RSS

பித்தாப்பிறை சூடிகடல்சூழ்ந்து பூவுலகை வாழ்விக்க வந்த சைவவமய குரவருள் சுந்ததரை ஒரு அவதாரமாகவே சேக்கிழார் தன் பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். சிவபிரானுக்கு வழிவழி தொண்டு செய்யும் குலத்தில் இவர் பிறந்தவராதலால் இவரது பெற்ரோர்களும் சிவனுக்கு அடிமையாகவே வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. இவரது பிறப்பைக் கூறவந்து சேக்கிழார் தனது பாடலில் இவரை அவதாரம் என்றே குறிப்பிடுகின்றார். 

மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும்
வேதியர் குலத்தில் தோன்றி மேம்படு சடையனார்க்கு
ஏதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானியார்பால் 
தீதகன்று உலகமுய்யத் திருவவதாரம் செய்தார் (சேக்கழார் திருமுறை 12)

சுந்தரரது திருமணத்தன்று இறைவன் தன்னைத் தடுத்தாட்கொண்ட விடையத்தை ப் பல பாடல்களிலும் நினைவு கூருகின்றார். 

நாயினேன் தன்னை ஆட்கொண்ட சம்புவே (தி.7 ப.69 பா.8)
வலிய வந்தென்னை ஆட்கொண்டானே (தி.7 ப.70 பா.2) என்ற தனது பாடல் வரிகளில் நினைவு கூருகின்றார். 
இவர் பரமன்மீது பண்கனிந்த பாடல்களைப்பாடிச் சைவர்கள் மத்தியில் பரமனது புகழ்பாடும் அடியவராக எல்லோராலும் போற்றப்பட்டார். இவரது பாடல்கள் யாவும் 7ம் திருமுறைக்குள் அடக்கப்பட்டுள்ளன. இத்திருமுறைக்குள் 100 பதிகங்களும் 1026 பாடல்களும் 84 கோவில்களும் பாடப்பட்டுள்ளன. 

இவரது முதலாவது பாடல் பித்தா என்று தொடங்குவதற்கன காரணம் "நீ என்னைப் பித்தன் என்று சொன்னாய் அதனால் பித்தா"  என்று தொடங்கியே பாடு என்று இறைவன் சொன்னதாக நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் பிறிதொரு சுவையான செய்தியும் அவர் இறைவனைப் பித்தா என்று தொடங்கிப் பாடுவதற்குக் காரணமாக இருந்தது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். 

சிவபெருமான் சுந்தரரைத் தடுத்தாட்கொண்டபோது கையில் ஓர் அடிமைப் பத்திரம் (அடிமைச் சாசனம்) கொண்டுவந்தார். அதிலு சிவபெருமானுடைய பெயர் எவ்வாறு அமைந்திருந்தது எனப் பார்ப்போம். இதோ அந்த அடிமைப் பத்திரப் பாடல்

"அருமறை நாவலாதி சைவன் ஆரூரான் செய்கை
பெருமுனி வெண்ணை நல்லூர்ப் பித்தனுக்கு ஞானும் என்பால் 
வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு செய்வதற்கு ஓலை
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து"

இப்பத்திரத்தில் இறைவன் பெயர் பித்தனென்று இருப்பதனாலும் இறைவன் தன்னைத் தானே பித்தன் என்று கூறியிருப்பதாலும் சுந்தரர் பித்தா என்று தொடங்கிப் பாடியிருக்கலாம் என்பதும் ஒரு கருத்துக் கணிப்பீடு. 

பேரருளுடைய சிவபெருமானின் செயல்களை பித்தனின் செயல்களுக்கு ஒப்பிடுவதில் தவறில்லை என்பதை உணர்ந்த சம்பந்தரும் தனது பாடலில் சுந்தரர் காலத்திற்கு முன்பே "பித்தாப் பிறைசூடி" என்ற சுந்தரரின் அதே வரிகளை தனது பாடலிலும் புகுத்தியுள்ளமையை இங்கு காணலாம். சிலவேளை சுந்தரர் இந்தப் பாடல் வரிகளை அறிந்தும் இருந்திருக்கலாம். 

"விண்ணோர் பெருமானே விகிர்த்தா விடையூர்த்தீ
பெண்ணாணலியாகும் பித்தாப்பிறை சூடி 
எண்ணா ரெருக்கத்தும் புலையூருறைகின்ற 
அண்ணா என வல்லார்க் கடையா வினைதானே" (தி.1 ப.89 பா.3)

"தோடு கூற்றுப் பித்தா" என்று அகத்தியர் தேவாரத் திரட்டிலும் இறைவனைப் பித்தா என்று கூறிய ஒரு வரி வருகின்றது. 

சுந்தரரின் பித்தாஎன்று தொடங்கும் பதிகத்திலிருந்து ஊழிதோறும் என்ற இறுதிப்பாடல் வரை 38 ஆயிரம் தேவாரப் பாடல்களைப் பாடினார் என்று திருமுறைகண்ட புராணம் கூறுகின்றது. ஆனால் நமக்குக் கிடைததுள்ளது 1026 பாடல்களே. கீழ்வரும் பாடல் அவரது 38 ஆயிரம் பாடல்களுக்கும் சான்றாக இருக்கின்றது. 

"பின்புசில நாளின் பின் ஆரூர்நம்பி பிறங்குதிரு 
வெண்ணை நல்லூர்ப் பித்தாவெனும் இன்பமுதல்
திருப்பதிகம் ஊழிதோறும் ஈறாய் முது;பத்தெண்ணாயிரம் ஆக
முன்பு புகுன்றவர் நொடித்தான் மலையிற் சேர்ந்தார் (திருமுறைகண்ட புராணம்)

சுந்தரர் தனது பாடல்களினூடாகச் சமூகக் கருத்துக்களையும் மக்கள் இறைவன்பால் அன்பு செலுத்த வேண்டும் என்பதையும் தனது பாடல்களினூடாக அக்காலச் சமூகத்தினருக்கு அள்ளித் தெளித்தள்ளார். அது மட்டுமன்றி நீறிடாதோர்; சிவனை நினைக்காதோர்; ஐந்தொழுத்தை ஓதாதோர்; சிவபூசை புரியாதோர் போன்றவர்களைப் பார்த்துப் பேய்கள் என்று கூறுகின்றார். 

"நாயேன் பலநாளும் மனத்துள் நினைப்பின்றிப் பேயாய்த் திரிந்தெய்தேன் என்று தன்னைத் தானே குறிப்பிடுகிறறார். 

இதே கருத்தைத் திருவள்ளுவரும் தனது குறளில்

"உலகத்தார் உண்டென்பது இல்லை என்பான்
வையகத்து அகலையா வைக்கப்படும் (குறள் 850)

இதே கருத்தைச் சம்பந்தரும் இறை அன்பு இல்லாதவர்களைப் பேய்கள் என்று குறிப்பிடுகின்றார் 

"ஆர்த்தானை அழகர் வெண்மணி அம்மான் தன்னை
ஏத்தாதார் என் செய்வார் ஏழைப் பேய்கள்" (தி.2 ப.14 பா.4)

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

(முலம்; தமிழர் வாழ்வில் சைவநெறி- கங்கைமகன்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: