RSS

அறம் செய்ய விரும்பு


இந்த நாட்டில் வெளிய போய்விட்டு வீட்டுக்கு வந்தால் உடுப்பு களற்றி வீட்டு உடுப்பு போடவே மனம் இல்லை. அவளவு குளிர். குளிர் உடம்பை பக்கென்று அணைத்துக் கொள்ளும். இதனால்தான் கவிஞர் கண்ணதாசன் காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடலில் "பனிபோல் அணைப்பதில் கன்னி" என்று அனுபவப்பட்டு எழுதினாரோ என எண்ணத்தோன்றுகிறது. எனது கண்ணாடியை களற்றிவைத்த இடத்தில் காணவில்லை. தேடிப்பார்க்கிறேன். தொலைந்த தொலைபேசியைத் தேட இன்னுமொரு தொலைபேசி தேவைப்படுவதுபோல் கண்ணாடியைத் தேட இன்னுமொரு கண்ணூடி தேவைப்படுகிறது. இப்படிப் பொருட்களைத் தொலைத்து நான் தேடுகின்ற போது அம்மா என்னை "கண்ணைப் பிடரிக்குள் வைத்துக்கோண்டு தேடினால் கிடைக்குமா" என்று ஏசிப்போட்டு தானே தேடி எடுத்துத்தருவா. பிடரிக்குள் கண் இருந்தாலும் இந்தக் காலத்தில் நல்லது என்றே நான் கருதுகிறேன். நம் முதுகிற்குப் பின்னால் பலர் செய்யும் சேட்டைகளைக் கண்டுபிடித்து விடலாம். 

கண்ணாடி என்றதும் கண் என்பது எனக்கு ஞாபகம் வருகிறது. கண் என்பது ஞாபகம் வந்தவுடன் கூகுல் தேடல் தளத்தில் "கண்" என்று எழுதினால் எல்லா "கண்" என்ற சொற்களும் வருவதுபோல் எனக்கும் பல கண்கள் ஞாபகத்தில் வருகின்றன. கண்ணதாசன் தனது "கண்" கெட்டது தனது 16 வயதில் தான் பார்த்த ஒரு மேடைக் கூத்தில் வந்த பெண்களைப் பார்த்துத்தான் என்று குறிப்பிடுகிறார். அவர்தான் பின்னாளில் "இருட்டிற்கும் பார்க்கின்ற விழி இருக்கும்" என்று தத்துவமும் சொன்னவர். கவிஞர்கள் எல்லோரும் மான் மீன் என்று கண்ணைப்பற்றி பாடல் பாட வைரமுத்து "sரோபறி கண்" என்று பாடினார். அந்தப் பழத்தை வெட்டிப் பார்த்தால் கண்போல் இருக்கும். மணிமேகலை என்ற காப்பியத்தில் மணிமேகலையின் கண் ஒளி ஒரு தாமரைப்பூவில் பட பக்கத்தில் நின்ற கொக்கு கயல்மீன் பாய்கிறது என்று கொத்தி ஏமாந்ததும் கதைகளில் உண்டு. இந்த நிகழ்வு மணிபல்லவத்தீவில் நடைபெற்றது என்றும் அதுதான் நான் பிறந்து வளர்ந்த நயினாதீவு என்று அழைக்கப்படுகிறது என்பதும் என் பிறப்பிற்கு பெருமை. திருவள்ளுவர் படிக்காதவர்களின் முகத்தில் இருப்பது கண்ணளல்ல இரண்டு புண்கள் என்றுகூறி எல்லோரையும் அறிவுடையோராக்க வேண்டும் என்று தனது கருத்தை முன்வைத்தார். புண்கள் என்று சொன்ன அது கண்களைத்தான் ஆடவர்கள் மார்பில் புண்களை ஏற்புடுத்தும் வேல்விழி என்றும் கூறினார்.   இப்ப நான் சொல்ல வருவது சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் இடையில் ஏற்பட்ட கண் சம்பந்தமான ஒரு திருக்கைலாய காட்சியைப் பற்றியது

ஒரு நாயனார் தனது ஒரு கண்ணை சிவனுக்கு கொடுத்துவிட்டு மறு கண்ணையும் கொடுக்க முனைகையில் இறைவன் "நில்லு கண்ணுப்ப" என்று அழைத்ததால்தான் அவருக்கு கண்ணப்பநாயனார் என்று பெயர்வந்தது. இவை புராணக்கதைகளாக செவிவழிவந்த கதைகள். தாயா? தாரமா? என்ற கேள்விகளுக்கு சிவபெருமான் தாரம்தான் சிறந்தது எனக் கருதி தனது இடப்பக்கத்தை உமாதேவியாருக்கக் கொடுத்தவர். சிவபெருமானுக்கு மொத்தத்தில் நெற்றிக் கண்ணுடன் சேர்த்து 3 கண்கண். அதில் உமாதேவியாருக்கு ஒன்றரைக் கண்ணைக் கொடுத்தால் அவருக்கு இருப்பது ஒன்றரைக் கண்தான். தற்காலத்தில் நாம் கண்ணில் வாக்கு இருப்பவர்களை ஒன்றரைக் கண் என்று அழைப்பது வழக்கம். ஒன்றரைக் கண் என்ற சொல் இதிகாசங்களில் இருந்துதான் தற்போதைய புழக்கத்திற்கு வந்தது. சிவபெருமானுக்கு ஒன்றரைக்கண் என்றால் அதில் ஒரு கண் "கண்ணப்ப நாயனார்" க்குச் சொந்தமானது. எனவே மொத்தத்தில் சிவபெருமானிடம் இருப்பது அரைக்கண்தான். 

கைலாயத்தில் சிவபெருமானுடன் வழமைபோல் உமாதேவியார் ஊடல் கொண்டிருந்தார். இராவணன் தனது மயில்பொறி(தற்கால கெலிகப்டர்) யில் வந்திறங்கி தாயாருக்காக கைலைமலையைப் பிரட்டியவர். பிரட்டும்போது உமாதேவியார் பயத்தில் கோபத்தைவிட்டு விட்டுச் சிவனுடன் சேர்ந்துவிட்டார். அப்போது சிவபெருமான் தனது கால் பெருவிரலால் மலையை சமநிலைக்கு கொண்டுவரும்போது இராவணன் மலைக்குள் சிக்குண்டான். இதைக்கண்ட வாகீச முனிவர் இராவணனைப் பார்த்து இறைவனுக்கு சாமவேதம் என்றால் பிடிக்கும் அதில் பாடல்கள் பாடு என்று பணித்தார். இராவணன் சாமவேதம் பாடி ஆபத்தில் இருந்து தப்பினார். ஆனால் இப்படிச் சொல்லிக் கொடுத்த வாகீசமுனிவர்மீது சிவன் கோபம் கொண்டார். அதற்குத் தண்டனையாகத்தான் வாகீசமுனிவர் பூலோகம் அனுப்பப்பட்டு 81 ஆண்டுகள் இறைவனுக்குத் தொண்டுகள் செய்து வாழ்ந்தார். அவர்தான் நமது திருநாவுக்கரசு நாயனார் ஆவார். 
இது இப்படி இருக்க ஒருநாள் சிவபெருமானுடன் இருந்த உமாதேவியார் விளையாட்டுக்காகச் சிவபெருமானது இரண்டு கண்களையும் பொத்தி வேடிக்கை பார்த்தார். சிவனின் கண்கள் இருண்டதால் உடனே உலகம் இருண்டுவிட்டது. உலகம் இருண்டதால் பூமியில் அறங்களைச் செய்துகொண்டிருந்த சான்றோர்களின் செயல்கள் தடைப்பட்டன. ஆலயவழிபாடுகள் தடைப்பட்டு விட்டன. மக்களுக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டன. உடனே சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து இன்னல்களைப் போக்கினார். உமாதேவியார் பாவம் செய்தவராக சிவபெருமானால் இம்சிக்கப்பட்டார். இந்தப் பாவங்கள் தீர ஒரு பிராயச்சித்தம் செய்யவேண்டும் என சிவன் உமாதேவியாரைப் பணித்தார். அதன் பிரகாரம் உலகமக்கள் உய்ய உமாதேவியார் மானிடப் பெண்ணாக காஞ்சியிலும்; காசியிலும் சென்று 32 வித அறங்களைச் செய்து பாவவிமோசனம் பெற்றார் என்று புராணங்கள் கூறுகிறது. 

இந்த வரலாற்றை சுந்துரமூர்த்தி நாயனார் தனது ஒரு பாடலில் குறிப்பிடுகின்றார். 

"மலைமடந்தை விளையாடி விளையாடு கரத்தான்; மகிழ்ந்து அவள் கண்புதைத்தலுமே வல் இருளாய் எல்லா; உலகுன்றான் முடவிருள் ஓடும்வகை நெற்றி; ஒற்றைக்கண் படைத்துகந்த உத்துமன்" (தி7.ப16.பா4)

ஐயோ ஆண்டவனே தேடு தேடென்று கண்ணாடியைத் தேடிப் பார்த்தேன் காணவில்லை. காருக்குள் கிடக்கிறதா என்று பார்த்துவிட்டு வாறன். கொஞ்சம் பொறுங்கோ!!

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழர் இலக்கியத்தில் ஒழுக்கமும் கற்பும்.


மனித வாழ்வியலை அகவாழ்வு புறவாழ்வு என இருவகைப்படுத்திச் சைவ நூல்கள் கூறுகின்றன. சங்ககாலத்திலேயே இவ்விரு ஒழுக்கங்களும் தமிழர் மத்தியில் தோற்றம்பெற்று ஐவகை நிலங்களுக்கும் தனித்தனி ஒழுக்கங்களாக வகுக்கப்பெற்றுத் தமிழர் வாழ்க்கை நெறியாகக் கொண்டிருந்தமையை அக்காலத்தில் எழுந்த எட்டுத்தொகை; பத்துப்பாட்டு; நூல்களினூடாக அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அக ஒழுக்கத்தினை அகத்திணை என்றும் புற ஒழுக்கத்தினைப் புறத்திணை என்றும் அமைத்தனர்.(வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே (தொல்காப்பி)

உலகியல் நடைமுறையை வழக்கு என்கின்றோம். பண்பாடு இல்லாதவருடைய பழக்கவழக்கங்களை உலகத்தார் வழக்கு என்று கருதுவதில்லை. உயர்ந்தவர்களது நெறிமுறைகளே வழக்கு என்று போற்றப்படுகின்றன. பெரியவர்களது பழக்கமே மக்களிடையே வழக்கமாகி பின்னர் அதுவே மக்களால் நடைமுறைப்படுத்தப் படுகின்றன. எனவே இந்த அகம் புறம் என்னும் இருவகை ஒழுக்கமும் உயிரினும் மேலாக ஓம்பப்படும் என்பதைத் திருவள்ளுவர் 

"ஒழுக்கம் விழுப்பம் தரலான்; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்(குறள்) என்று குறிப்பிடுகின்றார். 

ஒழுக்கம் என்பது வாழ்வின் எல்லாத் துறைகளுக்குள்ளும் இருந்தபோதிலும் சிறப்பாக அகத்துறையில் குடும்ப வாழ்க்கையில் நெறியோடு வாழ்வதையே ஒழுக்கம் எனக்கொள்ளப்படுகின்றது. ஒருவனை ஒழுக்கம் கெட்டவன் என்றால் அது புறத்திணை ஒழுக்கத்தைக் குறிக்காது அகவியல் அதாவது குடும்ப வாழ்வில் கெட்டவன் என்ற பொருளையே உலகில் குறித்து நிற்பதைக் காணலாம்.

ஆண்களின் அகவாழ்வு நெறியை ஒழுக்கம் என்றும் பெண்களின் அகவாழ்வு நெறியைக் கற்பு என்றும் தமிழர் பண்பாடு நமக்கு அறிவிக்கின்றது. கற்பு என்பது கற்றலையும் கற்பித்தவழி நிற்றலையுமே குறிக்கின்றது. பெண்கள்; பெற்றோரும் ஆசிரியர்களும் கற்பித்தவழி நிற்றலையே போற்றி வாழ்ந்துள்ளனர். கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை என்று மேற்குறிப்பிட்ட கருத்தைக் கொன்றைவேந்ததன் 14ம் வரி விளக்ககின்றது. 

கற்பு என்ற சொல் பெண்ணியல் கற்பு என்ற பொருளிலும் கற்றல் என்ற பொருளிலும் சங்க இலக்கியங்களிலும் திருமுறை இலக்கியங்களிலும்  வருவதைக் காணலாம். ஞானசம்பந்தரை வெப்பு நோய் வாதத்திற்கு அழைத்தபோது 

"மண்ணகத்திலும் வானிலும் எங்கும்; திண்ணகத்திரு வாலவாயானருள்; பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்; தெண்ணர் கற்பழிக்கத்திருவுளமே(தி 3. ப 47. பா 3) என்று பாடினார். 

இங்கு கற்பு என்பது சமணர் கற்ற கல்வியின் நேர்மை இல்லாத செயலை அழிக்க இறைவன் திருவுள்ளம் செய்யவேண்டும் என்பதையே விளங்கப்படுத்துகின்றது. இந்த இடத்தில் இது மகளிரது ஒழுக்க நெறி என்று கொள்ளல் ஆகாது. சம்பந்தர் தமது இன்னுமொரு பாடலில் மகளிர் கற்பைப்பற்றியும் போற்றுகிறார். 

"மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து; மாயவர வன்றுரிசெய் மைந்துனிட மென்பர்;
பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லிப் ; பாவையர்கள் கற்பொடுபொலிந்த பழுவூரே"
(தி2.ப34.பா6)

இப்பாடலில் பூவை என்னும் நாகணவாய்ப் பறவைக்கு இறைவனது புகழைக் கற்பிக்கும் பாவையர்கள் கற்புடன் திகழ்ந்த பழுவூர் என; கற்பு என்பது கற்றலுக்கும் கமளிர் கற்புக்கும் பொருந்தி இரண்டு நிலைகளையும் விளங்க வைக்கிறது. 
"சிவபோகசாரம்" என்னும் நூலில் கற்பிலர் என்று வரும் கூற்று கல்லாதவரையும் கற்பொழுக்கம் இல்லாதவரையும் சுட்டி வருதலைக் காணலாம். 

"நீதியிலா மன்னன் ராச்சியமும்;  நெற்றியிலு பூதியிலார் செய் தவமும்; சோதி கழல் அறியா ஆசானும்; கற்பிலரும் சுத்த விழல் எனவே நீத்துவிடு" (சிவபோகசாரம் பா 130)

கற்பு என்பது பெண்களுக்கு உரிய ஒழுக்கம் என்ற தொனிப்பிலும் கற்றல் என்ற தொனிப்பிலும் இலக்கியங்களில் கூறினாலும் திருவள்ளுவர் கற்புஎன்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய ஒழுக்கமாகவே கொள்கிறார். 

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும் திண்மை உண்டாக்கப் பெறின்" (குறள் 54)
என்று பெண்ணிற்கான ஒழுக்கத்தையும் ;

"ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு" (குறள் 974)
என்று ஆண்களுக்கான ஒழுக்கத்தையும் கற்பு என்றே குறிப்பிடுகினறார். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மந்திரப் புன்னகை!


"அவன் நடத்தும் நாடகத்தில் உங்கள் பகுதி முடிந்துவிட்டது" இது என் கணனிக்கு வந்த மின்னஞ்சல்.  இதை வாசிக்கும் போது ஒரு சாத்தான் எனக்கு வேதம் ஓதியதுபோல் இருந்தது. மனத்தில் சபலம் வந்ததும் சாபம் போடத் தோன்றும். சலனம் வந்ததும் சமாளிக்கத் தோன்றும். சந்தேகம் வந்ததும் கொலைசெய்யத் தோன்றும். எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. என்னை; மற்றவர்கள் இவர் என்ன புடம் போட்ட தங்கமா என்று உரசிப் பார்ததவர்களுக்கு அப்படித் தோன்றியது. அது அவர்களது 5ம் அறிவு. எனது அம்மா என்னை டாக்டருக்கு படிப்பிக்க எண்ணியிருந்த காலத்தில் சத்திர கிசிச்சை என்ற சொல் எனக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது. எந்த உயிருக்கும் துன்பம் விளைவிக்காத மனதின் பிரதிபலிப்பு அது. ஆமிக்காரர்களை வீதியில் காணும் போது இவர்கள் தான் மக்களைச் சித்திரவதை செய்பவர்கள் என்ற எண்ணம் என்னைப் பலமுறை சித்திரவதை செய்திருக்கிறது. "டோபி" யைக் கண்டால் கூட அவர் வெளுத்து விடுவார் என்ற பயம் எனக்கு! பூக்கள் பறிக்க கோடாரி எடுப்பவர்களை நான் கொலைகாரர்களாகப் பார்க்கிறேன். எனது பார்வையில் பூக்களில் இரத்தமும் பூமியில் யுத்தமும் இந்த பிரபஞ்சத்தை விட்டு அகல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். அல்லாத பட்சத்தில் நானே பூமியைத் தள்ளிவைத்து வாழப்பழகி விடுவேன்.


மகாபாரதப் போரில் பெருவாரியான போர் வீரர்கள், வித்தியாசம் தெரியாமல் தங்களுக்குத் தாங்களே அடிபட்டுச் செத்தார்கள். இதைத் தடுப்பதற்க்காக ஒரு வழி செய்தார்கள். ஒரு சாரார் மட்டும் நெற்றியில் பட்டை தரித்துக் கொண்டார்கள். ஆனால் மறுசாரார் எதிரியிடம் இருந்து தப்புவதற்காக அவர்களும் பட்டை தரித்துக் கொண்டார்கள். மறுபடியும் போர்க்களத்தில் அதே நிலைமை தான். இறுதியில் பிணக் குவியலின் மேல் ஒரு சாராரின் வெற்றிக் கொடி அழுது அழுது காற்றில் பறக்கும்.  திரௌபதயை பத்தினியாக வர்ணித்த பாண்டவர்களின் கூற்றை எதிரிகளான கௌரவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.   ஒருபெண் எந்த வேடம் போட்டாலும் உடை அலங்காரங்களைப் பார்த்து அவர் போட்டுள்ள வேடத்தைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் மனத்தில் ஒருவர் பத்தினி வேசம் போட்டால் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியாது என்று வேடம் போட்டவர்கள் கருதுவார்கள். கௌரவர்கள் இதையே தங்கள் விவாதத்தின் தலைப்பாக எடுத்துக் கொண்டார்கள். சிரிக்கக் கூடாத இடத்தில் ஒருத்தி சிரித்ததால் தான் பல்லாயிரக் கணணக்கானோர் பாரதப் போரில் மாண்டதாக வரலாறு கூறுகின்றது. வாழ்க்கை என்றால் போராட்டம்(போர்+ஆட்டும்) என்ற சிந்தனை பிற்காலச் சந்ததியினருக்கு இதிகாசங்கள் மூலம் பரிசாக அளிக்கப்பட்டது உண்மை என்றே நான் கருதுகிறேன். ஏனென்றால் கடவுளே போர்க்களங்களில் A.K.47 க்குப் பதிலாக பல ஆயுதங்களைப் பிடிக்க வைத்துள்ளார். சிவபெருமானிடம் சூலாயுதமும் கண்ணனிடம் தடியும்; யேசுவிடம் ஒரு கோலும்; முருகனிடம் வேலும் இருந்ததாக வரலாறு சித்தரிக்கிறது. கர்ணனிடம் இருந்த நாக அஸ்திரம் இக்காலத்து ஏவுகணையை விட சக்தி வாய்ந்ததாக வர்ணிக்கப்படுகின்றது.  சூதுதனை வாது வெல்லும் மறுபடியும் தர்மம் வெல்லும் என்பது எனது கொள்கை.  கண்ணதாசன் அவர்கள் சொல்லுவதுபோல் இந்த உலகத்தில் வெல்லுபவன் சொல்லுவதே வேதமாகிவிட்டது. ஆனால் நான் அவரைவிட்டு ஒரு படி உயர்ந்து சென்று "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" (ஆன்மீக விடுதலை அடைந்த சான்றோர்கள்) என்ற தொல்காப்பியரின் வார்த்தைக்குள் என்னை அற்பணிக்கிறேன்.


போர் என்றதும் எனக்கு முள்ளிவாய்க்காலை விட சிறிய வயதில் நேரே பார்த்த சூரன் போரே நினைவு வருகின்றது. அப்போது சூரனை விழுத்தும் முருகனின் கதாபாத்திரமாக நான் மாறி விடுவேன். மூன்று நான்கு நாட்களுக்கு முருகன் நினைவுதான். சூரன் முருகனை விழுத்த எவளவோ மாறுவேடங்கள் எல்லாம் போட்டு வருவார். இருந்தாலும் தர்மம் முருகன் பக்கம் இருப்பதால் வேசங்களையும் வென்று மீண்டார். சின்னவீட்டு சமாச்சாரம் தெருவுக்கு வந்த போது ஆணுலகம் முருகனைச் சந்திக்கு இழுத்து மனைவிமாருக்கு நம்ம முருகனே சின்னவீடு வைத்திருப்பதாக விரிவுரை நடாத்தினார்கள். அக்காலத்தில் கி.பி 9ம் நூற்றாண்டளவில் இந்துப் பெண்களெல்லாம் போர்க்கொடி தூக்கினார்கள். முருகனை வணங்க வணங்க சின்னவீடுகள் பெருகுவதை உணர்ந்தார்கள். ஆண்வர்க்கம் அதிரடியாக பெண்கள் சமூகத்தைச் சமாளிக்க வீரசைவத்திற்குள் தனியாக பிரமச்சாரியாக இருந்த பிள்ளையாரைக் கொண்டு வந்து "இவர் திருமணமாகவில்லை; இவரை வணங்குங்கள்" என்று இந்து சமயத்திற்குள் கொண்டு வந்தனர்.  இவர் கடவுளா என்பதில் பலருக்கு இப்பவும் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் சமயகுரவர்கள் என்று அழைக்கப்படும் நால்வரும் திட்டத்தட்ட 12 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார்கள். அவற்றில் ஒரு வரிகூட பிள்ளையாரைப்பற்றி வரவில்லை. ஆனால் பிள்ளையார் பெண்களோடு இருந்த அமைப்பிலான விக்கிரகம் யப்பானில் தொல்பொருள் காட்சியகத்தில் இருக்கிறது. அதே உருவும் சிறிய அளவில் நியூயோர்க் நகரத்தில் உள்ள கிறிsதோப்பர் வீதியில் 135ம் இலக்கத்திலுள்ள ஒரு வெள்ளைக் காரனின் நகைக்கடையில் இருக்கிறது. இது கடவுள் சமாச்சாரம் விட்டு விடுவோம். நம்பிக்கையே கடவுள்! தன் நம்பிக்கையே வாழ்க்கை! பிள்ளையார் பிரசித்தி பெற்றார் தனியாக இருக்கும் அவரை உசுப்பி உசுப்பி (poke) அடியார்கள் தங்கள் வேண்டுதல்களைச் செய்தனர்.


அறிஞர் ராகுல் சாங்கிருத்யாயன் (இவர்தான் இந்திய புகையிரதப் போக்குவரத்திற்கான நேர அட்டவணையை அமைத்துவர்) எழுதிய "வொல்காவிலிருந்து கங்கைவரை" என்ற நூலில் அந்தப்புரத்தில் அரசனால் கழிக்கப்பட்டவை அந்தணர்களுச் சின்னவீடாகியது என்றும் அந்தணர்களால் கழிக்கப்பட்ட பெண்கள் தேவதாசிகளாகித் தெருத்தெருவாக அலைந்தனர்" என்று குறிப்பிடுகிறார். என்னை முகநூலில் உசுப்புபவர்களைப்பற்றி கதை எழுத எனக்கும் ஒரு அம்பேத்கார் இப்போது தேவைப்படுகின்றார்.


Kumar Kanagasabai இவர் ஆரம்பத்தில் கமலா கனகசபை; மலேசியா என்று அறிமுகமாகி இருப்பிடம் லண்டன் என்று மாற்றி இருப்பவர். கணனியில் காதல் மொழிபேசி; கடைசியில் காசு அனுப்பமுடியுமா என்று கேட்டவர். இப்போது kumar kanagasabai என்று தன்னை ஆணாக மாற்றியுள்ளார். ஆணாக மாற்றினாலும் எழுதிய எழுத்துக்கள் அப்படியே இருக்கின்றன.  Bairavi Sri இவர் முதலில் செல்வியாக இருந்து கொஞ்சநாள் பேசாமல் விட்டுவிட்டு தன்னைத் தானே Bairavi Sri ஆகமாற்றிக் கொண்டவர்.  இவரின் மாறுவேடம் தெரிந்து நான் நண்பர் பட்டியலில் சேர்க்கவில்லை. SELVY இந்தச் செல்வி களவியலில் காமமொழி பேசி என்னை நிலைகுலையச் செய்தது. நான் யாரென்று கண்டுபிடித்ததும் "கெட்டிக்காரன்" கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று பாராட்டுப் பத்திரமும் வேறு தந்தது. அடுத்தது தமிழ் மீது பிரியம் உள்ளவர் போல் காட்டும் ஒருவருடன் இந்தப்பேய் சேர்ந்து "மாலா கிறிs" என்ற பெயரில் வந்தது. ஆசை வார்த்தைகள் கூறியது. தனது கணவன் யுத்தகாலத்தில் இறந்துவிட்டதாகவும்; தன் கணவர் என்னைப் போல்தான் இருப்பார் என்றும் காமச்சதிர் ஆடியது. என்னைப் பலவீனப்படுத்தியது. திரும்பவும் இப்போ முருங்கைமரம் ஏறிவிட்டதாக நினைக்கிறன். 


ஒருவன் தன் விதிவசத்தால் வாழ்க்கையில் பலவழிகளாலும் துன்பப்பட்டுக்கொண்டு தனிமையிலும் தியானங்களிலும் இருக்கும்போது அன்பும் ஆறுதலும் காட்டுவதற்குப் பதிலாக அவனது தனிமை வாழ்க்கைச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆசைவார்த்தைகளைக்காட்டி அவன் மனத்தைப் பேதலிக்கச் செய்து அதில் சுகம் காண விளைந்தவர்கள் எல்லாம் திருமணமான மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்.  பாவம் தோட்டக்காரன்! 


நடந்தது என்ன! குற்றமும் பின்னணியும்" (இது vijai TV யில் திரு கோபி நாத் அவர்களின் வார்த்தை தான்) kamala, bairavi, bairavi Sri, mala Krish, Selvi என்ற முகநூல் ID களுக்கு ஒரு பெண்தான் முதலாளி. இதைவிட தனக்கென்றும் ஐந்து ID பப்ளிக்காக வைத்திருக்கிறது. பின்னர் அந்தக் கிறுக்கி நான் எழுதிய விடையங்களில் சிலவற்றை எனது உண்மையான கள்ளங்கடபமற்ற நண்பர்களுக்கும் நண்பியர்களுக்கும் அனுப்பி என்னை மட்டம் தட்டத் தொடங்கியது. உலக அரங்கில் என்னை அசிங்கப் படுத்தத் தொடங்கியது. கடவுள் விடுவானா? ஒரு குருவை எனக்காகத் தயார் செய்தான். கடந்த 07.09.2011 அன்று எனக்குத் தரிசனம் கிடைத்தது. எதிரிகள் ஈட்டிகளைத் தயாரித்தார்கள். நான் பாதுகாப்பிற்குக் கேடையங்களை மட்டுமே தயாரித்தேன். இது குருவின் உபதேசம்!


ஓசோ சொல்கின்றார் "இந்த உலகத்தில் மகான்கள் தோன்றும்போது கூடவே சாத்தான்களும் அவரது மகிமையை இழிவுபடுத்துவதற்காகத் தோன்றிவிடுகிறார்கள். சாத்தான்கள் ஆன்மீகவாதிகள் போல் வேடமணிந்து அவரிடம் சென்று சிதைத்து விடுவார்கள். ஆன்மாக்களே விழிப்பாக இருங்கள்" என்று சொல்கிறார். "அவன் நடத்தும் நாடகத்தில் உங்கள் பகுதி முடிந்துவிட்டது" என்று கூறும் சாத்தான்களை உங்கள் பார்வையே பொசுக்கிவிடும் அளவு வல்லமை பெறுங்கள். இக்கருத்தையே சுவாமி விவேகானந்தரும் தனது "ஞானதீபம்" என்ற நூலில் 258வது பக்கத்தில்" ஆன்ம ஞானத்தில் ஒருவர் சிறந்து தோன்றினால் உடனே அவரைப்பற்றிப் பல கட்டுக்கதைகள் கட்டப்பட்டுவிடுகின்றன" என்று. எனது ஆன்மீகக் குருவால் என் உள்ளத்தில் வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆன்மீகத் தீயின்முன் இந்த ஆவிகளின் ஆட்டம் இனிப் பலிக்காது. இப்போது என் மனம் வெறுமையாக இருக்கிறது. தூரத்தில் ஓர் ஒளி தெளிவாகத் தெரிகிறது.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கங்கையில் மலர்ந்த கலையன்னை


கங்கையில் மலர்ந்த கலையன்னை  என உலகத்தவர்களால் பாராட்டப்பெறும் ஸ்ரீசாரதா தேவி துதியாக - கலைமகள் வணக்கமாக - ‘சகலகலாவல்லி மாலை’ என்ற பெயரில் பத்துப் பாடல்களை அமைத்துப் பாடியவர் சுவாமி குமரகுருபரர் ஆவார். குமர குருபர முனிவரர் காசியில் கங்கைக் கரையில் நின்று பாடிய சகலகலாவல்லி மாலை என்றும் பதிகமே கங்கையில் மலர்ந்த கலையன்னையாக அம்மன் தரிசன பக்கதர்களுக்கு திருவருளையும் குருவருளையும் வழங்குகிறது. 

காசியில் இறப்பவருக்கு விசுவநாதர் பிரணவ உபதேசம் செய்து சாரூபப் பதவியை வழங்கி அருளுவர் என்பது காசித்தலப் புராணம் கூறும் வரலாறாகும். காசித்தலத்தின் பெருமைகள் பற்றி குமரகுருபரர் கூறும் செய்திகள் வியப்பிற்குரியவை. காசியில் பாவம் செய்தவர்கள் இறந்தாலும் அவர்களுக்கு யமலோகத்தின் தண்டனை இல்லை என்பது ஒரு ஐதீகம்.

தமிழை மட்டும் தாய்மொழியாகக் கொண்டு காசியில் பணிபுரிதல் கடினம் என்பதை உணர்ந்தவராக குமரகுருபர முனிவர் அப்போது வழக்கத்தில் இருந்த ஹிந்துஸ்தானி மொழிப் பயிற்சியும் பெற்றார். பின்னர் டில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரியும் பாதுஷாவின் உதவியும் வேண்டும் என எண்ணினார். பாதுஷாவின் உதவியைக் கொண்டு சைவத்தை வளர்க்க வேண்டும் எனவும் தமிழ் நாட்டிலிருந்து பலரும் காசிக்கு வந்து போக வழிவகை செய்ய வேண்டும் எனவும் தம் உள்ளத்தில் உறுதியான கொள்கை ஒன்றை வைத்திருந்தார். உடனே குமரகுருபரர் உள்ளத்தில் கலைமகளின் தெய்வத்தன்மையும் தனித்தன்மையும் தோற்றம் பெற்றன. குருவருருளாலும் கல்வியறிவாலும் தம்முடைய தவப் பண்பினாலும் கலைமகளை வேண்டி நின்றார். அப்போது அவர் கலைமகளின் மீது பாடிய துதிநூலே சகல கலா வல்லிமாலை ஆகும். 


“வெண் தாமரைக்கு அன்றி நின்பதம்
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாதுகொலோ
சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலா வல்லியே.”
என்பது முதற்பாடல். சகல கலாவல்லி மாலையின் பத்தாவது பாடலாக.


“மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவிற் பணியச்
செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பலகோடி
உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ
சகல கலா வல்லியே.”
என்பதை அமைத்துப் பாடினார். சகல கலா வல்லி மாலை நிறைவு பெற்றதும் கலைமகள், கங்கைக்கரையில் நின்ற குமரகுருபரருக்கு மலர்ந்த அன்னையாக நேர்க்காட்சி வழங்கி ஆசி அருளியதுடன் சிங்கம் ஒன்றை அனுப்பினாள். கலைமகளே சிங்க வடிவில் வந்தாள் என்று கூறுபவர்களும் உண்டு.

குமரகுருபர முனிவரை நோக்கி வந்த சிங்கம், அவரை மூன்று முறை வலமாகச் சுற்றி வந்து நின்றது. குமரகுருபர முனிவரர் அச்சிங்கத்தின் மேல் தம் கையிலிருந்த திருநீற்றை (விபூதி)த் திருவைந்தெழுத்தை ஓதிப் பூசியபின், அதன்மேல் ஏறி அமர்ந்தார்.உலகில் நாம் காணும் அரசர் முதலியவர்கள் சிங்க வடிவில் செய்யப் பெற்ற ஆசனத்தில்-சிம்மாசனத்தின் மேல் அமர்ந்திருப்பார்கள். உண்மையான சிங்கத்தின் மேல் ஏறி, டில்லி பாதுஷாவின் அரண்மனைக்குச் சென்றவர் குமரகுருபர முனிவரர் ஒருவரே.உண்மையான சிங்கத்தின் மேல் சைவ சமய முனிவரர் ஒருவர் வருவதைக் கண்ட அரசன் பாதுஷா முதலில் திடுக்கிட்டாலும், வருபவர் தெய்வத்தன்மை வாய்ந்தவர் என்பதை உணர்ந்து, தானமர்ந்திருந்த சிம்மாசனத்திலிருந்து எழுந்து, மரியாதையுடன் குமரகுருபரரை வணங்கி வரவேற்றான். இது அரசர்கள் எல்லா மதங்களையும் அனுசரித்து வளர்த்தார்கள் என்பதற்கு ஒரு உதாரணமாகும். 

தெளிவான ஹிந்துஸ்தானி மொழியில் பேசிய குமரகுருபர முனிவரரின் ஆற்றலைக் கண்டு வியந்தும் மகிழ்ந்தும் நின்ற மன்னன், குமரகுருபர முனிவரரின் விருப்பத்தின்படியே, காசியில் குமரகுருபர முனிவரர் தங்குவதற்கு ஆச்சிரமம் அமைப்பதற்கும் ஏனைய சமூகத் தொண்டுகள் செய்வதற்கும் ஏற்றவகையில் நிலத்தை வழங்கி உதவினான்.

கேதாரகட்டத்தில் மிக நீண்ட காலமாக மறைக்கப்பெற்றிருந்த ஸ்ரீவிசுவலிங்கப் பெருமானை வெளிப்படுத்தி அங்கே கோவில் முதலியவற்றை உண்டாக்கி நித்திய நைமித்திய வழிபாடுகளும் விழாக்களும் குறைவற நடந்தருளுவதற்குரிய ஏற்பாடுகளையும் பிறவற்றையும் ஒழுங்கு பெறத் தம் தவ வலிமையாலும் தக்க சான்றோர்களின் பொருளுதவியாலும் செய்து அமைத்துப் பெருமைப்படுத்தினார். குமரகுருபர முனிவரர் காசியில் தங்கியிருந்த ஆச்சிரமம் குமாரசாமி மடம் என்று பெயர் பெற்றது. 

குமரகுருபர முனிவரர் தாம் தங்கியிருந்த காசி மடத்தில் புராண சாலை என்ற ஒரு பகுதியை உண்டாக்கி, அதில் நாள் தோறும் ஹிந்துஸ்தானி மொழியிலும் தமிழிலும் புராணப் பிரசங்கம் நிகழ்த்தி வந்தார். தென்னகத்திலிருந்து காசிமாநகருக்குச் செல்பவர்களுக்கு உறுதுணையாகும் வகையில் பற்பல வகையான சமுதாய தொண்டுகளையும் செய்துவந்தார்.


குமரகுருபர முனிவரர் கங்கையில் மலர்ந்த கலையன்னையின் திருவருளால் மீண்டும் ஒருமுறை தருமபுரம் வந்து தன்னுடைய ஞானாசிரியரைத் தரிசித்து மீண்டு காசிமாநகருக்கே திரும்பிச் சென்று தவப்பெருஞ் சீலராகத் தம்முடைய துறவற வாழ்க்கையைச் செழுமைப் படுத்தி நின்றதோடு தமிழும் சைவமும் வடக்கேயும் வளர்ந்து செழிக்கும் வகையில் வாழ்வை நடத்தி, ஒரு வைகாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத் திதியையில் சிவபெருமான் திருவடி நிழலிற் கலந்தருளினார்.
காசியில் குமரகுருபர முனிவரர் வாழ்ந்திருந்த காலத்தில் காசித் துண்டி விநாயகர் பதிகமும், காசிக் கலம்பகமும் இயற்றியருளினார். வாழ்க அவர் தொண்டு. வளர்க நம் சைவம். 


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அகநானூறு கூறும் தீபாவளித் திருநாள்.




சங்ககாலத்து அகத்திணைகூறும் நூல்களில் ஒன்றுதான் "அகநானூறு"  இலக்கியம் என்பது சமூகத்தைச் சித்தரித்துக் காட்டும் கண்ணாடி போன்றது. அதை மையப்படுத்தியே நான் இந்தக் கட்டுரையை இங்கு பதிவாக்குகின்றேன்.



தமிழாகரர் தெ.முருகசாமி
தீப ஆவளி - தீபாவளி. தீபம் - விளக்கு; ஆவளி - வரிசை.

தீபங்களை வரிசையாக வைத்து வழிபடும் விழாதான் தீபாவளி.  ஐப்பசி அமாவாசையையொட்டி கொண்டாடப்படும் இவ்விழா, வடவரின் நாகரிகக் கலப்பால் தமிழர்கள் மேற்கொண்டுவிட்ட விழாவாகும். இதன் அமைப்பைக் கார்த்திகை மாத முழுநிலாவில் கொண்டாடும் கார்த்திகை விளக்கு விழாவாக அகநானூற்றில் நக்கீரர் 141ம் பாடலில் கூறுகிறார். இதனால் கார்த்திகை தீபத் திருநாள்தான் தமிழர் தீபாவளியானாலும் அதை தீபாவளி எனக் கூறுவதில்லை. நாகரிகக் கலப்பான ஒரு காரணமன்றி வேறு சரியான காரணம் தமிழர் மேற்கொண்டுவிட்ட ஐப்பசி தீபாவளிக்குக் கூறமுடியவில்லை.

பொதுவாகத் தீபாவளி என்றாலே இனிப்புப் பலகாரங்களும், புத்தாடையும், புதுமணத் தம்பதியரைத் தலைதீபாவளி என அழைத்துவந்து மகிழ்வதும்தான் இன்றியமையாததாகக் கருதப்படும். இத்தகு நிலைக்கு மேலாக விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்துக் கொண்டாடும் வழக்கம் தமிழ் மக்களிடம் இல்லை. ஆனால், தமிழ் நாட்டை வாழும் இடமாகக் கொண்டுள்ள வடநாட்டு மக்கள் தங்கள் வீடுகள் தோறும் வரிசையாக விளக்குகளை ஏற்றிவைத்துக் கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற வழக்கம் கார்த்திகைத் திங்களில்தான் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்ற உண்மையை அகநானூறு பதிவு செய்துள்ளது.

உலகு தொழில்உலந்து நாஞ்சில் துஞ்சி
மழை கால்நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகதில்! அம்ம,
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இறீஇ
கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து
பாசவல் இடிக்கும்.
வேங்கட வைப்பின் சுரன்இறந் தோரே!

பொருள்தேட வெளியூர் சென்ற கணவன் ஊர் மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடும் கார்த்திகை விளக்கு விழாவின்போது வந்துவிடுவான் என மனைவி மகிழ்ந்து தோழியிடத்துக் கூறுவதாக 141ம் பாடலில் விளக்கேற்றி வழிபடுதற்கான காலச்சூழல் முதலில் நக்கீரரால் கூறப்படுகிறது.
                                                                                                                                                                         உழவுத் தொழில் முடிந்துவிட்டதால் உழும் கருவியான கலப்பை வேலையின்றிக் கிடக்கிறது. உழவுக்கு உதவியாக மேகமும் தக்கவாறு மழைபொழிந்து ஓய்ந்து விட்டதால் ஆகாயம், கருமேகம் சூழாத நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது.  ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் காயும் முழு நிலாவானது இருளை நீக்கி வானில் காணப்படுகிறது.   இந்நாளில் வீடுகள்தோறும் மக்கள் பூமாலைகளைத் தொங்கவிட்டு விளக்குகளை ஏற்றி வைத்துக் கூட்டமாகக் கூடி விழா கொண்டாடுவார்கள்.
                                                                                                                        இக்கார்த்திகை விளக்கு நாளில் புது மணமகன் உண்பதற்காக பசிய அவலாலான இனிப்புப் பொருள் செய்வதற்காக வீட்டிலுள்ள பெண்கள் நெல்லின் கதிர்களைப் பறித்து அவற்றை உரலில் இட்டு உலக்கையால் குத்திப் பக்குவப்படுத்துகிறார்கள்.   அங்ஙனம் குத்தும் உலக்கையின் ஒலியைக் கேட்டுப் பயந்தப் பறவை தானிருந்த வாழை மரத்தை விட்டு வேறொரு பெரிய மரத்தில் தங்கி தன் குஞ்சுப் பறவைகளைக் கூவுகின்றன. இத்தகு மரங்கள் அடர்ந்த இடையாறு என்னும் வளம்மிக்க நகரத்தைப் போன்று பெரிய செல்வ வளத்தைத் தேடி வருவதற்காகத் திருவேங்கட மலையைக் கடந்து சென்ற கணவன், கார்த்திகை விழாவின் போது வந்துவிடுவான் என மனைவி எண்ணிக் கூறுவதாக நக்கீரர் இப்பாடலை அமைத்துள்ளார்.
                                                                                                                                                                                     அப்பாடலில் "மதிநிறைந்து அறுமீன் சோரும் அகல் இருள் நடுநாள்" என்றது, கார்த்திகை மாத முழுநிலா நாளைக் (பெளர்ணமி) குறிப்பதாகும். முருகனைக் கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்ததால் அவர்கள் வரம் வேண்டியபடி வானில் ஆறு விண்மீன்களாயினர் என்பது புராணச் செய்தி.  முருகனோடு தொடர்புடைய கார்த்திகை நாள் ஒவ்வொரு மாதத்தில் வந்தாலும் அது கார்த்திகை மாத முழு நிலவோடு கூடி நிற்கும்போது சிறப்புக்குரியது என்பதால் மேற்படித் தொடர் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும். மேலும் இப்பாடலில் "புதுமணமகனை" என்றது, புது மணமகனை மட்டும் குறித்தாலும் தலைதீபாவளியை மணமகள் வீட்டில்தான் கொண்டாடும் வழக்கம் இன்றும் உள்ளதால் புது மணமக்களைத் தலைதீபாவளிக்கு அழைத்துவரும் செய்தியைக் குறிப்பதாகக் கருதலாம். இதனால் புது மணமக்களுக்குப் புத்தாடை வழங்கப்பட்டதாகவும் கருதலாம்.

இன்னும் இப்பாடலில் புதுமண மகனை "அயினிய" என்றதால் மணமக்கள் உண்ண வேண்டி பால் உலையில் பசுமையான அவலையிட்டு இனிப்புப் பொருள் செய்ய முயற்சித்தக் குறிப்பு கூறப்பட்டுள்ளதால் பொதுவாகத் தீபாவளிக்கு இனிப்பு செய்யும் வழக்கம் அன்றுமுதல் இருந்ததாக அகநானூற்றால் அறிய முடிகிறது. 
                                                                                                                                        எனவே, பழந்தமிழ்க் கார்த்திகை விளக்கு வழக்கம் இக்காலத்தில் ஐப்பசி மாதத்தில் விளக்கை வரிசையாக ஏற்றி வைப்பதைத் தவிர்த்ததாக அமைந்துவிட்டதற்கு வேற்றுப்புல நாகரிகக் கலப்பே காரணமன்றி வேறு காரணம் இல்லை எனலாம்.



Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கோவையில் ஒரு யாகசாலை.


பேராசிரியர் மணிவண்ணன்


கடலளவு ஆனாலும் மயங்க மாட்டேன், அது கையளவு ஆனாலும் கலங்க மாட்டேன். பாராட்டை கண்டு (பெருமையில்) மறக்கவும் வேண்டாம், கேளிக்கை விமர்சனங்களை கேட்டு தங்களை (கோபத்தால்) இழக்கவும் வேண்டாம். கங்கைக்கு பேதமில்லை, தன்னில் மூழ்குவன் பாவி ஆனாலும் பேதமின்றி அவனைத் தன் இருகரத்தால் அணைத்து பாவத்தைப் போக்குவதால்தான் கங்கை ஜீவ நதி, புண்ணிய புனித நதி என்று அழைகப்படுன்கிறது"  இது எனது "ஆத்மலயம்" நூலுக்காக ஒரு வாசகியின் மடல். 


இந்த நூல் வெளியீட்டிற்காகவும்; அதற்குக்கிடைக்கும் மெடலை வாங்குவதற்காகவுமே நான் பயணித்துக்கொண்டு இருக்கின்றேன். பயணத்தின்போதெல்லாம் சச்சீன் அடிக்கும் சதங்கள்போல் தகிதா பதிப்பகம் அடித்த சதங்களில் ஒன்றுதான் உங்கள் "ஆத்மலயம்" என்று மணிவண்ணன் எனக்கு அடிக்கடி கூறுவதுதான் என் நினைவிற்கு வருகின்றது.






தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலியில் திரு. திருமதி பாபா இருவரும் முகநூல் நண்பர்களாகி எனக்கு அலுவா கொடுப்பதற்காகத் தங்கள் இல்லத்திற்கு அழைத்திருந்தார்கள். விருந்தோம்பல் பண்பை அவர்களிடம் நான் பார்த்தேன். திருவள்ளுவர்கூட திருநெல்வேலி மக்களைப் பார்த்துத்தான் விருந்தோம்பல் என்ற அதிகாரத்தை ஆக்கினாரோ என்று எண்ணத் தோன்றியது.                                                                                                             அவர்களுக்கு இரண்டு புதல்வர்கள்.  புதல்வர்கள் இருவரும் எனது அறையிலேயே தூங்கி தங்கள் அன்பைப் பரிமாறிக்கொண்டார்கள். அவர்களது குசினிக்குள்சென்று நானே அலுவா எடுத்துச் சாப்பிடும் அளவிற்கு குடும்ப உறவினராகி விட்டேன்.  திரு பாபா அவர்கள் பார்ப்பதற்கு ஒரு கவர்ச்சி வில்லனின் தோற்றம். ஆனால் விபரம் தெரிந்த, நான் சந்தித்த நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர்.  திருவள்ளுவர் சிலையை அவருடன் சென்று பார்த்ததில் எனக்கு மிக மகிழ்ச்சி.  திருமதி பாபா அவர்கள் தனது பல்கலைக்கழகத்திற்கு என்னை அழைத்துச் சென்று தனது பேராசிரியர்களுடன் உரையாட ஏற்பாடு செய்தது மட்டுமன்றி "ஞானவாணி" என்ற வானொலிக்காகவும் என்னைப் பேட்டிகாண வைத்தார்.  இத்தனைக்கும் நான் அவர்களுக்குச் செய்தது வெறும் "நன்றி" என்ற வார்த்தை மட்டும் தான். எனது பயணத்தின் "கிளைமாக்ச்" க்காக நான் கோவை பயணமாகும் பேரூந்து நிலையம்வரை குடும்பத்துடன் அனைவரும் வந்து குதூகலமாக என்னை அனுப்பிவைத்தனர். இராமர் காட்டிற்குப் போகும்போது அவரை வழியனுப்பி வைத்தவர்களே மிகவும் கலங்கினார்கள் என்ற ஒரு வரியை எங்கேயோ வாசித்த ஞாபகம் அவர்களது முகங்களைப் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்டது. 



வண்டி கோவையை நோக்கிப் புறப்பட்டது. சொந்தக்களைத் தொலைத்த ஒரு அகதிபோல் குளிரூட்டப்பட்ட சொகுசு வண்டிக்குள் இருந்தேன். தொலைதூரத்தில் இருந்து எனக்கு ஓர் தொலைபேசி அழைப்பு வந்தது. "என்னங்க! எங்கு இருக்கிறீர்கள்; எனக்குப்பிடித்த மெட்டிச் சத்தத்திற்கு சொந்தக்காரி அவதான். எல்லாவற்றிற்கும் பதில் கூறினேன். சத்தம்போட்டு எதையும் சொல்ல முடியவில்லை. அப்போது வானத்தைப் பார்த்தேன். முகிலுக்குள் மறைந்திருந்த முழுநிலவு தன் முகத்தை முழுதாகக் காட்டியது. என் மனைவியின் முகம் இந்த நிலவுக்குள் நிழலாக இருந்தது. என் வளர்ச்சிக்காகவே என்றும் என்பின் நிற்பவர்.  பிரிவுத்துயர் ஆற்றமுடியாத முல்லைநிலத்துத் தலைவி போல் தொலைபேசிக்குள் தன் உணர்வுகளைத் தூதாக்கினாள். 

இறுதியாக "என்னங்க! யன்னலுக்குப் பக்கத்தில் இருந்தால் அடிக்கடி திறக்கவேண்டாம்; வைரஸ் பிடித்து விடும்" என்று கூறி தொலைபேசியை முடித்தார்.  நான் புறநாநூற்றில் பதில் சொல்லி என் நெடுநெல்வாடையின் அகநாநூறு ஆகிவிட்டேன்.  வண்டியின் யன்னல் பக்கத்தில் "கரம் சிரம் புரம் நீட்டாதீர்கள்"என்று எழுதப்பட்டிருந்தது. இது டி. ராயேந்தரின் தம்பி அடுக்கு மொழியில் எழுதினாரோ என்று நினைத்துக் கொண்டேன். இதில் புறம் என்பதற்குப் பதிலாக புரம் என்று போட்டிருந்தார்கள். 

ஓட்டுனருக்குப் பின்பக்கத்தில் இரண்டு பெண்கள் இருந்தார்கள். வளைவுகளில் எல்லாம் வண்டியின் அமைதியான ஓட்டத்திற்கு இந்தப் பெண்களைப் பார்த்த சாரதியின் பகுத்தறிவே காரணமாக இருக்கலாம். வண்டிக்குள் ஆடுகளம் என்ற படம் சின்னத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது. வண்டி தரிப்புகளில் நின்று கிளம்பும்போதெல்லாம் படமும் ஒவ்வோருமுறையும் எழுத்தோட்டத்தில்இருந்து ஆரம்பித்தது. பிரயாணிகளில் ஒருவர் பொறுமை இழந்தவராக "என்ன படம் ஓட்டுகிறீர்கள்" என்று கொஞ்சம் கடுப்பாகக் கேட்டார். "அது தொழில் நுட்பக்கோளாறு" என்று ஒரு விமானியின் பாணியில் சாரதி பதில் சொன்னார். பக்கத்தில் இருந்தவருக்கு நான் தொலைபேசி கதைப்பது தொல்லையாக இருந்தது என்பதைத் தன் செய்கைகள் மூலம் எனக்குவிளங்கவைத்தார். மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு. "ஐயா நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள்? உங்களை வரவேற்கக் கோவை காந்திபுர பேரூந்துத் தரிப்பிற்கு காலையில் வருகிறேன். நான் மணிவண்ணன் சாரின் மாணவன்; எனதுபெயர் வைரs" என்று குறிப்பிட்டார். நான் பிரயாணம் செய்த வண்டிக்குள்ளேயே ஒரு நல்ல வைரs தொற்றிக்கொண்டதை உணர்ந்தேன். பேராசிரியர் மணிவண்ணனைச் சந்திக்கப்போகிறேன் என்ற இயமக் கனவுகளுடன் இருந்த என்னை இதமாகவந்து ஒருத்தி அணைத்தாள். வெளிச்சத்தில் தன்னைக் காட்டிக்கொள்ளத் தயங்கிய அந்த நித்திராதேவி காலை 5.30 மணியளவில் என்னைவிட்டுச் சென்றுவிட்டாள். வண்டி காந்திபுரத்தை அடைந்ததும் எல்லோரும் இறங்கினார்கள். எனக்குப் பக்கத்தில் இருந்தவரை ஓட்டுனர் எழுப்பி இறக்கிவிட்டார். சுற்றுமுற்றும் பார்த்தார் சுற்றத்தார் எவரையும் காணவில்லை. tower பிரச்சனையால் தொலைபேசிகதைத்தது விளங்கவில்லை. பலமைல்கள் தள்ளிவந்து இறங்கிவட்டதாக என்னிடம் தெரிவித்தார். எனக்கு சிரிப்பு வந்தது. சிரித்தால் அவர் கடுப்பாகிவிடுவார் என்று அடக்கிவாசித்துவிட்டு நகர்ந்துவிட்டேன். 

என்முன்னால் ஒரு டீ கடை. அதில் ரூபாவுக்கு இரண்டு என்று வாழைப்பழக்குலையில் எழுதியிருந்தார்கள். இங்கு தான் செந்தில் பழம் வாங்கி கவுண்டமணிக்குக் கொடுத்தாரோ என்று நினைத்துவிட்டுத் தேனீர் ஒன்றை அருந்திவிட்டு vairas இன் வருகைக்காகக் காத்திருந்தேன். பல ஆட்டோ ஓட்டுனர்கள் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் செல்வதுபோல் வந்து வந்து பேட்டி எடுத்தார்கள்.

 பல மீட்டர்களுக்கு அப்பால் என்னை வரவேற்க வந்த கவிஞர் vairas என்னைக்கண்டு மகிழ்ச்சிபொங்க புன்முறுவல்பூத்த முகத்தடன் கட்டித்தழுவி வரவேற்றார். கோவையில் முதல் சந்தித்த தமிழர் கவிஞர் vairas அவகள்தான். அமைதியான பேச்சு; ஆழமான கருத்துக்கள்; வட்டமான கண்கள்; கூர்மையான பார்வை. கவிஞர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்களோ என்ற ஒரு கேள்வியுடன் மணிவண்ணன் ஒழுங்கு செய்திருந்த விடுதியை அடைந்தோம். அழகிய உல்லாச விடுதியில் எனக்கென்று ஒரு குளிரூட்டப்பட்ட சொகுசு அறையை ஒழுங்கு செய்திருந்தார்கள். கவிஞர் vairas அவர்கள் மாலைவரை என்னுடன் தங்கியிருந்தார். தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவர்கள் ஆற்றும் தொண்டு என்னை மிகவும் ஆச்சரியப்படவைத்தது. அன்று மாலை மணிவண்ணன்  அவர்கள் என்னைவந்து சந்திப்பதற்கிடையில் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காப்பி; காலை உணவு; மதிய உணவு; உபசரிப்பு; போன்ற விருந்தோம்பல்களில் ஏதாவது குறை இருக்கின்றதா? எல்லாம் தங்கள் மனத்திற்குச் சௌகரியமாக இருக்கின்றதா என்பதைக் கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் வரும்வரை நான் துர்ங்காமலே இருக்கின்றேன். வானொலியில் பக்கத்து அறையில் "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை" என்ற பாடல் பெரிதாகக் கேட்டுக்கொண்டு இருந்தது. (தொடரும்)

கவிஞர் vairas

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS