஒரு பேப்பரும் பேனையும் உடன எடு'' என்று பணித்தார். மனைவியும் எடுத்துவிட்டன் சொல்லுங்க. ''துரை 10 தரவேண்டும், சுந்தரன் 14 தரவேண்டும், பரமன் 25 தரவேண்டும்....இப்படி 2 இலட்சம் சுவிஸ் நாணயங்கள் வருமதியிருப்பதாகக் கூறினார். மனைவி அழுது அழுது ஒன்றும் ஆகாது பயப்படாமல் இருங்கள் என்று ஆறுதல் சொன்னார். அதைவிட நீங்கள் ஆட்களுக்கு கொடுக்குமதியும் இருக்கெல்லே என்றார். மனைவி கண்Fபோம் பண்ணிவிட்டா! யாராவது வந்து கேட்டால் அவர் ஒன்றும் சொல்லவில்லை என்று சொல்லுங்கோ. இரண்டு இதயங்களும் துடித்தன. மரணவாயில் அகப்பட்டவனால் எப்படி பேசமுடியும். தொலைபேசியும் துண்டிப்பிற்கு உள்ளாகியது.
சுவிசில் மு.லிங்கத்தின் வீட்டைச்சுற்றி உறவுகள் குவிந்தனர். செத்தவீடே நடைபெறுகின்றது. அவர் செத்தா நாமளும் கடன்ககாசை திருப்பிக்கொடுக்கத் தேவையில்லைத்தானே என்று துரை, சுந்தரன் போன்றோர் ஒருபக்கமாக நின்று கதைக்கிறார்கள். ஆத்தில பிளேனை இறக்க இயலுமா என்று ஒரு அரட்டை அரங்கம் வேறு. 4 இடத்தில் இருந்து உறவினர்கள் காப்பியும் கொண்டுவந்துவிட்டார்கள். வீடடை நோக்கி ஓடிவந்த மு.லிங்கத்தின்தம்பி அண்ணன் தப்பிவிட்டார், ஆற்றில் விமானம் இறக்கப்பட்டு பிரயாணிகள் மீட்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள், CNN இல் இப்போ லைவ் இல் காட்டுகின்றார்கள். மரணவீடு திரை விலகி காட்சிகள் மாறுகின்றன். வந்தவர்களில் சிலர் ஆத்தில இறக்கியவன் ஒரு சுவிஸ்காரனாமடாப்பா; உண்மைதான் அவரது பூர்வீகம் சுவிஸ்தான். அதனால்தான் அவரது பெயர் Sullberger என்று வருகிறது. அவரது படத்தையும் நீங்கள் பார்க்கலலாம்.
காட்சியும் முடிந்து திரையும்விலகி கூட்டமும் கலைந்தது. ஆபீசில் எனக்கு ஒரு வெளிநாட்டுத் தொலைபேசி அமரிக்காவில் ''லகார்டியா'' விமான நிலையத்தில இருந்து வருகிறது. ''எல்லோரும் காப்பாற்றப்பட்டுவிட்டனர். உங்கள் பிரயாணிமட்டும் மாரடைப்பால் இறந்துவிட்டார்'' என்று. எனது தொழில் அதிபருக்கு அதைத் தெரியப்படுத்தினேன். இந்தத் தகவலை நீங்கள்தான் மு.லிங்கத்தினரின் வீட்டாருக்குத் தெரியப்படுத்திவிடுங்கள் என்று சொல்கின்றார். இன்னும் கொஞ்சநேரம் அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும் என்று நான் சொல்லவில்லை. வெளியில்; கங்கைமகனின் ஆபீசில் ரிக்கட் எடுத்தால் எங்காவது கொண்டுபோய்ச் செருகிவிட்டு விடுவார்கள், அல்லது தண்ணீருக்குள் இறக்கிவிடுவார்கள் என்று பலர் கதைப்பது என் காதுககளுக்குள் பலத்த சத்தமாகக் கேட்கிறது.
7 Comments:
..பல வெளிநாட்டுத்தமிழர் வேட்டியைக்களற்றிவிட்டு களிசான் போட்டது கட்டுநாயக்கா எயர்போட்டில்தான். .." சுவார்ஸமான எழுத்து.
கட்டுநாயகாவில் போட்டதை வீட்டு சாமியறையிலும் கழற்றமாட்டேன் என அடம் பிடிப்பவர்களை என்ன செய்யலாம்.
நல்ல காலம் நீங்கள் நிலக்கண்ணாடியை மறந்து விட்டீர்களொ என்று நினத்தேன் ..100 தொடர்கள் எழுத வேண்டும் என்று வாழ்த்தியிருந்தேன் ... அதை புளக்காக அமைத்தது சிறப்பு ..உங்களுக்கென்று ஒரு பக்கத்தையே வேண்டலாம்...தொடருங்கள் அடுத்த தொடரை ..பல்ர் காத்திருக்கிறார்கள்...
'நாம் இதைப் படிக்கவில்லை . இது நமக்கு நேர்கிற நாம் சந்திக்கிற நம்முடைய வாழ்க்கை மணித்துளிகளின் வரிசை' என்ற உணர்வை ஏற்படுத்தும் கட்டுரை . இடுக்கண் வருங்கால் நகுக என்பதை எழுதுவதர்கிடையில் ஞாபகப் படுத்திக் கொண்டாரோ என்று நகைச்சுவையாக எண்ணத் தூண்டும் சிரிப்பு துளிகளும் கூடவே . அருமை , சிறப்பு
நிகழ்வை ஒட்டிய புனைவா அல்லது நிஜமா - எப்படியிருந்தாலும் சுவாரசியமாக இருக்கிறது. மு.லிங்கத்தின் 'பாதுகாப்புச் சோதனை' கோபத்தில் நியாயமும் நகைச்சுவையும் இருக்கிறது. உங்கள் பதிவு முழுதிலும் நகைச்சுவை புதைந்திருப்பது சுவை. கடைசி இரண்டு வரிகள் ..:)
''துரை 10 தரவேண்டும், சுந்தரன் 14 தரவேண்டும், பரமன் 25 தரவேண்டும்....இப்படி 2 இலட்சம் சுவிஸ் நாணயங்கள் வருமதியிருப்பதாகக் கூறினார்.
-- எனக்குப் பிடித்தவை இவை :-)
நண்பர்களே உங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி!
''உங்களுக்குத் தெரியாமல் யாராவது இந்தப்பெட்டிக்குள் ஏதேனும் பொருட்களை வைத்தார்களா?'' பதில் இல்லை என்று சொல்லியிருக்கலாம்; ஆனால் முருகலிங்கத்திற்கு கோபம் வந்துவிட்டது. எனக்குத்தெரியாமல் பொருட்களை வைத்தால் எனக்கு எப்படித் தெரியும் என்று பதிலளித்தார். அதனால் முருகலிங்கத்தின் பெட்டி
வாய் விட்டு சிரித்தேன். நன்றி
Post a Comment