RSS

தாய் - மெய்



என் தாய்க்கு
இன்று ஐந்தாவது
நினைவு தினம்.
சிவகங்கை என்ற
தெய்வத்தை  இழந்து  
நான் பெற்றது
கங்கை என்ற
பெயரைத்தான்..........
.
தென்றலாய்க் கடந்த
உன் அகவைகளில்
காலத்தால் நிலைத்த
நின் நினைவுகள்
மனத்திடை நாற்றாக
முளைத்திடும் என்நாளும்.
சுவாசம் சுமந்த காற்றை
சுவாசிப்பதில் என்றும்
எனக்கொரு சுகமானது  
நீ தந்த வரம்.
தோளில் சுமந்தவளைத்
தொலைத்த இன்று
விழிபூத்த நீரோடு
ஒளி மங்கி நடக்கின்றேன்.
உந்தன் கருவுறையில்
எந்தன் உயிர் ஓசை;
உயிர் போகும் வலி சுமந்து
உயிர் தந்த உத்தமியே;
ஊன்  ஒழுகும் இசை கேட்டு
ஒழி தவழும் உன் முகத்தை
ஒழித்திருந்து பார்த்தவன் நான்.
அன்னை என உனை அழைக்க
முதல் வித்தாய் ஓடிவந்து
கருப்பந்தின் சுவர் உடைத்து
உன் மகவாய் உருப் பெற்றேன்.
பாலினை ஊட்டிப் பாதியாய் உருகித்
தூளியை விடுத்துத் தோளிற் சுமந்து
ஆழியிற் கிடைத்த அசல் முத்தென்று
நாழிகை தூங்காமல் நயந்ததாய்.
பூமிப்பந்தைக் கையிற் தந்து
ஏணிப்படிகள் செய்து வைத்தாய்.
வார்த்தைகள் இல்லாத வடிவ
தூரிகை வரையாத காவியமே;
என் கல்லறையில் உன் பெயரை
எழுதிச் சுமக்க எனக்கு ஆசை.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பனித்தாரகை


தேங்காய்ப் பூக்களால்
என் தேசம்.
பட்ட மரங்களில்
பருத்தி வெடிப்பாய்ச்
சிதறிய பனிப்பூக்கள்
வெப்ப நாட்டின்
சிற்பம் ஒன்று
வேடிக்கை பார்த்து
வீணை அதிர்வாய்ச்
சாணைபிடித்துத்
துருத்தியாகித்
திருப்தியானாள்.
அள்ளித் தின்னும்
ஆசை எனக்கு!
கிள்ளிப்பார்க்காத
குமரி அவள்.
வீட்டுக்குள் நுழைந்து
துள்ளித் திரிந்தவள்
துவண்டு விழுந்து
மெல்லத் தழுவும்
அணங்கைப் போல
மேனி தொட்டுத்
தீனி கேட்டாள்.
பனியை விரட்டும்
பாவனை தெரிந்தவன்
மையலாய் வந்த
அழகுத் தாரகையை;
எப்படி அணைத்திடுவேன்?
அந்தப்  பனிக்குளிர்ப்
பல்லவியை!....
சரணங்களே எனக்குச்
சங்கீதம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஐரோப்பாவில் நேரமாற்றம்


.


நேற்றைய தினம் ஐரோப்பாக் கண்டம் முழுவதும் ஒரு மணித்தியாலம் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூரியன் கடகக் கோட்டில் செப்டம்பர் மாதம் 21ம்திகதி முதல் மார்ச் மாதம் 23 ம் திகதிவரை உச்சம் கொடுப்பதால் ஐரோப்பிய நாடுகளில் குறைந்த அளவான பகற்பொழுதுகளே சூரிய வெளிச்சத்திற்குள் இருக்கும். இதனை ஈடு செய்வதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்தமாற்றம்; நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்வதற்காகக் குறிப்பிட்ட மாதங்களில் வரும் கடைசிச் சனிக்கிழமை இரவுகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இருந்தும் காலை 7 மணிக்கு வேலைக்குச் செல்லும் ஒருவர் மாலை 5 மணிக்குத் திரும்பும்போதும் இருளாகவே இருக்கும். இந்தநேர மாற்றத்தினால் பாடசாலை மாணவர்கள் உட்பட அதிகாலையில் வேலைக்குச் செல்வோரும் கூடுதலான பலனை அடைகிறார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Swiss Bern Main Street
நேரமாற்றத்தினைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவில் இருந்து சுவிற்சர்லாந்தின் தலைநகரமாகிய BERN நகரத்தில் என்றுமில்லாதவாறு பனிப்பொழிவு நிகழ்ந்துகொண்டு இருக்கின்றது. வெப்பநிலை இரவுகளில் -2 ஆகவும் பகற்பொழுதுகளில் +4 ஆகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வருடம் கடந்த 70 வருடங்களுக்கு முனன்னர் இருந்த காலநிலை வரும் என்றும், பாதிப்புகள் அதிகமாக இருக்காது என்றும், காலநிலை ஆய்வுமையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நிலவுக்காதலி


உப்பென்று ஒதுங்கிய கரையை
முத்தமிட்டன அலைகள்,
வான் பெண்ணை மறைத்து
அழுது கொண்டது மழை.
ஓங்கி அடித்த வளியால்
வழி மாறிப்பறந்த முகில்கள்.
இருளைப் போர்த்தியது பூமி,
நட்சத்திரப் பொத்தல் கண்டு
வெட்கித்  தலைகுனிந்து
ஒருநாள் ஒழித்தவளாய்
வானத்தில் தவழ்ந்து
மெள்ளென அடிவைத்து
விண்ணகத்து வளர்பிறையாய்த்
தலைகாட்டிப் பௌர்ணமியில்
முழுதாய் இணைந்தாள்
தேன் நிலவுநாடிய
என் கனவுக்காதலி!

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காளமேகம்!


வரதன் என்ற இயற்பெயர் கொண்டு கும்பகோணத்தில் பிறந்தவர்தான் காளமேகப் புலவர். இவர் வாழ்ந்த காலப்பகுதி தமிழ் இலக்கிய வரட்சிக் காலமாகிய நாயக்கர் காலமாகும்.புலவர்களை ஆதரிக்காத அரசர்கள் வாழ்ந்த காலமாதலால் இவர் பாடல்கள் பல, வசை பாடுவனவாக இருந்தன. வைணவ குலத்தைச் சேர்ந்தவராக இருந்த இவர் திருவானைக்கா கோவிலில் இறை தொண்டுகள் செய்து வரும்போது அங்கு நாட்டியம் ஆடும் தேவமங்கையைக் கண்டு காதல் மணம் புரிந்தவர். திருமணத்தின் பின்னர் வைணவசமயத்தை விடுத்துச் சைவசமயத்தில் சேர்ந்து கொண்டார். மனைவியின் பெயர் மோகனாங்கி. நாட்டியம் ஆடச் சென்ற மனைவிக்காகக் கோவிலில் காத்திருந்தவர் அசதியில் தூங்கிவிட்டார் . அதே மண்டபத்தில் பாணர் ஒருவர் இரவு பகலாகச் சரசுவதியின் கடாட்சத்தை வேண்டித் தவம் செய்து வந்தார் .
.
தவம் செய்த பாணருக்குச் சரஸ்வதி அருள் பாலிக்க வாயினுள் தாம்பூலத்தை உமிழ்ந்துகொண்டு சிறுபிள்ளை வேடம் பூண்டு வந்தார். சரஸ்வதியைச் சிறுபிள்ளையாகக் கண்ட பாணர் யாரோ தனது தவத்தைக் குலைக்க வந்திருக்கிறார்கள் என்று ஏசித் துரத்திவிட்டார். இந்த அமழியில் நித்திரை குழம்பிய காளமேகப் புலவர் வாயைத் திறந்தபடி சுவரில் சாய்ந்து கொண்டு இருந்தார் .அந்தவழியால் வந்த சரசுவதி காளமேகப் புலவரின் வாயினுள் தாம்பூலத்தை உமிழ்ந்து அருள் பாலித்துவிட்டுச் சென்றார் அன்றிலிருந்து காளமேகப் புலவருக்கு கவிபாடும் வல்லமை வந்தது. புலவர்களில் யமகண்டம் பாடியவர் காளமேகப் புலவராவார்.
.
இவர் சிலேடைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் .
.
தேங்காயையும் நாயையும் ஒப்பிட்ட ஒரு பாடல்.
.
ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாளும் குலை தனக்கு நாணாது....
:
பாம்பையும் வாழைப்பழத்தையும் ஒப்பிட்டு ஒரு பாடல்
.
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும
வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது -
விஞ்சுமலர்த் தேம்பாயுஞ் சோலைத்
திருமலைராயன் வரையில் பாம்பாகும் வாழைப்பழம்
.
தண்ணீரை மழை என்றும், நீர் என்றும், மோர் ன்றும் வர்ணித்துள்ள பாடல் .
.
காரென்று பேர் படைத்தாய் ககனத்துறும்போது
நீரென்று பேர் படைத்தாய் நீனிலத்தில் வீழ்ந்ததற்பின்
வாரொன்று பூங்குழலார் ஆய்ச்சியர் கைப்பட்டதற்பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.”
.
இவரால் பாடப்பட்ட நூல்கள்
.
 திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகியனவையாகும்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கடவுள்மணி!

வணக்கம் எனது அன்பான வாசக நட்புகளே. இந்தக்கதை எனது நிலைக்கண்ணாடியில் 50வது கதையாக வெளிவருகின்றது. ஏறத்தாள ஒருவருடத்தில் இந்த இலக்கை அடைந்துள்ளேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.  அதற்கு முகநூல் நட்புகள் தங்கள் கரம்தந்து என்னை ஊக்கிவித்தமையே முக்கிய காரணமாகும். அவர்கள் எல்லோருக்கும் என் இருகரம் கூப்பிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உருத்திராட்ச மரம் (நேபாளம்)
ஒரு பொருளைக் கண்டால் இன்னொருபொருள் இயல்பாகவே நமக்கு ஞாபகம் வருவதுண்டு.  கல்லைக் கண்டால் நாயும், தடியைக்கண்டால் பாம்பும், வலையைக்கண்டால் மீனும், ஆசிரியரைக்கண்டால் பாடசாலையும், குடையைக்கண்டால் மழையும்,.......இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அதேபோல் ஒரு உருத்திராட்ச மாலையைக் கண்டால் ஒரு சாமியார் அல்லது ஒரு குருக்கள் போன்றோர் நினைவில் வருவார்கள்.  பல ஆயிரம் வருடங்களுக்கு முதல் இந்த உருத்திராட்ச விதைகள்(மணிகள்) பலவகையான நோய்களைக் குணப்படுத்துவதற்காக நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களும்,  இந்திய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும், இமயமலை அடிவாரத்தைச் சுற்றியுள்ளவர்களும் அணியத் தொடங்கினார்கள் என்பது வரலாறு.
.
உற்பத்தியாகும் இடங்கள்
.
Rudraksha என்ற தாவரவியற் பெயரில் அழைக்கப்படும் உருத்திராட்ச மரங்களிலிருந்து உருத்திராட்ச மணிகள் பெறப்படுகிறன. தென்கிழக்காசியாவில் ஜாவா, கொரியா, மலேசியா, தாய்வான், சீனா, போன்ற இடங்களிலும் நேபாளத்திலும்  அதிகமாக விளைகின்றன.
.
குணமாகும் நோய்கள்.
.
இந்த மணிகளைத் தாயத்து மாதிரியோ அல்லது  மாலையாகவோ நம் உடற் தோலிற் படும்படி அணிந்து வந்தால் பலவகையான நோய்கள் குணமாகும் எனச் சித்த ஆயுள்வேத மருத்துவம் கூறுகின்றது. ஆஸ்த்மா, எலும்புருக்கி, மூட்டுவலி, பக்கவாதம், தீக்காயங்களை ஆற்றுதல், மனவழுத்தம், குழந்தைப் பேறு, ஆயுதங்களால் ஏற்படும் காயங்கள், இருமல் தொல்லை, உடற்பருமன், இதயக்கோளாறு, வலிப்பு, பேச்சாற்றல், மூச்சுக் கோளாறு, கால்களில் பாதிப்பு, வயிற்றுப் பிரச்சனைகள், தோல்வியாதி, தன்நம்பிக்கை, மனநலம், போன்றவற்றிற்குச் சிறந்த ஒரு நிவாரணியாகக் கருதப்படுகிறது. நம்மைச் சுற்றியுள்ள வெப்பத்தை இது தணித்து உடலுக்குள் ஒரு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. துறவிகள் ஏராளமான மாலைகளை அணிவது இதன் காரணமாக இருக்கலாம் என்று பின்னைய ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. உருத்திராட்ச மணியை 5 நிமிடங்கள் நீரில் ஊறவைத்துக் குடித்தால் உயர் இரத்து அழுத்தம் குணமாகும் என்றும் கொள்ளப்படுகிறது.
.
உருத்திராட்ச மணியை மாலையாக்கி எந்தச் சமயத்தவரும் அணிந்து கொள்ளலாம். 8 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இருபாலாரும் அணிந்து பலன்களைப் பெறலாம் .இதை அணிந்திருக்கும் போது எந்தவிதக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கத் தேவையில்லை. ஆனால் இதன் புனிதத் தன்மை கெட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்து சமயத்தவர்கள் இதை அணிபவர்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றார்கள்.  உருத்திராட்ச மணிகள் அதன்  முகங்களின் எண்ணிக்கையைக் கொண்டு வேறுபடுத்தப்படுகின்றன. முகங்களின் தன்மைக்கு ஏற்ப இதை அணிபவர்களுக்குப் பலாபலன்கள் வித்தியாசமானவையாகக் கிடைக்கின்றன என்று இந்தியச் சித்த வைத்தியம் கூறுகின்றது. அனைத்து மதத்தவர்களும் இதன் பலாபலன் கருதி;  விரும்பி அணிவதால் இதனை ஒரு மதத்திற்கான சின்னமாகக் கருது முடியாது .
.
இந்துசமயத்தின் பா(போ)ர்வையில் உருத்திராட்சம்.
.
ஒரு இந்து சமயத்தவர் தன்னை இந்து என்று காட்டுவதற்குத் திருநீறும் உருத்திராட்சமும் அணிந்து கொள்கின்றார் என ஈழத்து ஆறுமுக நாவலரது விளக்கவுரையில் குறிபபிடப்பட்டுள்ளது.  திருநீறு மழை, தண்ணீர், காற்றுப் போன்றவற்றினால் உடலில் இருந்து அழிந்துவிடும். அதனால் அவர் தனது இந்து என்ற அடையாளத்தையும் இழந்துவிடுகிறார். அடையாளத்தை இழக்காமல் இருப்பதற்கும் தன்னை ஒரு இந்து என்று காட்டிக் கொள்வதற்கும் உருத்திராட்சம திருநீற்றைவிடச் சிறந்ததாக இந்து சமயத்தவரால்   கொள்ளப்ப்படுகின்றது.
.
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் என்ற பெயர் நேரடிப் பொருளில் சிவனின் கண்களைக் குறிக்கின்றன.   சிவனின் கண்ணீரே உருத்திராட்சத்தின் தோற்றம் என சிவபுராணம் கூறுகிறது. . பல்லாயிரம் ஆண்டுகளாக உடல் நலம், ஜபம், சக்தி ஆகியவற்றின் ஊடாகச் சமய ஈடேற்றம், நின்மதியான வாழ்க்கை ஆகியன வேண்டி, உருத்திராட்ச மணிகள் மாலைகளாக அணியப்பட்டு வந்தன. இமயத்திலும் ஏனைய காடுகளிலும் அலைந்து திரியும் ஞானிகளும், ரிஷிகளும் உருத்திராட்சங்களையும் அவற்றினால் செய்யப்பட்ட மாலைகளையும் அணிந்து, நோயற்ற, அச்சமற்ற, முழுமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள் என இந்துசமய வரலாறுகள் கூறுகின்றன. சித்தர்கள்தான் இந்த மணிமாலையை ஆரம்பத்தில் கண்டுபிடித்தார்கள் என்றும், சித்தர்கள் யாவரும் இந்து சமயத்தினராக இருந்தார்கள் என்றும், புராணங்கள் கூறுவதால் உருத்திராட்சம் இந்துக்களுக்கே உரியது என்றும் இந்து சமயத்தவர்கள் கூறுகின்றார்கள் .
.
வெண்மை, கருமை, செம்மை,  போன்ற நிறங்களால் வகைப்பபடுத்தப்  பட்டதும், ஒன்று முதல் பதினாறு வரை முள் முனைகள் கொண்டதும், ஒருவகைச் சிறப்பான மருத்துவ ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுகிறது. நேபாள நாட்டில் விளையும் உருத்திராட்ச மணிகளே தரத்தில் உயர்ந்தனவாகக் கருதப்படுகிறது. ஆனால் உத்தரப்பிரதேசதத்தில் உள்ள காசி நகரம்தான் இதன் முக்கிய சந்தையாகக் கருதப்படுகிறது. சில இடங்களில் போலியாக அரக்கு பிளாஸ்டிக் போன்றவற்றாலும் செய்யப்படுகிறது.
.
உருத்திராட்சம் ஓர் ஆபூர்வமான மூலிகைப் பொருள் என்பது ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும். எங்கெல்லாம் உருத்திராட்சம் வணங்கப் படுகின்றறோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள் என்று நம்பப்படுகின்றது. உருத்திராட்சத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம். உருத்திராட்சம் தியான வழியில் குண்டலினியை  எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு, விண்ணுலகப்பேறு ஆகியவற்றை அடைவதில் உருத்திராட்சம் உதவுகின்றது. இது முழுக் குடும்பத்தையும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழச் செய்யும். உருத்திராட்சம் அதனுடைய உயிரியல் மருத்துவப்
பண்புகளுக்கும், மன அழுத்தம், அதி உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தன்மைக்கும் பெயர் பெற்றது.
.
உருத்திராட்சம் சுய ஆற்றலையும், சுய அன்பையும் மேம்படுத்த உதவும். அணிவோரின் உள் ஒளியை இது மேலோங்கச் செய்கிறது. இது பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களைக் குணப்படுத்தவல்லது. குறிப்பிட்ட முறையில், மருத்துவ விதி முறைகளுக்கேற்பக் கையாளப்பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும். இது அணிவோருக்கு மன அமைதியையும், மன ஊக்கத்தையும், புத்திக் கூர்மையும் அளிக்கிறது. 38 வகையான உருத்திராட்சத்தில், 21 வகை மிக பிரசித்தம் வாய்ந்தவை. மணியின் முகத்தைப் பொறுத்தே ஒரு முகம், இரு முகம் என்று வரிசைப் படுத்தப்படுகிறன. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.
ஒரு முகம்
மந்திரம் - ஓம் நமச்சிவாய, ஓம் ஹரீம் நமஹ
ஒரு முகமுடைய உருத்திராட்சம் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த உருத்திராட்சம் ஏனைய எல்லா முகங்களையுடைய உருத்திராட்சங்களுக்கும் அரசனாகையால், இது தூய உணர்வைக் குறிக்கிறது.
இரண்டு முகம்
மந்திரம் - ஸ்ரீ கௌரி சங்கராய நமஹ, ஓம் நமஹ
இரு முகமுடைய உருத்திராட்சத்தை ஆளும் கோள் சந்திரன். இது பகவான் சிவனும், தேவி பார்வதியும் இணைந்த உருவமான அர்த்த நாரீஸ்வரரைக் குறிக்கிறது. .
மூன்று முகம்
மந்திரம் - ஓம் கிளீம் நம
இந்த மும்முகமுள்ள உருத்திராட்சத்தை ஆளும் கோள் செவ்வாய். இது தீக்கடவுளைக் குறிக்கிறது. எல்லாப் பொருட்களையும் எரித்த பின்னரும் தீ தூய்மையாக இருப்பது போல் மூன்று முகமுள்ள உருத்திராட்சத்தை அணிந்தால்  ஒருவர் தனது வாழ்க்கையில் பாவங்களில், தவறுகளிலிருந்து விடுபட்டுத் தூய நிலையை அடைகின்றார். .
நான்கு முகம்
மந்திரம - ஓம் ஹரீம் நமஹ
இந்த நான்கு முகமுள்ள உருத்திராட்சத்தை ஆளும் கோள் புதன். இது பிரம்மனைக் குறிக்கிறது. அணிவோருக்கு அருள் கிடைத்த போது ஆக்க சக்தி கிட்டுகிறது. மாணவர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நற்பயன் அளிக்க வல்லது.
ஐந்து முகம்
மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
ஐந்து முகங்களுடைய உருத்திராட்சத்தின் ஆளும் கோள் வியாழன். இது மங்களகரத்தின் குறியீடான சிவனைக் குறிக்கும். இந்த ஐந்து முகமுடைய உருத்திராட்ச மாலை அணிந்தோருக்கு உடல் நலம், அமைதி ஆகியன கிட்டும். இது ஒருவரின் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கிறது.
ஆறு முகம்
மந்திரம் -ஸ்வாமி கார்த்திகேயாய நமஹ
இந்த ஆறு முக உருத்திராட்சத்தை ஆளும் கோள் வெள்ளி. இது  முருகக் கடவுளைக் குறிக்கும். இதை அணிந்து வருவோருக்கு அறிவு, மேம்படுத்தப்பட்ட புத்தி, திடமான மனம் ஆகியவை  கிட்டும்.
ஏழு முகம்
மந்திரம் - ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நம
இந்த ஏழு முக உருத்திராட்சத்தை ஆளும் கோள் சனி. இது திருமகளைக் குறிக்கும். இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அமையும்.
எட்டு முகம்
மந்திரம் - ஒம் ஹீம் நமஹ, ஓம் கணேஷாய நமஹ
இந்த எட்டு முகமுடைய உருத்திராட்சத்தின் ஆளும் கோள் இராகு. இது விநாயகரைக்  குறிக்கிறது. இது முயற்சிகளிலுள்ள தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறது.
ஒன்பது முகம்
மந்திரம் - நவ துர்க்காயை நமஹ, ஓம் ஹரீம் ஹும் நமஹ
இந்த ஒன்பது முக உருத்திராட்சத்தை ஆளும் கோள் கேது. இது துர்க்கையைக்  குறிக்கிறது. இதை அணிந்து வணங்குபவர்கள  அதிக சக்தி, ஆற்றல், செயல் திறம், அச்சமின்மை ஆகியவற்றை அடைகின்றனர்.
பத்து முகம்
மந்திரம் - ஸ்ரீ நாராணாய நமஹ, ஸ்ரீ வைஷ்ணவை நமஹ, ஓம் ஹ்ரீம் நமஹ
இந்த பத்து முகமுள்ள உருத்திராட்சத்திற்கு ஆளும் கோள் என்று ஒன்றுமில்லை. கோள்களினால் ஏற்படும் தீய பலன்களையும் இது சாந்தப்படுத்தும். பத்துத் திசைகளினதும், பத்து அவதாரங்களிலும் செல்வாக்கு இந்தப் பத்துமுக உருத்திராட்சத்தில் உண்டு. .
பதினோரு முகம்
மந்திரம் - ஒம் ஸ்ரீ ருத்திர நமஹ, ஒம் ஹரீம் நும் நமஹ
இது பகவான் அனுமானைக் குறிக்கும். வேண்டியோருக்கு அறிவு, நேர்மையான நீதி ஆற்றல் மிக்க சொல்லாட்சி, துணிவுள்ள வாழ்க்கை, வெற்றி ஆகியனவற்றை அருளும். எல்லாவற்றிற்கும் மேலாக, விபத்தினால் மரணம் ஏற்படுவதை இது தடுக்கும். இதை அணிவோர் அச்சமற்றவராக ஆவார். தியானத்திற்கும் இது உகந்தது.
பன்னிரண்டு முகம்
மந்திரம் - சூர்யாய நமஹ ஓம் க்ரோன் க்ஷோண் ரவுண் நமஹ
இது சூரியக் கடவுளைக் குறிக்கும். இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத் திறனைப் பெறுவர். அத்துடன் சூரியனின் குணங்களையும் பெறுவர். இக்குணங்களால் ஒருவர் என்றும் பிரகாசிக்கும் ஒளியுடனும், பலத்துடன், பிறரை ஆட்சி செய்து வருவர்.
பதின்மூன்று முகம்
மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
இது இந்திரனைக் குறிக்கும். வேண்டியவர்களுக்கு மனிதன் விரும்பத்தக்க எல்லா சுகங்களையும் இது அளிக்கும். செல்வம், மாட்சிமை ஆகியவற்றை அளிப்பதுடன் உலகத்து ஆசைகள் அனைத்தையும்  இது நிறைவேற்றும்.
பதினான்கு முகம்
மந்திரம் - ஓம் நமஹ சிவாய
இந்தப் பதினான்கு முகமுடைய உருத்திராட்சமே அதி உயர்ந்த விலை மதிப்பற்ற தெய்வீக மணியாகும். அதுவே தேவ மணியுமாகும். இந்த உருத்திராட்சம் அணிவோருடைய ஆறாவது புலனை விழிக்கச் செய்கிறது. அதனால் அவர் எதிர்கால நிகழ்வுகளை முன் கூட்டியே அறிகின்றார். இதை அணிவோர் தாம் எடுத்த முடிவுகளில் ஒரு போதும் தோல்வியடைவதில்லை. இதை அணிவோர் இடர்கள், துன்பங்கள், கவலைகள் எல்லாவற்றையும் கடந்துவிட முடிகிறது.மேலும், அணிவோருக்குப் பாதுகாப்பையும் எல்லாச் செல்வங்களையும் இது கொடுக்கிறது.
பதினைந்து முதல் இருபத்தொன்று வரை உள்ள முகங்கள்
பண்டையகால முனிவர்கள் இந்த உருத்திராட்ச மணிகளைப் பூஜை மேடையில் வைக்கும்படியும் அதன் வழி முழுக் குடும்பத்திற்கும் செழிப்பைக் கொடுக்கின்றன. பகவான் உருத்திரனின் அருளைப் பெறும்படியும் அறிவுரை கூறியுள்ளனர்.
கௌரி சங்கர்
மந்திரம் - ஓம் கெளரி சங்கராய நமஹ
இயல்பாகவே ஒன்றாக இணைந்த இரு உருத்திராட்சங்கள் கௌரி சங்கர் என அழைக்கப் படுகின்றன. இது சிவனும் பார்வதியும் சேர்ந்து உருவானதாகக் கொள்ளப் படுகின்றது. இது கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள உதவுகிறது. எனவே இந்த உருத்திராட்சம் குடும்பத்தில் அமைதியும் சுகமும் விளங்க வைக்கும் சிறந்த பொருளாகக் கருதப்படுகிறது. கௌரி சங்கர் உருத்திராட்சத்தை ஒருவர் வழிப்படும் இடத்தில் வைத்துப் பூசித்து  வந்தால் அவருக்கு ஏற்படும் துன்பம், வேதனை, உலகியல் தடைகள் எல்லாம் அழிகின்றன. குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் மேலோங்குகின்றன.
உருத்திராட்சத்தை 3, 4, 5, 6, எண்ணிகையில் வளையமாகக் கோர்த்து அணிவர். கழுத்தில் அணியும் மாலைகள் 27, 54, 108 என்ற கணக்கில் இருக்கும். கழுத்தில், கையில் அணியும் உருத்திராட்சம் "அக்குபஞ்சர்" போல் செயல்பட்டுப் பயன் அளிக்கும். மணிகளைக் கோர்க்கும் போது ஒன்றுடன் ஒன்று முட்டாமல் இடையில் தடையங்களைப் போட வேண்டும். மணிகள் ஒன்றுடன் ஒன்று உராய்வு கண்டால் மணிகளின் சக்தி குறைந்துவிடும்.
மணி அளவு
பெரும்பாலும் இப்போது பலரும் மிகச் சிறிய அளவுடைய மணிகளையே விரும்பி அணிகிறார்கள். எனினும் உருத்திராட்ச விசிட்டம் என்னும் நூலில் எந்த அளவு உருத்திராட்ச மணி சிறப்புடையது என்று கூறப்பட்டுள்ளது.
நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமமானது ; இலந்தைக் கனி அளவுள்ளது மத்திமம் ;கடலை அளவுடையது அதமம்.
செபமாலைக்குரிய மணிகள்
இரண்டு முகமுடையதும் மூன்று முகமுடையதும் செபமாலைக்கு உரியது அன்று; பத்து முகமும் பதின்மூன்று முகமும் பழுதுடையது ; மற்றனைத்தும் உத்தமம்.
இதனைக் கூறும் பாடல்:
இரண்டுமுகக் கண்டிசெப மாலைக் கிசையாது இரண்டுடன் ஒன்றும் இசையாது - இரண்டுடனேபத்துமுக மும்பதின் மூன்றும் பழுது ;மற்றனைத்தும் உத்தம மாமென்றுணர்.
இரு முக வெள்ளை உருத்திராட்சத்தின் மகிமை
தெய்வமணி என்னும் உருத்திராட்சம் கடவுள்களின் சின்னங்களில் மிக முக்கியமானது இது சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு, முருகன், பார்வதி, லட்சுமி, வருணன், சரஸ்வதி, நரசிம்மர், அனுமான், இந்திரன், கருடன், அய்யப்பன், சனீசுவரன், வெங்கடாச்சலபதி, மாடசாமி, துர்கா, பைரவி, புவனேஷ்வரி, பவானி, குபேரன், குருவாயூரப்பன், பிள்ளையார் போன்ற வடிவங்களாகும். உருத்திராட்சம் என்பது சிவபெருமானின் திருக்கண், சிவபெருமானின் மணி எனவும் பொருள்படும்.
.
உருத்திராட்சம் அணிந்திருக்கும் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்று எதுவுமில்லை. உருத்திராட்சத்தை எப்போதும் அணியலாம். அவற்றை நம்பிக்கை, மரியாதை, அன்பு ஆகிய பண்புகளுடன் அணிய வேண்டும். இந்துக்கள் மட்டும்தான் இதை அணிய வேண்டும் என்பதில்லை. பலவிதமான நோய்களைக் குணப்படுத்தி மனித வாழ்வைச் சிறப்பிப்பதால் இது கடவுளால் அருளப்பட்டது என்றும் கடவுள் மணி என்றும் இந்துக்கள் கருதுகின்றனர். (இந்த உருத்திராட்சத்தின் மகிமை பற்றித் "தமிழர் வாழ்வில் சைவநெறி" என்ற எனது நூலில் சிறப்பாகக் கூறப்படட்டுள்ளது) நன்றறி.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நரேந்திரன்!

அனைவருக்கும் வணக்கம். இவை மிகவும் கடினமானதும் அதே நேரம் இலகுவாக்கப்பட்டதுமான ஆய்வுக்குரிய கட்டுரைகள். வாசித்துப் பயன்பெறுவதோடு அன்றி இயன்றவரை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தயவாகக் கேட்டுக் கொள்கிறேன் .

கொழும்புப் பல்கலைக் கழகத்தில் புவியியல் விரிவுரையாளர் ஒரு விரிவுரை நடாத்தினார் .அதன் தலைப்பு "கரைகளைத் தாக்கும் பேரலைகள்"  அப்போது சுனாமி என்ற சொல்லைத்தான் இவ்வாறு அழைப்பது என்பதைப் பட்டப்படிப்பு மாணவர்கள் கூட அறியாமல் இருந்தார்கள். அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியை மில்லியன் வருடங்களாகத் தாக்கிக் கொண்டிருப்பதாகவும் அலாஸ்காவின் கடற்கரை 200 அடிக்கு மேற்பட்ட உயரமான பாறைகளைக் கொண்டிருப்பதால் எந்தப் பாதிப்பும் பூமிக்கு இதுவரை இல்லை என்றும் குறிப்பிட்டார். இது முக்கியமானது அல்ல எல்லோரும் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்டேன் என்று சொல்லி விரிவுரையை முடித்துக் கொண்டார். ஆனால் அந்த வருடம் பரீட்சைக்கு அந்தக் கேள்விவந்து மாணவவர்களைச் சுனாமியைவிடக் கூடுதலாக உலுப்பி எடுத்துவிட்டது. அதே பல்கலைக் கழகத்தில் படித்தவர்களுக்குத் தெரியும் அதன் வளாகத்தில் "கோள் மண்டபம்" என்று ஒன்று இருக்கின்றது. உள்ளே சென்றால் வேற்றுக் கிரகத்தில் நிற்பதுபோல் இருக்கும் .எல்லா மண்டலங்களையும் நட்சத்திரத் தொகுதிகளையும் பக்கத்தில் நின்று பார்ப்பதுபோல் இருக்கும் . இதைக் கனடிய விண்வெளி ஆராச்சி சிறுவனம் கட்டிக்கொடுத்தது.

இன்றைய நிலைப்பாட எனக்கு அன்று இருந்திருந்தால் ஆன்மீகவாதிகள் குறிப்பிடும் ஹோமமண்டலம் அதனுள் தெரிகின்றதா என்று உற்றுநோக்கியிருப்பேன் .ஜீவாத்மாவாகப் பூமியில் வாழும் நான், அந்தப் பரமாத்மாவின் காலடிகளை அதனுள் தரிசித்திருக்கலாம் . ஆனால் ராமகிருஸ்ணர் என்ற ஒரு ஆன்மீக விஞ்ஞானி அதனுள்ளே (ஹோமமண்டலம்) சென்று வந்த கதைதான் இங்கு விபரணமாகிறது. 18.02.1836 அன்றுதான் பூமியின் புனிதத்திற்காகப் புதிய மகவு ஒன்று அவதரித்தநாள். கதாதர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு பாடசாலை நாட்கள் மிகவும் சிறப்பாக இருக்கவில்லை. கணிதபாடத்தில் மிகவும் குறைந்த புள்ளிகளை ஈட்டிவந்தார் .பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லாததால் பள்ளிப்படிப்பை இடை நிறுத்தி கல்கத்தாவில் உள்ள ஒரு காளி ஆலயத்தில் குருக்களாகப் பணியாற்றி காளி அனுக்கிரகம் பெற்றார். காளி ஆட்கொண்டதன் பின்னர் அவரது நடவடிக்கைகள் அசாதாரணமாகின. இதனைக்கண்ட அவரது தாயார் மகனுக்குப் பயித்தியம் பிடித்துவிட்டது. திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடும் என்று பெண்பார்த்தார். இதனை அறிந்த அவர் பக்கத்து ஊரில் உள்ள சாரதாமணி என்ற 5 வயதுப் பெண்ணையே தான் மணக்கவேண்டும் என்று அடம்பிடித்து மணந்து மனைவியைக் காளியாக அலங்கரித்துப் பூசைகள் செய்து மகிழ்ந்தார். திருமணமாகியும் பிரமச்சாரியாக வாழ்ந்த ஒரு மகான் தான் ராமகிருஸ்ணர். கங்கைக் கரையில் ஆசிரமம் அமைத்து அவர் வாழ்ந்து கழித்த நாட்களே அதிகம். அத்வைத வேதாந்தங்களைக் கற்று அதனூடாக இயேசு, அல்லா உட்பட அனைத்து அவதாரங்களையும்  தான் கண்டதாக அவரே கூறியும் இருக்கிறார்
இவருக்கு இருந்த ஒரே ஒரு குறை தனக்குப்பின் உலகத்தில் ஆன்மீகத்தை வாழவைக்க ஒரு சீடன் தேவை என்பதாகவே இருந்தது . அத்வைத வேதாந்தம் கற்று அதன்பயனாக 6 மாதங்கள் "நிர்விகல்ப" சமாதிநிலையில் ராமகிருஸ்ணர் இருந்தார் .இந்தநேரம்தான் தனக்கொரு வாரிசு தேவை என்பதற்காக "ஏழு மண்டலங்களில் ஒன்றான "ஹோமமண்டலம்" சென்றிருந்தார். பல தவவலிமை பெற்ற முனிவர்கள் இவரைப்பார்த்து ஆசை அற்ற உலகத்திற்கு ஆசையுடன் ஒருவன் வருகிறான் என்று நக்கல் அடித்தார்கள் .ஏழனத்தைப் பொருட்படுத்தாத இவர் தனக்கொரு வாரிசு தேவை என்று இறைவனை வேண்டினார் .கையில் ஒரு குழந்தைகிடைத்தது. பின்னர் மாயமாக மறைக்கப்பட்டு பூமியில் 17 ஆண்டுகளுக்குப்பிறகு உன்னைத்தேடி வருவான், அவனது தாயின் பெயர் புவனேசுவரி என்று கூறப்பட்டது. ஆறு மாதகாலத் தவத்தால் அடைந்த இன்பநிலையை எண்ணிப் பூமிக்குவந்து சமாதி நிலை கலைந்து சாதாரண துறவியாக மெய்ஞானியாக வாழ்ந்தார் .

12.01.1863 விசுவநாத் புவனேசுவரி தம்பதிகளுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அமைதியான ஒரு தேவவிதை கல்கத்தாவில் முளைக்கத் தொடங்கியது. கல்வி கேள்விகளிலும் இசையிலும் சிறந்து விளங்கிய இவர் மனதில் கடவுள் கொள்கைகள் பற்றிய கருத்துக்கள் முரண்பாடாகவே தோற்றம் அளித்தன. அதனால் துறவு வேடம் பூண்டவர்களைக் கள்ளச்சாமி என்றும் வாதிட்டுவந்தார். ராமகிருஸ்ணரிடம் சென்றும் தனது நண்பர்களுடன் எதிர்வாதம் செய்வார். 1881ம் ஆண்டு ஆனிமாதம் இவரை யார் என்று அறிந்திருந்த ராமகிருஸ்ணர் "உனது பிரச்சனை என்ன" என்று கேட்டார். கடவுளைப் பார்க்க வேண்டும் என்றால் என்னுடன் எனது ஆசிரமத்துக்குவா என்று அந்த இளைஞனை அழைத்துச்சென்றார். அவனை இருக்கவைத்து தலையில் அமத்தி இளைஞன் குளறக்குளற ஒரு சக்தியை ஊட்டினார். இளைஞன் களைத்து மயக்கமாகிவிட்டான். எழுந்ததும் ராமகிருஸ்ணரை ஏசிவிட்டுச் செல்ல முற்படும்போது இரண்டு புத்தகங்களைக் கொடுத்து வீட்டில் சென்று படி என்று வழி அனுப்பிவைத்தார் .புத்தகத்தை அலட்சியமாக வாங்கிய இளைஞன் வீடு சென்றதும் புத்தகத்தை விரித்துப் பார்த்தான் .அதிலுள்ள சுலோகங்கள் அனைத்தும் மறைந்து பார்க்கின்ற இடம் எல்லாம் ராமகிஸ்ருணரின் உருவப்படமாகக் காட்சி அளித்தது. அன்று இரவோடு இரவாக நரேந்திரன்(நரேந்திரநாத்) என்ற இயற்பெயர் கொண்ட அந்த இளைஞன் ராமகிஸ்ணரிடம் ஓடிவந்து தன்னைச் சீடனாக்கிப் பின்னைய நாளில் விவேகானந்தர் என்ற பெயரைத் தனக்கு மகுடமாகச் சூட்டிக் கொண்டார் .

உலகப் புகழ்பெற்ற பல சமயச் சொற்பொழிவுகளை நடத்திய இவர் 1892  கன்னியாகுமரிக் கடல் மேட்டில் 3 நாட்கள் தங்கியிருந்து எதிர்கால இந்தியாவுக்காகப் பிரார்த்தனை செயதார் .இது இவரைப்பற்றிய சிறுகுறிப்பே தவிர முழுமைப்படுத்தப்பட்ட கட்டுரை அல்ல. கண்ணதாசன் கூறியதுபோல "இறந்தபின்னரும் மக்கள் இறந்த ஒருவரை இளமையாகப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சிலர் இளமையில் இறக்கிறார்கள் என்பதுபோல இந்த ஆன்மீக விளக்கும் தனது 39வது வயதில் தன்னை அணைத்துக்கொண்டது. இவர் இறக்கும்போது தனது பிரசங்கம் 1500 ஆண்டுகள் இந்த உலகத்தில் நிலலத்திருக்கும் அதன்பின்னர் ஒருவர் தோன்றுவார் எனக்கூறி விடைபெற்றார். இறப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தனது இறப்பின் திகதியைக் குறிப்பிட்ட ஒரு மகானாகவும் இவர் காணப்படுகின்றார். இவரது குரு 4 நாட்கள் முன்னதாகவேதான் தனது சமாதிநிலைபற்றிக் குறிப்பிட்டிருந்தார் என்பதும் நோக்கத்தக்கது.
என்னை உயர்ந்தவனாக மாற்றியது என்னுள் இருந்த கெட்ட பழக்கங்கள்தான் (விவேகானந்தர்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அது



இன்று மதியம் சுவிற்சர்லாந்தின் தலைநகரம் BERN  சுறுசுறுப்பாக இயங்கும் நேரம். நகரத்தை இணைக்கும் Tram வண்டிகள் இங்கு சிவப்பு நிறம். தூரத்தில் பார்த்தால் இராட்சத அட்டைகள் ஊர்ந்து வருவதுபோன்ற ஒரு தோற்றம். ஒரு நிமிடத்திற்கு ஒரு Tram இருந்தாலும் மக்கள் ஓடிவந்தே ஏறுகிறார்கள் அவளவு பிசி. இந்தப் போக்குவரத்து மதிய நெரிசலிலும் Police வாகனம் சத்தம்போட்டு நீல வெளிச்சத்துடன்  மற்றைய வாகனங்களை ஓரங்கட்டி முந்திச் செல்கிறது. கூட்டத்தில் நின்ற ஒருவர் இவர்கள் ஏதோ கடமையில் ஓடுகிறார்கள் என்று நினைக்காதையுங்கோ; அவர்களும் மதியச் சாப்பாட்டிற்குத்தான் ஓடுகிறார்கள் என்றார். நானும் யோசித்துப் பார்த்தன். சரிபோலவே இருக்கிறது. ஏனென்றால் மதியவேளையில்தான் நாலாபக்கத்தாலும் அவர்கள் அதிகமாக ஓடுவதைக் கண்டிருக்கிறேன். இந்தப் பிரகண்டமான நேரத்தில்தான் நானும் மதிய உணவுக்காகப் புறப்பட்டேன்.

சாப்பாடுகள் தெருத்தெருவாக இருந்தும் எதைச்சாப்பிடுவது என்ற பிரச்சனை. அதனால்தான் வெள்ளைக்காரன் இன்று என்ன சாப்பிடவேண்டும் என்பதைச் சென்ற வருடமே எழுதிவைத்துவிடுவான். இன்று என்ன செய்யவேண்டும் என்பதை பாத்றூமுக்குள் இருக்கும்போதுதான் பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள் என்று எங்களுக்கு மொழி படிப்பித்த வாத்தியார் 30 வருடங்களுக்கு முதல் சொல்லித்துந்தவர். வெள்ளைக்காரன் சமைக்கும் நேரம் குறைவு. ஆனால் அதே சாப்பாட்டைச் சாப்பிடும் நேரம் அதிகம். நாம் சமைக்கும் நேரம்  அதிகம். அதைச் சாப்பிடும் நேரம் குறைவு. சிலர் சோற்றுக் கவளங்களை வாய்க்குள் எறிந்து எறிந்து சாப்பிடுவதைப் பார்த்து இருக்கிறன். அவளவு பிசி.  

ஒரு உணவு விடுதியில் ஒரு பிற்சாவுடனும் ஒரு காப்பியுடனும் நான் உட்கார்ந்தேன். தூரத்தில் தமிழர் இருவர் சாப்பாட்டிற்காக ஆடர் கொடுத்துவிட்டு அமர்ந்து இருந்தனர். அவர்கள் மெதுவாகக் கதைப்பதாக எண்ணுகிறார்கள் ஆனால் சத்தம் வீதிவரை கேட்கிறது. பல கதைகளையும் கதைத்தார்கள். காதுகொடுத்துக் கேட்டேன். இறுதியில் கர்ணனைப்பற்றித் தொடங்கினார்கள். ஒருவர் உனக்கு கர்ணனைத் தெரியுமா என்று கேட்டார். மற்றவர் அவரைத் தெரியும் அவர் இப்போ கனடாவுக்குப் போய்விட்டார் என்று கூறினார். மற்றவர் கடுப்பானார். நான் கேட்பது பாரதத்தில்வரும் கர்ணனைப்பற்றி என்றார். அவர்கள் கதையில் நான் பொறுக்கி எடுத்தவற்றைக் கீழே தருகிறேன்.

கர்ணனும் அருச்சுனனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒரு மாலை நேரம் கண்ணனுக்குத் தெரியாமல் ஆற்றங்கரைக்குச்  சென்றார்களாம். செல்லும் வழியில் ஒரு குடிசை. குடிசைக்குள் ஒரு தகப்பனும் மகனும் இருந்தார்கள். கர்ணனுக்கு தண்ணீர்த்தாகம் எடுத்ததாம். உடனே இருவரும் அந்தக் குடிசைவீட்டுக்குச் சென்று தாகத்தைப் போக்கிக் கொண்டார்கள். அந்த வீட்டு மகனைக் கர்ணனுக்குப் பிடித்திருந்ததாம். கர்ணன் தகப்பனிடம் மகனைத் தரும்படி கேட்டாராம். தகப்பனும் கொடுத்துவிட்டார். கர்ணன் சொன்னாராம். இவனை உச்சியில் இருந்து பாதியாக வெட்டி இன்று ஒரு பாதியையும் மறுவாரம் ஒரு பாதியையும் எடுத்துக் கொள்வதாக அந்தத் தகப்பனிடம் கூற தகப்பனும் சம்மதித்தாராம். கர்ணன் ஒரு உத்துரவு போட்டார். வெட்டும்போது பிள்ளை அழக்கூடாது என்று. வெட்டத் தொடங்கியாகிவிட்டது. வலப்பாகத்தை இன்று கொண்டு செல்வது என்றும் முடிவாகியது. வெட்டிக்கொண்டு இருக்கும்போது இடப்பாகத்துக் கைவிரல்களால் கண்ணீர் பொலு பொலு வென்று ஓடியதாம். அருச்சுனன் ஏன் இவன் அழுகிறான் என்று தகப்பனைப் பார்த்துக் கேட்டான். அதற்கு தகப்பன் தன்னையும் (அதாவது இடப்பக்க பாதி) இன்றைக்கே அழைத்துப் போகச் சொல்லி அழுகிறது என்றாராம். கதை சொல்லியவர் கடைசியில் மற்றவரைப் பார்த்து எப்படி என் கதை என்றார். மற்றவர் "நீ சின்ன வயதில் படித்த கம்பராமாயணக் கதைகளை எப்படி நினைப்பு வைத்திருக்கிறாய் என்று கேட்டார். எனக்குப் புரக்கடித்தது. வெளியில் வந்துவிட்டேன். நன்றி. காசு கொடுத்துவிட்டுத்தான் வந்தேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இடுக்கண் கழைந்த நட்பு.



அயோத்யா காண்டம் - குகப்படலத்தில் ஓர் செய்தியை  முன்வைக்கிறார் கம்பர். குகனுடைய நட்பை-அன்பை ராமபிரான் பெறுவதும், ராமனுடைய தெய்வ தரிசனத்தை முற்பிறப்பின் பயனாக குகன் கண்டு கொள்வதும், ராமனுடைய திருவடிப் பெருமையைக் குறிப்பிடுவதும்தான்  இப்படலத்தின் சாரம் தனிச்சிறப்பு ஆகும்.
 .
 தனக்குத் துன்பம் வந்த காலத்தில் உற்ற நண்பனை அடைந்தவன்தான்  இராமர். நல்லதொரு காலத்தே மிகச்சிறந்த நண்பனின் இயல்புகளை அளந்து பார்க்கக்கூடிய அளவுகோலாக  ராமனுக்குக் குகன் உதவினான் என்பதைக் கம்பர் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
 .
முருகப் பெருமானுக்குக் "குகன்' என்ற ஒரு பெயர் இருப்பதுபோல இராமாயணத்தில் வரும் குகனின்  பிறப்புக்கும் ஒரு புராணக் கதையுண்டு.

இராமபிரானைப் பார்க்காமலேயே அவரது குணங்களைக் கேட்டறிந்து, அதன் காரணமாக அவர்மீது பேரன்பு கொண்டு வாழ்ந்த வேடன்தான் குகன்.  "பில்' எனும் மலைஜாதி இனத்தவரின் தலைவனான குகன். முரட்டு குணமும், மாமிசம் உண்ணும்  பழக்கமும், பார்க்கவே அருவருக்கத்தக்க உருவம் கொண்டவனாக ஒரு காட்டுப் பகுதியில் குகன் வாழ்ந்து வந்தான். எனதருமை நண்பனே!'' என்று ராமபிரான் கட்டித் தழுவினார் என்றால் - இராமனின் அன்பும், நட்பும், திருவடிப் பேறும் குகனுக்கு வாய்த்திருக்கிறதென்றால், அவன் முற்பிறப்பில் ஏதேனும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்! அந்தப் புண்ணியத்தையும் குகனின் முற்பிறப்புப் பற்றிய வரலாறுமே இந்தச் சிறிய ஆய்வாகும்.
.
ஆன்மாக்களைப் புனிதமாக்கும் புண்ணிய நதி கங்கை. அந்தக் கங்கைக் கரையில் ஓர் அந்தண குலத்தைச் சேர்ந்த முனிவர் தவம் செய்துவந்தார். அவருக்கு ஏழு வயதில் ஒரு புதல்வன் இருந்தான். வேதங்களைக் ஐயந்திரிபுறக் கற்று அன்பும் பண்பும் அடக்கமும் கொண்டு அந்தச் சிறுவன் வளர்ந்து வந்தான்.  ஒருநாள் தந்தையைப் பார்த்து தெய்வங்களுக்குள் சிறந்த தெய்வம் எது?'' என்று கேட்டான்.
 .
மகனே! நமது உடம்பின் உச்சியில் இருப்பது சிகை. வேதங்களின் முடிந்த முடிவாக உள்ளதும் உபநிடதம் அதர்வ சிகை. அதுபோல் தெய்வங்களின் தனிப்பெருந் தலைவர் முருகவேள். முருகன், மூவர் தேவாதி தேவர்கள் போற்றும் முழுமுதற் கடவுள். மறையாயிரங்களும் போற்றும் மகாதேவன். முருகனை வணங்கினால் எல்லா மூர்த்திகளையும் வணங்கியதற்கு ஒப்பாகும். அவன் கருணைக் கடல்; குணநிதி. முருகனை வழிபாடு செய்தோர், பிறவிப் பெருங்கடலைக் கடப்பர்; முக்தி பெறுவர்'' என்று முருகன் பெருமையை மகனுக்குக் கூறினார்.

 ஒரு நாள் முனிவர் கேதாரம் வரை வெளியில் சென்றிருந்தார். அவர் திரும்பிவரும்வரை முனிவரின்  மைந்தன் ஆசிரமத்தில் இருந்து, முருகன் திருவடிகளைத் சரிசித்துக்  கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மன்னன் ஒருவன், முனிவர் இல்லாததைக் கண்டு மன வருத்தத்துடன் திரும்பி நாடுசெல்ல நினைத்தான். அவ்வாறு திரும்பிய மன்னனைப் பார்த்து,
 .
 வேந்தே! நீர் என்ன காரணமாக வந்தீர்? உமக்கு என்ன கவலை? என்னைச் சிறுவன் என்று எண்ண வேண்டாம். ஓர் இருள் சூழ்ந்த வீட்டில் சிறுவன் ஒருவன் விளக்கை எடுத்துச் சென்றால், இருள் விலகத்தானே செய்யும்? சிறுவன்தானே என்று இருள் அலட்சியமாக எண்ணுமா? விளக்குதானே முக்கியம்! அதுபோல, நான் சிறுவனாக இருப்பினும் என்னிடம் "ஞானதீபம்' இருக்கிறது. உமது அறியாமையாகிய இருளை நான் அகற்றுவேன்'' என்றான் முனிவரின் மைந்தன்.
 .
 மன்னன் மகிழ்ந்து, ""குழந்தாய்! நான் இந்த நாட்டை ஆளும் மன்னன். வேட்டையாடியபோது குறிதவறி, நான் விட்ட அம்பு ஒரு முனிவரைக் கொன்றுவிட்டது. அதனால், பிரமஹத்தி (தோஷம்) தொடர்ந்து என்னை வருத்துகின்றது இதற்கு நிவாரணத்தை நாடி வந்தேன்'' என்றான்.

 வேந்தர் பெருமானே! இவ்வளவுதானா! நீங்கள் இந்தப் புனிதமான கங்கையில் மூழ்கி, வடதிசை நோக்கி நின்று, ஒரு மனதுடன், "ஓம் முருகா' என்று மூன்று முறை கூறுங்கள் உங்களைப் பிடித்திருக்கும் பிரமஹத்தி உடனே அகலும்'' என்றான்.

 மன்னனும் அவ்வாறே செய்து, பிரமஹத்தி நீங்கப்பெற்று, முனிவர் மைந்தனைப் பணிந்து, வினை நீங்கி மகிழ்ச்சியாக தன் நகரம் திரும்பினான்.

 முனிவர், சில நாள்களுக்குப் பின் தமது குடிசைக்கு வந்தார். தன் தந்தையைப் பணிந்தான் மகன். முனிவர் தன் மகனைப் பார்த்து, ""மகனே! இங்கே தேர்ச் சக்கரத்தின் சுவடுகள் காணப்படுகிறதே, வந்தது யார்?'' என்று கேட்டார்.

 "தந்தையே! இந்நாட்டு மன்னன் பிரமஹத்தி நீக்கம் பெறுவதற்காகத் தங்களைக் காண வந்தார். அதற்குரிய நிவாரணத்தை நானே கூறினேன். மன்னன் நான் கூறியபடி செய்து, பாவம் நீங்கித் துன்பம் அகன்று மகிழ்ச்சியாகத் திரும்பிச் சென்றான்'' என்றான்.

 முனிவர் பெரிதும் மகிழ்ந்து, ""மகனே! வந்தவருக்கு ஆறுதல் கூறி உதவி செய்தாயே, இதுதான் பண்பாடு. அவருக்கு நீ என்ன பரிகாரம் கூறினாய்?''  என்று கேட்டார்.

 "தந்தையே! பிரமஹத்தி விலக - கங்கையில் மூழ்கி, ஒருமனத்துடன் "ஓம் முருகா' என்று மும்முறை கூறுங்கள் என்றேன்''.

இதைக்கேட்ட முனிவருக்குக் கடுங்கோபம் பொங்கி எழுந்தது. "மூடனே! நீ என் மகனா? என்ன காரியம் செய்துவிட்டாய்? உனக்கு முருகன் பெருமை தெரியவில்லையே? ஒருமுறை "முருகா' என்று கூறினாலே ஆயிரம் பிரமஹத்திகள் அகலுமே... ஆனால் நீயோ, ஒரு பிரமஹத்தி விலக மூன்று முறை "முருகா' என்று கூறுமாறு கூறியுள்ளாயே! இது முறையோ? நீ முருக மந்திரத்தின் பெருமையை நன்கு உணரவில்லையே! ஆதலால், நீ வேடனாகப் பிறப்பாயாக!'' என்று மகனைச் சபித்தார் முனிவர்.

 தந்தையைப் பலமுறை வேண்டிப் பணிந்து, தன் பிழை பொறுக்குமாறு மகன் வேண்டினான்.

 முனிவர் சினம் தணிந்து, ""மகனே! புனிதமான இதக் கங்கைக் கரையில் நீ வேடர் குலத்தில் பிறப்பாய்! வேடனாகப் பிறந்தாலும், "முருகன்' நாமமாகிய "குகன்' என்ற பெயருடன் விளங்குவாய். நற்குண சீலனாக இருப்பாய். இக்கங்கைக் கரைக்கு ராமபிரான் அவதாரம் எடுத்து வரும் சமயம், ராமபிரானுக்கு உற்ற-உயிர் நண்பனாகி, அவர் பாதம் பணிந்து, அவரது அருளுக்குப் பாத்திரமாகி பிறவிப்பயன் பெறுவாய்!'' என்று சாப விமோசனமும் கூறினார்.

 அந்த முனிவரின்  மைந்தன்தான் கங்கைக் கரையில் "சிருங்கிபேரம்' என்ற ஊரில் வேடனாகப் பிறந்து, "குகன்' என்ற பெயருடன் வாழ்ந்து  ராமச்சந்திர மூர்த்திக்கு உயிர்த் தோழனாகி சசாபவிமோசனம்  பெற்ற குகப்பெருமாள்! இதுதான் குகனின் முற்பிறவி வரலாறு. முருகப் பெருமானைப் போற்றியதால் கிடைத்த பெரும்பேறு!

 காரணம் இல்லாமல் காரியம் இல்லை' என்பதை நிரூபிப்பவைதான் நமது இந்து இதிகாசங்களும் புராணங்களும் காப்பியங்களுமாகும்.

கம்பர் கூறிய குகப்படலத்தின் சாரம் இதுதான்:- எத்தனை இழிந்த பிறவியாக இருந்தாலும்கூட, இறைவனிடத்தில் தூயபக்தி இருக்குமானால் - கள்ளங் கபடமற்ற அன்பிருக்குமானால், அவன் இறைவனின் திருவடியை அடைந்து அவரது அருளுக்குப் பாத்திரமாகிப் பேரின்பப் பெருநிலையை அடைய முடியும் என்பதற்குக் குகனும் ஒரு உதாரண புருசனாவார். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பழமை

காரைக்குடிக்குச் சென்று முத்தையா என்று யாராவது இருந்தார்களா என்று கேட்டுப் பாருங்கள். அப்படி இங்கு ஒருவரும் இருக்கவில்லை என்று உடனே பதில் வரும். ஆனால் கவிஞர் கண்ணதாசனைத் தெரியுமா என்று அதே இடத்தில் திரும்பவும் கேட்டுப்பார்த்தால்; ஆம் அவர் எங்கள் காரைக்குடியில் தான் பிறந்தவர் என்று பதில் வரும்.  பிரபலமான கவிஞர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் காப்பி அடிப்பவர்கள் என்று;  எழுத்தாளர் சுஜாதா கண்ணதாசன் அவர்களையும் வாலி அவர்களையும் தாக்கி இருந்ததை நான் படித்திருக்கிறேன். அதை உண்மை என்று வாதிட எனக்கு அறிவு இருக்கிறதா என்று பலமுறை சிந்தித்துப் துப் பார்த்தேன்.  ஒன்றில்லாமல் மற்றென்று உருவாகுமா எனற தத்துவ உண்மையைச் சொன்னவர் கண்ணதாசன்.  தான் அனுபவித்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற முறையிலும் பல பாடல்களை எழுதி மக்கள் மனங்களில் அந்தப் பாடல்களை நிலைபெறச் செய்தவர்.
.
ஒருமுறை மன உலைச்சலுடன் திருப்பதிக்குச் சென்று திரும்பும் வழியில் அவரது கடன் தொல்லைகள் தீருவதற்குற் ஒரு வழிவந்துவிட்டது என்று திரு M.S.V யிடம் இருந்து தகவல் வந்தது. அன்று கண்ணதாசனுக்குப் பிறந்த பாடல்தான் "திருப்பதி சென்று திரும்பிவந்தால் ஓர் திருப்பம் நேருமடா" என்ற பாடலாகும்.
.
ஒரு சந்தர்ப்பத்தில் மது வாங்குவதற்காகத் தன் அண்ணனிடம் காசு கேட்டிருக்கிறார் அப்போது அவருக்கு காசு கிடைக்கவிர்லை.  அறிவுரைகளே வழங்கப்பட்டன. அதனால் மனமுடைந்த கண்ணதாசன் ஒரு பாட்டு எழுதினார். அந்தப் பாடல்தான் "அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே" என்ற பாடலாகும்.
.
திரு MSV அவர்கள் மே மாதம் முழுக்க ஒரு படத்திற்கான பாடலை இசையமைக்கத் திட்டம் இட்டிருந்தார். அதற்காகவே கண்ணதாசன் ஒரு பாட்டில் கடைசிச் சொற்கள் "மே" என்று முடிவதாக ஒரு பாடலை எழுதினார். அந்தப் பாடல்தான் "அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமே" என்ற பாடலாகும்.
.
ஒரு நாள் தொழிலில் அக்கறை இல்லாமல் தூங்கிவிட்டார் MSV என்பதற்காகவே "அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவோ" என்ற பாடலை எழுதினார்.
.
திரு கண்ணமாசன் அவர்கள் அறிஞர் அண்ணாத்துரை அவர்களுடன் ஒரு தூய நட்பைக் கொண்டிருந்தார். ஆனால் அண்ணாவின் அரசியல் கொள்கைகளின் கருத்து வேற்றுமையால் சிறிதுகாலம் அவரைவிட்டுப் பிரிந்திருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் அண்ணா அவர்களுக்குப் புற்றுநோய் கண்டது. மனமுடைந்த கவிஞர் "நலம்தானா நலம்தானா என்று பாடலை அவருக்காக எழுதி அதில் "புண்பட்டதால் உந்தன் மேனியிலே இந்தப் பண்பட்ட பாட்டை யாரறிவார்"  என்ற வரிகளையும் சேர்த்திருந்தார். பாடலைக் கேட்காமலே அண்ணா அவர்கள் இறந்துவிட்டார். பிற்காலத்தில் தில்லானா மோகனாம்பாள் படத்திற்காக அந்தப்பாடலில் "புண்பட்டதால் உந்தன் மேனியிலே இந்தப் பெண்பட்ட பாட்டை யாரறிவார்" என்று மாற்றி அமைத்திருந்தார். இவ்வாறு பல பாடல்களைச் சந்தர்ப்பங்களுக்காக எழுதி பதிவுசெய்த பெருமை திரு கண்ணதாசன் அவர்களையே சாரும். தனது வசந்தகாலம் என்ற சுயசரிதையில் தனக்கு ஒரு காதலி இருந்ததாகவும் அவள் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும் போது ஒரு பாடல் தனக்காக எழுதவேண்டும் என்று கேட்டுக் கொண்டதால்தான் "காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடலை எழுதி இறுதியில் கவிஞன் ஆக்கிளாள் என்னை என்று முடித்திரிந்தார்.
.
இது இவ்வாறிருக்க இலக்கியங்களில் உள்ள கருத்துக்களைத் தோண்டி எடுத்து படித்தவர்களுக்கும் பாமர மக்களுக்கும் விளங்கவைப்பதில் கண்ணதாசன் மிகவும் ஆழுமை பெற்றவராக இருந்தார். ஒரு காலப்பகுதியில் இலக்கியத்துள் எழுந்த கருத்துக்களை மீண்டும் தமிழ் இலக்கியத்தில் கூறுவதைக் "கூறியது கூறுதல்" அல்லது "பழமை பேணும்பண்பு" என்று அழைப்பர். இவ்வாறான நடவடிக்கை சமூகத்தின் தேவைகருதிய ஒரு கவிஞனின் கடமை ஆகிறதே தவிர காப்பி அடித்துல் என்று ஒருவரும் சொல்லுவதில்லை. கவிஞர்கள் இல்லாவிட்டால் காப்பியங்களின் கருப்பொருட்களுக்கு எப்பவோ விலங்கு பூடப்பட்டிருக்கும். இவ்வாறு இலக்கியப் பொருட்களைக் கண்ணதாசன் அவர்கள் பல பாடல்களில் புகுத்தியிருந்தாலும் இரண்டு உதாரணங்களை இங்கு வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கிறேன்.
.
திருக்குறளில் "நான் நோக்க நிலம் நோக்கும் என்ற அடிகளின் பொருளைத்தான் கண்ணதாசன் அவரது பாணியில் "உன்னை  நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே நேரிலே பார்த்தால் என்ன நிலவென்ன தேய்ந்தாபோகும்" என்று பதிவு செய்தார்.  
.
ஒரு காலத்தில் "வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரையாரோ என்ற பாடல் காலத்தால் அளிக்கமுடியாத தத்துவப் பாடலாகும். பாதகாணிக்கை என்ற படத்தில் வந்த இந்தப் பாடலுக்கு மெல்லிசை மன்னரே இசையமைத்திருந்தார். இது பட்டினத்தார் பாடிய ஒரு பாடலின் வரிகள்தான் என்றால் அதைத் தெரியாதவர்கள் நம்பமாட்டார்கள். இதோ அந்தப் பாடல்.
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே (வீடுவரை உறவு)
விழியம்பு ஒழுக மெத்திய மாந்தரும் வீதிமட்டே (வீதிவரை மனைவி)
இரு கைத்தலைமேல் வைத்து அழுமைந்தரும் காடுமட்டே (காடுவரை பிள்ளை)
பற்றித் தொடரும் இருவினை பாவ புண்ணியமே..
.
இதில் கடைசிவரியில் குறிப்பிடப்பட்டிருக்கும் "கடைசிவரை கூட வருவது செய்த பாவமும் புண்ணியமுமே என்ற கருத்தைத் தனது பாடலில் குறிப்பிடவில்லை. அவரது நண்பர் ஒருவர் இதை ஏன் உங்கள் பாடலில் குறிப்பிடவில்லை என்று கேட்டதற்கு கண்ணதாசன் "இப்படியொரு புனிதமான கருத்தைச் சொல்லும் உரிமை பட்டினத்தாருக்கே உண்டு" என்று பதிலளித்திருந்தாராம்.
.
இந்தப் பாடலின் பொருளைக் கண்ணதாசன் அவர்கள் வெளியில் கொண்டுவராமல் இருந்திருந்தால் இவ்வாறான தத்துவ முத்துக்களை நாம் அறியாமலே அழிந்திருக்கும் என்பதுவே உண்மையாகிறது. திரு M.S.V அவர்களை நான் சுவிசில் சந்தித்தபோது ஒரு பத்திரிகை ஆசிரியராக அவரைப் பேட்டி காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவரிடம் கவிஞர் கண்ணதாசனைப் பற்றிக் கேட்டபோது என் தம்பி என்று கண்கலங்கியவர்; இறுதியில் பல விசயங்கள் கூறியதன் பின்னர் "கண்ணதாசன் தனது வாழ்வில் நின்மதி இல்லாமல் இருந்து எழுதிய பாடல்களைத்தான் நீங்கள் நின்மதியாக இருந்து கேட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்" என்று பதிலளித்தார். கண்ணதாசன் காப்பி அடித்தார் என்ற எழுத்தாளர் சுஜாதாவின் கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதற்காகவே இதை எழுதும் முனைப்பு எனக்குக் கிடைத்தது. நன்றி நண்பர்களே.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS