RSS

வலவன் ஏவா வானூர்தி.



0 R
பறத்தமிழன்; பனங்கொட்டை இது சிங்களவன் தமிழரை இயல்பாகச் சொல்லும் வார்த்தைகள். விடுவானா தமிழன் "மோட்டுச் சிங்களவன்" இது தமிழர் சிங்களவனைப் பார்த்துக் கூறும் வார்த்தை. சிங்களவன் மோடனாக நடித்ததை நம்பி முட்டாள் ஆகியவன் இலங்கைத் தமிழன். பட்டங்கள் சூட்டுவதைத் சிலர் தமது பரம்பரைப் பொக்கிசமாக நினைத்த நினைவுகளுடன் அகதியாக நாட்டைவிட்டு வெளியேறினார்கள். விமானத்தில் ஏறி மானத்தைப் பறக்கவிட்ட பெரும்பான்மைத் தமிழர்கள்தான். இன்று உலக அரங்கில் தாங்கள்தான் பிரபஞ்சத்தின் நடுப்புள்ளியில் இருந்து வந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்து ஆளுக்காள் கருத்து முரண்பட்டு பலதரப்பட்ட முகமூடிகளை அணிந்தவர்களும் தமிழர்கள்தான். முகமூடிகளைக் கழற்ற மனமின்றி முகமூடிகளையே முகமாக்கிக் கொண்டவர்களும் பெரும்பாலான தமிழர்கள்தான்.
இரண்டு பேர் சந்தித்தால் ஆங்கிலத்தில் கதைத்து இருபதுபேர் சந்தித்தால் சங்கம் அமைத்தவர்களும் தமிழர்கள் தான். ஐரோப்பாவில் 10 தமிழ் கோவில் இருந்தால் அங்கு 9 சண்டைகள் நடந்திருக்கும். 11வது கோவில் அமைப்பது 10வது கோவிலில்வரும் சண்டையைப் பொறுத்து இருக்கிறது. 

ஈழத்துமிழரின் எதிர்கால வெளிநாட்டு வாழ்க்சைச் சூழல் இப்படி இருக்கப்போகிறது என்று தெரியாத ஒரு காலகட்டத்தில்தான் இலங்கை மத்தியவங்கியில் வேலைசெய்துவிட்டு நானும் 2 வருடம் வெளிநாட்டில் உழைப்புடன் படிப்பையும் பார்க்கலாம் என்று சுவிசில் வந்து இறங்கி 29வது தமிழர் என்ற சிறப்பப் பெயரைப் பெற்றேன்.  1983ம் ஆண்டு தைமாதம் 14ம் திகதி சுவிசின் தலைநகரத்தில் தமிழர் பொங்கல்விழா ஒன்று வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன். கவிஞர் கண்ணதாசன் கூறியதுபோல "கடல்கடந்தான் தமிழன் கற்பூரதீபம் கண்டான் இறைவன்" என்றதுபோல் கடவுளுக்கு படைத்து கற்பூரதீபம் காட்டி புக்கையும் சாப்பிடத் தந்தார்கள் சாப்பிட்டேன். பிரசாதம் சாப்பிட்டவர்கள் உண்டியலில் காசுபோடவேண்டும் என்று ஒரு அறிவித்தலும் பிரசாதம் பரிமாறியபின் சபைநடுவில் வைக்கப்பட்டது. அப்போதுதான் அந்த அகதிமுகாமில் பலநாட்டு மக்கள் இருப்பதைப் பார்த்தேன். ஒவ்வொரு நாட்டுக்காரருக்கு ஒவ்வொரு பட்டப்பெயர் சூட்டி அழைத்தார்கள்.

சீனா வியட்னாம் தாய்லாந்து போன்ற மக்களை "சப்பட்டை" என்று அழைத்தார்கள். ஆபிரிக்காக் கண்டத்து அனைத்து மக்களையும் "கானா" காரன் என்று அழைத்தார்கள். ஈரான் ஈராக் போன்ற இடத்தில் இருந்து வந்தவர்களை "எண்ணைக்காரன்" என்று அழைத்தார்கள். ஆனால் தமிழர்களைப் பார்த்து சுவிற்சலாந்து மக்கள் "கப்புசீனோ" என்று அழைப்பது அப்போது பலருக்குத் தெரியாமல் இருந்தது. 
நான் லண்டன் செல்லும் விமானத்திற்குள் இருக்கின்றேன். டென்மார்க்கில் இருந்து விமானம் புறப்பட்டது. பிரயாணிகளாக அகதித்தமிழன் கொடுத்த பட்டத்தை உடையவர்களே காணப்பட்டார்கள். செக்கின் முடித்து பிரயாணிகள் தங்கள் விமானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். நானும் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டேன். அந்த அறையே நடுங்குவதுபோல் ஒரு மனிதன் வந்தான். மிகவும் பயந்துவிட்டேன். இவன் எனக்குப் பக்கத்தில் இருக்கக்கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டேன்.கடவுளும் எனக்கு "யாம் இருக்கப் பயம் ஏன்" என்பதுபோல் வேறு இடத்தில் அவனை விமானத்துள் உட்காரவைத்தார்.
ryanair என்ற விமானம் மேலெழுந்து சென்ற சற்று நிமிடத்தில் பக்கத்தில் இருப்பவரைத் திரும்பிப் பார்த்தேன். அவரது பற்கள் மிகவும் அழகாக இருந்தன.  அவர் ஒரு "கானா" காரன். மிகவும் ரசித்து ரசித்து வேப்பம் குச்சியால் பல் துலக்கிக்கொண்டு இருந்தார். நான் அவரை ஒரு புகைப்படம் வேப்பம் குச்சியுடன் எடுத்துவிடவேண்டும் என்பதற்காக அவருடன் கதைத்தேன். அவரது பெயர் முகமட். சோமலியாவில் இருந்துவந்து டென்மார்க்கில் குடியேறி தனது உறவினரைப் பார்க்க லண்டன் செல்கிறார். தரையிறங்கும் அறிவித்துல் தரப்பட்டதும் முகிலுக்குமேல் வெளிச்சத்தில் பறந்து முகிலுக்குக் கிழே வந்ததும் உலகம் இருண்டுவிட்டதுபோல் பனிப்புகார் தென்பட்டது. முகமட் என்னைப்பார்த்து "ஏன் மேலே வெளிச்சமாகவும் கீழே இருளாகவும் இருக்கிறது தெரியுமா என்று கேட்டார். ஒருவிடையத்திற்கு பிழையான பதில் சொல்லும்போது நமக்கு இரண்டுவிடையங்கள் தெரியாது என்பதை நாம் காட்டிக்கொடுக்கிறோம். அதனால் தெரியாது என்று கூறிவிட்டேன். முகமட் "மேலே இறைவனும் கீழே சாத்தானும் இருப்பதால் இந்த நிலை" என்று பதிலளித்தார். முகிலுக்குக் கீழேவந்த விமானம் தரையில் ஓடத்தொடங்கியதும் ஓட்டுனர் இல்லாத விமானமா என்று கேட்கத் தோன்றியது. மிகவும் மெதுவாகத் தரையில் இறக்கினார் விமானி. பயத்தில் இருந்த சில பிரயாணிகள் தங்கள் கைகளைத்தட்டிப் பயத்தைப் போக்கிக்கொண்டனர். 
அப்போதான் எனக்குச் சங்ககாலப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்று (புறநானூறு பாடல் 27. பாடியவர் உறையூர் முதுகண்ணன் சாத்துனார்) ஞாபகம் வந்தது. "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானூர்தி எய்துப என்ப!. எந்தை சேட்சென்னி; நலங்கிள்ளி" இந்த வரிகளின் கருத்து என்னவென்றால் நளங்கிள்ளி என்ற அரசனுக்கு அதாவது வலவன் என்னும் ஓட்டுபவன் இல்லாமலே வானில் பறந்திடும் விமானத்தில் செல்லும் வாய்புகள் கிடைத்தவர்களுக்கு வாழ்வின் உயர்வு அந்த வானத்தின் உயர்வுபோல் வந்துவிடும் என்பதாகும்.
2000 ஆண்டுகளுக்கு முதலே இவ்வாறான விமானி இல்லாத விமானம் பறந்ததா? இல்லாவிட்டால் புலவரின் கற்பனையில் ஓட்டுனர் இல்லாதவிமானம் பிரயாணிகளை ஏற்றிச் சென்றது எப்படி. அப்துல்கலாமின் கனவுகளுக்கு இந்தப் புலவர்தான் முன்னோடியா? இன்னும் பிரயாணிகளை ஏற்றிச்செல்ல ஓட்டுனர் இல்லாத விமானங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. சிந்தனையில் இருந்த என்னைத் தட்டி முகமட் உங்களுக்கும் ஒரு வேப்பம் குச்சி தரவா என்று கேட்டார். நாங்கள் சிறியவயதில் இருந்தே கோபால் பற்பொடியைத்தான் தீட்டியதுபோக திண்டது மிச்சம் என்று சொல்லப் பார்த்தேன். ஆனால் ஒரு சிரிப்புடன் விடைபெற்றுவிட்டேன். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: