RSS

அறம் செய்ய விரும்பு


இந்த நாட்டில் வெளிய போய்விட்டு வீட்டுக்கு வந்தால் உடுப்பு களற்றி வீட்டு உடுப்பு போடவே மனம் இல்லை. அவளவு குளிர். குளிர் உடம்பை பக்கென்று அணைத்துக் கொள்ளும். இதனால்தான் கவிஞர் கண்ணதாசன் காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடலில் "பனிபோல் அணைப்பதில் கன்னி" என்று அனுபவப்பட்டு எழுதினாரோ என எண்ணத்தோன்றுகிறது. எனது கண்ணாடியை களற்றிவைத்த இடத்தில் காணவில்லை. தேடிப்பார்க்கிறேன். தொலைந்த தொலைபேசியைத் தேட இன்னுமொரு தொலைபேசி தேவைப்படுவதுபோல் கண்ணாடியைத் தேட இன்னுமொரு கண்ணூடி தேவைப்படுகிறது. இப்படிப் பொருட்களைத் தொலைத்து நான் தேடுகின்ற போது அம்மா என்னை "கண்ணைப் பிடரிக்குள் வைத்துக்கோண்டு தேடினால் கிடைக்குமா" என்று ஏசிப்போட்டு தானே தேடி எடுத்துத்தருவா. பிடரிக்குள் கண் இருந்தாலும் இந்தக் காலத்தில் நல்லது என்றே நான் கருதுகிறேன். நம் முதுகிற்குப் பின்னால் பலர் செய்யும் சேட்டைகளைக் கண்டுபிடித்து விடலாம். 

கண்ணாடி என்றதும் கண் என்பது எனக்கு ஞாபகம் வருகிறது. கண் என்பது ஞாபகம் வந்தவுடன் கூகுல் தேடல் தளத்தில் "கண்" என்று எழுதினால் எல்லா "கண்" என்ற சொற்களும் வருவதுபோல் எனக்கும் பல கண்கள் ஞாபகத்தில் வருகின்றன. கண்ணதாசன் தனது "கண்" கெட்டது தனது 16 வயதில் தான் பார்த்த ஒரு மேடைக் கூத்தில் வந்த பெண்களைப் பார்த்துத்தான் என்று குறிப்பிடுகிறார். அவர்தான் பின்னாளில் "இருட்டிற்கும் பார்க்கின்ற விழி இருக்கும்" என்று தத்துவமும் சொன்னவர். கவிஞர்கள் எல்லோரும் மான் மீன் என்று கண்ணைப்பற்றி பாடல் பாட வைரமுத்து "sரோபறி கண்" என்று பாடினார். அந்தப் பழத்தை வெட்டிப் பார்த்தால் கண்போல் இருக்கும். மணிமேகலை என்ற காப்பியத்தில் மணிமேகலையின் கண் ஒளி ஒரு தாமரைப்பூவில் பட பக்கத்தில் நின்ற கொக்கு கயல்மீன் பாய்கிறது என்று கொத்தி ஏமாந்ததும் கதைகளில் உண்டு. இந்த நிகழ்வு மணிபல்லவத்தீவில் நடைபெற்றது என்றும் அதுதான் நான் பிறந்து வளர்ந்த நயினாதீவு என்று அழைக்கப்படுகிறது என்பதும் என் பிறப்பிற்கு பெருமை. திருவள்ளுவர் படிக்காதவர்களின் முகத்தில் இருப்பது கண்ணளல்ல இரண்டு புண்கள் என்றுகூறி எல்லோரையும் அறிவுடையோராக்க வேண்டும் என்று தனது கருத்தை முன்வைத்தார். புண்கள் என்று சொன்ன அது கண்களைத்தான் ஆடவர்கள் மார்பில் புண்களை ஏற்புடுத்தும் வேல்விழி என்றும் கூறினார்.   இப்ப நான் சொல்ல வருவது சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் இடையில் ஏற்பட்ட கண் சம்பந்தமான ஒரு திருக்கைலாய காட்சியைப் பற்றியது

ஒரு நாயனார் தனது ஒரு கண்ணை சிவனுக்கு கொடுத்துவிட்டு மறு கண்ணையும் கொடுக்க முனைகையில் இறைவன் "நில்லு கண்ணுப்ப" என்று அழைத்ததால்தான் அவருக்கு கண்ணப்பநாயனார் என்று பெயர்வந்தது. இவை புராணக்கதைகளாக செவிவழிவந்த கதைகள். தாயா? தாரமா? என்ற கேள்விகளுக்கு சிவபெருமான் தாரம்தான் சிறந்தது எனக் கருதி தனது இடப்பக்கத்தை உமாதேவியாருக்கக் கொடுத்தவர். சிவபெருமானுக்கு மொத்தத்தில் நெற்றிக் கண்ணுடன் சேர்த்து 3 கண்கண். அதில் உமாதேவியாருக்கு ஒன்றரைக் கண்ணைக் கொடுத்தால் அவருக்கு இருப்பது ஒன்றரைக் கண்தான். தற்காலத்தில் நாம் கண்ணில் வாக்கு இருப்பவர்களை ஒன்றரைக் கண் என்று அழைப்பது வழக்கம். ஒன்றரைக் கண் என்ற சொல் இதிகாசங்களில் இருந்துதான் தற்போதைய புழக்கத்திற்கு வந்தது. சிவபெருமானுக்கு ஒன்றரைக்கண் என்றால் அதில் ஒரு கண் "கண்ணப்ப நாயனார்" க்குச் சொந்தமானது. எனவே மொத்தத்தில் சிவபெருமானிடம் இருப்பது அரைக்கண்தான். 

கைலாயத்தில் சிவபெருமானுடன் வழமைபோல் உமாதேவியார் ஊடல் கொண்டிருந்தார். இராவணன் தனது மயில்பொறி(தற்கால கெலிகப்டர்) யில் வந்திறங்கி தாயாருக்காக கைலைமலையைப் பிரட்டியவர். பிரட்டும்போது உமாதேவியார் பயத்தில் கோபத்தைவிட்டு விட்டுச் சிவனுடன் சேர்ந்துவிட்டார். அப்போது சிவபெருமான் தனது கால் பெருவிரலால் மலையை சமநிலைக்கு கொண்டுவரும்போது இராவணன் மலைக்குள் சிக்குண்டான். இதைக்கண்ட வாகீச முனிவர் இராவணனைப் பார்த்து இறைவனுக்கு சாமவேதம் என்றால் பிடிக்கும் அதில் பாடல்கள் பாடு என்று பணித்தார். இராவணன் சாமவேதம் பாடி ஆபத்தில் இருந்து தப்பினார். ஆனால் இப்படிச் சொல்லிக் கொடுத்த வாகீசமுனிவர்மீது சிவன் கோபம் கொண்டார். அதற்குத் தண்டனையாகத்தான் வாகீசமுனிவர் பூலோகம் அனுப்பப்பட்டு 81 ஆண்டுகள் இறைவனுக்குத் தொண்டுகள் செய்து வாழ்ந்தார். அவர்தான் நமது திருநாவுக்கரசு நாயனார் ஆவார். 
இது இப்படி இருக்க ஒருநாள் சிவபெருமானுடன் இருந்த உமாதேவியார் விளையாட்டுக்காகச் சிவபெருமானது இரண்டு கண்களையும் பொத்தி வேடிக்கை பார்த்தார். சிவனின் கண்கள் இருண்டதால் உடனே உலகம் இருண்டுவிட்டது. உலகம் இருண்டதால் பூமியில் அறங்களைச் செய்துகொண்டிருந்த சான்றோர்களின் செயல்கள் தடைப்பட்டன. ஆலயவழிபாடுகள் தடைப்பட்டு விட்டன. மக்களுக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டன. உடனே சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து இன்னல்களைப் போக்கினார். உமாதேவியார் பாவம் செய்தவராக சிவபெருமானால் இம்சிக்கப்பட்டார். இந்தப் பாவங்கள் தீர ஒரு பிராயச்சித்தம் செய்யவேண்டும் என சிவன் உமாதேவியாரைப் பணித்தார். அதன் பிரகாரம் உலகமக்கள் உய்ய உமாதேவியார் மானிடப் பெண்ணாக காஞ்சியிலும்; காசியிலும் சென்று 32 வித அறங்களைச் செய்து பாவவிமோசனம் பெற்றார் என்று புராணங்கள் கூறுகிறது. 

இந்த வரலாற்றை சுந்துரமூர்த்தி நாயனார் தனது ஒரு பாடலில் குறிப்பிடுகின்றார். 

"மலைமடந்தை விளையாடி விளையாடு கரத்தான்; மகிழ்ந்து அவள் கண்புதைத்தலுமே வல் இருளாய் எல்லா; உலகுன்றான் முடவிருள் ஓடும்வகை நெற்றி; ஒற்றைக்கண் படைத்துகந்த உத்துமன்" (தி7.ப16.பா4)

ஐயோ ஆண்டவனே தேடு தேடென்று கண்ணாடியைத் தேடிப் பார்த்தேன் காணவில்லை. காருக்குள் கிடக்கிறதா என்று பார்த்துவிட்டு வாறன். கொஞ்சம் பொறுங்கோ!!

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: