என் உயிரிலும் மேலான உடன்பிறப்புக்களுக்கு வணக்கம். நான்தான் சொல்கின்றேன். கருணாநிதி எங்கடா இங்கவந்தவர் என்று நினைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வணக்கம் சொல்லும் முறையை நான் பார்த்திருக்கின்றேன். எம்ஜிஆர் அவர்கள் என் இரத்தத்தின் இரத்தங்களே என்று தனது மேடைப்பேச்சைத் தொடங்குவார். யாரையாவது தொலைபேசியிலோ, நேரடியாகவோ சந்திக்கநேர்ந்தால் அவர் வணக்கம் ஆண்டவரே என்று சகல கடவுள்களையும் அடக்கக்கூடியதான பொதுச்சொல்லால் வரவேற்பார். அதாவது உங்களை இன்று சந்திக்கவைத்த ஆண்டவனுக்கு நன்றி என்பதுபோல். சுகம் விசாரிக்கும்போது பொதுவாக நலமா என்று கேட்கமாட்டார். உங்கள் உடலும் உள்ளமும் நலம்தானா என்று கேட்பார். கிருபானந்த வாரியார் யாரையாவது சந்திக்க நேர்ந்தால் வணக்கம் ஐயனே என்று முருகனுக்கு நன்றி சொல்வார். தேவர் (வெள்ளிக்கிழமை விரதம் என்ற படத்திற்கு பாம்புகளை பழக்கி பெயர் எடுத்த பெருமைக்குரியவர்) அவர்கள் ஒருவரைச் சந்திக்கும்போது வணக்கம் முருகா என்று சொல்லுவார். நடிகர் பிரபு அவர்கள் யாரையாவது படப்பிடிப்பின்போது சந்தித்தால் அவரது உடம்பிற்கு தகுந்தாற்போல ''சாப்பிட்டாச்சா'' என்று கேட்பாராம். இதெல்லாம் கதைக்கு தேவையா என்று நீங்கள் குசுகுசுப்பதால் விடையத்திற்கு வருகின்றேன் ஆண்டவரே
சிங்கப்பூருக்கு ஒருமுறை சென்றிருந்தனான் கமலகாசன் நடித்த படத்தை மனத்தில் கொண்டு அங்குபோய் இறங்கிவிட்டன். விமான நிலையத்திலேயே hotel ஒன்றைப் பதிவுசெய்து வாடகைக் காரில் தங்குமிடத்தை அடைந்துவிட்டன். இந்த இடம்தான் சிங்கப்பூரின் centre point. ஒருவரும் தமிழ் கதைப்பதாகத் தெரியவில்லை. காரை; காடி என்று சொல்கிறார்கள், வார்த்தைகளின் கடைசியில் லா லா என்று கதைப்பது எனக்கு புதிதாக இருந்தது. விருப்பமாகவும் இருந்தது. விடுதியில் இருந்தவருடன் தமிழில் கதைத்தன். அவர் நன்றாகத் தமிழ் பேசும் அன்பர். என் தமிழைப்பார்த்து நீங்கள் மலையாளம் பேசுகிறீர்கள் என்று சொன்னார். இலங்கைத் தமிழ்தான் ஒறிஜினல் என்று இறுமாப்புடன் இருந்த எனக்கு பல சாட்டை அடிகள் கிடைத்தன. சிங்கப்பூர் போகிறன் என்று சொன்னதும் உடைந்த நகைகளை எல்லாம் ஒட்டிக்கொண்டுவரும்படி பிரபஞ்சத்தின் நடுப்புள்ளி தாங்கள்தான் என்று நினைக்கும் யாழ்ப்பாணத்து தமிழ் உறவுகள் தந்துவிட்ட நகைகள் என்னிடம் இருந்தது. அதனால் நான் சிராங்கூன்தெருவுக்கு போகவேண்டி இருந்தது. சிராங்கூன் தெரு என்பது .இலக்கியத் தமிழில் பொற்கொல்லர் தெரு. எனக்கு பயமாகவும் இருந்தது. ஏனென்றால் நான் கோவலன் பொற்கொல்லர் தெருவில் கொலைசெய்யப்பட்டதை நினைத்துவிட்டன். விபரம் தெரிந்தவனுக்கு வேதனைகள் அதிகம். ஒருவாறு விடுதியில் வேலைசெய்த தமிழரின் உதவிகொண்டு சிராங்கூன் தெருவுக்குப் போவதற்கான பஸ்சில் ஏறிவிட்டன்.
பஸ் ஓட்டுனர் ஒரு மலையாளி. கதைப்பதெல்லாம் சிரிப்பதுபோலவே இருந்தது. அவரிடம் விபரம் ஒன்றும் கேட்கமுடியாது என்று அவரது பார்வையில் இருந்து புரிந்துகொண்டன். பஸ்சிற்குள் சுற்றுமுற்றும் பார்த்தேன் இரண்டு இடங்கள் Free யாக இருந்தது. ஒருதமிழ்பெண்ணுக்குப் பக்கத்தில் ஒரு இடம். ஒரு சைனா பெண்ணுக்குப் பக்கத்தில் ஓரு இடம். நான் முகம் செந்தழிப்பாக இருந்த தமிழ்ப் பெண்ணுக்குப் பக்கத்தில் ஒரு மரியாதை கொடுத்து உட்கார்ந்துவிட்டன். அவவும் அங்கும் இங்கும் தெருக்களின் பெயரைப்பார்ப்பதும், ஓட்டுனரைப்பார்ப்பதுமாக ஒரு டென்சனில் இருந்தார். அந்த டென்சன் என்னுடனும் அவரைக் கதைக்கத் தூண்டியிருக்க வேண்டும். என் மூஞ்சியில் தமிழ் என்று ஒட்டியிருப்பதை அவர் நன்றாக உணர்ந்து கொண்டவர்போல் பேச ஆரம்பித்தார். ''நான் சிராங்கூன் தெருவுக்குப் போகிறன், அந்த இடம் வந்ததும்'எனக்கு தெரியப்படுத்துங்கள் என்று வேண்டிக்கொண்டார். ஒன்றும் பிரச்சனை இல்லை நானும் அந்த இடத்திற்குத்தான் போகின்றேன் அமைதியாக இருங்கள் என்று சொன்னேன். ஆனால் அந்த அம்மா என்னை மலையாளி என்று சொல்லாதது எனக்கு சந்தோஷம். இருவருக்கும் இடையில் பரஸ்பரம் கதை தொடங்கியது. அம்மாவுக்கு பென்சன் ஆகும் வயது. எனக்கு அந்த வயதிற்கு இன்னும் 20 வருடங்கள் இருந்தன.
கையில் ஒரு இராமாயணப் புத்தகத்தை வைத்திருந்தார். கதைப்புக்கதம் படிக்கும் பழக்கம் உண்டா என்று கேட்டேன். ஆம் என்று சொன்னவர் ''இருந்தாலும் இராமாயணத்தில் இராமர் சீதையைக் தீக்குளிக்க வைத்தது ஆண் அடிமைச்சமுதாயம் அக்காலத்திலேயே இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது'' என்று சொன்னார். தவிர ''இராமர் வாலியை மறைந்திருந்து கொலை செய்ததும் எனக்குப் பிடிக்கவில்லை'' என்று சொன்னார்'' இலக்குமணன் கீறிய கோட்டை தம் தமிழர்கள் இராமன் கீறியதாக நினைத்து வாழ்கிறார்கள், அவர்களுக்கு இராமாயணம் பற்றி தெளிவுபடுத்த வேண்டும்'' என்றும் சொன்னார். ''இராமரும் சீதையும் காட்டுக்குச் செல்லும் போது அவர்களைவிட அவர்களது உறவினர்களே மிகவும் கவலைப்பட்டதாகவும் சொன்னார். எனக்கு மலேசியாவின் அவர்களது மொழி வழக்கில் பக்கத்தில் இருந்த அம்மா ஒரு ''மொக்கை இல்லாத ரம்பம் (பல்லு இல்லாத வாள்)மணிக்கணக்கில் அறுக்கிறது'' என்று சொல்லத் தோன்றியது. பஸ் ஓட்டுனரின் மனைவியின் தொலைபேசி ஒன்று அவருக்கு வந்ததால் பஸ்சை மிகவும் வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். என்னதான் அவ சொன்னாவோ தெரியவில்லை. பிறகுதான் தெரிந்தது மனைவியின் தங்கை வீட்டுக்கு விடுமுறையில் வந்திருப்பதாகத் தகவல் வந்தது என்று.
பஸ் றொச்சோ வீதிக்கு வந்துவிட்டது. அது கடந்தால் கபலக்றோட். இதை உச்சரிக்கத்தெரியாத இந்திய தொழிலாளர்கள் புடலங்காய்வீதி என்று சொல்வார்கள் என்று சொல்லி அந்த அம்மா சிரித்தார். நீங்கள் பிறந்தஇடம் சிங்கப்பூர்தானா என்று கேட்டேன். தனது தாய்நாடு மலேசியா என்று பதிலளித்தார். எனக்கு அப்போது மலேசியாவில் ஒருவரையும் தெரியாது. உங்கள் ஊர் எது என்று பதிலுக்கு அவரும்கேட்டார். நான் இலங்கையில் யாழ்ப்பாணத் தமிழன் என்றேன். உதட்டுக்குள் அந்த அம்மாவுக்கு ''ஓ நீங்க இடியப்பமா'' என்ற ஒருசிரிப்பு. இது எனக்கு சிங்களவன் தமிழனைப்பார்த்து ''பனங்கொட்டை'' என்று சொல்வதை நினைப்பூட்டியது. இவளவு அன்னியோன்னியமாக நான் மரியாதையுடன் கதைத்தும் அந்த அம்மா எனக்கும் தனக்கும் இடையில் வைத்த மெல்லிய hand bag ஐ இதுவரையில் எடுக்கவில்லை. தன்னைச்சுற்றி பாதுகாப்பிற்கு ஐந்தாறு ஆமிக்காரர்கள் நிற்பதுபோலவே அந்த hand bag ஐ அவர் கருதிக் கொள்கின்றார் என்பதும் இப்போதும் தன் கணவன்பெயரைத் தன்வாயால் சொல்லக்கூடாது என்ற கலாச்சாரத்தில் வாழ்கிறார் என்பது எனக்கு விளங்கியது.
அன்று வியாளக்கிழமை; தான் ஒரு ஆசிரியை என்றும், மலேசியாவில் பள்ளிமுடித்து அவரச அலுவலாக உடையும் மாற்றாமல் வந்துவிட்டதாகக்கூறினார். ஒரு விடுதியில் தங்கவேண்டும் என்றும் சொன்னார். ஆசிரியர் என்கின்றறிர்கள் ''பற்றிக'' உடையில் இருக்கின்றீர்கள் என்று கேட்டேன். ''மலேசியாவில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் அரச சேவையில் உள்ளவர்கள் 2007 ஆம் ஆண்டிற்குப்பின் கட்டாயமாக ''பற்றிக்'' உடை அணியவேண்டும் என்பது அரச கட்டளை என்று சொன்னார். நான் காரணம் கேட்டதற்கு, பற்றிக் தொழிலை முன்னேற்றுவதற்காகவும், மலேசியாவில் ''கிளாந்தன்'' என்னும் இடத்தில் இருக்கும் ''பற்றிக்'' தொழிற்சாலையை நட்டத்தில் போகாமல் பாதுகாப்பதற்காகவும் இந்த ஏற்பாடு என்று குறிப்பிட்டார். ஆனால் நிரந்தர உடை இருப்பவர்களாகிய போலீஸ், டாக்டர், தாதிமார் ஆகியோர் அணியத்தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். பஸ் தரிப்பிடத்தை அடைந்தது. அம்மாவும் மறக்காமல் தன் hand bag ஐ எடுத்துக்கொண்டு இறங்கினார். இரவு என்ன சாப்பிடப் போகிறறிர்கள் என்று கேட்டார். நானும் ஒரு styleஆக ''நாசிக்கொறிங்'' என்று சொன்னேன். அதற்கும் வைரமுத்துவின் சகோதரிபோல் ஒரு உதட்டைச் சுழித்த சிரிப்பு. என்ன வென்று கேட்டேன். ''நாசிக்கொறிங்'' என்றால் தமிழில் சோற்றுப்பிரட்டல் என்று சொல்லி சிரித்தார். இதைத்தானா வெள்ளைக்காரர்கள் ஐரொப்பாவில் ''ஏசியன் ஸ்பெஷல்'' என்று முள்ளுக்கரண்டியால் சாப்பிடுகிறார்கள் என்று எனக்கும் சிரிப்பு வந்தது. நான் பக்கத்துத் தெருவில் உள்ள 7th story hotel இல் ஒட்டுவதற்காகக் கொண்டுசென்ற நகைகளுக்கான பாதுகாப்பிற்காகத் தங்கினேன்.
பூட்டிய அறைக்கதவின் கீழ்ப்புறுமாகப் பல விளம்பரத் துண்டுப்பிரசுரங்கள் என் அறையின் தரையில் வந்து வந்து விழுந்ததை உணர்ந்தவனாக அசந்து தூங்கிவிட்டன். நள்ளிரவு 12 மணியிருக்கும் என் அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. தூக்கத்தில திறந்து பார்த்தேன் அந்த அம்மா நின்றுகொண்டிருந்தார். வாடிக்கையாளர் வருகை இடாப்பில் தன் உறவினரைத் தேடுகையில் என்பெயரைக் கண்டதாகவும், அதனால் என்னைப்பார்க்க வந்ததாகவும் குறிப்பிட்டார். வாருங்கள் உட்காருங்கள் என்று நான் சொல்லவிரும்பவில்லை. ஏனென்றால் எனக்கு hand bag நினைப்பு வந்தது. ''தம்பி இங்கு இப்படித்தான் அறைகளுக்குள் கண்ட கண்ட சிவப்புலைற் ஏரியா துண்டுகள் எல்லாம் வந்து விழும். அதுகளை பார்த்து கெட்ட பழக்கங்கள் வரப்பார்க்கும், கவனமாக இருங்க தம்பி என்றுவிட்டுப் போனார்கள். எனக்கு ஒரு மலேசியத்தாயின் மடியில் உறங்குவதுபோல் சந்தோஷமாக நித்திரை வந்தது.
2 Comments:
வாருங்கள் உட்காருங்கள் என்று நான் சொல்லவிரும்பவில்லை. ஏனென்றால் எனக்கு hand bag நினைப்பு வந்தது. ////எள்ளல், நகையாடல் எல்லாம் சிறப்பு! தொடர்ந்து காத்திருக்கின்றோம்.
கடைசியில் முடித்த விதம் நன்றாக இருந்தது :-)
Post a Comment