மனித வாழ்வியலை அகவாழ்வு புறவாழ்வு என இருவகைப்படுத்திச் சைவ நூல்கள் கூறுகின்றன. சங்ககாலத்திலேயே இவ்விரு ஒழுக்கங்களும் தமிழர் மத்தியில் தோற்றம்பெற்று ஐவகை நிலங்களுக்கும் தனித்தனி ஒழுக்கங்களாக வகுக்கப்பெற்றுத் தமிழர் வாழ்க்கை நெறியாகக் கொண்டிருந்தமையை அக்காலத்தில் எழுந்த எட்டுத்தொகை; பத்துப்பாட்டு; நூல்களினூடாக அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அக ஒழுக்கத்தினை அகத்திணை என்றும் புற ஒழுக்கத்தினைப் புறத்திணை என்றும் அமைத்தனர்.(வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே (தொல்காப்பி)
உலகியல் நடைமுறையை வழக்கு என்கின்றோம். பண்பாடு இல்லாதவருடைய பழக்கவழக்கங்களை உலகத்தார் வழக்கு என்று கருதுவதில்லை. உயர்ந்தவர்களது நெறிமுறைகளே வழக்கு என்று போற்றப்படுகின்றன. பெரியவர்களது பழக்கமே மக்களிடையே வழக்கமாகி பின்னர் அதுவே மக்களால் நடைமுறைப்படுத்தப் படுகின்றன. எனவே இந்த அகம் புறம் என்னும் இருவகை ஒழுக்கமும் உயிரினும் மேலாக ஓம்பப்படும் என்பதைத் திருவள்ளுவர்
"ஒழுக்கம் விழுப்பம் தரலான்; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்(குறள்) என்று குறிப்பிடுகின்றார்.
ஒழுக்கம் என்பது வாழ்வின் எல்லாத் துறைகளுக்குள்ளும் இருந்தபோதிலும் சிறப்பாக அகத்துறையில் குடும்ப வாழ்க்கையில் நெறியோடு வாழ்வதையே ஒழுக்கம் எனக்கொள்ளப்படுகின்றது. ஒருவனை ஒழுக்கம் கெட்டவன் என்றால் அது புறத்திணை ஒழுக்கத்தைக் குறிக்காது அகவியல் அதாவது குடும்ப வாழ்வில் கெட்டவன் என்ற பொருளையே உலகில் குறித்து நிற்பதைக் காணலாம்.
ஆண்களின் அகவாழ்வு நெறியை ஒழுக்கம் என்றும் பெண்களின் அகவாழ்வு நெறியைக் கற்பு என்றும் தமிழர் பண்பாடு நமக்கு அறிவிக்கின்றது. கற்பு என்பது கற்றலையும் கற்பித்தவழி நிற்றலையுமே குறிக்கின்றது. பெண்கள்; பெற்றோரும் ஆசிரியர்களும் கற்பித்தவழி நிற்றலையே போற்றி வாழ்ந்துள்ளனர். கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை என்று மேற்குறிப்பிட்ட கருத்தைக் கொன்றைவேந்ததன் 14ம் வரி விளக்ககின்றது.
கற்பு என்ற சொல் பெண்ணியல் கற்பு என்ற பொருளிலும் கற்றல் என்ற பொருளிலும் சங்க இலக்கியங்களிலும் திருமுறை இலக்கியங்களிலும் வருவதைக் காணலாம். ஞானசம்பந்தரை வெப்பு நோய் வாதத்திற்கு அழைத்தபோது
"மண்ணகத்திலும் வானிலும் எங்கும்; திண்ணகத்திரு வாலவாயானருள்; பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்; தெண்ணர் கற்பழிக்கத்திருவுளமே(தி 3. ப 47. பா 3) என்று பாடினார்.
இங்கு கற்பு என்பது சமணர் கற்ற கல்வியின் நேர்மை இல்லாத செயலை அழிக்க இறைவன் திருவுள்ளம் செய்யவேண்டும் என்பதையே விளங்கப்படுத்துகின்றது. இந்த இடத்தில் இது மகளிரது ஒழுக்க நெறி என்று கொள்ளல் ஆகாது. சம்பந்தர் தமது இன்னுமொரு பாடலில் மகளிர் கற்பைப்பற்றியும் போற்றுகிறார்.
"மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து; மாயவர வன்றுரிசெய் மைந்துனிட மென்பர்;
பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லிப் ; பாவையர்கள் கற்பொடுபொலிந்த பழுவூரே"
(தி2.ப34.பா6)
இப்பாடலில் பூவை என்னும் நாகணவாய்ப் பறவைக்கு இறைவனது புகழைக் கற்பிக்கும் பாவையர்கள் கற்புடன் திகழ்ந்த பழுவூர் என; கற்பு என்பது கற்றலுக்கும் கமளிர் கற்புக்கும் பொருந்தி இரண்டு நிலைகளையும் விளங்க வைக்கிறது.
"சிவபோகசாரம்" என்னும் நூலில் கற்பிலர் என்று வரும் கூற்று கல்லாதவரையும் கற்பொழுக்கம் இல்லாதவரையும் சுட்டி வருதலைக் காணலாம்.
"நீதியிலா மன்னன் ராச்சியமும்; நெற்றியிலு பூதியிலார் செய் தவமும்; சோதி கழல் அறியா ஆசானும்; கற்பிலரும் சுத்த விழல் எனவே நீத்துவிடு" (சிவபோகசாரம் பா 130)
கற்பு என்பது பெண்களுக்கு உரிய ஒழுக்கம் என்ற தொனிப்பிலும் கற்றல் என்ற தொனிப்பிலும் இலக்கியங்களில் கூறினாலும் திருவள்ளுவர் கற்புஎன்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய ஒழுக்கமாகவே கொள்கிறார்.
"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும் திண்மை உண்டாக்கப் பெறின்" (குறள் 54)
என்று பெண்ணிற்கான ஒழுக்கத்தையும் ;
"ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு" (குறள் 974)
என்று ஆண்களுக்கான ஒழுக்கத்தையும் கற்பு என்றே குறிப்பிடுகினறார்.
12 Comments:
பல பொருள் குறிக்கும் ஒரு சொல் என்னும் பதத்தினுள் கற்பு என்னும் சொல் நிற்பதனை சங்கப்பாடல்கள் மூலமும் வள்ளுவர் வாய்ச்சொல் மூலமும் எடுத்துக்காட்டிய பண்பு போற்றத்தக்கது . மனிதன் தவறுகள் இழைக்கும்போதுதான் நற்தமிழ் நூல்கள் தோன்றின . அதுபோல் இப்போதும் நல்வழி வாக்குண்டாம் போன்றவை தோன்ற வேண்டியுள்ளது. ஆய்வு சிறப்பு. தொடருங்கள். இவ்வாறான பதிவுகளை விரும்பி நான் ரசிப்பேன் .வாழ்த்துகள்
Discovery Book Palace · Govt Art College kirushnagiri / Madras University
நல்ல பகிர்வு. சில பல சந்தேகங்களை போக்கியுள்ளீர்கள்! நன்றி!
சிவ மேனகை அற நெறி அறிதலும் ,,தவறுகள் களைதலும் ,,கற்று அறிந்தவர்களுக்கு இலகுவாகும்,,,
கற்ற நெறி கல்வியை மற்றவர்க்கு வழங்குதல் மாண்புடை மாந்தர்க்கு வரமாகும் ,,, ,,,
கற்று உளம் கொண்டவர் கற்புடை மாந்தராய் வாழ்வதே நிறை வாகும் ,,,,,,,,,,,,
,,,இலக்கியத்தின் உள்ளரங்கங்களை இலகு நடையில் எமக்கு அறிய வைத்த கங்கைக்கு ,,நன்றியுடன் வாழ்த்துக்கள் ,,,,,,,
Seeralan Vee இலகுவில் லயிக்கப்படும் போதுதான் இலக்கியம் இனிமைபெறும்....
November 11 at 8:20pm · Like · 3
Subi Narendran கற்பு என்றால் என்ன என்பதை மிக அழகாய் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். இல்லக்கியமாக படித்திருந்தால் சிதம்பர சக்கரம்தான். நீங்கள் லேசாக விளங்கும் படி எழுதி இருக்கிறீர்கள். அருமையான ஆக்கம். நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன். நன்றி. நீங்களும் உங்கள் தமிழும் வாழ வாழ்த்துக்கள்.
Lingam Nagalingam கற்பு: கலாச்சாரம் - பண்பாடு – ஒழுக்கம்
“மறந்து கொண்டே இருப்பது
மக்களின் இயல்பு
நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
இருப்பது கங்கைமகன் கடமை"
November 11 at 11:17pm · Like · 2
Chandran Tharmadevi "நீதியிலா மன்னன் ராச்சியமும்; நெற்றியிலு பூதியிலார் செய் தவமும்; சோதி கழல் அறியா ஆசானும்; கற்பிலரும் சுத்த விழல் எனவே நீத்துவிடு" (சிவபோகசாரம் பா 130)அருமை!!!
கற்பு என்பது பெண்களுக்கு உரிய ஒழுக்கம் என்ற தொனிப்பிலும் கற்றல் என்ற தொனிப்பிலும் இலக்கியங்களில் கூறினாலும் திருவள்ளுவர் கற்பு என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய ஒழுக்கமாகவே கொள்கிறார்.
,,,கற்பு என்றால் என்ன என்பதை மிக அழகாய் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!!!!
ந. பத்மநாதன் அப்போ வெள்ளைக் காரப் பெண்கள் கற்ற்புள்லவர்கள தான் ..படித்து தனக்குப் பிடித்தவ்னுடன் ஒழுக்கமாக வாழ்தலும் , பிடிக்காவிட்டால் நேராக விலகிச் சென்று இன்னொருவருடன் வாழ்வதும் கற்ற்புத் தான் ... புதிதான வரைவிலக்கணம்... அறியாத சொற்கள் ..வழமை போல் கலக்கல் தான் ..வாழ்த்துக்கள் ...
Sanjayan Selvamanickam திருமணத்தற்கு முன்னான உடல் உறவுகள் (இயற்கைப் புணர்ச்சி) பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எமது முன்னோர்கள் மத்தியில் இருந்திருக்கிறது என்பதை இந்த குறுந்தொகைப் பாடல் கூறுகிறது. . யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
செம்புலப்பெயல் நீரார். (குறுந்தொகை-40)
இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தன்னைப் பிரிந்துவிடுவான் எனத் தலைவியின் மனம் அஞ்சுகிறது. அதனைக் குறிப்பால் உணர்ந்த தலைவன் அவளை ஆற்றுவிப்பதாக இப்பாடல் அமைகிறது.
குடிப்பிறப்பு, உறவுநிலை, செல்வநிலை, உயர்வு தாழ்வு, பார்த்து வருவதில்லை காதல்.என்பதைத் தலைவன் தலைவிக்கு அறிவுறுத்துகிறான்.
என் தாயும் உன் தாயும் எவ்விதம் உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவுடையவர்? நானும் நீயும் எக்குடிவழிச் சார்புடையவர்கள்? செம்மண் நிலத்தில் வீழ்ந்த மழைத்துளி போல அன்புடைய நம் நெஞ்சங்கள் ஒன்றாகக் கலந்தன.
இப்பாடலில் செம்புலத்தில் வீழ்ந்த நீர்போல என்ற உவமையே இப்புலவருக்கும் பெயராயிற்று.
சங்க இலக்கியத்துள் அதிகமாக எடுத்தாளப்பட்ட பாடல்களுள் குறிப்பிடத்தக்கது இப்பாடல். இப்பாடலில் உள்ள எளிமை, பொதுமை, உவமை ஆகிய பொதுக்கூறுகள் இப்பாடலை காலத்தை வென்ற பாடலாக்கியுள்ளன. .....................................................................................கடந்த 06.11.11 Oslo இல நடைபெற்ற இலக்கியப்பூங்காவில் பேராசிரியர் ரகுபதி அவர்களின் உரையில் இருந்து நான் அறிந்து கொண்டது இது தான்.
Kumaresan Raja அக வாழ்வில் கூட , களவியல், கற்பியல் என்று இரு கூறுகளாக ஆண்-பெண் உறவுகளை வகைப் படுத்தியவர்கள் நம் முன்னோர்கள். முறையான திருமணம் ( வள்ளி கந்தன் திருமணம்) , கந்தர்வ திருமணம் ( சிவபெருமான் , தக்ஷன் மகளை தள்ளிக் கொண்டு போனது), என நவீனத்துவத்தின் அனைத்து வடிவங்களும் நம்மில் இருந்தததற்கு அனேக சான்றுகள் உள்ளன. பல மனைவியரைக் கொண்ட கடவுள்களும் இங்கு உண்டு ( நம் சிவ பெருமானே சாட்சி), ஒரு மனைவி கொண்ட கடவுள்களும் உண்டு (இராமன்). மணமான பெண்ணை விரும்பிய ஆணுக்கும் இங்கு அங்கீகாரம் இருந்திருக்கிறது ( தாருகாவன திருவிளையாடல்), மணமான ஆணை விரும்பிய பெண்ணும் போற்றபட்டிருக்கிறாள் ( ராதை - கிருஷனரின் ராதை மாற்றான் மனைவி), பல பெண்களுடன் ஒரு ஆண் ( கிருஷ்ண பரமாத்மா) , ஐந்து ஆண்களுடன் ஒரு பெண் ( திரவுபதை) என இந்து சமயமும் அதனை விரிவு செய்கிறது. ஆனால் இடைக் காலத்தில் , கற்பு என்பது ஏதோ பெண்ணுக்கு மட்டும் ஆனது போல ஒரு சித்தரிப்பு எப்படி ஏற்பட்டது என்பது இன்னும் ஆய்வில் உள்ளது. நவீன காலத்தில் , பாரதி ஒருவன் தான் " கற்பு என்பதை பொதுவில் வைப்போம்" என்று முழங்கியவன்.
Kumaresan Raja வணக்கம்! தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா. தங்கள் தகவலை நான் இன்னுமொரு கதை எழுதும்போது உபயோகப்படுத்துவேன். வாழ்க தமிழுடன்.
வணக்கம் நண்பா சஞ்சயன். வெளியில் இல்லாவிட்டாலும் உள்ளே இருப்பதெல்லாம் பொருள். ஐயா இதைத்தான் 1977 உயர்தரப் பரீட்சைக்கு எழுதி வாத்தியாரிடம் நல்ல மதிப்பு பெற்றனான். உங்கள் அறிதல் அனுபவம் மிகவும் தெளிவானது. சமூகம் அவ்வாறு சீரழிந்து இருந்த நிலையைக் கண்டு இவ்வாறான கற்பியல் கருத்துக்கள் தோன்றவும் காரணமாக இருந்திருக்கலாம். சங்ககாலத்தில் காதலன் காதலி அப்படி இப்படி நடந்து கொண்டார்கள் என்பது உண்மை. அதைத்தான் திருமணத்திற்கு முன் உள்ளதை களவியல் என்றும் பின்னுள்ளதைக் கற்பியல் என்றும் வகுத்தார்கள். களவியலும் கற்பியலும் ஒருவருடனே இருக்கவேண்டும் என்பதை இலக்கியம் உணர்த்தியது. நம்மசனம் எதையும் சரியாகச் செய்திருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருக்கிறது என்பதுதான் உண்மை. வாழ்த்துக்கள்.
Kumaresan Raja வலியுறுத்தப் பட்டதென்னவோ ஒருவனுக்கு ஒருத்தி...ஆனால் இதை கண்காணிக்கும் சான்றோர்கள் ஒருவரும் இதை கடைபிடிக்கவில்லை... ஒரு தாசி, தன மகளுக்கு சொல்வதான பாடலில், " மகளே, இந்த புலவனுங்க உன்னிடம் வருவானுங்க, அவனுககிட்ட காசு இருக்காது, அதற்காக அவர்களை வெளியே தள்ளிவிடாதே, அவர்கள் மனம் குளிர்ந்தால் உன்னைப் பற்றி பாடல் எழுதுவார்கள்...அது காலத்திற்கும் நிற்கும் " என குறிப்பிடப் பட்டிருக்கிறது. அத்துடன், அரசரின் அந்தபுரம் என்றால் அது ஒரு சின்ன வீடுகளின் மல்டிப்ளெக்ஸ் என்பது துணிபு. சமகாலத்தில், அதாவது 1950,60,70 களில் வந்த திரைபடங்களில் " தாலி, கற்பு, ஒருவனுக்கு ஒருவன், ஒருவர் வாழும் ஆலயம் என்றெல்லாம் நடித்த நடிக-நடிகையர் நிஜ வாழ்வில் பலமுறை காதலித்தவர்களே!!!
Gowry Sivapalan பல பொருள் குறிக்கும் ஒரு சொல் என்னும் பதத்தினுள் கற்பு என்னும் சொல் நிற்பதனை சங்கப்பாடல்கள் மூலமும் வள்ளுவர் வாய்ச்சொல் மூலமும் எடுத்துக்காட்டிய பண்பு போற்றத்தக்கது . மனிதன் தவறுகள் இழைக்கும்போதுதான் நற்தமிழ் நூல்கள் தோன்றின . அதுபோல் இப்போதும் நல்வழி வாக்குண்டாம் போன்றவை தோன்ற வேண்டியுள்ளது. ஆய்வு சிறப்பு. தொடருங்கள். இவ்வாறான பதிவுகளை விரும்பி நான் ரசிப்பேன் .வாழ்த்துகள்
Post a Comment