RSS

ஒரு தபால்காரன்.



பக்கத்து வீட்டில் ஒரே சத்தம். அது ஒரு வெள்ளைக்கார வீடு. அங்கு ஒருதாய்; ஒரு தகப்பன்; 3 பிள்ளைகள்; ஒரு நாய் போன்ற உயிர்கள் வாழும் சிறிய வீடு. இடைக்கிடை இசை வாத்தியங்கள்.  பின்னர் வெளியில் நின்று சிகரட் பிடிப்பவர்களின் புகை வாசம்.  நான் பாடசாலையிக்குப் பக்கத்தில் நிற்பது போல் ஒரு சத்தம்.  உலகத்தில் பல நாட்டுப் பாடசாலைகளுக்குப் பக்கத்தில் நான் நின்று கேட்டிருக்கிறேன் எல்லா இடத்திலும் ஒரே சத்தம் தான். மொழி அதற்கு ஒரு தடை இல்லை.  பின்னர் பல்கலைக்கழக நூல் நிலையத்தில் தோன்றுவதுபோல் ஒரு மயான அமைதி அந்த வீட்டில். மழை நீரில் குமிழி விழுந்து வெடிப்பது போல் பல சத்தங்கள். எனக்கு வெளியில் சென்று வந்த களைப்பு. அதைவிட மீசையில் பனி உறையும் குளிர் வேறு. ஒரு கிலோ சீனிவாங்கப் போவதற்கு 25 கிலோ உடையணியும் கடும் வின்ரர். தொலைக்காட்சியைத் தட்டிப் பார்த்தேன். vijai தொலைகாட்சியில் கள்ளச் சாமிகளைப்பற்றி ஒரு தொடர். கலைஞர் தொலைக்காட்சியைப் பார்த்தேன். அதில் அடுத்த பிரபுதேவா யார் என்ற ஒரு போட்டி நடனம். தீபம் தொலைக்காட்சியை தட்டினேன். அதில் ராசிபலன் பற்றி ஒருவர் எல்லா ராசிகளுக்கும் பலன் சொல்லிக்கொண்டிருந்தார். அது எனக்குக் கொஞ்சம் பிடித்திருந்தது. எனது ராசிபலனைப் பார்ப்பதற்காக உட்காந்தேன்.  பலன் சொல்பவர் இப்போது இடப ராசியில் நிற்கிறார். நான் கடைசி மீனராசி. மீனராசியில் பிறப்பவர்களுக்கு இது கடைசிப் பிறப்பு என்று எங்கேயோ வாசித்திருக்கிறேன்.  அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.  பொறுத்துப் பார்ப்பதாக முடிவு எடுத்துவிட்டேன். 30 நிமிடம் சென்றுவிட்டது. அதற்கிடையில் 9 விளம்பரம் வந்து போய்விட்டது.  2 மாதங்களுக்கு முன் நடைபெற்ற மலிவு விற்பனை விளம்பரமும் அதில் வந்து போனது.  ராசி பலன் சொல்பவர் துலாம் ராசிக்கு பலன் சொன்னதும் மீதி பலன்கள் மறுநாள் இதேநேரம் ஒளிபரப்பப்படும் என்ற அறிவித்தலுடன் காட்சி மாறியது. மாதாமாதம் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்குக் கட்டும் பணத்தின் கணக்கை மட்டும் மனதிற்குள் பார்த்துவிட்டு; பக்கத்துவீட்டு சத்தங்களே பரவாயில்லை என்பதுபோல் இருந்தது.  எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும். தமிழ்த் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்கள் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு வருகிறார்கள். பெண்களை மட்டும் ஏன் 16 முழ சேலை கட்டச்சொல்லி நிர்வாகிகள் பணிக்கிறார்கள்.  இது சம்பந்தமாக ஒரு ஐரோப்பாவில் இயங்கும் தொலைக்காட்சி நிறுவனத்துடன் கதைத்துபோது "வேட்டி சட்டை சால்வையில் வந்தால் நாட்டான்; காட்டான் மாதிரி இருக்கும் என்று பதில் அளித்தார். அப்போ பெண்கள் நாட்டுக் கட்டைகளோ என்று கேட்டேன்.  "உங்களைமாதிரி அரைவேக்காடுகளுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை" என்று விட்டு தொலைபேசியைத் தானாகத் துண்டித்துவிட்டார்.  இவர்தான் ஒருமுறை சிறுவருக்கான தொலைபேசி உரையாடல் நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் "கிளி" க்கு "ளி" என்ற எழுத்தா "ழி" என்ற எழுத்தா வரும் என்று கேட்க; இரண்டில் நீங்கள் எது வேண்டும் என்றாலும் போடலாம் என்று பதில் அளித்துவர். 

இப்போது பக்கத்து வீட்டில் ஒரு சத்தமும் இல்லை. ஒரு புல்லாங்குழல் இசைமட்டும் இதமாக வந்து கொண்டிருந்தது. ஒரு மூங்கில் மரத்தை முழுதாகச் சாப்பிடும் அளவு நேரம் இசை ஒலித்தது. அதில் மக்கல் யக்சனின்; விட்னிகூsடன்; ரினாரேணர்; யெனிபர்றs; லயணல்றிச்; மடோனா; சப்றீனா சமந்தாபொக்s,  போன்றவர்களின் ஆங்கிலப் பாடல்களை ஒருவர் வாசித்துக்கொண்டிருந்தார். நானும் புல்லாங்குழல் பழகினால் என்ன என்ற உத்வேகம் எனக்கு வந்தது. விடிந்ததும் பக்கத்து வீட்டு பெரிய மகன் வெளியில் தகப்பனின் காரில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றிக்கொண்டிருந்தான். நானும் எனது காரில் உறைந்தபனிப் படலங்களை அதற்குறிய கருவிகளால் அகற்றிக்கொண்டு இருந்தேன். தெருவெலலாம பனியால் மூடப்பட்டிருந்தது. அதில்தான் எனது பயணம் தொடங்கப்போகிறது. "பனி படர்ந்த பாதையில் பயணம் ஏது" என்று பாடிய கண்ணதாசனையும் அழைத்துச் செல்லவேண்டும்போல் எனக்கு ஆசையாக இருந்தது.
இருவரும் பக்கத்தில் பக்கத்தில் நிற்கிறோம் .  அவன் ஒன்றும் கதைப்பதாக இல்லை. சூரியனை நல்ல விலைக்கு விற்று விட்டதுபோல் பூமியில் காலை 9 மணியாகியும் வெளிச்சம் வரவில்லை.  டென்மார்க் என்பதை "இருள்சூழ்ந்த பனிநாடு" என்று வெள்ளைக்காரர் பெருமையாகச் சொல்வார்கள். நானே அவனிடம் சென்று இரவு நீ நன்றாகப் குல்லாங்குழல் வாசித்தாய் அதைக் கேட்டுக்கொண்டு இருந்தேன் என்றேன்.  வெள்ளைகள் சிரித்தால் கடைக்கண் கன்னங்கள் சுருங்கும். அப்படி இவனும் சிரித்தான். எனக்கு ஏன் சிரிக்கிறான் என்று விளங்கவில்லை. பாசையைப் பிழையாகக் கதைத்ததாக நான் நினைத்தேன். அவன் கூறினான். அது நான் வாசிக்கவில்லை. ஒரு தமிழ் இந்திய புல்லாங்குழல் வித்துவான் ஆங்கிலப் பாடல்களை புல்லாங்குழலில் அமரிக்காவில் வாசித்த வீடியோவைப் பார்த்தேன் என்று பதில் கூறினான். எனக்கு இடத்தைக் காலிபண்ண வேண்டும் போல் இருந்தது. இருந்தாலும் பனிதட்டி முடியவில்லை. அவனது தாயார் இன்னும் தட்டி முடியவில்லையா? வேலைக்கு நேரமாகிறது என்ற ஒலியுடன் ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக்கொண்டு வெளியில் வந்தார்.   இவன் கிளம்பும்போது தாயார் பத்திக்கொண்டிருந்த அரைவாசிச் சிகரட்டை வாங்கிப் பத்திக்கொண்டு வாகனத்தை start பண்ணினான். உங்கள் மகன் எங்கு வேலை செய்கிறார் என்று கேட்டேன். அவள் "இவர் எனது மகன் இல்லை; எனது புதிய புருசனின் மகன்" என்றாள். நான் விளங்கிக்கொண்டேன்.  தபால் அலுவலகத்தில் வேலை செய்வதாகவும் குறிப்பிட்டாள். 

தபால் அலுவுலகம் என்றதும் எனக்கும் ஒரு அனுபவம் உண்டு . சாதாரண 10ம் தரம் படித்துவிட்டு பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கும் காலத்தில்-. எனக்கு 17 வயது இருக்கும். கிராமத்து தபாலகத்தில் தந்தி கொடுக்கும் வேலை கிடைத்தது.  இப்படியே வேலை செய்து செய்து post master ஆகிவிடலாம் என்று நினைத்தன். நாள் முழுவதும் அலுவலகத்தில் இருந்தேன். ஒரு தந்தியும் வரவில்லை.  post master க்கு கடைக்குப்போய் சாமான் வாங்கி கொடுத்ததும்; இன்னுமொருவருக்கு மதிய சாப்பாடு அவரது வீட்டுக்குச் சென்று எடுத்து வந்து கொடுத்ததும் தான் மாலை 4 மணிவரை பார்த்து வேலை. ஆபீசு முடியும் தரவாயில் ஒரு தந்திவந்தது. எங்கள் கிராமத்தில் ஆதிகாலத்தவர் முத்துக்கள் குளித்தனராம். இப்போ அதே பரம்பரை சங்கு குளிக்கிறது. (கடலில் சங்கு எடுத்துல்) அப்படி சங்கு குளிக்கச் சென்றவர் ஒரு வலமபுரிச்சங்கொன்றை எடுத்துவிட்டார். அது மிகவும் பெறுமதிகூடியது. அநத மகிழ்ச்சியை வீட்டுக்கு தந்தி மூலம் தெரிவிக்கிறார். குறிப்பிட்ட விலாசத்திற்கு கொண்டு செல்கிறன். என்னைக் கண்டதும் தந்தி என்றேன். சங்கு குளிக்கச் செசன்றவர் ஒருவர் கடலோடு போய் விட்டார் என்பதுதான் தந்தி என்று நினைத்து சிலர் அழத் தொடங்கி விட்டார்கள். குறிப்பிட்ட நபரக்கு தந்தியை கொடுத்தேன். உடைதது வாசிக்கச் சொன்னார். அவரது மகன் தங்கராசா வலம்புரிச்சங்கை எடுத்திருப்பதாக வாசித்து காட்டினன். மிகவும் மகிழ்நதார்கள். என்னை கட்டி தழுவினார்கள். "தம்பிக்கு ஒரு 5 ரூபா கொடுத்து விடடி என்று தன் மனைவியையும் அதட்டினார். நான் வேண்டாம் என்றேன். தம்பி அப்பசரி நாளை நல்ல மீன் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுக்கிறேன் என்று சொன்னார்.  மிகவும் பாராட்டி வழியில் அரைவாசி தூரம்வரை வந்து சந்தோசம் அடைந்தார்கள். கடமையைச் செய்த சந்தோசம் எனக்கும் ஏற்பட்டது. 

மறுநாள் நான் வேலைக்குச் சென்றேன். அதிகாலையிலேயே அதே விலாசத்திற்கு ஒரு தநதி ஒட்டப்பட்டு இருந்தது. கொண்டு சென்றேன். மக்கள் அயலவர் குவிந்து விட்டார்கள். யார் வலம்பரிச்சங்கு எடுத்தார்கள் என்று அறிய அவா. தங்கராசாவின் தாயாரும் நின்றார். தந்தியை உடைத்தேன். "தங்கராசா மரணம்; பந்தல் போடவும் மாலைக்குள் கொண்டு வருகிறோம் என்று இருந்தது. 

என்னைச் சுற்றி ஒரு மரண ஓலம். நேற்று என்னை வாழ்த்திய அதே ஆட்கள் "பாழ்பட்டுப் போடுவான் விடிய விடிய வந்தானே; பிள்ளையை கொல்லிப் போட்ட அறிவித்தலோட வந்தானே; நீயும் ஒரு தாய் பெத்து பிள்ளைதானே; நீ உருப்படுவாயா" என்றெல்லாம் திட்டினார்கள்.  எனக்கும் கவலை வந்தது. நான் என் கடமையைச் செய்தேன்.  பலன் ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை என்ற துணிவு எனக்கு ஏற்பட்டது.  ஆனால் நான் சாதாரண ஒரு தபாற்காரனாக என் கடமையைத்தான் செய்தேன். இந்தத் தத்துவத்தையே கீதையில் கண்ணன் அருச்சுனனுக்கும் உபதேசம் செய்கின்றார். கடமையைச் செய்யுங்கள் பலனை எதிர்பார்க்காதீர்கள். நம்மில் சிலர் பலனை எதிர்பாராதே என்பதை அதனால் வரும் இலாபம் என்று பிழையாக விளங்கிவிடுகிறார்கள். பனி தட்டிய என் கார் பிரதான தெருவை அடைந்தது. எனக்கு முதல் வெளிக்கிட்ட பக்கத்து வீட்டு பொடியன் பனியில் சில்லு வழுக்கி ஒரு மரத்துடன் மோதியபடி அவரது கார் நின்றதைக் கண்டேன். எனக்கு அடுத்த மரம் தயாராக இருப்பதுபோல் தெரிந்தது. கவனமாக ஓடுகிறேன். மரம் கழிந்துவிட்டது. இனி நேர் பாதைதான். சென்று வருகிறேன். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: