RSS

"இடக்கர் அடக்கல்"



என் உயிரிலும் மேலான வாசகர்களே என்று உங்கள் அனைவரையும் ஒரு பதிவில் விழித்திருந்தேன். ஒரு நண்பர் உயிரிலும் மேலாக ஒன்றுமே இருக்கமுடியாது! அப்படிக் கூறுவது நாடகீயத்தமிழ் என்று கூறியிருந்தார். அவருடைய பார்வையில் அது சரியாக இருக்கலாம். எனது பார்வையில் வாசகர்களுக்கு ஒரு சிறந்த மதிப்பைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு குறிப்பிட்டேன். தமிழ் இலக்கிய வரலாற்றில் காலத்திற்குக் காலம் தமிழ்மொழி தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வந்திருக்கின்றது. தொல்காப்பியர் காலம் தொட்டு பல்லவர் காலம் வரை உரை நடைக் காவியங்களைவிட செய்யுள் நடைக் காவியங்களே சிறப்புப் பெற்றிருந்தன. அதில் மிகவும் சிறப்புப் பெற்றது திருக்குறள் என்ற நூலாகும். திருக்குறள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு திருக்குறளுக்கு உரை தேவைப்படவில்லை. அதனை அவர்கள் விளங்கிக் கொள்ளும் அறிவு பெற்றவர்களாகவேதான் இருந்தார்கள். விளங்கிக்கொள்ளும் அறிவு அந்தக்காலப் பகுதி மக்களுக்கு இருந்திராவிட்டால் திருக்குறளின் வடிவம் வேறுமாதிரி அமைந்திருக்கும். மொழியின் மரபுரீதியான மாற்றத்தை உணர்ந்தவரே "நன்னூலார்" ஆவார். அதனால்தான் அவர் தனது பதிவில் "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல காலவரை" என்று கூறிச் சென்றார். 

இவ்வாறு இருந்த ஒரு காலகட்டம் வளர்ச்சியடைந்து வெளிநாட்டவர் வருகையுடன் உரைநடை இலக்கிங்கள் பெரிதும் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதனால்தான் தமிழ் இலக்கியத்துள் மணிப்பிரவாளநடை என்ற பண்பு புகுத்துப்பட்டது. சோழர் காலத்திற்குப் பிற்பட்ட காலத்தில் புலவர்களைப் போற்றுவதற்கு வலிமை பெற்ற வசதியான மன்னர் ஆட்சி தமிழகத்திலும் சரி மொத்த இந்தியாவிலும் சரி வலுவிழந்திருந்தது. அதனால் அக்காலக் காவியங்களில் ஒரு வரட்சிப்போக்குக் காணப்பட்டது. இதன் காரணமாக எழுந்த காப்பியங்களும்; நூல்களும்; மக்கள் கதைக்கும் பாங்கும் வித்தியாசப்பட்டு அவை படித்தவர்களுக்கே விளங்கக்கூடிய தகுதியைப் பெற்றிருந்தன. அதனால் அக்காலத்தில் எழுந்த இலக்கியங்களின் பண்பு "தத்துவச் செருக்கு" "வித்துவக் காச்சல்" என்ற ஒரு பண்பைப் பெற்றது. 
இதன் செல்வாக்கு ஈழத்திலும் நாவலர் காலத்தில் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தியிருந்தது. நாவலர் கதைப்பதுபோல் மற்றவர்களுக்கும் கதைக்க ஆசை. தமிழ் கதைப்பார்கள். அது சாதாரண தமிழருக்கு விளங்காது. நாவலர் எதிரில் வந்துகொண்டு இருக்கும்போது அவரை இவர்தான் நாவலர் என்று தெரியாத ஒரு அரைகுறைத் தமிழ் படித்துவர் அவர் கதைப்பதைப்போல் தானும் கதைக்க ஆசைப்பட்டு நாவலரைப்பார்த்து "இவ்வழிச் சேரின் எவ்வழிச் சேரும்" என்று கேட்டார் (இந்த வழியால் சென்றால் எங்கே போகலாம் என்பது இதன் கருத்து). நாவலர் இவன் படித்தவனாகத்தான் இருப்பான் என்பதை மனதில் கொண்டு "சம்புகண்டம் கருதண்டம் புக்கு" என்று பதிலளித்தார். (அதாவது நாவல்குழிக்கும் கைதடிக்கும் போகலாம் என்பது இதன் கருத்து).  கேள்வி கேட்டவருக்குப் பதில் விளங்கவில்லை. இடத்தைக் காலிபண்ணிவிட்டார். 

இவற்றைவிட "குழுஉக்குறி" என்று தமிழில் ஒரு பண்பு இருக்கிறது. இது குறிப்பிட்ட  குழுவினருக்கே விளங்கும் சொற்களாகும். இது விடையம் தெரியாதவர்களுக்கு மிகவும் கடுப்பு ஏற்றும் மொழிநடையாகும். "என்னைப்பற்றி தந்தையாரிடம் பாக்குவைத்தான்" என்றால் கோள்மூட்டிக் கொடுத்தான் அல்லது இக்காலச் சினிமாத் தமிழில் போட்டுக்கொடுத்தான்என்ற கருத்தைக் கொண்டுள்ளது. கொச்சைத் தமிழில் ஆப்பு வைத்தான் என்றும் கூறலாம். ஆனால் இந்த குழுஉக்குறி என்பது சமுகத்தவரால் பேசப்படும் வழக்கில் இருந்தது. தற்கால இளைஞர்கள் கூட இப்படியாக குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக வெளிநாட்டில் ஆபிரிக்காக் காரனை நாம் கானாகாரன் என்பதும் ஒரு குழுஉக்குறி தான். 

காளமேகப் புலவர் காலத்தில் சிலேடைத் தமிழ்வழக்கு மரபில் இருந்தது. அதாவது இரண்டு பொருட்களை ஒரே பாடலில் சொல்லும் திறமை. காளமேகப்புலவர் "ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்...." என்று தேங்காய்க்கும் நாய்க்கும் ஒருபாடல் பாடிருக்கிறார். அதேபோல் "நைஞ்சிருக்கும் தோல் கழற்றும் நாதர்முடி மேலிருக்கும்...." என்று பாம்பிற்கும் வாழைப்பழத்திற்கும் ஒரு பாடல் பாடி இருக்கிறார். எங்களது உயர்தரம் படிப்பித்த வாத்தியார் சிலேடை என்பதை "டிபிள்மீனிங்" என்று படிப்பித்தார் எங்களுக்கு உடனே விளங்கிவிட்டது. அதற்குப்பிறகு நானிருந்த ஆண்கள் விடுதியில் இதுதான் கொஞ்சக் காலம் எங்களை வாழவைத்தது. விடையம் என்னவென்றால் இந்த "டபிள்மீனிங்" வாத்திமாருக்கு கூட விளங்காது. "கொத்துது மச்சான்" என்றால் குறிப்பிட்டபெண் தன்னைப் பார்க்கிறது என்று பொருள். இப்படிப் பல சொற்கள் இருக்கின்றன. 

ஆடை இல்லாமல் பால் கொண்டு வந்தாள்; கொஞ்சலாம் பெண்ணை (கொஞ்ச லாம்பு எண்ணை); மணியஞ்சாகப்போகிறது (மணி ஐந்து ஆகப்போகிறது); பால் கறப்பது எப்படி பஞ்சபாண்டவர் பிறந்ததெப்படி (விடை குந்தியிருந்து); இப்படிப் பரீட்சைக்குத் தேவையில்லாத பலவற்றையும் குழுஉக்குறியாகவும் சிலேடைத் தமிழாகவும் கற்றுக்கொண்டவர்களில் நானும் ஒருவன்.

