RSS

நிலைக்கண்ணாடி 12 இன் தொடர் "கோவையில் ஒரு தமிழர் யாகசாலை"b
பக்கத்து அறையில் இருந்துவந்து பாடலை ரசித்தக்கொண்டு இருந்தநான் அடுத்து என்ன நூலை மணிவண்ணனன் கூடாக பதிவுசெய்யலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது எனது அறையின் அழைப்பு மணி அடித்தது. அப்போது கவிஞர் வைரசும் என்னுடன் கூட இருந்தார். மணிவண்ணன் வந்தால் அவரை எப்படி வரவேற்பது; காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கலாமா? கட்டித்தழுவி அன்பைப் பகிர்ந்து கொள்ளலாமா என்பதை எல்லாம் நான் சிந்திக்கத் தொடங்கினேன்.
கதவைத் திறந்ததும் ஒரு தமிழ் ஒளி. அவர்தான் மணிவண்ணன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உலகத் தமிழரின் உச்சரிப்புக்களை அவர் முகத்தில் கண்டேன். தமிழுக்கு உலகத்தில் முகவரி எழுதும் ஒரு கலைஞனைக் கண்டேன். மெல்லத் தமிழ் இனி வாழும் என்று சொன்ன தீர்க்கதரிசியைக் கண்டேன். கட்டிப்பிடித்து ஆரத்தழுவி அன்பைப் பகிர்ந்து கொண்டு அவர் காலணிகளை வெளியில்கழற்றிய பாதங்களுடன் என் அறை புகுந்தார். 
வந்ததும் எனக்காக முதலில் வாங்கிவந்த இனிப்பான பண்டங்களைக் கையில் எடுத்து கோவையின் விருந்தோம்பலை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஐயாவுக்கு எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா என்று அடிக்கடி கேட்டு தன் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். எனக்காக அவர் ஒழுங்கு செய்திருந்த நட்சத்திட விடுதியில் அன்று மாலைப் பொழுதைக் கழித்தோம். அவருக்காக நான் வாங்கிச் சென்ற எந்தவிதமான அன்பளிப்புப் பொருட்களையும் ஏற்க மறுத்துவிட்டார்.
மனிதர்களில் ஒரு மாணிக்கம் ஆகவே எனக்குத் தோற்றமளித்தார். மூச்சிலும் பேச்சிலும் தமிழைச் சுவாசிக்கும் ஒரு தமிழனை நான் பார்த்தது இதுவே முதல் தடவை என்று என் மனதிற்குள் நினைத்துப் பெருமிதம் அடைந்தேன். அன்று மாலை எனக்கான இராப்போசனத்தில் அவர் மட்டும் கலந்து கொண்டார். கோவையில் சினிமா நட்டச்திரங்கள் மட்டும் செல்லக்கூடிய ஒரு உல்லாச விடுதிக்கு என்னை அழைத்துச் சென்றார். அவர் ஒரு குருவின் உபதேசத்தால் மாமிசம் சாப்பிடுவதில்லை என்றும் தனது ஆன்மீகத் தேடல்கள் பற்றியும் தெளின விளக்கங்களை எனக்கு அளித்தார். எனது பார்வையில் அவரது செய்கைகனள் ஒரு சிறந்த மனிதனாக அதுவும் தமிழராகக் காட்சி தந்தார். என்னைவிடப் மேலான ஒரு பேராசிரியராக இருப்பவர் எனக்குத் தந்த மரியாதைகளை என் நூலுக்கான காணிக்கைகளாக நான் ஏற்றுக் கொண்டேன்.
மாலை உணவு முடிந்து திரும்பவும் விடுதிக்கு வந்ததும் என்னைத் தனியாக விட்டுச் செல்ல மனமின்றி அன்று இரவை என்னுடனேயே களித்தார். நான் அவரை கடினப்படுத்துகிறேனா என்று யோசிக்கும் அளவிற்கு அவர் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்.
நான் தங்கியிருந்த விடுதிக்கோ மற்றைய செலவுகளுக்கோ எந்தவிதமான உதவிகளையும் எதிர்பார்க்காமல் தனது உழைப்பின் சேமிப்புகளை தமிழுக்காகவே அர்ப்பணிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து முக்கிய எழுத்தூளர்களையும் தனது தொலைபேசிக்குள் தொடர்பு இலக்கங்களை வைத்துள்ளார். திரு சேரன் அவர்கள் என்னுடன் கதைப்பதற்கான ஏற்பாடுகளைத் தொலைபேசியினூடாகவே செய்யும் அளவிற்கு மற்றவர்கள் மத்தியிலும் மணிவண்ணன் அவர்கள் பெயரும் புகழுடனும் விளங்குகிறார் என்பதை உணர்ந்தேன். இரவு இரவாகத் தமிழ் கதைத்து மறுநாள் எனது ஆத்மலயம் நூல் வெளியீட்டிற்காக ஆயத்தமானோம். 
மண்டபம் நிறைந்த அறிஞர் கூட்டம்; அத்துடன் சமூக அவலங்களைத் தங்கள் இதயத்துக்குள் பதுக்கி கவிதை செதுக்கும் கவிஞர்கள் பலரும் சமூகமளித்திருந்தார்கள். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் மிகவும் சிரமத்திற்கு மத்தியிலும் மணிவண்ணன் தனது பெற்றோர்களையும் அழைத்துவந்திருந்தார். அவர்களிடம் நான் பெற்ற ஆசீர்வாதம் இந்த உலகத்தில் கிடைத்தற்கரியது ஒன்றாகவே நான் கருதுகின்றேன். எனது "ஆத்மாலயம்" நூலை சிபி ஐ .எ .எஸ் அகாதமியின் இயக்குஞர் திரு அரங்ககோபால்,தமிழ்நாடு சிற்றிதழ்கள் சங்க பொதுச்செயலர் திரு பூ ஆ ரவீந்திரன்,கவிஞர் நாணர்காடன் மற்றும் தகிதா குழுமத்தார் சிறப்பாக வெளியிட்டு வைத்தனர்.
மணிவண்ணன் எனது நூலைப்பற்றிக் குறிப்பிடுகையில் "உலகத்தில் சமாதானப் புறாக்களைத் தன் ஒவ்வொரு சொல்லிலும் பறக்கவிட்டிருக்கும் ஓர் ஆசிய ஒளி" என்று பாராட்டிதோடு மட்டும் நின்றுவிடாமல் கங்கைமகன் அவர்கள் உலகத்துற்கு ஆத்மலயம் என்ற பொக்கிசத்தை அளித்திருக்கின்றார். உலகம் இவருக்கு எதைப் பரிசளிக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்று தனது உரையை முடித்தார். 
இந்த உலகத்தில் பலர் தோன்றுகின்றார்கள். உலகம் சிலரைத் தோற்றுவிக்கின்றது. உலகம் தோற்றுவித்த ஒருவருக்கு நான் எனது ஆத்மலயம் நூலைப் பரிசளித்தேன். ஆத்மலயத்தை இவ்வாறு எழுதிவிட்டு நீங்கள் இன்னும் உங்கள் மனத்தின் புனிதத்தைப் புரிந்து கொள்ளவில்லை. உங்கள் நூலையே திருப்பி பலமுறை வாசியுங்கள் என்று நான் பரிசளித்த புத்தகத்தையே திருப்பி எனக்குப் பரிசளித்தார். அந்த ஆத்மாவின் வலிமையைப் புரிந்துகொண்ட நான் மகிழ்வுடன் அதனை ஏற்றுக்கொண்டேன்.
அவரையே என் குருவாகவும் முற்பிறவிப்பயனாக அடையப்
பெற்றேன். சிவபெருமானுக்கு முருகன் போதனைகள் செய்ததுபோல் எனது குருவானவர் என்னைவிடப் பலவயதுகள் குறைவாக இருந்தாலும் ஆன்மீக நாட்டத்திலும் ஒவ்வொரு வலிமை குன்றிய ஆன்மாக்களை வழிநடத்துவதிலும் மிகவும் அனுபவம் பெற்றவர். அவரின் வருகையின் பின்னரே நான் என்னை உணர்ந்தேன். எப்படியும் வாழலாம் என்ற எனது போக்கை மாற்றி இப்படித்தான் வாழவேண்டும் என்ற வழிகாட்டியாகவும் ஒரு தூண்டுகோலாகவும் என் உள்ளம் நிறைந்து வாழ்கின்றார். மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள். இவை முற்பிறப்பின் கர்மவிதியின்படி ஒருவருக்குக் கிடைக்கின்றது. அந்த வகையில் நான் பெருமைப்படுகின்றேன். தாரமும் குருவும் தலைவிதிப்படி என்று சொல்வார்கள். அந்த இரண்டும் எனக்கு விதியின்வழி அமைந்திருக்கின்றது. இதுதான் உலகம் தந்த பரிசு என்ற மகிழ்வில் கோவையில் இருந்து சென்னை நோக்கிப் பயணமானேன்."மனதில் உள்ளதையே பேசு, பேசியதையே செயலாய் மாற்று. தவறு செய்திருப்பினும் அதை உண்மையாய் பகிர்ந்து கொண்டால் உங்களுக்கு ஒரு தெளிவும் மன சந்தோசமும் கிடைக்கும். மீண்டும் அத்தவறை செய்ய மனம் அஞ்சும். மனதில் ரகசியம் இல்லை என்றால், எதற்கும் பயம் இல்லை. முயற்சித்து பாருங்கள், மனம் நிம்மதி பெறுவதை உணர்வீர்கள் என்று அன்போடு தட்டிக் கொடுத்த குருவை மீண்டும் மீண்டும் நினைக்கின்றேன்.  உண்மையை உரத்துச் சொல் கடவுள் உன்னைக் காப்பாற்றுவார் என்ற குருவின் போதனையில் எழுதியதுதான் நிலைக்கண்ணாடியில் நான் எழுதிய "மந்திரப்புன்னகை". எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று மணிவண்ணன் இறுதியாகச் சொன்ன வார்த்தைகளோடு என் பயணம் தொடர்கிறது. 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 Comments:

J.P Josephine Baba said...

தங்கள் பதிவை வாசித்த போது ஒரு மனிதனின் பூரணமான தேடல் கண்டேன் மகிழ்ச்சி, உண்மை,அன்பு கண்டேன்.மகிழ்ச்சிகள்.!

There was an error in this gadget
There was an error in this gadget