RSS

"கோச்சி வரும் கவனம்"


எனது சிங்கப்பூர் Bus பிரயாணக்கதையை வாசித்த ஒரு வாசகி; உங்களுடன் நானும் அந்தவண்டியில் ஒருமுறை பிரயாணம் செய்தால் என்ன என்று தோணுகிறது என்றார்.நீங்கள் வருவதென்றால் பரவாயில்லை இடைளில் bag ஐ வைக்காமல் இருந்தால் எனக்கு சந்தோசம் என்றேன்.அதற்கு அவள் "கையை இடையில் வையுங்கள்" என்றாள். கையை உங்களுக்கு இடையில்வைப்பதா அல்லது உங்கள் இடையில் வைப்பதா என்று என்று கேட்டதற்கு அவள் நாணிக் கோணி கேள்விக்குறிபோல் தன்னை வளைத்து பூமியைப் பார்த்தாள். என்னை தழுவியிருந்துவள் (நித்திராதேவி)தானாக விலக கண்டகாட்சிகள் ஒரு கனவு என்பதை உணர்ந்து சிரித்துவிட்டேன்.தொல்லை கொடுப்பதற்கென்றே மனிதன் சில சாமான்களைத் தன்னுடன் வைத்திருப்பதில் தொலைபேசி ஒரு முக்கியபொருளாகிறது. செத்தான் கிரகாம்பெல். கைபேசியில் மனைவி படம் இருக்காது; மையெழுதும் சினிமா கன்னியரின் மார்புப்படம் வைத்து சுகம் காண்போர் ஏராளம். நான் அப்படி ஒன்றும் வைக்கவில்லை என்றோரு கவலை எனக்கு உண்டு.  எனக்கு அப்படி படங்கள் எப்படி வைக்கிறதென்று தெரியாத கவலை அதைவிட உண்டு.  வணக்கம் கங்கை சார் என்றொரு தொலைபேசி. என்ன புதினங்கள் என்றார். நல்ல மழை பெய்கிறது என்றேன். எங்கள் ஊரில் என்ன கெட்டமழையா பெய்கிறது என்று பார்த்திபன் வீட்டு தெருவில் குடியிருப்பதுபோல் கேட்டார்.  இவர்தான் குடிக்க பச்சைதண்ணி தாருங்கள் என்று கேட்பதற்குப் பதிலாக green water தாருங்கள் என்று ஆங்கிலத்தில் ஒரு வைத்தியசாலையில் வருத்தமாக இருந்தபோது கேட்டவர்.  


ஐரோப்பாவிற்கு வந்தநேரம் மலேரியா தொற்று நோயுள்ள நாட்டில் இருந்து வந்திருப்பதாகக் கருதி ஈழத்தமிழ் அகதிகளுக்கு மலேரியாத் தடுப்பூசி போட்டார்கள்.  எனக்கும் ஒன்று இலவசமாகக் கிடைத்தது. வெள்ளைக்காரப் பெண்ணின் கைவிரல் பட்டதால் ஊசி குத்தியநோ எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. "இவளது கைவிரல் படுமாக இருந்தால் அலவாங்கால் குத்தினால் கூட வலிக்காது" என்று பக்கத்தில் இருந்தவர் சலசலத்தார். இது பழைய கதை. இதைவிட்டுவிட்டு புதிதாக ஏதும் யோசிப்பம் என்றால் அதுவும் என் மரமண்டைக்கு ஏறுதில்லை.   ஒரு பாடசாலையில் இன்று பொது அறிவு கேள்விகளுக்கு என்னை நடுவராக அழைத்திருந்தார்கள். என்னை வீட்டில் நடுவிலான் என்றுதான் அம்மா செல்லமாக அழைப்பா. அதனாலோ என்னவோ என்னை நடுவராக அமர்த்துவதில் எனக்கு ஒரு சந்தோசம். பாடசாலையில் போட்டி தொடங்கிவிட்டது. போட்டியின் பிரகாரம் "இலங்கையில் இருக்கும் மூன்று மலைகளின் பெயர்கள் சொல்லுங்கள்" என்று முதலாவது வந்த போட்டியாளரைக் கேட்டேன். போட்டியாளர் "திருகோணமலை. கீரிமலை. சுதுமலை" என்று கூற சபையோரும் அவை சரி என்பதுபோல் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இரண்டாவது கேள்வி "இராவணன் என்றதும் உங்களுக்கு முதவில் என்ன தோன்றுகிறது" என்று கேட்டேன். பதில் விக்ரம் நல்ல நடிகர் என்று தோன்றுகிறது என்றார்கள். இதற்கும் சபையோர் கைதட்டினார்கள். முன்பு எல்லாம் ஒருவரைப் பார்த்து "நீ விக்ரம் போல் இருக்கிறாய்" என்றால் சந்தோசப்படுவார்கள். தெய்வத்திருமகன் படம் வந்தபின்னர் அப்படி சொல்லமுடியாமல் உள்ளது. பாடசாலையின் பக்கத்தில் ஒரு புகையிரதப் பாதை இருப்பதால் அடிக்கடி அந்த இரைச்சல் போட்டிகளை நடாத்து முடியாமல் தடைசெய்து கொண்டிருந்தது. 

புகையிரதம் என்றதும் எனக்கு ஊர் ஞாபகங்கள் தாலாட்டத் தொடங்கின. 1914ம் ஆண்டு சிறிலங்காவிற்கு புகையிரதப்பாதை போடப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு "யாழ்தேவி" என்று பெயரிடப்பட்ட புகையிரதம் ஓடத்தொடங்கியது.  வெள்ளைக்காரன் வராவிட்டால் அதுவும் வந்திருக்காது. அப்பொழுது புகையிரதம் ஓடுவதைப் பார்ப்புதற்கு தண்டவாளப் பாதைகளுக்கு அருகாமையில் ஊரேதிரண்டு நிற்குமாம். நிற்பவர்கள் எல்லோரும் வெள்ளைக்காரனிடம் ஒரு மந்திரசக்தி இருப்பதாகப் பேசிக்கொள்வார்களாம். வெள்ளையன் வராவிட்டால் "நாம் இப்போ கோவணத்துடன்தான் நின்றிருப்போம்" என்று பேசிய புத்திசீவிகளும் அதனுள் நின்றனர்.  வேடிக்கை பார்ப்பதற்கு மக்கள் திரண்டார்களே தவிர பிரயாணம் செய்வதற்கு ஒருவரும் அக்காலத்தில் பயத்தின் காரணமாக முன்வரவில்லை. புகையிரதத்தை தமிழரும் சிங்களவரும் "கோச்சி" என்றே அழைத்தார்கள். இது "கோச்" என்ற ஆங்கில அடிச்சொல் என்று தெரியாமலே கதைக்கத் தொடங்கிவிட்டார்கள். 

அக்காலத்தில் தாய்மாரைப் பிள்ளைகள் ஆச்சி என்பதை மொழிவழக்கில் கோச்சி என்றும் தகப்பனை கொப்பர் (கொப்பன்) என்றும் அழைப்பது வழக்கம். ஆரம்ப காலங்களில் புகையிரதப் பாதை ஊடறுத்துச் செல்லும் தெருக்களுக்கு தடுப்பு கிடையாது. "கோச்சி வரும் கவனம்" என்று அறிவித்தல் பலகை மட்டும் பெரிதாக மாட்டப்பட்டிருக்கும். இதைக் கவனிக்காமல் சென்று கைலாயம (மோட்சம்) போனவர்களும் உண்டு. கோச்சி வரும் கவனம் என்பதற்குக் கீழ் "கொப்பரும் வருவாரோ" என்று இன்னொரு வசனத்தையும் தமிழர்கள் எழுதி வேடிக்கை பார்ப்பார்கள். கோச்சியில் ஏறுவதற்கு ஒரு தமிழர்களும் விருப்பப்படாத காலத்தில் வெள்ளைக்காரன் அதற்கென்று ஒவ்வோரு நகரங்களிலும் பல முகவர்களை நியமித்திருந்தான். அந்த முகவர்களின் தொழிலின் பெயர் "கோச்சிக்கு ஆள் கூட்டும் வேலை" . இவர்கள் கோச்சிக்கு ஆள் கூட்டத் தொடங்கிறதும் வெள்ளைக்காரனின் பிழைப்பு ஒகோ என்று ஓடத் தொடங்கிறது. இதனால் பல கோச்சிகளும்(ஆச்சிகளும்)  கோச்சியில் பிரயாணம் செய்யத் தொடங்கினர். 

அந்தக்காலத்து(1914) கதாநாயகர்கள் ஆச்சி கோச்சியில் போவதைப்பார்த்து "ஆச்சி கோச்சியில் மதவாச்சிக்குப்போய் பிள்ளைக்கு போச்சி வாங்கிவந்து வீட்டு மேசை லாச்சிக்குள் வைக்க; லாச்சிக்குள் இருந்த பூச்சி ஆச்சியின் பாச்சியில் கடித்தது" என்று சிலேடை கதைப்பார்கள்.  குழந்தைகளுக்கு சோறை சோச்சி என்றும்; மீனை மீச்சி என்றும் சொல்லிக் கொடுப்பதுபோல் பாலை பாச்சி என்று சொல்லிக் கொடுத்தார்கள்.  பாச்சி(பால்) என்ற பொருள் தனத்திக்கு ஆகிவந்திருப்பதால் அது இப்பெயரைப் பெறுகிறது.  இது ஒரு பொருளேதவிரக் கெட்டவார்த்தை இல்லை என்று தமிழ் இலக்கணம் விடை தருகிறது.  வெள்ளைக்காரன் இலங்கையை விட்டுப் போகும்போது 900 மைல் தண்டவாளங்களை நாடு பூராகவும் அமைத்திருந்தான். இன்றைய மகிந்தா வரை இன்னும் ஒரு அடிகூட தண்டவாளம் போடவில்லை என்பது இலங்கை வரலாற்று பெருமை.  இந்தப் புகையிரதத்தில்தான் டயானாவும் சாள்சும் கொழும்பில் இருந்து அநுராதபுரம்வரை சென்றார்கள். புகையிரதம் ஓடும்போது சடக் சடக் என்று சில்லு தண்டவாளத்தில் ஓடும் சத்தம் பிரயாணிகளுக்கக் கேட்கும். இதைக் கேட்ட டயானா சாள்சிடம் ஒரு கேள்வி கேட்டார். "நமது நாட்டில் ஓடும் புகையிரதங்களுக்கு சில்லு வட்டமாக இருக்கும்; இங்கு ஏன் சில்லு சதுரமாக இருக்கிறது" என்று. சாள்சுக்கு தலை சுற்றியது. 

பாடசாலையைக் கடந்து புகையிரதம் சென்றுவிட்டது. சத்தம் குறைந்துவிட்டது.  அடுத்த போட்டியாளரை நான் அழைத்து ஒரு கடிக் கேள்வி கேட்டேன். "பெண்ணுக்கும்; விரலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். வந்தவன் என்னைப்போல் ஒரு விபரமான பொடியன். ஆங்கிலத்தில் பெண்ணை Figure என்று அழைப்பார்கள்; விரலை Finger என்று அழைப்பார்கள்; அதனால் "n" தான் வித்தியாசம் என்றான். சபையோர்கள் இதற்கும் விளங்கியதுபோல் கைதட்டியார்கள். அடுத்த கேள்வி; முத்தத்திற்கும் சத்தத்திற்கும் என்ன வித்தியாசம் என்றேன். அவன் தமிழ் முத்தமா ஆங்கில முத்தமா என்று திருப்பி என்னை ஒரு கேள்வி கேட்டான். .............

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

14 Comments:

Pathman said...

அங்கு முகப்புத்தகத்தில் இதை ,பால் வயது வேறுபாடின்றி ,கண்ணை மூடிக் ,கண்னைத்திறந்து , அசைவம் என்று சொல்லியும் பலர் ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள் .நன்றாக்த்தான் இருக்கிறது ..நாங்களும் சிறுவயதில் கோச்சி ,ஆச்சி ,பாச்சி கதைகள் கதைத்தோம் ...அதைப் பொருத்தமாக எழுதியிருந்தார் ..பாராட்டுக்கள்..

J.P Josephine Baba said...

நடிப்பில் நவரச நாயகன் கமலஹாசன் போல் எழுத்தில் நவரசங்களும் கலந்த அபூர்வ எழுத்து. ஒரு ஸ்டார்ங் டிக்காஷன் காப்பி(coffee) குடித்தது போல் உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா!

Anonymous said...

அருமையான கதை நுட்பம். கதைகளுக்கு ஏற்ற தேடிப்பிடித்த படம். ஈழத்தமிழனின் இனிமையான சொல்லாடல். சங்ககாலத்தில் "பச்சைப்பொருள்" என்ற இலக்கிய ஒழுக்கம் இருந்தது. அதாவது உள்ளதை உள்ளபடி கூறுதல். எழுத்தாளரின் துணிவும் திறமையும் வரவேற்கத்தக்கன.

எஸ் சக்திவேல் said...
This comment has been removed by the author.
Anonymous said...

ஆச்சி பூச்சியிலே ஏறினாவாம்
மதவாச்சியில் இறங்கினாவாம்
லாச்சியைத் திறந்தாவாம்
பூச்சி %ச்சியில் கடிச்சுப் போய்ச்சுதாம்

ஏன்று சின்னவயதில் அர்த்தம் தெரியாமல் பாடி வீட்டில் அடி வாங்கிய ஞாபகம்.

சி.பி.செந்தில்குமார் said...

குட் லே அவுட், நீட் போஸ்ட்

எஸ் சக்திவேல் said...

கோச்சி- உனது ஆச்சி
கொப்பர்- உனது அப்பர்.

எனவே கோச்சி என்பதுவும் ஆச்சி என்பதுவும் ஒன்றல்ல.

Unknown said...

வணக்கம், பதிவு மிக நன்றாக அமைந்து உள்ளது . ஆச்சி, கோச்சி, என்பன எனது காலத்தில் பரவலாக சொல்லபட்டது. இன்னமும் கோச்சிக்கு நாம் தமிழ் சொல் வழக்கத்துக்கு வரவில்லை நான் ரயில் என்றுதான் விழிக்கிறேன் .இப்போ சில வானொலிகளில் தொடர் ஊர்ந்து என்று சொல்லபடுகிறது, அது எவ்வளவு தூரம் புழக்கத்துக்கு கொண்டு வரபட்டுள்ளது என்பது தெரியவில்லை .ரயில் சில்லு ஏன் சதுரமாக உள்ளது ?? அது தேய்ந்து விட்டதோ ? இன்றுவரை ஒரு அடிகூட ரயில் பாதையை யாரும் நீட்டவில்லை, எங்கோ நீட்டிறது ? அப்படி நீட்டிறது என்றால் வெள்ளை தான் மீண்டும் வரவேண்டும் . அவுவளவு மோசம் நமது நாட்டின் அரசியல் அபிவிருத்தி, ஆனால் பாதை கூறுகி உள்ளது. அனுராதபுரம் வரை அதுதான் உண்மை .
C.Ranjan

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\கொப்பரும் வருவாரோ? //
:) பதிவு சுவாரசியம்..

\\ஒரு அடிகூட தண்டவாளம் போடவில்லை// :((

Anonymous said...

கங்கை மகனுக்கு வணக்கம் ! நிலைக்கண்ணாடியில் பார்ப்பது அத்தனையும் அழகு, தங்களின் தமிழ்ச் சொல்லாடல் பிடித்தது அதுவும் சிறப்பு வாய்ந்த தீவகத் தமிழே தனி.

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர் பாஸ்.....நல்லா சொற்சிலம்பம்...!!!!

சஞ்சயன் said...

அப்படி அது இது என்று பீத்திக் கொள்ளும் இந்த உலகில்

// அவள் "கையை இடையில் வையுங்கள்" என்றாள். கையை உங்களுக்கு இடையில்வைப்பதா அல்லது உங்கள் இடையில் வைப்பதா என்று என்று கேட்டதற்கு அவள் நாணிக் கோணி கேள்விக்குறிபோல் தன்னை வளைத்து பூமியைப் பார்த்தாள். என்னை தழுவியிருந்துவள் (நித்திராதேவி)தானாக விலக கண்டகாட்சிகள் ஒரு கனவு என்பதை உணர்ந்து சிரித்துவிட்டேன்.//

உண்மையைக் கூறும் உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது. நாங்க கை வைத்தால் நமீதாவின் இடுப்புல தான் வைப்போம் ... தெரியுமுள.
மிகவும் ரசித்தேன் உங்கள் பதிவை.

Srikandarajah கங்கைமகன் Gangaimagan said...

நமிதாவுக்கு இடை இல்லாதபடியால் இடுப்பில்தான் வைக்கணும். அடுப்பில் வைத்துபோல் கை அவிந்திருக்குமே. நீங்கள்தான் உண்மை கூறுகிறீர்கள்.

vetha (kovaikkavi) said...

''...இந்தப் புகையிரதத்தில்தான் டயானாவும் சாள்சும் கொழும்பில் இருந்து அநுராதபுரம்வரை சென்றார்கள். புகையிரதம் ஓடும்போது சடக் சடக் என்று சில்லு தண்டவாளத்தில் ஓடும் சத்தம் பிரயாணிகளுக்கக் கேட்கும். இதைக் கேட்ட டயானா சாள்சிடம் ஒரு கேள்வி கேட்டார். "நமது நாட்டில் ஓடும் புகையிரதங்களுக்கு சில்லு வட்டமாக இருக்கும்; இங்கு ஏன் சில்லு சதுரமாக இருக்கிறது" என்று. சாள்சுக்கு தலை சுற்றியது....''இது என்ன புழுகா..உண்மையா!...
வேதா.இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com-