இவற்றைவிடக் கிராமங்களிலும்; நாட்டுப் புறங்களிலும்; பல வகையாக சொற்கள் பாவிக்கப்படுகின்றன. அமரிக்காவில். ஒருவர் வந்து Johson எங்கு இருக்கிறது என்று கேட்டால் பாத்றூம் எங்கு இருக்கிறது என்று கேட்கிறார் என்பது கருத்து. சிறியவகதில் சின்னவிரலை காட்டினால் அதற்கு ஒரு கருத்து இருக்கிறது. சர்வதேச ரீதியில் நடுவிரலை காட்டினால் ஒரு கெட்ட வார்த்தை இருக்கிறது. சுவிசில் காரோட்டிகள் காருக்குள் இருந்து இன்னொரு காருக்குள் ஓடுபவருக்குக் காட்டினால் தண்டனை உண்டு. ஈழத்தில் போர் நடந்துகொண்டிருக்கும் காலத்தில் வெளிநாடுபோகவந்த ஒருத்தர் விமானநிலையத்தக்குள் அவசர அவசரமாக நடந்து சென்றபோது ஆமிக்காரன் (கோய்த யன்னே) "ஏய் எங்கே போகிறாய்" என்று கேட்ட அவரும்(மம இக்மட்ட பம் கரண்டோண) "நான் அவசரமாகப் "பம்பண்ணப் போகிறேன்" என்று சொல்லித்  தடுப்புக்காவலில் அவரைப் போட்ட கதைகளும் உண்டு. 

வளவுக்குள் போய்விட்டு வாறன்; கால் கழுவிவிட்டுவாறன்; கொல்லைக்குப் பேகிறேன்; குழத்தைக்கு போய் வருகிறன் என்பதெல்லாம் காலைக்கடன் முடித்து வருவதைக் குறிக்கும் சொற்களாகும். இடக்கர் அடக்கல் என்பதும் இதேமாதிரியாக சில விடையங்களை இடத்திற்கு ஏற்றதுபோல் அடக்கி வாசித்தல் அல்லது சொல்லுதல். இது ஓரளவு தமிழ் இலக்கணம் தெரிந்தவர்களுக்குத்தான் விளங்கும். இடக்கர் அடக்கல் என்றே பல சொற்கள் தமிழ் இலக்கணத்தில் உண்டு. மலசலம் கழிக்க ஒருவர் சென்று வரும் இடத்து அவர் சபையில் வந்து பகர ஈகாரம் செய்து வருகிறேன் என்பார். அது ஒருவருக்கும் விளங்காது. பகரம் என்றால் "ப்" ஈகாரம் என்றால் "ஈ". இரண்டையும் சேர்த்து வாசியுங்கள் அவர் எங்கு சென்றுவந்தார் என்று உங்களுக்கே இலகுவாக விளங்கும். இதைத்தான் இடக்கர் அடக்கல் என்று இலக்கணகாரர் வகுத்துள்ளார்கள். கவிஞர் பாரதிதாசன் இவ்வாறான ஒரு அவசரத்தைத் தனது பாடலிலே குறிப்பிட்டிருக்கிறார். 
"நாவில் இடுகையில் நடுவயிறு வலித்தது
வெளிக்குப் போகவேண்டும் என்றுணர்ந்தான்
வடையின் சுவையோ விடேன் விடேன் என்றது
கொல்லையை நோக்கிச் செல்லவும் துடித்தான்
மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்
வல்லம்பு போல மிகவும் விரைவாக
நடுவில் கிடந்த நாயை மிதித்துப்
படபடவென்று பானையைத் தள்ளிக்
கன்றின் கயிற்றால் கால் தடுக்குற்று
நின்ற பசுவின் நெற்றியில் மோதி
இரண்டு பற்கள் எங்கேயோ பூட்டுப்
புரண்டெழுந் தோடிப்போனான் கொல்லைக்கு"

இடக்கர் அடக்கல் என்பது. அந்த வார்த்தையைச் சொல்லாமல் இருக்கவேண்டும் என்பதே தவிர செய்யாமல் இருக்கவேண்டும் என்பதல்ல. உலகக் கணக்கெடுப்பின்படி Johson கள் குறைந்துகொண்டு வருகிறது. மக்கள்தொகை அதிகரிக்கிறது.  முந்துங்கள். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: